“ஈஷா யோகாவை நடத்தும் ஜக்கி வாசுதேவ் தனது மகள்களை ஆடம்பரமாக திருமணம் செய்து வைப்பார். ஊரார் வீட்டு பெண்களை மொட்டை அடித்து சன்னியாசி ஆக்குவாரா” என கேள்வி எழுப்பியதோடு மட்டுமல்லாமல் இதுவரை ஈஷா யோகா நிறுவனத்தின் மீது எத்தனை வழக்குகள் உள்ளன என்ற விவரத்தையும் விசாரணை செய்து அறிக்கை அளிக்குமாறு உயர் நீதிமன்றம் கூறியது வழக்கு தொடுத்தவருக்கு மட்டுமல்லாமல் நமக்கும் ஆச்சரியத்தையே தந்தது. ஆனால் அது இரண்டு நாட்கள் கூட நீடிக்கவில்லை.
கோவை உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் காமராஜ் தனது இரண்டு மகள்களையும் ஈஷா யோகா மையம் மூளை சலவை அங்கேயே தங்க வைத்துள்ளது அவர்களை மீட்டுத் தருமாறு ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி விசாரணைக்கு வந்திருந்தது இதில் ஆஜராகிய அந்த இரண்டு பெண்களும் நாங்கள் எங்கள் விருப்பத்தின் பேரிலேயே அங்கு தங்கியிருக்கிறோம் யாரும் கட்டாயப்படுத்தவில்லை, மூளைச்சலவை செய்யவில்லை என கூறினர்.
இதனை ஏற்காத நீதிபதிகள் இந்த பிரச்சனையை முழுமையாக விசாரிக்க வேண்டும் எனக் கூறினர். இது சற்றும் எதிர்பாராத ஈஷா தரப்பு வழக்கறிஞர் இந்த வழக்கின் எல்லையை நீதிமன்றத்தால் விரிவாக்க முடியாது என்றார்.
இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்திற்கு சந்தேகங்கள் இருப்பதால், அரசியலமைப்பின் 226 பிரிவின் கீழ் உள்ள ரிட் அதிகார வரம்பை பயன்படுத்தி நீதிமன்றம் முழுமையான நீதியை வழங்க முடியும் என நீதிபதி கூறினார்.
மேலும் பேசிய நீதிபதி “தனது மகளுக்கு திருமணம் செய்து கொடுத்து வாழ்க்கையில் நல்லபடியாக வாழவைத்தவர், பிறருடைய மகள்களை தலையில் அடித்துக்கொண்டு வாழ்க்கையை வாழத் தூண்டுவது ஏன் என்பதை அறிய விரும்புகிறோம். ஒரு துறவி ஏன் இப்படி செய்கிறார்.. தனது மகளுக்கு திருமணம் செய்துவைத்த ஜக்கி வாசுதேவ், மற்ற பெண்களை சந்நியாசியாக மாற ஊக்குவிப்பது ஏன்? மற்ற பெண்களை பற்றி யோசிக்காமல்.. அவர்களை மட்டும் சந்நியாசியாக மாற செய்வது ஏன்? அதுதான் சந்தேகம்.” என்றார்.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் “ஈஷா அறக்கட்டளை மீது ஏற்கனவே பல குற்ற வழக்குகள் உள்ளன அதில் குறிப்பாக அங்கு பணி புரியும் மருத்துவர் மீது போக்ஸோ வழக்கு உள்ளது என்றார்…. அறக்கட்டளை தொடர்பான அனைத்து வழக்குகளையும் பட்டியலிட்டு, அக்டோபர் 4-ம் தேதிக்குள் அரசு வழக்கறிஞர் இ.ராஜ் திலக் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும், என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனை அடுத்து ஈஷா அறக்கட்டளையில் காவல்துறை உதவியோடு இரண்டு நாட்கள் விசாரணை நடந்து வந்தது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் நடந்த விசாரணையில் “ஹெல்த் இன்ஸ்பெக்டர், ட்ரக் இன்ஸ்பெக்டர், எல்லோரும் விசாரணை நடத்தினோம் . ஈஷா மையத்தில் 2-3 வழக்குகள் மிக முக்கியமான வழக்குகள் . இந்த வழக்குகள் பற்றித்தான் விசாரணை செய்து வருகிறோம். சில வழக்குகள் மிக முக்கியமான வழக்குகள் .. அதை பற்றி கேள்விகளை எழுப்பி உள்ளோம், என்று குறிப்பிட்டு உள்ளார்.
