“இந்திய அரசியலமைப்புச் சட்டம் குடிமக்களுக்குக் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சம வாய்ப்புகளையும் உரிமைகளையும் வழங்குகிறது. பிரிவு 21A (இலவச கட்டாயக் கல்வி உரிமை), பிரிவு 15 (கல்விக்கூடங்களில் இட ஒதுக்கீடு), மற்றும் பிரிவு 16 (பொது வேலைவாய்ப்புகளில் சம வாய்ப்பு) ஆகியவை சமூகத்தில் பின்தங்கிய மற்றும் அடித்தட்டு மக்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்கின்றன.” என்று அரசியலமைப்புச் சட்டத்தின் மாண்புகள் குறித்தும், பெரும்பான்மை மக்களின் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு உரிமைகள் பற்றி நம்பிக்கையூட்டுகின்ற வகையில் கடந்த 75 ஆண்டுகளுக்கும் மேலாக பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆனால் இதற்கு நேர் மாறாகவே நடைமுறை உண்மைகள் உள்ளது என்பதை டெல்லியில் ஜந்தர் மந்தரில் துவங்கிய நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம், அதாவது நீட் தேர்வை நியாயமான முறையில் நடத்த வேண்டும் என்றும், சமீப காலங்களாக நீட் தேர்வில் பல்வேறு மோசடிகள் நடந்து வருவதாகவும் அதன் வினாத்தாள்கள் கசிந்தது போன்றவற்றுக்கு பொறுப்பேற்று முன்னால் அமைச்சரான தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதை முக்கிய கோரிக்கையாக முன்வைத்த போராட்டங்கள் நிரூபித்துள்ளது.

ஜந்தர் மந்தரில் துவங்கிய மாணவர்கள் இளைஞர்கள் போராட்டம் முதலில் ஒரு சிறிய அளவில் துவங்கி பிறகு லடாக் சமூக செயல்பாட்டாளர் வாங்சுங் கைது செய்யப்பட்ட பிறகு தீவிரமடைந்தது. தன்னெழுச்சியாக நாடு முழுவதும் பாசிச பாஜகவின் மீது அதிருப்தி கொண்ட இளம் தலைமுறையினர் டெல்லியை நோக்கி படையெடுத்தனர். சுமார் 70 லட்சம் பேருக்கு மேல் குவிந்தனர் என்று செய்திகள் வெளியாகியது.

நாடாளுமன்றத்தில் கூட்டத்தை நடத்திய ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உள்ளிட்ட சர்வ கட்சி தலைவர்கள் நேரடியாக மாணவர்கள் போராட்டங்களை எதிர்கொள்ள முடியாமல் பின்பக்க வழியாக தப்பி ஓடினர் என்றும் செய்திகள் வெளியானது.

மாணவர்களின் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களை டெல்லி போலீஸ் ஆர்எஸ்எஸ் பாஜகவின் உத்தரவின் அடிப்படையில் கடைபிடிக்க துவங்கியவுடன் அந்தப் போராட்டம் மிகப்பெரிய போராட்டமாகவும், எழுச்சிகரமாகவும் பல்வேறு பெண்கள் முன்னணியில் நின்று போராடுகின்ற போராட்டமாகவும் பரிணமித்தது.

இந்தப் போராட்டத்தில் இளைஞர்கள் மீதும், மாணவர்கள் மீதும் தடியடி நடத்தியது; கண்ணீர் புகை குண்டுகளை வீசியது மற்றும் பெல்லட் குண்டுகளை கொண்டு தாக்கியது போன்றவற்றையும், கலவரத்தை தூண்டி மாணவர்களின் மீது கொடூரமான தாக்குதல்கள் நடத்தப்பட்டதையும் கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்தன.

பாசிச பாஜக ஆளுகின்ற மாநிலமான டெல்லியில் இத்தகைய போராட்டங்கள் நடத்தப்படுவது குறித்து ஆர்எஸ்எஸ் பாஜக கவலை கொண்டிருந்த தருணத்தில் அதை திசை திருப்புவதற்கு பல்வேறு வகையான முயற்சிகளையும் மேற்கொண்டு வந்தனர்.

இந்த சமயத்தில்தான் அவர்களை காப்பாற்றுகின்ற வகையில் ஜார்கண்ட் மாணவர்களின் போராட்டம் நடக்க துவங்கியது. குறிப்பாக அரசுப் பணியாளர் தேர்வுகளில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகளை எதிர்த்து ஜார்க்கண்ட் மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, ஆகஸ்ட் 10-ஆம் தேதி சட்டப்பேரவையை முற்றுகையிடும் நோக்கில் பேரணி நடத்தப்பட்டது.

