கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் 40 கி.மீ. மேல் வாகனத்தை இயக்கினால் அபராதம் விதிக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அறிவித்திருந்தார்.
சென்னையில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை 40 கி.மீ. வேகமும் இரவு 10 மணி முதல் காலை 7 மணி வரை 50 கி.மீ. வேகமும் (கார்,வேன் பைக்) முதலியவைகளுக்கு அனுமதிக்கப்பட்டவையாகவும், ஆட்டோவிற்கு பகலில் 25 கி.மீ. வேகமும் இரவில் 35 கி.மீ. வேகமும் மற்றும் கனரக வாகனத்திற்கு அதாவது (பேருந்து-லாரி) பகலில் 35 கி.மீ வேகமும் இரவில் 40 கி.மீ. வேகமும் நிர்ணயிக்கப்படுகிறது.
நிர்ணயிக்கப்பட்ட இந்த வேகத்தை கடந்தால் ”ஸ்பீட் ரேடார் கன்”னுடன் இணைக்கப்பட்டிருக்கும் ANPR (Automatic Number Plate Recognition) கேமரா மூலம் தானியங்கி முறையில் விதி மீதிய வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையர் தெரிவித்தார்..
எந்தெந்த இடம் என்றால் விமான நிலையம் வெளியே, டாக்டர் குருசாமி பாலம், ஹபிபுல்லா அவின்யு, மதுரவாயல் ரேஷன் கடை ஜங்ஷன், பாரிஸ் கார்னர் ஜங்ஷன், ஈஞ்சம்பாக்கம், ஸ்பென்சர் பிளாசா உள்பட 10 இடங்களில் இந்த கேமராக்களை சிக்னலில் போடப்பட்டிருக்கிறது. இது தவிர மேலும் 20 இடங்களில் கண்காணிப்பு கருவி பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
வேகக் கட்டுப்பாட்டு விதிகள் அமல்படுத்துவது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் சர்ச்சை கருத்துக்கள் எழுந்து வருகின்றன. இதில் பல்வேறும், இந்த நடவடிக்கை பொது மக்களிடம் இருந்து பணம் வசூலிப்பதற்காகவே செயல்பட்டதாகவும் சமூக வலைதளங்களில் கமெண்டுகள் பரவி வருகிறது.
சென்னையில் போக்குவரத்து விதிமுறை மீறல் தொடர்பாக தினமும் 6 ஆயிரம் வழக்குகள் பதியப்படுகின்றன இந்த வழக்குகளில் 30 முதல் 40 சதவீதம் வரை ANPR கேமரா மூலம் பதியப்படுகின்றன.
6 விதிமுறை மீறலுக்கு வழக்கு: இந்த கேமராக்கள் மூலம் சிக்னலில் நிறுத்தக் கோட்டை தாண்டும் வாகனங்கள், சிக்னலை மீறிச் செல்லும் வாகனங்கள், இரு சக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணியாமல் செல்வோர், இருசக்கர வாகனங்களில் இருவருக்கு மேல் பயணிப்போர், தவறான திசையில் பயணிப்போர், பதிவு எண் குறைபாடு அல்லது விதிமுறை மீறல் ஆகிய 6 விதிமுறை மீறல்களில் ஈடுபடுவோர் மீது வழக்கு பதிவு செய்யப்படுகிறது.
இதில் சம்பந்தப்பட்ட வாகனத்தின் உரிமையாளருக்கு விதிமுறை மீறலில் ஈடுபட்டது தொடர்பாக முதலில் குறுஞ்செய்தியும் 7 நாட்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டதற்குரிய இ-சலான் ரசீது அனுப்பப்படுகிறது.
இதன் மூலமாக வாகன ஓட்டிகள் நிலுவையில் வைத்திருக்கும் அபராதத்தை வசூல் செய்யும் நடவடிக்கையிலும் சென்னை காவல் துறை அண்மைக்காலமாக ஈடுபட்டுள்ளது.
இப்படி அறியாமையில் சிக்கும் வாகன ஒட்டிகள் இதன் விளைவாக ANPR கேமரா குறித்த விழிப்புணர்வு இல்லாத வாகன ஓட்டிகள் சாலையில் சிறு தவறு செய்தால் கூட அபராதத்திலிருந்து தப்ப முடியாத நிலை ஏற்படுகிறது. இவர்களுக்கு வாகனங்களின் பதிவு எண் அடிப்படையில் வழக்குப் பதியப்படுவது தெரியாது. இவர்களின் வாகனங்கள் விதிமீறலில் ஈடுபட்டிருப்பது தொடர்பாக கைப்பேசிக்கு இ-சலான் வந்த பிறகு ANPR கேமராவை பற்றி தெரிந்து கொள்கிறார்கள்.
இதையும் படியுங்கள்: தலைக்கவசமும் அபராதம் போடும் போலீசும்!
இப்படி தொடர்ச்சியாக வழக்குகளில் சிக்கி அபராதமாக பெருந்தொகையை செலுத்தும் சம்பவங்களும் தொடர்கின்றன. இதில் சிலர் வண்டியின் மதிப்பை விட அபராதம் அதிகமாக இருப்பதால் வாகனத்தை காவல் நிலையங்களிலேயே விட்டு செல்கின்றனர்.
ஏற்கனவே, மது அருந்தி வாகனம் ஓட்டியது உட்பட போக்குவரத்து விதிகளை மீறியதாக வாகன ஓட்டிகளிடம் கடந்த 5 மாதத்தில் ரூ. 24 கோடியே 86 லட்சத்து 50 ஆயிரத்து 300 அபராதம் வசூலிக்கப்பட்டது.
இப்போது சென்னையில் ஜூன் 22 மற்றும் 24 ஆகிய தேதிகளில் போக்குவரத்து போலீசார் தொடர் சோதனையில் விதிகளை மீறியதாக 85 வழக்குகள் உள்பட மொத்தம் 6663 வழக்குகள் பதியப்பட்டன.
இன்றைய சூழலில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப பி.எஸ் 6 வகை இன்ஜின்களுடன் 300 முதல் 550 சிசி வரை வாகனங்கள் தயாரிக்கப்பட்டு சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த வாகனங்கள் அனைத்துமே அதிகபட்சமாக 120 -140 கி.மீ. வேகத்தில் பாயும் திறன் கொண்டது. இப்படி இருக்கும் நிலையில் 40 கி.மீ. வேகம் என்பது மிகவும் குறைவு. இந்த வேகத்தில் இயங்கினால் ஆட்டோவை விட டவுன் பஸ் தான் முதலில் போகும். எந்த வண்டிக்கும் இனி மைலேஜ் கிடைக்காது. ஏனெனில் டாப் கியரையே பயன்படுத்த முடியாது. பயணிகளும் ஆட்டோவுக்கு பஸ்ஸே பரவாயில்லை என புறக்கணிப்பார்கள் இனி வெளியூர் செல்ல, மருத்துவமனைக்கு செல்ல, அவசரம் என ஆட்டோவை கூப்பிட்டாலும் பலன் இருக்கப் போவதில்லை.
- கவிலன்