ஈஷா யோகா ஜக்கி: மலை முழங்கி
மகாதேவன்!


(திமுக- வின் அண்ட புளுகுகளுக்கு ஆப்பு)

ஈஷா யோகா மட்டுமல்ல, காருண்யா, மாதா அமிர்தானந்தமாயி போன்ற கல்வி நிறுவனங்களும் எப்படியெல்லாம் யானைகள் வழித்தடத்தை ஆக்ரமித்துள்ளன என நான் நேரில் பார்த்து ஆராய்ந்து எழுதிய கட்டுரை. இந்தியா டுடே இதழில் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளி வந்தது.

யானைகள் பாதையில் மனிதர்கள் அட்டகாசம். கோவை மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைக்கு அருகே சில்லென்ற காற்று வீசிக்கொண்டிருந்தது. மேகங்கள் தலைக்கு மேலே பயணித்துக்கொண்டிருந்தன. தென்மேற்குப் பருவக்காற்று இதமாக வீசிக்கொண்டிருந்தது. ஆனால் மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கு அருகேயுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களோ இவற்றை ரசிக்க முடியாத அளவுக்கு பீதியில் இருக்கிறார்கள்.

இப்போதெல்லாம் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து வயல்வெளிகளை அழித்ததாக அடிக்கடி செய்திகள் வருகின்றன. மனிதர்களும் கொல்லப்படுகிறார்கள் என்பது மிகவும் துயரமான விஷயம். ஆனால் ஊடகங்கள் எப்போதுமே ‘யானைகள் அட்டகாசம்’ என்றே செய்திகளை வெளியிடுகின்றன. ஆனால் உண்மை என்னவெனில் யானைகள் தங்கள் இடங்களையும், தங்கள் வழித்தடங்களையும்தான் பயன்படுத்துகின்றன. மனிதர்களாகிய நாம்தான் நகரமயமாதல் என்கிற பெயரிலும், கட்டடங்கள் என்கிற பெயரிலும் பொக்கிஷமாக பாதுகாக்கப்படவேண்டிய காடுகளை அழித்துக்கொண்டிருக்கிறோம். அதனால் காட்டு விலங்குகள் தங்கள் வாழிடத்தையும் பாதையையும் இழந்து வேறு வழியின்றி ஊருக்குள் வருகின்றன.

யானை வழித்தடம் ஆக்கிரமிப்பு

கோவை மாவட்டத்தின் யானைகள் வழித்தடத்தில்தான் அனைத்து மத நிறுவனங்களும், ஆன்மீக குருக்களின் மடங்களும், கல்வி நிறுவனங்களும், ரியல் எஸ்டேட் நிலங்களும் உள்ளன. சின்னாம்பதி மலைகிராமத்தை நோக்கி என் பயணம் தொடங்கியது. சின்னாம்பதிக்கு அருகில் மாவுத்தம்பதியில் ஹிமாலயா டெவலப்பர்ஸ் என்கிற ரியல் எஸ்டேட் ஏஜென்சி பெரிய அளவிலான இடத்தை மலைச்சரிவுக்கு மிக அருகே வளைத்துப் போட்டிருக்கிறது. மலைகளை அடுத்துள்ள காட்டுப்பகுதி ரிசர்வ்ட் ஃபாரஸ்ட் எனப்படும் காப்புக் காட்டுப்பகுதியாக வரையறுக்கப்பட்டுள்ளது. காட்டுப்பகுதி தொடங்குவதைக் குறிக்கும் எல்லைக்கல் ஒன்று நடப்பட்டிருக்கும். எல்லையில் இருந்து 150 மீட்டர்கள் வரை Buffer Zone இடைதாங்குமண்டலம் என்றழைக்கப்படுகிறது. இந்தப் பகுதியில் எந்த கட்டடமும் கட்டப்படக்கூடாது. இப்பகுதியில் எந்த மாற்றமும் செய்யப்படக்கூடாது என்பது விதி. ஆனால் ஹிமாலயா டெவலப்பர்ஸ் நிறுவனம் விதிகளை மீறி 150 மீட்டர் இடைவெளி விடாமல் தனது வேலியை காப்புக்காட்டு எல்லைக்கு அருகிலேயே போட்டுள்ளது. சுற்றுச்சுவர் மற்றும் வேலிகளால் வழக்கமான பாதை மறுக்கப்படும் யானைகள் தடுமாறுகின்றன. குழப்பமடைந்து ஊருக்குள் வருவதால் விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படுகின்றன.

யானைகள் வழித்தடம் என்பது என்ன? யானைகள் ஒரே இடத்தில் தங்குவதில்லை. அவை நகர்ந்துகொண்டே இருப்பவை. உணவுக்காகவும், தண்ணீருக்காகவும் ஒவ்வொரு இடமாக நகரும் யானைகள் வழக்கமாக ஒரே வழியையே பின்பற்றுகின்றன. ஒரு யானையை இந்த ஆண்டு ஓரிடத்தில் பார்த்தால் அடுத்த ஆண்டும் அதே யானையை அதே இடத்தில் பார்க்கலாம். அந்த அளவுக்கு யானைகள் துல்லியமாக தனது வழித்தடத்தைப் பேணுவதுண்டு. ஆகவே யானைகள் பயன்படுத்தும் பாதைகளும், அவற்றை ஒட்டிய பகுதிகளும் யானைகள் வழித்தடம் என்று அழைக்கப்படுகின்றன.