இந்நிலையில் தான் இந்த விசாரணைக்கு தடை விதித்துள்ளது உச்சநீதிமன்றம்.
அதிகார மையங்களை விட பலம் பொருந்தியவையாக மத நிறுவனங்கள் பல நூற்றாண்டுகளாக கோலோச்சி வருகிறது. முதலாளித்துவ வளர்ச்சியில் இன்று இந்தியாவில் ஜக்கி வாசுதேவ் போல் பல கார்ப்பரேட் சாமியார்கள் உருவாகியுள்ளார்கள். இவர்கள் ஆட்சியாளர்களை கட்டுப்படுத்தும் அளவிற்கு வளர்ந்துள்ளார்கள். அதனால் தான் ஈஷா யோகா மையத்தில் நடக்கும் சிவராத்திரி நிகழ்வில் இந்தியாவின் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் முக்கிய பிரபலங்கள் உட்பட பலர் கலந்துக் கொள்கின்றனர்.
படிக்க:
🔰 ஈஷாவின் மஹாசிவராத்திரி! கார்ப்பரேட் சாமியார் ஜக்கி விரிக்கும் சதிவலை!
🔰 ஈஷாவின் மகா சிவராத்திரி; வெறும் கொண்டாட்டமா?
சங்பரிவார் கும்பல் கலந்து கொள்வதன் மூலம் தங்களுடைய பலத்தையும் நிரூபித்து கொள்கிறார்கள். தங்களை யாராலும் எதுவும் செய்ய முடியாது என்பதை நிறுவுகிறார்கள்.ஜக்கி வாசுதேவ் மீதும், ஈஷா மீதும் பல வழக்குகள் இருந்தாலும் அதிமுகவுக்கு பிறகு அதிகாரத்திற்கு வந்த திமுகவாலும் ஜக்கி வாசுதேவை ஒன்றும் செய்ய முடியவில்லை.
ஆனால் தற்போது உயர்நீதிமன்றம் முன்கை எடுக்கும் போது ஒரு சிறிய நம்பிக்கை உண்டானது. சிறிய வகையிலாவது ஈஷா நிறுவனம் அம்பலப்படும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் போதே தமிழ்நாடு அரசின் காவல்துறை விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் ஆயிரக்கணக்கான முக்கியமான வழக்குகள் நிலுவையில் இருக்கும் போது மணிப்பூர் கலவரம் போன்ற முக்கியமான வழக்கை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று கூறிய உச்சநீதிமன்றம் ஜக்கிக்கு என்றவுடன் முந்திக்கொண்டு அவசர வழக்காக விசாரிக்கிறது.
உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுவை உயர்நீதிமன்றத்தில் இருந்து உச்சநீதிமன்றத்திற்கு மாற்றிக் கொண்டது. மேலும் நிலை அறிக்கையை சமர்பிக்க்குமாறு காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஈஷா சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி கோரிய அவசர விசாரணைக்குப் பிறகு இந்திய தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட், நீதிபதி ஜேபி பார்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது.
“உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் 4-வது பத்தியில் உள்ள வழிகாட்டுதல்களின்படி போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது” என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. குறிப்புக்காக, உயர்நீதிமன்ற உத்தரவின் 4வது பாரா, “இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, அதிகார வரம்பைக் கொண்ட கோவை ரூரல் காவல் துறையினர் விசாரணை நடத்தி, இந்த நீதிமன்றத்தில் நிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளது.
மத்திய அரசின் சார்பில் இந்திய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா , ஈஷா அறக்கட்டளையின் மனுவை ஆதரித்து, உயர்நீதிமன்றம் இன்னும் கவனமாக இருந்திருக்க வேண்டும் என தனது விசுவாசத்தை காட்டியுள்ளார்.
