
முன்பதிவு செய்யப்பட்ட ரயில் பெட்டிகளில் முன்பதிவு செய்யாத பயணிகள் பயணிப்பது தொடர்பாக கடந்த சில நாட்களாக திருப்பூரில் இருந்து காட்பாடிக்கு வந்த ரயிலில் எடுக்கப்பட்ட காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி மக்களிடையே விவாத பொருளாக மாறி உள்ளது. ரயில்வே நிர்வாகம் அத்தகைய ‘ஆக்கிரமிப்பு’ தடுக்க நடவடிக்கை எடுத்து வருவதாக தொலைக்காட்சி செய்திகள் தெரிவிக்கின்றன.
யாராக இருந்தாலும் தாங்கள் முன்பதிவு செய்த இருக்கையை வேறொருவர் ஆக்கிரமிக்கும் பொழுது இயல்பாகவே கோபம் வரும். தங்களது பயணம் இடையூறு இல்லாமல் இருப்பதற்காக விவரம் தெரிந்தவர்களும் பொருளாதாரத்தில் சற்று முன்னேறியவர்களும் முன்பதிவு செய்து பயணிக்கிறார்கள். அப்படி செல்கையில் தொழில் நகரங்களில் உள்ள புலம்பெயர்ந்த உழைக்கும் மக்கள் பண்டிகை காலங்களில் சொந்த ஊருக்கு திரும்புவதற்கு வசதியாக ரயிலை பயன்படுத்திக் கொள்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் குறைந்த கட்டணம் என்பதால் தங்கள் பொருளாதார வசதிக்கேற்ப முன்பதிவு இல்லாத பெட்டிகளிலேயே பயணம் செய்கிறார்கள்.
UR எனப்படும் முன்பதிவு செய்யப்படாத பெட்டி ஒவ்வொரு ரயிலை பொறுத்து இரண்டிலிருந்து நாலு பெட்டிகள் மட்டுமே உள்ளது. ஒரே நாளில் லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கு திட்டமிடும் பொழுது முன்பதிவு இல்லா பெட்டிகள் நிரம்பி வழிகின்றன. நிற்பதற்குக் கூட முடியாத சூழ்நிலை ஏற்படுகையில் அவர்கள் முன்பதிவு செய்யப்பட்ட ரயில் பெட்டிகளில் பயணிக்கும் நிலை ஏற்படுகிறது. மற்ற வகையில் திட்டமிட்டு முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியை தேர்ந்தெடுப்பதில்லை.
இந்தியாவின் மக்கள் தொகைக்கு ஏற்ப அவரவர் வாழும் பகுதிகளில் வேலை கிடைப்பதில்லை. அரசியல் ரீதியாக பார்த்தோமானால் வேலையின்மை, வறுமை, பசி, பட்டினியுடனேயே இந்தியாவின் உழைக்கும் மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
எப்படியாவது தங்களது வாழ்வை பராமரிப்பதற்காக அவர்கள் தேர்ந்தெடுக்கும் இடம்தான் தொழில் நகரங்கள். குறிப்பாக, தமிழ்நாடு ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா என தொழில் வளர்ச்சியிலும் பொருளாதாரத்திலும் ஓரளவுக்கு முன்னேறிய மாநிலங்களையே தேர்ந்தெடுக்கிறார்கள். பெரும்பாலான புலம்பெயர் தொழிலாளர்களின் தீர்வாக சமூக அமைதியுடன் விளங்கும் தமிழ்நாடு உள்ளது. ஓரளவிற்கு அவர்கள் வாழ்வை நடத்துவதற்கான சம்பளமும் கிடைக்கிறது.
தமிழ்நாட்டைப் பொருத்தமட்டில் சென்னை, கோவை, திருப்பூர், ஓசூர் போன்ற தொழில் நகரங்களில் வட மாநில தொழிலாளர்கள் நிறைந்து இருக்கிறார்கள். அப்படியான தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு தசரா பண்டிகை காலங்களில் மட்டுமே சென்று வருகிறார்கள்.
புலம்பெயரும் தொழிலாளர்களின் நகர்வுக்கு ஏற்ப போக்குவரத்து வசதிகள் செய்யப்படுவதில்லை. பேருந்தில் பயணிப்பதானால் பல்லாயிரம் செலவழிக்க நேரிடுகிறது. அதற்கு வசதி இல்லாமல் தானே சொந்த ஊரில் இருந்து வெளியூருக்கு வேலைக்கு செல்கிறார்கள். ஆகையால் அவர்களின் தேர்வு ரயில் பயணமாக உள்ளது. பீகார், ஜார்கண்ட், ஒடிசா போன்ற மாநிலத்திலிருந்து தமிழ்நாடு வரும் தொழிலாளர்கள் 30-ல் இருந்து 35 மணி நேரம் பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. அதற்கேற்ப ரயில்கள் இல்லை என்பதை உண்மை.
படிக்க:
♦ டெல்லி ரயில் நிலையத்தில் 18 பேர் சாவு! இந்து மத வெறி அரசியலுக்காக கொடுக்கப்பட்ட பலிகள்!!
♦ மோடி அரசின் அலட்சியத்தால் அவல நிலையில் இந்திய ரயில்வேத் துறை!