சின்னாம்பதிக்கு அருகில் உள்ள கிராமம் மொடமாத்திக்காடு. அங்கே மே 21 அன்று பாலசுப்பிரமணியம் என்கிற விவசாயி ஒருவர் யானை தாக்கியதில் உயிரழந்தார். அவருடைய வீட்டுக்குச் சென்றபோது மொத்த குடும்பமும் நடந்ததை விவரித்தனர். 500 குடும்பங்கள் இந்த ஊரில் வாழ்கின்றனர். இப்போது அத்தனை குடும்பங்களும் அச்சத்தில் உள்ளன. ஒவ்வொரு வீட்டிலும் ஒரு சக்திவாய்ந்த டார்ச் லைட் உள்ளது. அதன் விலை 3,500 ரூபாய். யானைகள் இரவில் வரும்போது அந்த டார்ச்சை அதன் முகத்துக்கு நேரே அடித்தால் யானைகள் பின்வாங்கிவிடுவதுண்டு. ஆனால் பாலசுப்பிரமணியத்தின் தாய் ராமாத்தாள் ‘’நாங்க இங்கே 40 வருஷமா இருக்கோம். இப்போ யானைங்க எல்லாம் பேட்டரி போட்டா (டார்ச் அடித்தால்) திரும்பிப் போறதில்ல..எதுத்துக்கிட்டு வருது. எங்களுக்கு இது புரியலை. இப்போ கொஞ்ச காலமாத்தான் இந்த யானைங்க இப்படி ஆளை அடிக்குதுங்க” என்கிறார். அருகில் உள்ள முருகம்பதி பழங்குடி கிராம மக்கள்தான் இவர்களைக் காப்பாற்ற வருகிறார்கள்.

விவசாயக் குடும்பம் ஒவ்வொன்றிலும் ஒவ்வொருவர் இரவுநேரத்தில் வயலை காவல் காக்கின்றனர். யானைகள் வந்துவிட்டால் உடனே வனத்துறைக்கு தகவல் தருகின்றனர். தீயணைப்புப் படைபோல , வனத்துறையில் யானை விரட்டும் படை ஒன்று உள்ளது. மாலை வேளைகளிலும் இரவு நேரங்களிலும் இவர்களது செல்போன்கள் அடித்தபடியே உள்ளன. யானைகளை காட்டுக்குள் மீண்டும் விரட்டுவதற்காகச் செல்வதற்கென்றே ஒரு விசேஷ வாகனத்தை வைத்திருக்கிறது வனத்துறை. ஒவ்வொரு மாலையில் இந்தப் படை பட்டாசுகளுடனும் விசேஷ டார்ச் லைட்டுகளுடனும் தயாராய் காத்திருக்கிறது. இந்த டார்ச் லைட்டுகள் ஒரு கி.மீ. தொலைவுக்கு ஒளிதரக் கூடியவை. யானை விரட்டும் படையுடன் காடுகளைச் சுற்றிய ஓரிரவில் அவர்களுடைய பணியின் சிரமம் விளங்கியது. ஒரு கிராமத்திலிருந்து அழைப்பு வருகிறது.

உடனே படை அங்கே விரைந்துசென்று தேடுதல் வேட்டையைத் தொடங்குகிறது. யானைகள் கூட்டமாகவோ தனியாகவோ வருவதுண்டு. யானையைக் கண்டவுடன் வாகனத்திலிருந்து பட்டாசுகளை வெடித்து, டார்ச் லைட்டை பயன்படுத்திய யானைகளை மீண்டும் காட்டுக்குள் அனுப்புகின்றனர். யானைகளும் அவர்களுக்குக் கட்டுப்படுகின்றன. சில யானைகள் இவர்களைத் துரத்துவதும் உண்டு. உயிருக்கு உத்திரவாதம் இல்லாத நிலைதான் இந்தப் படையில் உள்ளவர்களுக்கு. இதற்கென்றே விசேஷப் பயிற்சி பெற்ற படை இது. ஓரிடத்தில் பணியில் இருக்கும்போதே திடீரென்று இன்னொரு பகுதியில் இருந்து அழைப்பு வருகிறது. உடனே அங்கே விரைகிறது படை. இப்படியே இரவு முழுதும் கழிகிறது. மதுக்கரைக்கு அருகே கேரளாவுக்குச் செல்லும் சாலையில் மாலை மற்றும் இரவுகளில் சாவகாசமாக வாகனத்தை நிறுத்திவிட்டு சாலையோரங்களில் செல்போனில் பேசிக்கொண்டிருந்த பயணிகளை எச்சரித்து உடனே புறப்படச் சொல்கிறார்கள். இந்தச் சாலை தற்போது யானைகள் அடிக்கடி குறுக்கிடும் சாலையாகிவிட்டது. சாலையைக் கடந்து எதிர்புறம் உள்ள சுந்தராபுரத்துக்குச் செல்கின்றன யானைகள். அவை திரும்பும் வரை சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு அவ்வபோது நெரிசல் ஏற்படுவது இங்கே சகஜமாகி விட்டது. ஒருமுறை வடவள்ளி பேருந்து நிலையத்துக்கே வந்து சென்றன யானைகள்.
வனத்துறை அளிக்கும் தகவல்படி ‘’350 -400 யானைகள் சீசன் என்று அழைக்கப்படும் அக்டோபரிலிருந்து மார்ச் மாதம் வரை கோவைப் பகுதியில் இருக்கும். மற்ற நேரங்களில் ஏறத்தாழ 80 யானைகள் இருக்கலாம்’’

