தமிழ் நாடு அரசால் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘டாஸ்மாக் ஆன்லைன்’ முன்பதிவு முறை, மது வணிகத்தை நவீனப்படுத்துவதாகக் கூறப்பட்டாலும், அது நுகர்வோர் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் பல்வேறு கேள்விகளையும் கடுமையான சமூக அச்சங்களையும் எழுப்பியுள்ளது. ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ மற்றும் ‘மின்னம்பலம்’ ஆகிய ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகளும், இது குறித்து எழும் சமூக எதிர்வினைகளும் இந்த நடவடிக்கையின் பின்னுள்ள முரண்பாடுகளை வெளிச்சம்போட்டுக் காட்டுகின்றன.
ஆன்லைன் முன்பதிவு
டாஸ்மாக் இணையதளத்தில் சரக்கு இருப்பைப் (Live Stock) பார்த்து, டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தி, ‘கியூ ஆர்’ (QR Code) குறியீட்டைப் பெற்று கடைகளில் சென்று சரக்கை வாங்கி வரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், நடைமுறையில் குடிகாரர்கள் (இவர்கள் மதுப் மதுப்பிரியர்களாம்) எதிர்கொள்ளும் சிக்கல்கள் முற்றிலும் வேறாக உள்ளன:
- கடை ஊழியர் – விநியோகஸ்தர் கூட்டணி: இணையதளத்தில் இருப்பு இருப்பதாகக் காட்டிப் பணம் செலுத்தினாலும், நேரில் செல்லும்போது “சரக்கு இல்லை” என்று கூறி ஆர்டர்களை நிராகரிக்கும் போக்கு நிலவுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
- MRP கூடுதல் விலை கட்டாயமா?: ஆன்லைனில் டிஜிட்டல் பரிவர்த்தனை செய்த பிறகும், நேரில் சென்று பெறும்போது வழக்கமான ரூ.10 கூடுதல் தொகையைக் கடை ஊழியர்கள் கேட்க மாட்டார்கள் என்பதற்கு அரசுத் தரப்பில் எந்த உறுதியான நடைமுறைப் பாதுகாப்புமில்லை.
- பெயரளவில் நவீனமயம்: வீடுகளுக்கே தேடி வராமல், ஆன்லைனில் பதிவு செய்துவிட்டு மீண்டும் கடைக்குச் சென்று வரிசையில் நின்று வாங்கி வர வேண்டும் எனில், இது வெறும் ‘டோக்கன் சிஸ்டம்’ அல்லது முன்பதிவுதானே தவிர, குடிகாரர்களுக்கு எந்தப் பெரிய மாற்றத்தையும் தரப்போவதில்லை.
இன்று கடை… நாளை வீடு தேடியா?
அரசுத் தரப்பில் “வீட்டு விநியோகம் (Home Delivery) கிடையாது, நேரில் வந்துதான் பெற வேண்டும்” என்று மறுக்கப்பட்டாலும், இந்த ஆன்லைன் முறைமை அடுத்தகட்டமாக “வீட்டுக்கே சரக்கு” என்ற கலாச்சாரத்திற்குப் பாதை அமைத்துக் கொடுத்துவிடுமோ என்ற அச்சம் பொதுமக்கள் மனதில் வலுவாக எழுந்துள்ளது.
படிக்க:
♦ 24 மணிநேரமும் ‘குடிமகன் சேவை’யில் டாஸ்மாக்: தீபாவளி விற்பனையில் சாதனை!
♦ டாஸ்மாக் சட்டதிருத்தம்: ஈயம் பூசுனமாதிரியும் இருக்கனும்…
- குடும்ப அமைப்பின் சீரழிவு: பிறர் முன்னிலையில் புகைபிடிப்பதையோ அல்லது மது அருந்துவதையோ அவமானமாகக் கருதும் பண்பாட்டு மரபு கொண்ட தமிழ்நாட்டில், ‘ஆன்லைன் டாஸ்மாக்’ சாராயத்தை எளிதில் அணுகக்கூடிய ஒரு பொருளாக மாற்றுகிறது.
- குடும்பச் சூழல் மற்றும் குழந்தைகளின் நிலை: ஒருவேளை எதிர்காலத்தில் ஆன்லைன் மூலம் வீட்டிற்கே சாராயம் விநியோகம் செய்யப்படும் சூழல் உருவானால், வீட்டின் கதவைத் திறக்கும் சிறு குழந்தைகளும், குடும்பத்தினரும் அந்தப் பார்சலை நேரடியாகப் பெறவேண்டிய அவலம் உருவாகும். வீட்டிற்குள் சாராயம் நேரடியாக நுழைவது என்பது, குழந்தைகளின் பிஞ்சு மனங்களில் சாராயம் குறித்த கூச்சத்தைக் குறைத்து, அதை ஒரு சாதாரண அத்தியாவசியப் பொருளாகப் பார்க்கும் தவறான மனநிலையைச் சிறுவயதிலேயே உருவாக்கிவிடும்.
- பயத்தின் தடுப்புச்சுவர் உடைதல்: “கடையில் வரிசையில் நின்று வாங்கினால் நாலு பேர் தவறாக நினைப்பார்கள்” என்ற அச்சமே பல இளைஞர்களையும், புதியவர்களையும் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகாமல் தடுத்து நிறுத்தும் காரணியாக இதுவரை இருந்து வருகிறது. ஆன்லைன் முன்பதிவு மூலம் கடையில் சில வினாடிகளில் வாங்கிக் செல்லும் வசதி, இந்த சமூகத் தடுப்புச்சுவரை முற்றிலும் தகர்த்துவிடும்.
அத்தியாவசியத் தேவைகள் புறக்கணிப்பும், சாராய வணிக நவீனமயமும்
ஒருபுறம் சாமானிய மக்களுக்குப் தரமான உணவு, வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் மருத்துவ வசதிகள் தடங்கலின்றிச் சென்றடைவதில் ஏராளமான சிக்கல்கள் நிலவுகின்றன. காய்கறி மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வால் மக்கள் தவிக்கும் சூழலில், உயர்தர மதுபானங்கள் ஆன்லைனில் தடங்கலின்றி கிடைப்பதை உறுதி செய்ய அரசு இவ்வளவு முனைப்பு காட்டுவது எந்த மாதிரியான சமூக நலனை முன்நிறுத்துகிறது?
மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்துவதுதான் ஒரு மக்கள் நல அரசின் கடமையாக இருக்க முடியும். அதை விடுத்து, சாராய விற்பனையை மேன்மேலும் நவீனப்படுத்தி, எளிமைப்படுத்தி வருவாயைப் பெருக்குவதிலேயே கவனம் செலுத்துவது தமிழகத்தின் எதிர்காலத் தலைமுறையைச் சீரழிவிற்கே கொண்டு செல்லும். இது மக்கள் நல அரசா இல்லை சாராய நல அரசா என்று மக்கள் கேட்கத் தொடங்கி விட்டார்கள்.
அரசு தன் வருவாய்க்காக சாராய வணிகத்தை கணினிமயமாக்குவதை விட்டுவிட்டு, சமூகப் பாதுகாப்பையும், குடும்ப அமைப்பின் அமைதியையும் உறுதிசெய்யும் கொள்கைகளை நோக்கி நகர வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
இதெல்லாம் நமக்குப் புரிகிறது. ஆனால் சரக்கு மிடுக்கில் இருப்பவர்களுக்குப் புரியுமா?
- தமிழ்மணி