இந்தியாவில் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான ரயில்வேத்துறை கொஞ்சம் கொஞ்சமாக தனியார் மயப்படுத்தப்பட்டு கொண்டிருக்கிறது. இதன் காரணமாக வந்தே பாரத், ராஜதானி, துரந்தோ போன்ற ரயில்கள் கொண்டுவரப்பட்டு முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் நீக்கப்பட்டுள்ளன. முழுக்க குளிர்சாதன வசதி கொண்டதாகவும் மாற்றப்பட்டுள்ளன. இந்த ரயில்களில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் விமான கட்டணத்திற்கு நிகராக உள்ளது. ஆகையால் சாமானிய உழைக்கும் மக்கள் பயணிக்க வாய்ப்பில்லை.
ஏற்கனவே உள்ள பழைய ரயில்களிலும் முன்பதிவில்லாத பெட்டிகள் குறைக்கப்பட்டு வருகின்றன. பண்டிகை காலத்திற்கு ஏற்ப சிறப்பு ரயில்கள் தொழிலாளர்களின் வசதிக்கேற்ப விடப்படுவதில்லை. அப்படியே ஒன்று அல்லது இரண்டு ரயில்கள் விடப்பட்டாலும் அவையும் முழுக்க முன் பதிவு கொண்ட ரயில்களாகவே உள்ளது.
பல்லாயிரக்கணக்கான மக்கள் சொந்த ஊருக்கு செல்ல காத்திருக்கும் சூழ்நிலையில் அவர்கள் பயணிக்க போதாமான முன்பதிவில்லா பெட்டிகள் இல்லை என அரசு அறிந்திருந்தாலும் உழைக்கும் மக்கள் நலனில் அக்கறை செலுத்தி முழுக்க முன் பதிவு செய்யப்படாத ரயில்களை ஒன்றிய மோடி அரசு விடுவதில்லை. வேறு வழியில்லாத காரணத்தால் தான், முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் பயணிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உழைக்கும் மக்கள் தள்ளப்படுகிறார்கள் என்பதை நாம் உணர வேண்டும்.
இந்த பிரச்சனைக்கு எல்லாம் அடிப்படை இந்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைதான். ஒவ்வொரு மாநிலத்திலும் மாநில மக்களுக்கு ஏற்ப வேலை வாய்ப்பு ஏற்படுத்தாமல் நாட்டின் இயற்கை வளங்களை கார்ப்பரேட்டுகளுக்கு திறந்துவிட்டு அப்பகுதி மக்களின் வாழ்க்கையை நாசம் செய்கிறது மத்தியில் ஆளும் அரசுகள். அதற்கேற்பவே மாநில அரசுகளும் செயல்படுகின்றன. இதன் காரணமாக முதலாளிகள் கோடிகளில் புரள்வதும் மக்கள் வேலைத்தேடி புலம்பெயர்வதும் அதிகரித்து வருகிறது.
இந்திய ரயில்வே முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் ஒதுக்கப்பட்ட இருக்கைகளை விட பலமடங்கு அதிகமாக டிக்கெட்டுகளை விநியோகிக்கிறது. பண்டிகை காலங்களில் 100 இருக்கை கொண்ட பெட்டிகளுக்கு ஆயிரம் டிக்கெடுகளை விநியோகிப்பது அயோக்கியத்தனம் இல்லையா? இந்த ரயிலை விட்டுவிட்டால் அடுத்த நாளே செல்லமுடியும் என்ற சூழ்நிலையில், காசு கொடுத்து டிக்கெட் எடுத்த பயணிகள் எப்படியாவது பயணம் செய்ய வேண்டும் என்றே நினைப்பார்கள். ஒருவேளை மக்களின் நலனில் அக்கறை கொண்ட அரசாக இருந்திருந்தால் அதிகரிக்கும் பயணிகளுக்கு ஏற்ப சிறப்பு ரயில்களை அறிவிக்கும். ஆனால் கார்ப்பரேட் சேவகர் மோடியிடம் நாம் மக்கள் நலனை எதிர்பார்க்க முடியுமா? விடுமுறை நாட்களில் பள்ளி மாணவர்களுடன் மெட்ரோ ரயிலில் பயணித்து விளம்பரம் தேடும் மோடி முன்பதிவில்லா பெட்டிகளில் பயணிக்கும் உழைக்கும் மக்கள் குறித்து சிந்திக்க வாய்ப்பில்லை.
லட்சம் கோடியில் புல்லட் ரயில் ஒப்பந்தம் போட்டு அதுவே இந்தியாவின் வளர்ச்சிக்கு சான்று என்கிறார் மோடி. ஆனால், இரண்டு நாள் பயணம் முழுவதும் டாய்லெட்டிலேயே பயணிக்கும் கொடுமை தான் இந்தியாவின் நிலைமை, பெரும்பான்மை உழைக்கும் மக்களின் உண்மை நிலை. நமது கோபம் உழைக்கும் தொழிலாளர்களிடமிருந்து இப்படியான நிலையை உருவாக்கி வைத்திருக்கும் அரசின் மீதே திரும்ப வேண்டும்.
- நலன்






