பிரிஜ் பூஷன் சரண்சிங் என்ற பெயரைக் கேட்டதும் மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் துன்புறுத்தல் செய்த பாஜக எம் பி நினைவுக்கு வருகிறாரா? ஆம். அவர் மீதான பாலியல் குற்றச்சாட்டு வழக்குகளில் இருந்து அவரை ஆகஸ்ட் 3 அன்று டெல்லி உயர் நீதிமன்றம் விடுவித்து தீர்ப்பளித்துள்ளது. இந்த பிரிஜ் பூஷன் மீது 6 பெண் மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டை மூன்றாண்டுகளுக்கு முன்பு வைத்தனர்.
இவர்களில் 2 பேர் மிரட்டலுக்கு அஞ்சி பிறழ் சாட்சிகளாக மாறிவிட்டனர். ஆனால் மற்ற நால்வரும் துணிச்சலாக இந்த பாலியல் பொறுக்கிக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்காடினர். இவர் மீது புகார் அளித்த சிறுமி ஒருவர், தனது தந்தையின் அழுத்தத்தின் காரணமாகவே புகார் அளித்ததாகக் கூறி, தனது குற்றச்சாட்டுகளை திரும்பப் பெற்றதால் பிரிஜ் பூஷன் மீதான போக்சோ வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது.
வழக்குப் பதியவே பெரும் போராட்டம்!
பிரிஜ் பூஷன் சரண் சிங் என்ற பாஜகவின் முன்னாள் எம்பி 2011 முதல் இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் (WFI) தலைவராகவும் பதவி வகித்து வந்தார். கொலை உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் புரிந்த அவர், அப்போதிலிருந்து 2023 வரை கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் பெண் விளையாட்டு வீரர்களை பாலியல் ரீதியாக தொடர்ந்து துன்புறுத்தி வந்தார்.
மல்யுத்தக் கூட்டமைப்பின் அலுவலகங்கள், பயிற்சி முகாம்கள் உள்ளிட்ட இடங்களில், உள்நாட்டு போட்டிகள் மற்றும் சர்வதேச போட்டிகளில் ஈடுபட்ட வீராங்கனைகளிடம் விரும்பத்தகாத வகையிலான முறையற்ற தொடுதல், அச்சுறுத்தல் மற்றும் அதிகார முறைகேடுகளில் அவர் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபட்ட அவருக்கு எதிராக பல புகார்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் சாக்ஷி மாலிக், வினேஷ் போகட் உள்ளிட்ட வீராங்கனைகள் போராட்டத்தில் குதித்தனர். மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா இவர்களுக்கு ஆதரவாக களத்தில் நின்றார். டெல்லி ஜந்தர் மந்தரில் பல மாதங்களாக போராடிய அவர்கள், உச்ச நீதிமன்றத்தை நாடிய பிறகுதான் பிரிஜ் பூஷன் மீது இரண்டு FIR-கள் பதிவு செய்யப்பட்டன.
அதில் ஒன்று போக்சோ வின் கீழ் பதிவு செய்யப்பட்டது. ஒரு சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததற்காக போக்சோவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட போதிலும் அவர் கைது செய்யப்படவில்லை. எனவே புதிய பாராளுமன்ற கட்டடத்தை மோடி திறந்து வைத்த நாளன்று, பாராளுமன்ற முற்றுகை போராட்டத்தை வீராங்கனைகள் மேற்கொண்டனர். அவர்களை அமித் ஷாவின் டெல்லி போலீஸ் கொடூரமாகத் தாக்கி கைது செய்தது.
இது பொய்யாக புனையப்பட்ட வழக்கு – நீதிபதி!
நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் சென்ற ஆண்டு சாட்சி அளித்த போது ஆறு பேரில் இருவர் பிறழ் சாட்சிகளாக மாறினர். செல்வாக்கு மிக்க பிரமுகர்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் இது போன்ற வழக்குகளில் உள்ள பெரிய சிக்கலே இதுதான். இந்த அரசமைப்பும் சக்திவாய்ந்த பிரமுகர்களை பாதுகாப்பதற்கென்றே உருவாக்கப்பட்டுள்ளது.
இது போன்ற வழக்குகளில் பல்வேறு வகையான அழுத்தங்கள் புகார் தாரர்களை தங்கள் சாட்சியங்களை திரும்பப் பெறவோ அல்லது மாற்றவோ தூண்டும் வகையில் உள்ளன. சமூக மற்றும் குடும்ப அழுத்தங்கள், அச்சுறுத்தல் நிர்ப்பந்தம் ஆகியவை இதற்கான சில காரணங்களாக உள்ளன. குற்றம் சாட்டப்பட்ட பிரிஜ் பூஷன் ஆயுதம் ஏந்திய காவலர்கள் உள்ளிட்ட பெரும் படையுடன்தான் ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்திற்கு வந்து சென்றார். அவர் கொண்டிருந்த அதிகாரத்தின் அளவை அவை பிரதிபலித்தன.
