ஒரு கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினனுக்கு இருக்க வேண்டிய எட்டு முக்கிய அம்சங்கள் | லியூ ஷாவோகி

1. கம்யூனிஸ்ட் கட்சி என்பது தொழிலாளர் வர்க்கத்தின் கட்சியாகும். புரட்சி தொழிலாளர் வர்க்கத்தால்தான் முன்னெடுத்துச் செல்லப்படுகிறது. எதிர்காலத்திலும் இது தொடரும். விவசாயம் எந்திரமயமானபின் விவசாயிகளும் தொழிலாளர் வர்க்கத்தில் அணியமாவார்கள். எனவே இறுதியில் அவர்களும் தொழிலாளர்களே. அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் இதனை அங்கீகரித்திட வேண்டும்.

2. நம் இறுதி லட்சியம் கம்யூனிசத்தை ஏற்படுத்துவது என்பதேயாகும். அனைத்துக் கட்சி ஊழியர்களும் உறுப்பினர்களும் இதனை எய்திட உறுதியுடன் செயல்பட வேண்டும்.

3. ஓர் உறுப்பினர் தன் வாழ்க்கை முழுவதையும் புரட்சிகரப் போராட்டத்திற்கு அர்ப்பணம் செய்துகொள்ள வேண்டும். இதனை இவர் பாதி வழியில் நிறுத்திக்கொண்டால், அவர் கட்சி உறுப்பினர் தகுதியை இழக்கிறார். புரட்சிகரப் போராட்டம் என்பது, அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், தத்துவார்த்த ரீதியாகவும் நடத்தப்பட வேண்டும்.

4. ஒரு கட்சி உறுப்பினர் என்பவர் தன் புரட்சிகரப் போராட்டத்தை கட்சியின் கொள்கைகள் மற்றும் தீர்மானங்களின் கீழ் நடத்திட வேண்டும். கட்சிக் கட்டுப்பாட்டை அவர் கறாராகக் கடைப்பிடித்திட வேண்டும். கட்சியின் நலன்களுக்கு ஊறுவிளைவிக்கும் போக்குகள் எந்த வடிவத்தில் வந்தாலும் அது கட்சிக்கு உள்ளேயிருந்து வந்தாலும், வெளியேயிருந்து வந்தாலும் அதனை எதிர்த்து முறியடித்திட வேண்டும். இல்லாவிடில் அவர் ஒரு கட்சி உறுப்பினராக இருக்க முடியாது.

5. ஒரு கட்சி உறுப்பினர் தன் சொந்த நலன்களை, கட்சியின் நலன்களுக்கு உட்படுத்திட வேண்டும். தன் நலன்களை மட்டுமே பார்த்துக்கொண்டு, மக்களுக்காகத் தியாகம் எதையும் செய்ய விரும்பாதவர் ஒரு கம்யூனிஸ்டாக இருக்க முடியாது.

6. கட்சி உறுப்பினர் என்பவர் புரட்சிகரப் போராட்டத்தின்போது வீரத்துடனும் உறுதியுடனும் இருந்திட வேண்டும். அவர் இடர்ப்பாடுகளையும் இன்னல்களையும் கண்டு பின்வாங்கக் கூடாது. எதிரியிடம் சரணடைந்திடக் கூடாது. அல்லது கட்சிக்கும் கம்யூனிசத்திற்கும் துரோகம் இழைத்திடக் கூடாது. இவற்றில் எதையேனும் அவர் செய்தால், அவர் ஒரு கம்யூனிஸ்டாக இருக்க முடியாது.

படிக்க

 சிறந்த கம்யூனிஸ்ட் ஆவது எப்படி? – நூல் அறிமுகம்
 கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையும் நவம்பர் புரட்சியின் அனுபவமும்.

7. ஒரு கட்சி உறுப்பினர் என்பவர் கட்சிக்கும் மக்களுக்கும் இடையே பாலமாக இருந்து, மக்களுக்குச் சேவை செய்திட வேண்டும். மக்களின் ஆசைகளையும், கருத்துக்களையும் புரிந்துகொண்டு அவற்றைக் கட்சிக்குத் தாமதமின்றி கொண்டு செல்ல வேண்டும். அதேபோன்று கட்சியின் கொள்கைகளையும் மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும். கட்சி, விதிவிலக்கு அளித்திடும் ஒருசிலரைத் தவிர மற்ற அனைவரும் கட்சி அமைப்புகளில் வேலை செய்திட வேண்டும். இதனைச் செய்யத் தவறும் எவரும் ஒரு கம்யூனிஸ்டாக இருக்க முடியாது.

8. மேலே கூறிய அனைத்தையும் நிறைவேற்ற வேண்டுமென்றால், கட்சி உறுப்பினர் என்பவர், தன் அரசியல் உணர்வினை உயர்த்திக்கொள்வதற்கு ஏற்றவிதத்தில் மார்க்சிசம்-லெனினிசத்தை மிகவும் கஷ்டப்பட்டுக் கற்றிட வேண்டும். கடினமாகக் கற்காத எவரும் ஒரு சிறந்த கம்யூனிஸ்டாக இருக்க முடியாது.
(தோழர் லியூ சோசி, 1951 மார்ச்சில் ஆற்றிய உரையிலிருந்து.)

நன்றி:
தோழர் ச. வீரமணி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here