மேலும் இது குறித்து கருத்து தெரிவித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்“இதுபோன்ற ஒரு நிறுவனத்திற்குள் நீங்கள் ஒரு இராணுவத்தையோ அல்லது காவல்துறையையோ அனுமதிக்க முடியாது” என்று வாய்மொழியாகக் கூறியுள்ளார்.
காவல்துறையினர் அதிகாரிகள் உட்பட 150 பேர் ஈஷாவுக்குள் நுழைந்ததாக ஈஷா வழக்கறிஞர் முகுல்ரோத்தகி கூறியதற்கு நீதிபதி இந்த பதிலை அளித்துள்ளார். அதாவது நாங்களும் கார்ப்பரேட் ஆன்மீக நிறுவனத்திற்கு கட்டுப்பட்டவர்கள் தான் என சொல்லாமல் சொல்லியுள்ளார் சந்திரசூட்.
அதற்கு நேரடியாக ‘யாரும் இந்து மதநிறுவனங்களுக்குள் நுழையக் கூடாது, அவர்கள் கொலையே செய்திருந்தாலும் அதில் தலையிடக் கூடாது’ என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்திருக்கலாம். ஏனென்றால் இவையனைத்தும் சட்டத்திற்கு உட்பட்டே சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை நடத்த உத்தரவிட்டது. ஆனால் உச்சநீதிமன்றமோ தடை விதிக்கிறது. இரண்டு நீதிமன்றங்களின் உத்தரவில் எது சரியானது என்பதை விட யாரின் நலனுக்காக உத்தரவு பிறப்பிக்க படுகிறது என்பதை நாம் உற்றுநோக்க வேண்டும்.
கார்ப்பரேட் சாமியார் ஜக்கி வாசுதேவ் நடத்தும் ஈஷா ஆசிரமத்தில் தங்கியிருந்த சுபஸ்ரீ என்ற பெண் கடந்தாண்டு மர்மமாக இறந்து கிடந்தார். இந்த மர்மம் இதுவரை விலகவில்லை. பாலியல் வழக்கு,நில ஆக்கிரமிப்பு வழக்கு, யானைகள் கொல்லப்பட்டது உள்ளிட்ட பல மர்மங்கள் நிறைந்த ஈஷா அறக்கட்டளையை தான் பாதுகாக்க நினைக்கிறது உச்ச நீதிமன்றம்.
அதற்கு ஒரு காரணமும் இருக்கிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஈஷா அறக்கட்டளையில் இருந்தவர்கள் பாஜகவிற்கு ஓட்டளிக்க சமூக வலைதளங்கள் வாயிலாக பிரச்சாரங்களை மேற்கொண்டனர். காவி பயங்கரவாதிகளின் அங்கமாக ஈஷா அறக்கட்டளை செயல்படுகிறது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஒய்.சந்திர சூட் விநாயகர் சதுர்த்தியை தனது வீட்டில் காவி பாசிஸ்ட் மோடியுடன் இணைந்து கொண்டாடி தனது இந்துத்துவ வெளிப்படுத்தினார். நீதித்துறையும் ஆளும் வர்க்கமும் இணைந்து கார்ப்பரேட் சாமியாரான ஜக்கி வாசுதேவையும் அவரது அறக்கட்டளையையும் பாதுகாக்கிறது.
கார்ப்பரேட் கம்பெனி போல் விளம்பரம் செய்து தன்னிடம் வரும் பக்தர்களுக்கு ‘ஆன்மிக’ போதையூட்டி மொட்டை அடித்து ஆசிரமத்தின் அடிமைகளாக்குவதை ஒட்டுமொத்த சமூகமும் குறிப்பாக பெற்றோர்களும் வேடிக்கை பார்க்கக் கூடாது. ஆளும் வர்க்கத்தின் துணையுடன் வளம் வரும் இத்தகைய கார்ப்பரேட் சாமியார்களின் போலித்தனத்தை நாம் அம்பலப்படுத்தியே தீர வேண்டும்.
- நந்தன்