பாசிச பாஜக கும்பலால் நேரடியாக ஆட்சி செய்யப்படாத மாநிலங்களில் ஒன்றான ஜார்கண்டை ஆளுகின்ற சிபு சோரனின் வாரிசான ஹேமந்த் சோரன் அரசாங்கமானது மாணவர்கள் மீது கொடூரமான தாக்குதல்களை நடத்தியது. டெல்லியில் ஜந்தர் மந்தரில் போராடிய மாணவர்கள் மற்றும் பாராளுமன்றத்தை நோக்கி ஊர்வலமாக சென்ற மாணவர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல்களுக்கு இணையாக ஜார்கண்டில் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் மாணவர்கள் படித்து முடித்தவுடன் தாங்கள் படித்த கல்விக்கு பொருத்தமான வேலை கிடைக்கவில்லை என்ற ஆத்திரத்துடன் உள்ளனர் என்பதை இந்திய ஒன்றியத்தில் உள்ள பல்வேறு மாநிலங்களில் நடக்கின்ற போராட்டங்கள் நமக்கு உணர்த்துகின்றன.

நிலவுகின்ற போலி ஜனநாயக அரசு கட்டமைப்பானது தோல்வியடைந்து, எதிர்நிலை சக்தியாக மாறிவிட்டது என்பது மட்டுமின்றி பாசிச பயங்கரவாதிகளின் அடியாட்கள் அனைத்து கட்டமைப்பையும் கைப்பற்றி நாடு முழுவதையும் ஒரு பாசிச கட்சி ஒற்றை சர்வாதிகாரத்தின் கீழ் கொண்டு வருவதற்கு துடித்துக் கொண்டுள்ளனர்.

ஜார்கண்டில் நடக்கின்ற மாணவர்கள் போராட்டம், அங்கே அரசு ஆட்சி செய்து வரும் ஹேமந்த் சோரன் அரசாங்கத்தினால் அடக்கப்பட்டது குறித்து பாசிச பாஜகவினர் என்ன கேள்வி எழுப்புகின்றனர் என்றால் டெல்லியில் போராடிய கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ஏன் ஜார்கண்டில் போராடவில்லை என்று குதர்க்கமான கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

இதற்கு நேர் எதிராக காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த தலைவர்களில் ஒருவரான கார்கே இவ்வாறு கேள்வி எழுப்பி உள்ளார். “உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ள இத்தகைய பரவலான அதிருப்தி நிலவும்போது, அமித் ஷா முன்வந்து ஒரு அறிக்கை வெளியிட வேண்டாமா?” என்று கேட்டுள்ளார். மேலும், போராட்டத்தின்போது பெல்லட் துப்பாக்கிகள், கண்ணீர்ப் புகை மற்றும் தடியடி ஆகியவற்றைப் பயன்படுத்த யார் அனுமதி அளித்தது என்பது குறித்தும் அவர் பதில்களைக் கோரினார்.

நாடு முழுவதும் இத்தகைய தாக்குதல்களுக்கு எதிரான புரட்சிகர, ஜனநாயக சக்திகளின் கண்டன குரல்கள் எழும்பிய பின்னரும் கூட ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்து வருகின்ற மாணவர்கள், இளைஞர்களின் போராட்டம் கடுமையாக ஒடுக்கப்படுகின்றதே ஒழிய அவர்கள் முன்வைத்த அடிப்படையான கோரிக்கைகள் எதுவும் வெற்றி பெறவில்லை.

வெற்றி பெறுவதற்கு ஆளுங்கட்சியான ஜார்கண்ட் முக்தி மோர்சாவின் ஹேமந்த் சோரன் அரசாங்கம் ஒரு துரும்பையும் எடுத்துப் போடவில்லை என்பது தான் கவனிக்க வேண்டிய முக்கியமான அம்சமாகும். ஆர்எஸ்எஸ் பாஜகவின் பாசிசத்தை எதிர்ப்பதாக கூறிக் கொள்கின்ற கட்சிகள் அல்லது ஆர்எஸ்எஸ் பாஜகவை எதிர்ப்பதாக கூறிக் கொள்கின்ற கட்சிகள் பாசிச பாஜகவின் அரசியல், பொருளாதார, பண்பாட்டு நடவடிக்கைகளுக்கு எதிராக மாற்றாக எதையும் முன் வைப்பதில்லை.

இதற்கு அடிப்படை காரணம் பாசிச கட்சியான பாஜகவை பிற கட்சிகளைப் போல ஒரு அரசியல் கட்சியாக கருதுகின்றனரே ஒழிய, சொல்லிக் கொள்ளப்படும் ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்கக்கூடிய பாசிச பயங்கரவாத தன்மையுடையது என்பதை புரிந்து கொள்வதில்லை அல்லது புரிந்தாலும் புரியாதது போல் நடித்துக் கொண்டுள்ளனர்.

பாசிச பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் வேலையில்லா திண்டாட்டம் தலை விரித்தாடுகிறது; மாணவர்களின் போராட்டம் அன்றாடம் வீதியில் இறங்கி போராடுகின்ற நிலைமையை எட்டியுள்ளது; அரைகுறையாக வேலை கிடைக்கின்ற தொழிலாளர்களும் ஒரு பகுதியில் இருந்து வேறொரு பகுதிக்கு புலம்பெயர்ந்து சென்று ஆயிரக்கணக்கில் குடியேறுகின்றனர்.

