மனிதக் கழிவை மனிதனே அள்ளும் அவலத்திற்கு தீர்வு என்ன?


டந்த வாரம் மதுரையில் மலக்குழியில் இறங்கி 3 துப்புரவு தொழிலாளர்கள்  மரணமடைந்தனர்.

இந்தியாவில் அதிநவீன தொழில்நுட்பம் வளர்ந்து விட்டதாகவும், விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா முன்னேறி கொண்டிருப்பதாகவும், 5ஜி அலைக்கற்றை நோக்கி இந்தியா சென்று கொண்டிருப்பதாகவும் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறது இந்திய ஆளும் வர்க்கம்.

இந்த நாட்டின் பூர்வ குடிமக்களான தாழ்த்தப்பட்ட மக்கள் அதிலும் குறிப்பாக அருந்ததியர் இனமக்கள் தான் மனித கழிவை மனிதனே சுத்தம் செய்கின்ற கொடூரமான வேலைக்கு பணிக்கப்பட்டுள்ளனர்.

இதுபற்றி புரிந்துகொள்ள இயக்குனர் திவ்யபாரதி எடுத்த கக்கூஸ் ஆவணப்படத்தை பார்த்தால் உண்மை எவ்வளவு கசப்பானது என்பது புரியும்.

மனிதக் கழிவை மனிதன் அள்ளுவது நாட்டிற்கே அவமானம் என்று பார்ப்பதில்லை. மாறாக கையால் அள்ளுகின்றனரா, மலக்குழியில் இறங்குகின்றனரா என்று மயிர் பிளக்கும் விவாதத்தில் இறங்கி அவர்களை வகை பிரிப்பதில் அக்கறை காட்டுகின்றனர்.

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கிறது அரசியலமைப்புச் சட்டம். ஆனால் பார்ப்பன இந்து மதம் பிறப்பின் அடிப்படையில் மனிதர்கள் சமம் இல்லை என்பதை தெளிவாக முன்வைக்கிறது.

மணியடிக்கும் தொழிலில் போட்டி போடும் பார்ப்பனர்கள் மலம் அள்ளும் தொழிலில் போட்டி போட வருவதில்லை.

தன்னுடைய குழந்தைகளின் மலத்தை அள்ளுவதற்கு அசிங்கப்படும் பெற்றோர்கள் நிறைந்த இந்த காலத்தில் மனிதக்கழிவுகளை ஒரு பிரிவு மக்கள் சுத்தம் செய்கிறார்கள் என்பது எத்தனை பேரின் புத்தியில் உரைக்கிறது.

அவர்கள் சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி இறந்து விட்டார்கள் என்ற செய்தி வந்தால் பத்தோடு, பதினொன்று போல கடந்து போகிறார்கள்.

இருபத்தி நான்கு மணி நேரம் இந்த தொழிலாளர்கள் தனது துப்புரவு பணியை செய்யவில்லை என்றால் அப்போது புரியும் இவர்களின் உன்னதமான சேவை எந்த அளவிற்கு மதிக்கத்தக்கது என்பது.

சுதந்திரம் வாங்கியதாக கூறப்பட்ட பிறகும் இந்தியாவில் பிறப்பால் “தாழ்த்தப்பட்ட மக்கள்” மட்டுமே இந்த வேலையை செய்வதற்கு நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.

அவர்களின் மரணம் பற்றிய புள்ளிவிவரத்தை கொடுப்பதில் கூட பார்ப்பன பயங்கரவாத அரசான பாஜகவிற்கு நோக்காளமாக உள்ளது.

2010 முதல் 2020 வரை 636 பேர் இதுபோன்ற துப்புரவு பணியில் மலக்குழியில் இறங்கி மரணமடைந்ததாக தேசிய துப்புரவு தொழிலாளர் ஆணையம் தெரிவிக்கிறது.

ஆனால் பாராளுமன்றத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் கையால் சுத்தம் செய்யும் யாரும் இறக்கவில்லை என்று அடித்துப் பேசுகிறார் ராம்தாஸ் அத்வாலே.