படிக்க:
♦ மல்யுத்த வீராங்கனைகள் மீதான அடக்குமுறை! பல்லிளிக்கும் ஜனநாயகம்!
♦ பிரிஜ் பூஷன் சரண்சிங் எனும் கிரிமினலை பாதுகாக்கும் பாஜக!
இந்த வழக்கில் அரசு தரப்பு மற்றும் பிரதிவாதிகள் தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் நீதிபதி அஸ்வினி பன்வார், இவ்வழக்கில் பிரிஜ் பூஷன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரம் இல்லை என்று கூறி தீர்ப்பளித்தார். இந்த பாலியல் வழக்கு என்பது பொய்யானது, இட்டுக்கட்டப்பட்டது மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்டது போல தோன்றுவதாக குறிப்பிட்டுள்ளார். பூஷனுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நீண்ட காலத்திற்குப் பிறகே புகாராக வந்தன. அவை முன்கூட்டியே ஒத்திகை பார்க்கப்பட்டு, திட்டமிட்டு புனையப்பட்டதாக தோன்றுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பிரிஜ் பூஷனுடன் குற்றம் சாட்டப்பட்ட மல்யுத்த கூட்டமைப்பின் துணைச்செயலாளர் வினோத் தோமரும் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கிலிருந்து விடுதலையான பிரிஜ் பூஷன், “என் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஒரு சதித்திட்டமே. நான் குற்றமற்றவன் என்ற முறையில் கவுரவமாக விடுவிக்கப்பட்டுள்ளேன். குற்றச்சாட்டுகளில் ஒன்றே ஒன்று நிரூபிக்கப்பட்டாலும் கூட நான் தூக்கில் தொங்கத் தயார் என்று முதல் நாளில் இருந்தே கூறி வந்தேன். இன்று வரை அதில் உறுதியாக நிற்கிறேன்” என்று சவடால் அடித்துள்ளார். வழக்கிலிருந்து விடுதலையான அவரை மலர் தூவி மாலை அணிவித்து பட்டாசு வெடித்து பாஜக வினர் கொண்டாடினர்.
நீதியின் மீது ஏற்படும் அவ நம்பிக்கை!
இந்தத் தீர்ப்பு வெளியான பிறகு மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட், “ஆளும் கட்சியின் சக்தி வாய்ந்த தலைவர் ஒருவருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதற்கே நாங்கள் தெருக்களில் இறங்கிப் போராட மிகுந்த தைரியத்தை வரவழைக்க வேண்டி இருந்தது. முதல் நாளிலிருந்து முழு நிர்வாக அமைப்பும், அரசாங்கமும் பிரிஜ் பூஷனை பாதுகாப்பதில் ஈடுபட்டன” என்றார். இவர் ஒலிம்பிக்கில் மூன்று முறை பங்கேற்றவர்.
படிக்க:
♦ கோவையில் மாணவியை சீரழித்த கிரிமினல்கள்! நாம் என்ன செய்ய வேண்டும்?
♦ தலித் ஐபிஎஸ் அதிகாரி தற்கொலை! காரணமானவர்களை காப்பாற்றும் பாஜக அரசு!
இந்த வழக்கில் வீராங்கனைகள் தரப்பில் உறுதியாகப் போராடிய வழக்கறிஞர் ரெபக்கா ஜான்,
இந்தத் தீர்ப்பு மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக கூறிய அவர், அதிகாரம் மற்றும் அரசியல் செல்வாக்கு மிக்க ஆண்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளில், குற்றவியல் நீதிமன்றங்களின் சமீபத்திய போக்கானது நீதியின் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக உள்ளது என்று வேதனையை வெளிப்படுத்தினார். இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த வழக்கின் தீர்ப்பைப் பார்க்கும் போது, குற்றத்தை நிரூபிக்க அரசுத் தரப்பு முனைப்பு காட்டவில்லை என்பதும், குற்றவாளிக்கு ஆதரவாகவே நடந்து தப்ப வைத்துள்ளது என்பதும் தெளிவாகத் தெரிகிறது. பில்கிஸ் பானு வழக்கில் 11 குற்றவாளிகளை விடுவிக்க முயன்றதைப் போல, தனது கட்சிக்காரர்களை – அவர்கள் எவ்வளவு பெரிய அயோக்கியர்களாக இருந்தாலும் – அத்தகைய இந்துத்துவ வெறியர்களை பாதுகாப்பதில்தான் பாசிச பாஜக அரசு முனைப்பு காட்டுகிறது.
அனைத்து தன்னிச்சையான நிறுவனங்களையும் தமது அதிகாரப் பிடிக்குள் கொண்டு வந்து ஆட்டம் போடும் பாசிச மோடி கும்பலை, ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்றுவதுதான் நம்முன் உள்ள உடனடிக் கடமையாக உள்ளது.
- குரு







