தமிழகத்தில் மக்களின் பக்தியை பயன்படுத்தியும், உலகமயமாக்கம் ஏற்படுத்தும் நெருக்கடியில் சிக்கிவரும் பல்வேறு வர்க்க பிரிவினரை ஆற்றுப்படுத்தியும், பெரும் சாம்ராஜ்ஜியத்தை கட்டி விஸ்வரூபம் எடுத்துள்ளான் ஒரு கிரிமினல் சாமியார். கோவையின் வெள்ளியங்கிரி மலைஅடிவாரத்தில், அவன் நடத்தும் மஹா சிவராத்திரி விழா இன்று இரவு நடக்க உள்ளது.
ஜக்கி முதலில் மதம் சாராத ஆன்மீகவாதியாகத் தொழிலை தொடங்கினார். தியான லிங்கம் என்றார். பின்னர் படிப்படியாக ஆதியோகி வரை வந்து சிவன்தான் நம் கடவுள் என இந்து மத சங்கியாகி குத்தாட்டம் போடுகிறார்.
பழைய பாரம்பரியத்தில் ஊறியவர்களை பல்லக்கு தூக்கியும், தேர் இழுத்தும் புனித நடைப்பயணமாக வரவும் வழிகாட்டியுள்ளார். சென்னையிலிருந்து கோவைக்கு நடந்தே சென்றுள்ளனர். இதில் நாயன்மார்கள் சிலைகளும் சுமக்கப்பட்டன என்பது தனிக்கதை.
அதிகரித்துவரும் பக்தர்கள் கூட்டம்!
நேரில் லட்சக்கணக்கானோர் பக்தி பரவசத்தில் மூழ்குவது மட்டுமல்லாமல், தமிழகத்தில் மட்டும் 32 இடங்களில் மைதானத்தில் மக்களை அமரவைத்து பிரம்மாண்டமாக திரையிட உள்ளார்கள். கடந்த 2022இல் நடந்த கொண்டாட்டத்தை 14 கோடிப்பேரை பார்க்க வைத்து உலக சாதனை படைத்துள்ளார் ஜக்கி. இதற்கு என்ன காரணம் என்று அலசுவோமா?
புதிய மரபாக, முழு இரவு ஜெபக்கூட்டம் போல் முழு இரவு ஆடல்பாடல் மூலம் மக்களை கட்டிப்போட்டு வருகிறார் ஜக்கி. நன்கு திட்டமிடப்பட்டு பல கோடி செலவில் விழா ஏற்பாடுகள் நடக்கிறது. இந்திய அளவில் தேர்ந்த கலைஞர்கள் மூலம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. ஒளி வெள்ளத்தை – லேசரை கச்சிதமாக பயன்படுத்தி பல்வேறு விதத்தில் பிரம்மாண்ட சிவனை பிரகாசிக்க வைக்க தனி யூனிட் மெனக்கெடவுள்ளது.
இசை இல்லாமல் உணர்ச்சி ஏது? நம் ஊரில்தான் அனைத்திலும் இசை இரண்டறக் கலந்துள்ளதே! ஜக்கி ஒலியியல் நிபுணர்களை, பிரம்மாண்ட ஒலிப்பெருக்கிகளை, பொருத்தமான ஒலிக்கலவை ஒருங்கிணைப்பு mixture களை பயன்படுத்திதான் தாளத்திற்கேற்ப அனைவரையும் தன்னோடு ஆட வைக்கிறார். சினிமா கதாநாயகிகள் உட்பட ரசிகனை ஈர்க்கும் அனைத்தையும் கலந்து ஆன்மீக காக்டெயில் போதையாக்கி தருகிறார். ECR பீச் ரிசார்ட் பார்ட்டிகளின் புதுமையும் விடிய விடிய கதாகாலாட்சேபம் கேட்ட பழமையையும் கலந்து செய்யும் காக்டெயில் சரக்குதான் இந்த கொண்டாட்டம்.
குரல்வளம் கொண்ட தலைசிறந்த பாடகர்களை தேர்ந்தெடுத்து மேடையேற்றுகின்றனர். இவர் மதம் கடந்தவரல்லவா? அதற்கேற்ப உலகளாவிய கலைஞர்களை வரவைக்கிறார். இதில் நாட்டுப்புற பாரம்பரிய கலைகளுக்கும், வீர விளையாட்டுகளுக்கும் இடம் உண்டு. இன்றும் அப்படி கொண்டாட்டம் களைகட்டும். “இது வனப்பகுதியில் நடக்கும் அத்துமீறல், அளவுக்கதிகமான ஒலி, ஒளி காரணமாக சுற்றுச்சூழல் கெடுகிறது” என கோவையில் பல்வேறு அமைப்பினரின் எதிர்ப்புக்குரல்களும் வராமல் இல்லை. இதற்காக சிலர் நம்மீதும் ஆத்திரம்கொள்கிறார்கள்.