ஈஷா யோகா நிறுவனம் போன்ற ஆன்மிக நிறுவனங்கள் மின்வேலியை அமைத்திருப்பதால், அவற்றைத் தொடும் யானைகள் இறந்துபோகின்றன அல்லது ஆத்திரமடைந்து எதிர்படும் மனிதர்களைத் தாக்குவதால் மனித உயிர்களும் பலியாகின்றன. பூண்டியில், வெள்ளயங்கிரி மலை அருகில் ஆன்மீக குரு என்று அழைக்கப்படும் ஜக்கி வாசுதேவின் ஈஷா யோகா மையம் உள்ளது.இங்கே மின்வேலி அமைக்கப்பட்டிருக்கிறது. மனிதர்களோ, விலங்குகளோ அவற்றைத் தொட நேர்ந்தால்? மேலும் நீலியாறு என்கிற எப்போதும் வற்றாத ஓடை ஈஷா மையத்தி பின்புறம் ஓடுகிறது. இதன் நீர் முழுவதையும் ஈஷா மையம் அருகிலேயே ஒரு கிணற்றைத் தோண்டி உறிஞ்சிவிடுகிறது. ஹாக்கா (Hill Area Conservation Authority (HACA)) என்றழைக்கப்படும் மலைத்தள பாதுகாப்புக் குழுவிடம் மலையடிவாரப் பகுதிகளில் ஏதேனும் கட்டடங்கள் கட்டவேண்டுமென்றால் அனுமதி பெறவேண்டும். மலைகளுக்கும் காடுகளுக்கும் மிக அருகே இருக்கும் ஒரு சில கிராமங்கள் இக்குழுவின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. கோவையின் உள்ளூர் திட்டக் குழுமம் (Town and Country Planning) ஈஷா மையத்துக்கு அனுமதி பெறாமல் கட்டப்படும் கட்டடங்களின் கட்டுமானப் பணிகளை நிறுத்துமாறு உத்தரவிட்டு 5.11.2012 அன்று நோட்டீஸ் அனுப்பியது. அந்த நோட்டீஸில் ‘’2.11.2012 அன்று பணிகள் நடைபெறும் இடத்தைப் ஆராய்ந்தபின்னர், 60 கட்டட பிளாக்குகள் கட்டப்பட்டுள்ளன என்றும், 34 பிளாக்குகள் கட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்றும் கண்டறியப்பட்டது. இவற்றுக்கெல்லாம் அனுமதி பெறப்படவில்லை. ஆகவே பணிகளை நிறுத்துமாறும், இந்த நோட்டீஸ் பெற்ற 3 நாட்களுக்குள் அனுமதி கோரி விண்ணப்பிக்கவேண்டும். தவறும்பட்சத்தில் Town and Country Planning Act 1971 பிரிவு 56 & 57 படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

வனத்துறையும் 8.2.12 தேதியிட்ட தனது கடிதத்தில் ‘’ஏற்கனவே கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு அரசு அனுமதி பெறாத நிலையில் பெரிய அளவிலான புதிய கட்டிடங்களை கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவது தெரிய வருகிறது. அரசு ஆணைக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் எல்லாவித கட்டிடப் பணிகளையும் உடனடியாக நிறுத்தவும் ஹாக்கா சட்டத்தின்படி உரிய அனுமதி பெற்று பின்பாக கட்டிடப்பணிகளை தொடரவும் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது’’ என்று குறிப்பிட்டிருக்கிறது.

வனச்சரக அலுவலர் எம்.எஸ். பார்த்திபன் 19.01.12 அன்று மாவட்ட வன அலுவலருக்கு எழுதிய கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கிறார்.

1. சாடிவயலுக்கும் தானிக்கண்டிக்கும் இடையேயான யானைகள் வழித்தடத்தில் ஈஷா மையம் அமைந்துள்ளது.

2. ஈஷா மையம் இங்கே அமைக்கபப்ட்டபின், லட்சக்கணக்கான மக்கள் இங்கு வந்துபோகிறார்கள். காட்டுப் பாதையை அவர்கள் பயன்படுத்துவதால், காட்டு விலங்குகளும் காடுகளும் பாதிக்கப்படுகின்றன. அத்துடன், நூற்றுக்கணக்கான பணியாட்களும், கனரக வாகனங்களும், எந்திரங்களும் கட்டுமானப் பணிகளுக்காக பயன்படுத்தப்படுவதால், காட்டு விலங்குகளுக்கும், யானைகள் வழித்தடமும் பெருமளவில் பாதிக்கப்படுகின்றன.

3. இயற்கையான் காட்டு மரங்கள் அழிக்கப்பட்டு, ஈஷா மையத்தின் மரங்கள் மட்டுமே வளர்க்கப்படுகின்றன.