படிக்க:

 போலீசு, ராணுவத்துடன், ஆர்.எஸ்.எஸ் பாசிச குண்டர் படையும் இணைந்து தாக்குதல் நடத்திய டெல்லி சிஜேபி போராட்டம்.

♦ 20 ஆண்டுகள் பதவி சுகத்தை அனுபவித்த சம்பை சோரன் JMM லிருந்து விலகுவது ஏன்?

வேலை வாய்ப்பு வசதி உள்ள தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களை நோக்கி கொத்து கொத்தாக வட இந்தியாவில் உள்ள இளம் தொழிலாளர்கள் படையெடுக்கிறார்கள்; அற்ப கூலிக்கு அவர்களது உழைப்புச் சக்தி சுரண்டி கொள்ளையடிக்கப்படுகிறது. தேசங் கடந்த தரகு முதலாளிகளும், கார்ப்பரேட் முதலாளிகளும் இந்த உழைப்பு சுரண்டலில் கொடி கட்டி பறக்கின்றனர்.

இவை அனைத்தும் நடைமுறையில் இருக்கும் போது தான் இவை அனைத்திற்கும் அடிப்படையான அரசியலமைப்புச் சட்டத்தின் மீது நம்பிக்கை கொண்டு மீண்டும் சுருக்கு கயிற்றை கழுத்தில் மாட்டிக்கொண்டு தொங்குகின்ற வகையில் போராட வேண்டும் என்று முன்வைக்கின்றனர் குட்டி முதலாளித்துவ அறிவுத்துறையினர்.

நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கு உண்ண உணவு; இருக்க இருப்பிடம்; சுகாதாரமான வாழ்க்கை, தரமான, அறிவியல் பூர்வமான கல்வி; மருத்துவம் போன்ற அடிப்படைத் தேவைகள், அதாவது குறைந்தபட்ச பொருளாதாய தேவைகள் கூட இந்திய ஒன்றியமானது சுதந்திரம் பெற்றதாக கூறிக் கொள்ளப்பட்ட 75 ஆண்டுகளுக்குப் பின்னரும் நிறைவேறாத சூழலில் தான் இந்தியாவின் போலி சுதந்திரம் மற்றும் அரசாங்கத்தை வழிநடத்துகின்ற அரசியலமைப்புச் சட்டம் உயர்ந்தது என்று கூச்சலிடுகின்றனர்.

ஓரளவுக்கு படித்துவிட்டு அரசு வேலைகளுக்கும், உத்தரவாதமான வாழ்க்கை பின்னணியும் கொண்ட இத்தகைய குட்டி முதலாளித்துவ பிரிவினர் முன்வைக்கின்ற அரசியலமைப்புச் சட்டம் ஜார்கண்டு மாநிலத்தில் நடத்துகின்ற கொடூரமான தாக்குதல்களுக்கு என்ன பதில் சொல்கிறது?

சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதற்கு ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள பயங்கரவாத அடக்குமுறைகளை ஏவுகின்ற ஹேமந்த் சோரன் அரசாங்கத்தின் மீது ஏதாவது நடவடிக்கை எடுத்ததா அல்லது அதற்கு முன்பு டெல்லியில் போராடிய மாணவர்களுக்கு ஆதரவாக தர்மேந்திர பிரதான் பதவி விலகிய பிறகு பாசிச ஆர்எஸ்எஸ் பாஜக அமைச்சரவையைச் சேர்ந்தவர்கள் மீதும், அல்லது தலைவர்கள் மீதும் ஏதாவது ஒரு நடவடிக்கை எடுத்ததா? ஒன்றுமில்லை.

எனவே, ஜார்கண்ட் மாநில மாணவர்கள், இளைஞர்களின் போராட்டத்தை ஆதரிக்கின்ற அதே சமயத்தில் போராட்டத்தின் வரம்பு பொருளாதார வாத அடிப்படையில் சில மாற்றங்களையும், சீர்திருத்தங்களையும் முன் வைப்பதாக உள்ளது என்ற விமர்சனத்தையும் முன்வைக்கின்றோம்.

மாறாக கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்தி பெரும்பான்மை மக்கள் அரசியல் அதிகாரத்தில் நேரடியாக பங்கெடுக்கின்ற, அரசியல் அதிகாரத்தை நேரடியாக கைப்பற்றுகின்ற ஜனநாயகக் கூட்டரசு ஒன்று மக்கள் எழுச்சியின் மூலம் உருவாக்கப்பட வேண்டும் என்பதுதான் ஜார்கண்ட் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நடக்கின்ற மாணவர்கள்- இளைஞர்கள் போராட்டம் நமக்கு அறிவிக்கின்ற மிக முக்கியமான செய்தியாகும்.

  • மருது பாண்டியன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here