கொண்டாட்டத்தை கண்டு நமக்கு வயித்தெரிச்சலா?
இப்படி சிலர் கேட்கக்கூடும். அதற்காக விரிவாக விளக்கிவிடுகிறோம். ஒருவன் பக்தியை பரப்பி, தனது ஆன்மீக நம்பிக்கைகளுக்காக வாழ்ந்து மடிவதில் நமக்கொன்றும் பிரச்சினை இல்லை. ஆனால் ”கஞ்சா குடிக்கி” என அன்போடு அழைக்கப்படும் ஜக்கி ஒரு அப்பழுக்கற்ற ஆன்மீகவாதியாக நடந்துகொள்ளவில்லை.
கார்ப்பரேட் ஆதிக்கத்தால் வாழ்விழக்கும் மக்கள் கரைசேர முடியாமல் தவிக்கின்றனர். அவர்களில் சிலர் தற்கொலைக்கு துணிகின்றனர். இப்படி தவிக்கும் மக்கள் தங்களை கைவிட்டுள்ளதால், படிப்படியாக மதிப்பிழந்து நிற்கின்றன, இந்துகடவுள்களும், புண்ணிய ஸ்தலங்களும்.
இந்த இடத்தில்தான் ஜக்கிகள் உருவெடுக்கிறார்கள். கடமையை செய்! பலனை எதிர்பாராதே! என்றும் அடிமையாகவே இரு! என உபதேசிக்கும் இந்து மதத்தின் கீழ் பெரும்பான்மையினரை கொண்டுவர பழைய கடவுள்களும், கோவில்களும் பொருந்தவில்லை. கார்ப்பரேட் சாமியார்கள் நவீன வழிமுறைகளை பரப்புகின்றனர்.
அதாவது எஜமானரான கார்ப்பரேட்டுகளுக்கும், அவர்களின் அடியாட்களாக செயல்படும் அரசு அதிகார வர்க்கத்தினருக்கும், கார்ப்பரேட் ஆதரவு அரசியல்வாதிகளுக்கும் தேவைப்படும் ஆற்றுப்படுத்துவது, ஆசுவாசப்படுத்துவது, சிந்தனையை மடைமாற்றுவது, ஒரு மனஅழுத்தத்தை குறைக்கும் pressure relief வால்வாக முழு இரவு கொண்டாட்டங்களை நடத்துகின்றனர். இதற்கு அரசின் உயர்மட்டத்தில் இருப்பவர்கள் சிறப்பு விருந்தினர்களாகவும் வருகின்றனர்.
வரிசைகட்டி நிற்கும் பிரதமர், ஜனாதிபதிகள்!
காவி பாசிஸ்ட்டான மோடிதான் ஆதியோகி சிலையை ’திறந்தவர்’. மேற்குத்தொடர்ச்சி மலையில் யானைகள் வலசை செல்லும் வழித்தடத்தில் உள்ள பழங்குடிகளின் நிலத்தை ஆக்கிரமித்து பிரம்மாண்ட சிலையை நிறுவ இந்த தொடர்பே ஜக்கிக்கு உதவியது. அன்றைய ராம்நாத் கோவிந்த் முதல் இன்றைய திரவுபதி முர்மு வரை வரிசைகட்டி வருகின்றனர். இவர்கள் சிவன் கோயிலுக்குள் கர்ப்ப கிரகம் வரை செல்ல முடியாது. ஆனால் ஈஷாவில் நவீன ஆதியோகியின் முன் ஜக்கியுடன் சேர்ந்து பரவச நடனமாட முடியும்.
இந்த பக்தி வலையில் வசமாக சிக்கும் அனைவரையும் சன்யாசியாக்குகின்றனர். உண்மை தெரிந்து பின்வாங்க முயற்சிப்போரில் சிலர் தற்கொலை என்று மர்மமாக உயிரிழக்கின்றனர். பெற்றோர்கள் பிள்ளைகளைத் தேடி ஈஷாவுக்கு வந்தால் மிரட்டப்படுகிறார்கள். உள்ளே சேர்க்கப்படும் அனைவருக்கும் புதிய பெயர் வைக்கப்பட்டு பழைய குடும்ப உறவை அறுக்கிறார் ஜக்கி.