4. மின்வேலி அமைக்கப்பட்டிருப்பதால், யானைகள் வருகையில் பாதை குழம்பி வயல்களுக்குள் புகுந்துவிடுகின்றன. இதனால் பயிர்கள் நாசமாகின்றன. உடமைகளுக்கும் மனித உயிர்களுக்கும் இழப்புகள் ஏற்படுகின்றன.

மலைப் பகுதிகளில் ரிசர்வ்ட் ஃபாரஸ்டுகள் என்று அழைக்கப்படும் காப்புக்காடுகளின் எல்லையில் ஒரு கல் நடப்பட்டிருக்கும். அந்த எல்லைக் கோட்டில் இருந்து 150 மீட்டர் buffer zone என்றழைக்கப்படும் இடைதாங்கு மண்டலம் என்றழைக்கப்படுகிறது. இந்த மண்டலத்தில் எந்த கட்டுமானப் பணிகளும் நடைபெறக்கூடாது என்பது விதிமுறை. ஆனால் ஈஷா மையம் ஏறத்தாழ 30 கட்டடங்களை இந்த இடைதாங்கு மண்டலத்தில் கட்டியிருக்கிறது.

‘’1994 -2011 வரை கட்டப்பட்ட 32,855.80 மீட்ட்டர் கட்டிடங்களுக்கு மட்டும் ஊராட்சியின் அனுமதி பெற்றுள்ளதாக ஈஷா அறக்கட்டளையினரால் தகவல் அளிக்கப்பட்டிருக்கிறது. தற்போது ஈஷா மையத்தின் பரப்பளவு 4,27,700 சதுர மீட்டர். காப்புக் காட்டின் எல்லையில் இருந்து 1.70 மீட்டரில் தொடங்கி, 473 மீட்டர்கள் வரை கட்டிடங்கள் உள்ளன. இவை யானைகள் வழித்தடத்தில் அமைந்துள்ளன என்பதால் மனித – விலங்கு முரண்பாடு ஏற்படுகிறது. ஆண்டுதோறும் நடைபெறும் மகாசிவராத்திரி விழாவுக்கு சுமார் 2 லட்சம் பேர் வருவதால், வாகனத்தின் இரைச்சல், திருவிழாவுக்கு பயன்படுத்துக்கும் ஒளி/ஒலி அமைப்பினால் அருகில் உள்ள போலாம்பட்டி பிளாக் -2 ஒதுக்கு வனத்தினும் வாழும் யானைகளின் இயல்பு வாழ்க்கைக்கு அதிக இடையூறு ஏற்பட்டு யானைகள் வனத்தைவிட்டு வெளியேறி பக்தர்களை தாக்கத் தொடங்கினால், அந்த பெரிய சேதத்தை குறைந்த எண்ணிக்கையிலுள்ள வனப்பணியாளர்களால் தடுப்பது என்பது இயலாத காரியமாகும்’’ என்று கோவை மாவட்ட வன் அலுவலர் ஹாக்காவுக்கு எழுதிய 17.08.2012 தேதியிட்ட கடிதத்தில் தெரிவிக்கிறார்.

ஆனால் ஈஷா பணிகளை முடித்துவிட்டு 2012 டிசம்பரில் கட்டடத்தைத் திறந்துவிட்டது. இந்தியா டுடேவிடம் ஈஷா மையத்தின் செய்தித் தொடர்பாளர் ‘’நாங்கள் 6 துறைகளில் இருந்து அனுமதி பெறவேண்டும். 5 துறைகளில் பெற்றுவிட்டோம். ஒரு துறையில் மட்டுமே அனுமதி பெறவில்லை. பொறாமை கொண்டவர்கள் எங்களைக் குறித்து தவறான பிரசாரம் செய்கிறார்கள்’’ என்றார்.

போலுவாம்பட்டி பஞ்சாயத்துத் தலைவர் சதானந்தம் ‘’அவர்கள்பாட்டுக்கு கட்டிடங்களாகக் கட்டுகிறார்கள். இதை எதிர்த்து ஒரு தீர்மானத்தை பஞ்சாயத்து சார்பில் கொண்டு வரலாம் என்று முயன்றால் அன்றைக்கு உறுப்பினர்கள் வருவதில்லை. உறுப்பினர்கள் இல்லாமல் எப்படி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றமுடியும். ஈஷா எப்படியோ அவர்களை சரிக்கட்டி விடுகிறது. எங்கள் அமைப்பு சிறிய அமைப்பு. ஈஷா மையத்தை எதிர்க்கும் அளவுக்கு சக்தி கிடையாது. அவர்களுக்கு பெரிய அளவில் தொடர்புகள் உண்டு. என்ன செய்வது? எதுவும் இயலவில்லை.’’ என்கிறார்.

பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சென்னை உயர் நீதிமன்றத்தின் மீது ஒரு பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளது. ‘’ அனுமதி பெறாமல் கட்டப்பட்ட சட்டவிரோத கட்டங்களை உடனடியாக இந்திய அரசையும், தமிழக அரசையும் வலியுறுத்தி இந்த வழக்கை தொடர்ந்துள்ளோம். தமிழ்நாடு முழுதும் மின்வெட்டில் இருளில் தவிக்கையில் ஈஷா மையத்துக்கு மட்டும் 24 மணிநேர தடையில்லா மின்சாரம் ஏன் எனக்கேட்டு தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு கேள்வி எழுப்பியுள்ளோம்’’ என்கிறார் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் வெற்றிச் செல்வன்.

