
மகாராஷ்டிராவில் போலி சாமியார் அசோக் காரத் கைது செய்யப்பட்ட விவகாரம், ஆன்மீகம் என்ற போர்வையில் கார்ப்பரேட் சாம்ராஜ்யங்களை நடத்தும் சாமியார்களுக்கும், ஆளும் வர்க்க அரசியல்வாதிகளுக்கும் இடையிலான கிரிமினல் கூட்டணியை மீண்டும் ஒருமுறை அம்பலப்படுத்தியுள்ளது. 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துக்கள், 150-க்கும் மேற்பட்ட பெண்கள் மீதான பாலியல் சுரண்டல் என விரிந்து கிடக்கும் இந்த விவகாரம், இன்றைய ஆளும் வர்க்க அரசியலில் சாமியார் தொழில் எவ்வளவு லாபகரமான வணிகமாக மாறியுள்ளது என்பதைக் காட்டுகிறது.
ஆன்மீகம் எனும் பெயரில் பகற்கொள்ளை
முன்னாள் கடற்படை வீரரான அசோக் காரத், ஜோதிடம் மற்றும் எண்கணிதம் மூலம் மக்களை ஏமாற்றி தனது சாம்ராஜ்யத்தைக் கட்டியெழுப்பியுள்ளார். இவரின் கட்டணம் ஒரு சந்திப்புக்கு 50 லட்சம் ரூபாய் வரை வசூலிக்கப்பட்டுள்ளது. காரத்தின் சொத்து மதிப்பு 100 கோடிக்கும் மேல் இருக்கும் என்று போலீசார் மதிப்பிடுகின்றனர்; சில தகவல்கள் இது 1,500 கோடி ரூபாய் வரை இருக்கலாம் என்று கூறுகின்றன.
இது வெறும் தனிநபர் குற்றமல்ல. உலகமயமாக்கல் மற்றும் முதலாளித்துவ நெருக்கடிகளால் மன உளைச்சலுக்கு ஆளாகும் நடுத்தர மற்றும் மேட்டுக்குடி வர்க்கத்தினரின் இயலாமையை சாமியார்கள் முதலீடாக மாற்றுகின்றனர் . “சாமியார் கம்பெனி பிரைவேட் லிமிடெட்” என்பது போல, இந்த ஆன்மீகத் தொழில் பன்னாட்டு நிறுவனங்களின் பாணியில் லாப நோக்குடன் நடத்தப்படுகிறது.
அரசியல்வாதிகளின் ஆதரவும், இந்துத்துவ ஏஜெண்டுகளும்
அசோக் காரத்தின் வளர்ச்சிக்கு ஆளும் வர்க்க அரசியல்வாதிகளின் பாதுகாப்பு, அரணாக இருந்துள்ளது. 2022-ல் அப்போதைய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, காரத்தின் அறக்கட்டளையின் கீழ் இயங்கும் கோயிலுக்கு நேரில் சென்றுள்ளார். மகாராஷ்டிர மாநில மகளிர் ஆணையத் தலைவி ரூபாலி சகான்கர், இந்த போலி சாமியாரின் கால்களைக் கழுவும் வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. மேலும், முன்னாள் அமைச்சர் தீபக் கேசர்கர், காரத்தின் சகோதரரின் கல்வி நிறுவனங்களுக்கு முறைகேடாக அனுமதி வழங்க உதவியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
படிக்க:
♦ கிரிமினல் கார்ப்பரேட் சாமியார் ஜக்கி வாசுதேவை பாதுகாக்கும் உச்சநீதிமன்றம்!
♦ உத்தர பிரதேசம் ஹத்ராஸ்: மூடநம்பிக்கைக்கு பலியான 134 பேர்!
ஆளும் வர்க்கம் இத்தகைய சாமியார்களை ஆதரிப்பதன் பின்னணியில் ஒரு அரசியல் உள்நோக்கம் உள்ளது. உழைக்கும் மக்களின் போராட்டக் குணத்தை மழுங்கடிக்கவும், சமூகப் பிரச்சினைகளை “வினைப்பயன்”(முன் ஜென்ம வினை) என்று திசைதிருப்பவும் சாமியார்கள் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படுகின்றனர். ஜக்கி வாசுதேவ், பாபா ராம்தேவ் போன்ற கார்ப்பரேட் சாமியார்கள் ஆளும் பா.ஜ.க அரசின் நேரடி ஆதரவைப் பெறுவது போல, அசோக் காரத் போன்றவர்களும் கெட்டித்தட்டிப் போன இந்த அமைப்பின் அங்கமாகவே வலம் வருகிறார்கள்.
பாலியல் சீண்டல்களும், மூடநம்பிக்கை எனும் ஆயுதமும்
அசோக் காரத் மீது புகார் அளித்த 27 வயது பெண், தனது குடும்பப் பிரச்சினையைத் தீர்க்க வந்தபோது போதை மருந்து கலந்த பானம் கொடுக்கப்பட்டு, மயக்க நிலையில் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். “கணவனின் உயிருக்கு ஆபத்து” போன்ற அச்சமூட்டும் கணிப்புகளைக் கூறி, பெண்களைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதை இவர் வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.