பெயர் அடையாளத்தை மாற்றி ஐ.டி. துறையில் வேலை வாங்குவதும் , நவீன நுகர்வு வெறியில், வார இறுதி (week end party) கொண்டாட்டத்தில் மூழ்கடிக்கப்பட்டு குடும்ப உறவுகளிடமிருந்து தனிமைப்படுவதும் நடக்கிறது. அதே மாடலில்தான் ஈஷாவிலும் அடையாளம் மாற்றப்படுகிறார்கள்.
பக்திநெறி தப்பல்ல; பக்தி வெறி நியாமும் அல்ல!
நாம் சிவனை வழிபடுவதை, வெள்ளியங்கிரி ஆண்டவரை மலையேறி தரிசிப்பதை விமர்சிக்கவில்லை. இந்த கார்ப்பரேட் ஜக்கியின் ஆன்மீக வியாபாரத்தில் வாழ்வை தொலைப்பதைத்தான் தடுக்க நினைக்கிறோம். சங்கிகள் தெருவெங்கும் வைக்கும் பிள்ளையார் எப்படி கலவரப்பிள்ளையாராகி வெறியேற்ற துணைபோகிறாரோ, அதேபோல ஜக்கியின் ஆதியோகியும், மஹா சிவராத்திரியும் சங்கிகளை வளர்க்க துணைசெய்பவைதான்.
படிக்க:
♦ ஈஷா யோகா ஜக்கி: மலை முழங்கி மகாதேவன்!
♦ மிஸ்டர் ஜெகதீஷ் வாசுதேவ் டவுசர் கிழியுது ரிலாக்ஸ் ப்ளீஸ்!
இங்கும்கூட உங்களின் வர்க்கத்திற்கேற்பத்தான், நீங்கள் தரும் நன்கொடைக்கேற்பத்தான் ஜக்கியை நெருங்கவே முடியும். 500 கி.மீ. பாதயாத்திரையாகவே வந்தாலும் பழனி பக்தன் எப்படி சிறப்பு தரிசனத்திற்கு தகுதியற்றவனோ அதே கதைதான் ஈஷாவிலும்!. கோடிகளை அள்ளி விட்டால் எம்மதத்தினரும், எந்நாட்டினரும் சத்குருவுடன் கைகோர்த்து ஆடமுடியும். ஆனால் ஏழை பக்தனால் நெருங்க கூட முடியாது. மேடையிலிருந்து கி.மீ. தொலைவில் அமர்ந்து, ஆங்காங்கே வைக்கப்படும் LED ஸ்கிரீனில் கண்டே பரவசமடைய வேண்டியதுதான்.
உன்குல தெய்வம் வெயில் மழையில் நிற்க, இந்த சிவன் மட்டும் எப்படி விஸ்வரூபம் எடுக்க முடிகிறது?. கார்ப்பரேட் ஆதரவில்லாமல் பல்லாயிரம் கோடி குவியுமா! வெறும் ஈசனின் தயவில் நவீன சொகுசு விடுதியே ஆசிரமமாக முளைக்குமா? பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவரையே விழுங்கும் ஆதியோகி பற்றி உண்மையான பக்தர்கள் சிந்திக்காமல் இருக்கலாமா?
இவர் இலவச ருத்ராட்சரம் தருவதாக அறிவிப்பது மோசடி என்றும், டொனேஷன் கேட்டு போன் மட்டும்தான் வந்தது என்றும் தினமலர் கட்டுரையின் பின்னூட்டத்தில் சிலர் விமர்சித்துள்ளனர்.
இவர் ஆன்மீக சொற்பொழிவு மட்டும் ஆற்றினால் பரவாயில்லை. கார்ப்பரேட் – காவி ஆதரவு அரசியல், பொருளாதார கருத்துக்களையும் பேசிவருகிறார். மிஸ்டு கால் கொடுத்தாலே பாஜக வில் உறுப்பினராவதைப்போல, இவர் சொல்லும் எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தாலே நதியை மீட்டுவிடுகிறார். இவர் குறித்து பேச ஏராளமானவை உண்டுதான். மஹாசிவராத்திரி குறித்து எழுதுவதால் வரம்பிட்டுக்கொள்கிறோம். இப்படிப்பட்ட கார்ப்பரேட் கிரிமினலின் பின்னால் போய் சீரழிய வேண்டாம் என்றுதான் பக்தர்களை கேட்டுக்கொள்கிறோம்.
- இளமாறன்