ஈஷா மையத்துக்கு மிக அருகில் உள்ள தாணிக்கண்டி கிராமத்தில் அண்மையில் யானை தாக்கியதில் உயிரழந்த ஒருவரின் மனைவி செல்வியை சந்தித்தபோது, ‘’அவர் போனபின்னாடி எனக்கு எதுவுமே இல்ல. ஒரு நாள் முழுக்க அவர் வீடு திரும்பலை. மக வீட்டுல தங்கிட்டாருன்னு நினைச்சேன். காலைல 6 மணிக்கு யானை அடிச்சு செத்துட்டாருன்னு சேதி வருது. இங்க ரொம்ப காலமா இருக்கோம். ஆனா இப்பத்தான் கொஞ்ச நாளா இந்த மாதிரி அதிகம் நடக்குது’’ என்று கண்ணீருடன் கூறினார்.

ஈஷா மட்டுமல்ல, அம்ருதானந்தமாயி நிறுவனமும் தன் பங்குக்கு சூழலைக் குலைக்கிறது. அவர்கள் கட்டிடங்கள் கட்ட அனுமதி பெற்றிருக்கிறார்கள். ஆனால் அப்படி அனுமதி பெறுகையில் ஹாக்கா தெளிவாகவே காடுப்பகுதியை ஒட்டிய 150 மீட்டர் இடைதாங்கு மணடலத்தில் எந்த கட்டுமானமும் கூடாது என்று விதிமுறை விதித்தும் அதை மீறி பிரம்மாண்டமான நீர்த் தொட்டி ஒன்றைக் கட்டியிருக்கிறது அம்ருதா நிறுவனம். அம்ருதா பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களின் தேவை பூர்த்திசெய்ய இந்த நீர்த்தொட்டி பயன்படுகிறது. காட்டுப் பகுதி எல்லைக்கல்லுக்கு ஒரு மீட்டர் கூட இடைவெளியில்லாமல் சூரிய சக்தியில் இயங்கும் மின்வேலி அமைக்கப்பட்டிருக்கிறது. இதுவும் யானைகள் வழித்தடம் என்பதால் போனால் போகிறதென்று யானைகளுக்கென ஒரு நீர்த்தொட்டியைக் கட்டியிருக்கிறது இந்நிறுவனம். ஒரு யானை ஒரு நாளைக்கு 200 மீட்டர் நீர் குடிக்கும். ஆனால் இந்த நீர்த்தொட்டியில் உள்ள நீரோ பழங்காலத்தில் நிரப்பப்பட்டதுபோல் காட்சியளித்தது. புழுக்களூம் பாசியுமாக இருக்கும் அந்தத் தண்ணீர் ஒரே ஒரு யானையின் நீர்த்தேவையைக் கூட பூர்த்தி செய்யாது. வனத்துறை 19.4.2013 தேதியில் இடைதாங்குமண்டலத்தை பராமரிக்காதது குறித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆனால் எந்த மாற்றமும் நிகழவில்லை.

அம்ருதா நிறுவனத்தினரிடம் தொடர்புகொண்டபோது, உயர் அதிகாரிகள் தொடர்புகொள்வார்கள் என்கிற பதில் கிடைத்தது. ஆனால் அவர்கள் ஒருபோதும் தொடர்புகொள்ளவில்லை.

நிறுவனத்துக்கு வடக்குப் பகுதியிலும் அம்ருதா தற்போது காட்டை அழித்து தற்போது அந்த இடம் சமவெளியாய் மரங்களற்று காட்சியளிக்கிறது. இதற்கு சற்று தூரத்தில் உள்ள ஒரு பெரும்பகுதி நிலத்தின் சொந்தக்காரர் யாரென்று தெரியவில்லை. ஆனால் மரங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டு நிலத்தை சமப்படுத்தும் வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. ஆனால் இந்தப் பகுதி வழக்கமாக யானைகள் கீழிறங்கி வரும் இடம். ‘’இந்த வழி தடைபட்டா, யானைங்க குழம்பி நேரடியா டவுனுக்குள்ள வந்துடும். கொஞ்ச நாளைக்கு முன்னால கூட ஒரு நேவி ஆபீசரையும், ஒரு வயசான பாட்டியையும் யானை கொன்னுடுச்சு. அதனால் எல்லோரும் பயத்தில் இருக்காங்க’’ என்கிறார் ஒரு வனத்துறையைச் சேர்ந்த ஒரு யானை கண்காணிப்பாளர்.