மூடநம்பிக்கைகளைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் இத்தகைய சாமியார்கள், பெண்களைப் போகப் பொருளாகவே கருதுகின்றனர். காரத்தின் மொபைல் மற்றும் லேப்டாப்களில் இருந்து மீட்கப்பட்ட ஏராளமான ஆபாச வீடியோக்கள் இவரின் வக்கிர முகத்தைத் தோல் உரித்துக் காட்டுகின்றன.
அசோக் காரத் போன்ற சாமியார்கள் தனித்துப் பிறந்தவர்கள் அல்ல; அவர்கள் இன்றைய முதலாளித்துவ – இந்துத்துவ அரசியலின் விளைபொருட்கள். மக்களின் அறியாமையையும், மூடநம்பிக்கையையும் பயன்படுத்தி கோடிக் கணக்கில் சொத்துச் சேர்ப்பதும், பெண்களைச் சுரண்டுவதும் சாமியார் தொழிலின் கறுப்புப் பக்கங்கள். பிரேமானந்தா, ஆசிமானந்தா, நித்தியானந்தா, ராம்ரஹிம், ஜக்கி வாசுவேத் வரிசையில் தற்போது புதிதாக அசோக் காரத் இணைந்துள்ளார்.
படிக்க:
♦ ஈஷாவின் மஹாசிவராத்திரி! கார்ப்பரேட் சாமியார் ஜக்கி விரிக்கும் சதிவலை!
♦ ஈஷா யோகா ஜக்கி: மலை முழங்கி மகாதேவன்!
தமிழ்நாட்டில் ஜக்கி வாசுதேவ் நடத்தும் மகாசிவராத்திரி நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வதற்கு இந்தியாவின் தலைமையில் உள்ள குடியரசு தலைவர், பிரதமர், பாதுகாப்புத் துறை அமைச்சர், சினிமா பிரபலங்கள் உட்பட அனைவரையும் கலந்துக் கொள்ளவைத்து தன்னை யாரும் எதுவும் செய்ய முடியாது என்று எக்காளமிடுகிறார். சமீபத்தில் கோவை ஈஷா மையத்தில் தனி சுடுகாடு வைத்திருந்தது அம்பலமான நிலையிலும் அரசும் அதிகார வர்க்கமும் கிரிமினல் ஜக்கிக்கு துணை போகின்றன.
கர்நாடகாவில் ஜெயின் சமூகத்தைச் சேர்ந்த ஹெக்டே குடும்பத்தால் நிர்வகிக்கப்படும் தர்மஸ்தலாவில் பல இளம் பெண்கள் கொல்லப்பட்டதாக காவலாளி கொடுத்த புகாரின்பேரில் சில நாட்கள் ஆய்வு செய்துவிட்டு அந்த வழக்கையே ஊற்றி மூடியது அரசு. காரணம் ஹெக்டே ஆர்.எஸ்.எஸ் காரரும் அரசியல் செல்வாக்கு மிக்க நபரும் ஆவார். இப்படி போலி சாமியார் குறித்த பல விமர்சனங்கள் எழுந்தாலும், அம்பலப்பட்டாலும் மக்களை அவர்களை நோக்கி தள்ளுவதில் ஆளும் வர்க்கம் வெற்றிப் பெறுகிறது.
அறிவியல் கண்ணோட்டம் இல்லாத சமுதாயத்தில், சாமியார்கள் “புரோக்கர்களாக” செயல்பட்டு ஆளும் வர்க்கத்தைக் காப்பாற்றுகிறார்கள். இத்தகைய குற்றவாளிகளுக்குத் தூக்குத் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தாலும், சாமியார் – அரசியல்வாதி – அதிகார வர்க்கம் என்ற இந்த நச்சுச் சுழலை உடைக்காமல் பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்மையான நீதி கிடைக்காது. மூடநம்பிக்கைகளை ஒழிப்பதும், ஆன்மீகத்தின் பெயரால் நடக்கும் இந்த கார்ப்பரேட் கொள்ளையை அம்பலப்படுத்துவதும் இன்றைய காலத்தின் கட்டாயமாகும்.
- நலன்







போலி சாமியார்கள் தனக்கான அதிகாரத்தை வளர்த்துக் கொள்வதற்கு மூடநம்பிக்கை நிறைந்த எம்எல்ஏ எம்பி அமைச்சர் கேபினட் அமைச்சர் ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்றவர்கள் வரிசை கட்டி நிற்கின்றனர்.
அரசு அதிகார வர்க்கமும் அரசியலமைப்பு சட்டமும் தன் காலடியின் கீழ் இருக்கிறது என்ற திமிரில் தான் கால் துசுக்கும் மதிக்காமலும் தன்னை நம்பி வரும் பெண்களை ஏமாற்றி பாலியல் இச்சைக்கு பலியாகும் கொடூரம் அரங்கேறி வருகிறது.
மக்களின் ஒருங்கிணைந்த போராட்டங்கள் தான் இந்த போலி சாமியார்களின் சாம்ராஜ்யத்தை தவிடு பொடியாக்கும்.