அமிர்தா பல்கலைகழகம், கோயம்புத்தூர்

ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நடக்கும் ரேகிண்டோ நிறுவனம் பேரூர், செட்டிப்பாளையம், மதுக்கரை மற்றும் தீத்திப்பாளையம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கி கோவை ஹில்ஸ் கோல்ஃப் மற்றும் கண்ட்ரி கிளப், ஒருங்கிணைந்த டவுன்ஷிப், ஐ.டி. சிறப்புப் பொருளாதார மண்டலம் என்கிற பெயரில் திட்டம் தீட்டி பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த ஆயிரம் ஏக்கரில் சில ஹாக்காவின் கட்டுப்பாடிலும், சில இடங்கள் கட்டுப்பாட்டில் இல்லாமலும் இருக்கின்றன. ஆனால் ரேகிண்டோ பெறவேண்டிய இடங்களுக்கும் கூட அனுமதி பெறவில்லை. ஒரு பெரும் பகுதி மலைச் சரிவு கோல்ஃப் மைதானமாக மாற்றப்பட்டுவிட்டது. இது ஒரு முக்கியமான யானைகள் வழித்தடம். ஆகவேதான் வனத்துறையே யானைகளுக்கென்று ஒரு நீர்த்தொட்டியை இங்கே வைத்திருக்கிறது. மாவட்ட ஆட்சியர் அளித்த கள ஆய்வறிக்கையில் ‘’இந்தப் பகுதி தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் அதிகமுள்ள பகுதி. சிறுகுன்றுகளுக்கு மிக அருகில் உள்லது. போலுவாம்பட்டி காப்புக் காடுகளும் அருகில் உள்ளன. யானைகள் இவ்வழியாக அடிக்கடி வந்துசெல்லும். மனித நடமாட்டம் இப்பகுதியில் பாதுகாப்பில்லை. அத்துடன் இப்பகுதி நொய்யல் ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதி. அத்துடன் நிலத்தடி நீர் குறைந்துபோவதற்கும் சாத்தியம் உள்ளது. ஏற்கனவே விவசாயிகள் நீரின்றி சிரமத்தில் உள்ள்னார். இது ஓடைப் பகுதி என்பதால் வருவாய்த் துறையும் விண்ணப்பத்தை நிராகரித்துள்லது. எனவே புவியியல் சமநிலையைப் பேணவும், விவசாயிகள் நலன் கருதியும், நீரை பாதுகாக்கவும், யானைகளை பாதுகாக்கவும் இந்தத் திட்டத்தை நிராகரிக்க வேண்டும்’’ என்று தெரிவித்திருக்கிறார். ஆனால் ரேகிண்டோ நிறுவனமோ இந்தியா டுடேவிடம் ‘’வனத்துறை, சுரங்கம் மற்றும் பொறியியல் துறை, வேளாண் துறை ஆகியவற்றிடம் அனுமதி பெற்றுவிட்டோம்’’ என்கிறது.

அதிர்ச்சியான வகையில் கட்டப்பட்டிருப்பது இண்டஸ் பொறியியல் கல்லூரிதான். இக்கல்லூரி ஆலந்துறைக்கு அருகில் உள்ள கலியமங்கலத்தில் உல்ளது. சரியாக மலைச்சரிவு முடியும் இடத்தில் கல்லூரியின் சுற்றுச்சுவர் தொடங்குகிறது. வனத்துறை எச்சரிக்கையை அடுத்து சுற்றுச்சுவரின் ஒரு பகுதி இடிக்கப்பட்டுள்ளது. இங்கே காப்புக்காட்டின் எல்லைக் கல் இருக்குமிடமே கல்லூரி வளாகத்தின் உட்பகுதியில்தான் என்பது அதிர்ச்சியான செய்தி. ஒருவேளை இடைதாங்கு மண்டலம் பராமரிக்கவில்லை என்கிற அடுத்த குற்றச்சாட்டை முன்வைத்தால் கல்லூரியின் பெரும்பகுதி இருக்காது.

மத்துவராயபுரத்தில் உள்ள சின்மயா சர்வதேச உறைவிட பள்ளியின் பின்பகுதிக்கு யானைகள் அன்றாடம் வந்துசென்று பாதையை உருவாக்கியுள்ள காட்டுப் பகுதியில் சென்றால்தான் காட்டுப் பகுதியில் எல்லைக் கல்லை காண முடியும். அந்தக் கல்லில் இருந்து ஒன்றிரண்டு மீட்டர் இடைவெளியில் சுற்றுச்சுவர் துவங்குவது 150 மீட்டர் இடைதாங்கு மண்டலம் பராமரிக்கப்படவில்லை என்பதைக் காட்டுகிறது. பஞ்சாயத்துத் தலைவரான குணா ‘’இந்தச் சுற்றுச்சுவர் கட்டியது கூட பஞ்சாயத்துக்கு தெரியாது. வனத்துறைக்கு இதுகுறித்து புகார் கடிதம் எழுதியிருக்கிறோம்’’ என்கிறார்.

சின்மயாவுக்கு அருகிலேயே உள்ளது காருண்யா பல்கலைக்கழகம். இடை தாங்கு மண்டலம் சரியாகவே பரமமரிக்கப்படுகிறது. ஆனால் சூழலியல் ஆர்வலரும் ஆர்.டி.ஐ. செயற்பாட்டாளருமான சிவா கூறுகையில் ‘’இங்கே 7,500 மாணவர்கள் படிக்கிறார்கள். அடர்ந்த வனப்பகுதியை பாழக்க இது ஒன்றே போதும். கல்லூரி விடுதி இங்கேதான் உள்ளது. எல்லா கழிவுகளும் குப்பைகளும் மலைக்கு மிக அருகில் கொட்டப்படுகின்றன. இப்பல்கலைக்கழகம் ஒரு சட்டக்கல்லூரியை நிர்மாணிக்க இருக்கிறது. அது இடை தாங்கு மண்டலத்தில்தான் வர இருக்கிறது’’ என்கிறார். காருண்யா பல்கலைக்கழக தலைமைப் பொறியாளர் சுதாகர் ‘’ நாங்கள் தவறிழைத்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம். ஆகவே ஒவ்வொரு அடியையும் பார்த்துதான் வைக்கிறோம். யாரும் எங்களை குறை சொல்லிவிடக் கூடாது. கழிவுகளுக்கு வேறு வழி கண்டுபிடித்து விட்டோம். தினமும் சாடிவயலில் உள்ள இரண்டு யானைகளுக்கான தீவனத்தை நாங்கள் தான் எங்கள் செலவில் அளிக்கிறோம்.

காருண்யா பல்கலைகழகம்

இப்போது சட்டக்கல்லூரி வருவது குறித்த அறிவிப்புப் பலகை மட்டுமே வைத்திருக்கிறோம். நீங்கள் கேட்டுவிட்டதால் அதையும் நாளைக்கே எடுத்துவிடுகிறோம். உண்மையில் கல்லூரியை எங்கே கட்டுவது என்று இன்னமும் நாங்கள் முடிவு செய்யவில்லை’’ என்றார்.

தொண்டாமுத்தூருக்கு அருகேயுள்ள அட்டுக்கல்லில் பெரும்பகுதி வேலியிடப்பட்டிருக்கும் ஒரு பகுதியை சீல் வைத்துள்ளது மாவட்ட நிர்வாகம். ‘’பெரிய பெரிய பாறைகள் சிறு கற்களாக நொறுக்கப்பட்டு ஏறத்தாழ 13 லாரி அளவுக்கான லோடு கொட்டி வைக்கபப்டுள்ளது. காப்புக்காடுகள் அருகில் உள்ளன. ஹாக்காவிடம் அனுமதி பெறப்படவில்லை. எனவே இப்பகுதி சீல் வைக்கப்படுகிறது என்கிறது மாவட்ட ஆட்சியரின் ஆணை.பாறைகளை உடைப்பது மட்டுமல்ல, மணற்கொள்ளையும் அருகில் உள்ள சிறிய ஓடைகளில் நடக்கிற்து. இது புவியியல் சமத்தன்மையை பாதிபப்துடன் காட்டு விலங்குளின் நீர்த்தேவைக்கும் பாதிப்பு உண்டாகிறது.

அடுத்து மேட்டுப்பாளையம் பகுதி. ஊட்டி பிரதான சாலையில் உள்ள புகழ்பெற்ற பிளாக் தண்டர் தீம் பார்க்கில் மறுபுறத்தில் இடைதாங்கு மண்டலம் பராமரிக்கப்படாமல் எல்லைக்கல்லில் இருந்து சில மீட்டர் தொலைவில் சுற்றுச்சுவர் இருக்கிறது. பல கட்டடங்களுக்கு அனுமதியும் பெறவில்லை. தீம் பார்க்குக்கு அருகிலேயே உள்ள சச்சிதானந்த ஜோதி உறைவிடப் பள்ளிக்குச் செல்ல ஒரு பழங்குடி கிராமத்தைக் கடந்துதான் செல்ல வேண்டும். புகழ்பெற்ற ஊட்டி-மேட்டுப்பாளையம் ரயில் பாதைக்கு வெகு அருகே இருக்கும் இப்பள்ளியிலும் இதே கதைதான். இடைதாங்கு மண்டலத்தில் பல கட்டிடங்கள் கட்டப்பட்டு இருக்கின்றன. இங்கும் மின்வேலி அமைக்கப்பட்டிருக்கிறது. யானைகள் இந்த ரயில்பாதையில் செல்வதை அடிக்கடி காணலாம் என்கிறார்கள் இப்பகுதி மக்கள்.

ஆனைக்கட்டி சுற்றுலா தளத்துக்கு அருகில் உள்ள தோலாம்பாளையத்தில் சிவா டெவலபர்ஸ் மலைச்சரிவுக்கு மிக அருகே நீச்சல்குளம், கிளப் ஹவுஸ், ஸ்பா செண்டர் போன்றவற்றை கட்டி சுற்றிலும் வேலி போட்டிருக்கிறது. எல்லைக்கல்லில் இருந்து இங்கும் ஒரு மீட்டர் தொலைவிலேயே வேலி போடப்பட்டிருந்தது என்பதை சொல்லவும் வேண்டுமா? ஊள்ளூர் திட்டக்குழுமம் 18.02.2013 அன்று அளித்த நோட்டீஸில்,’’இந்த இடத்திற்கு முறையான அனுமதி பெறவில்லை. ஆகவே இந்நிலத்தை முன்பு கட்டுமானப் பணிகளுக்கு முன்பு இருந்ததுபோன்ற நிலைக்கு 30 நாளைக்குள் மாற்ற வேண்டும்’’ என்று உத்தரவிட்டது. ஆனால் சிவா டெவலபர்ஸ் நீதிமன்றத்துக்குச் சென்று இதற்கு தடையுத்தரவு பெற்று வழக்கு நிலுவையில் உள்ளது.

மாவட்ட ஆட்சியர் கருணாகரனை தொடர்புகொண்டபோது ‘’நிர்வாகம் அத்துமீறுபவர்களுக்கு நோட்டீஸ்களை அனுப்பியுள்ளது. சட்டப்படி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும்’’ என்றார்.

வனத்துறை உயர் அதிகாரி ஒருவர் ‘’அனுமதி கோரி யாரவாது விண்ணப்பித்தால் ஹாக்கா எங்கள் கருத்தைக் கேட்கும். திட்டம் வரவுள்ள இடம் யானைகள் வழித்தடத்தில் அமைந்திருந்தால், அதை நிராகரிக்கச் சொல்லி அறிக்கை அனுப்புவோம். அதையும் மீறி கட்டுமானப் பணிகள் நடந்தால், நாங்கள் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்குவோம். அவ்வளவுதான் எங்களுக்கு அதிகாரம் உள்ளது. ஆகவேதான் நிறுவனங்கள் எங்களை மதிப்பதில்லை. பணிகளை நிறுத்தச் சொல்லி உத்தரவிடுவோம். ஆனால் சீல் வைப்பது, இடிப்பது போன்ற அதிகாரங்கள் எங்களுக்குக் கிடையாது. நாங்கள் சொல்லிக்கொண்டே இருக்கிறோம். அவர்கள் செய்த்கொண்டே இருக்கிறார்கள்.’’ என்று ஆதங்கப்பட்டார்.

DTCP எனப்படும் உள்ளூர் திட்டக்குழுமத்துக்குத்தான் கட்டிடங்களை சீல் செய்யவும், இடிக்கவும் அதிகாரம் உண்டு. அதன் இயக்குநர் சபாபதி ‘’சின்மயா பள்ளி இருக்குமிடம் ஹாக்காவுக்குக் கீழ் வருவதால் உள்ளூர் பஞ்சாயத்தில் பெற்ற் அனுமதி பெற்றிருந்தாலும் ஹாக்காவிடமும் பெறவேண்டும் என்று கூறிவிட்டோம். ஆனால் சின்மயா நீதிமன்றத்துக்கு சென்றிருக்கிறது. அதற்கு நாங்கள் பதிலும் அளித்துவிட்டோம். ஈஷாவும், இண்டஸ் கல்லூரி குறித்தும் புகார்களையும் அனைத்து விவரங்களையும் சென்னையில் உள்ள எங்கள் ஆணையருக்கு அனுப்பிவிட்டு முடிவுக்காகக் காத்திருக்கிறோம். தாமரா ரிசார்ஸ் இந்த மாத எல்லை வரை நேரம் கேட்டிருக்கிறார்கள்’’ என்றார்.

உள்ளூர் திட்டக்குழுமத்தின் ஆணையர் ஏ.கார்த்திக் ‘’அனுமதி பெறாத கட்டிடங்கள் குறித்து எங்களுக்கு எந்த புகார் வந்தாலும் நாங்கள் நிச்சயமாக நடவடிக்கை எடுப்போம்’’ என்றார்.

அப்போதைய மாநில வனத்துறை அமைச்சர் பச்சைமால் ‘’எல்லாமே பட்டா நிலங்களாகத் தெரிகின்றன. பொதுவாக பட்டா நிலங்கள் யானைகள் வழித்தடத்தில் வராது. ஒருவேளை யானைகள் அங்கே சென்றிருக்கலாம். 20 கோடி ரூபாய் ஒதுக்கு அகழிகள் அமைத்து யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்கும் பணிகள் நடந்துவருகின்றன’’ என்றார்.

ஆண்டுதோறும் கோயில்யானைகளுக்கு முதுமலையில் முகாம் நடத்தும் தமிழக அரசுக்கு காட்டு யானைகள் மீது மட்டும் அக்கறையில்லையா என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வினவுகிறார்கள். ஆன்மிகத்தைவிட, கல்வியை விட உயிர்வாழ்தல் மிகவும் முக்கியம். காட்டுக்குள் இருக்கவேண்டிய யானைகளை பழக்கி கோயில் யானைகளாக்கி ஊருக்குள் வாழும் யானைகளுக்கு ஆண்டுக்கு ஒரு வாரம் மட்டும் காட்டை கண்ணில் காட்டுவதும், காட்டு யானைகள் தங்கள் நிலப்பகுதியை இழந்து ஊருக்குள் வருவதும் இங்கு மட்டுமே சாத்தியமாகக் கூடிய விநோதங்கள்.

கோவையின் ரம்மியமான குளிர்க்காற்றுடன் கூடிய இதமான வானிலையை அனுபவித்துக் கொண்டாடுவதற்காக ஆன்மிக நிறுவனங்களும், கல்வி நிறுவனங்களும், ரியல் எஸ்டேட்காரர்களும் குவிந்ததில் மூச்சு திணறுவது கோவையின் சூழல் மட்டுமல்ல. இயற்கையான காடுகளும் விலங்குகளும் மனிதர்களும்தான்.

நன்றி

  • கவின் மலர் .
    பத்திரிகையாளர்.

(2013 ஆம் ஆண்டிலேயே ஈஷா கும்பலின் காட்டு வேட்டையை அம்பலப் படுத்தி எழுதியுள்ளார். அதனை மீள் பதிவு செய்கிறோம்.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here