ஆனால் அவர்களே சென்ற ஆண்டு எழுத்துப்பூர்வமாக கொடுத்த அறிக்கையில்  340 பேர் இறந்து போனதாக தெரிவித்துள்ளனர். அந்த புள்ளி விவரம் மோசடியானது என்கிறார் அகில இந்திய துப்புரவு பணியாளர்களின் தேசிய அமைப்பாளர் பெஜவாடா வில்சன்.

பெஜவாடா வில்சன்

செய்கின்ற தொழில் எவ்வளவு அருவருப்பானது. அந்த மக்கள் இதை நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் ஏற்றுக்கொண்டு செய்கிறார்களே என்று அவர்களின் மீது அக்கறை காட்டாமல் இழிவுபடுத்தபடுவது ஒருபுறம் இருக்கட்டும்.

அவர்கள் மரணமடைந்தால் அதுபற்றிய கணக்கை கூட மோசடி செய்கின்ற பார்ப்பன பயங்கரவாத கும்பல் எந்த அளவிற்கு மனிதத்தன்மையற்ற கொடூரமான மிருகங்கள் என்பதை புரிந்து கொள்வதற்கு அதன் கண்மூடித்தனமான ஆதரவாளர்கள் தான் முயற்சிக்க வேண்டும்.

ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் கருத்தை பரப்புகின்ற பார்ப்பனக் கும்பலுக்கு இது போன்ற மரணங்கள் வலியை ஏற்படுத்தாது. இது அவர்கள் உருவாக்கிய வருண சாதி அமைப்பில் உள்ள ஏற்பாடு படிநிலை சாதி அமைப்புகள் ஒவ்வொரு அடுக்காக உருவாக்கப்பட்டுள்ளதால் மற்றொரு அடுக்கில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி வேறு ஒரு அடுக்கில் உள்ளவருக்கு எந்த அக்கறையும் இருக்காது.

இன்னும் பளிச்சென்று சொல்லப்போனால் அது அவர்களின் தலைவிதி அவர்கள் தான் இதை செய்தாக வேண்டும் என்று கடந்து போவதற்கே பார்ப்பன இந்து மதம் அனைவரையும் பயிற்றுவித்து இருக்கிறது.

இதற்காக அவர்கள் வெட்கப்படுவதில்லை. இதைத்தான் இந்து தர்மம் என்றும் பெருமை பேசுகிறார்கள்.

மீண்டும் செய்திக்கு வருவோம் இந்த மண்ணின் பூர்வக்குடி மக்கள் எவ்விதமான கேட்டு கேள்வியுமின்றி விஷவாயு தாக்கி கொல்லப்படுவதற்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளும் கொடூரத்திலிருந்து உடனே அவர்களை விடுவிக்க வேண்டும். கேரளாவில் இது போன்ற பணிகளை செய்வதற்கு பயன்படுத்தப்படும் “ஜென் ரோபோட்டிக்ஸ்” என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும்.

சென்னை மாநகராட்சி மற்றும் தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் மட்டும் அமல்படுத்தப்படும் இந்த முறை உடனடியாக தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்பட வேண்டும்.

இதற்கு நிதி ஒதுக்குவதற்கு சிக்கல் என்று முடிவெடுத்தால் மணி அடிக்கும் வேலையில் உள்ள அர்ச்சகர்களை சிறிது காலத்திற்கு இந்த வேலை செய்து பார்க்க பழக்க வேண்டும்.

அப்போதுதான் இந்த வேலையில் உள்ள சிரமங்களும் அவமானங்களும், இழிவுகளும் தடித்த தோலுக்கு உறைக்க தொடங்கும். தனது எஜமானர்களிடம் நமது கோரிக்கையின் நியாயத்தை எடுத்துக் கூறுவார்கள்.

எதற்கு எதை யோசிப்பது இதெல்லாம் அராஜகம் என்று சொல்பவர்களை ஆமாம் மன்னித்து விடுங்கள் என்று ஏற்றுக்கொண்டு மலக்குழி சுத்தம் செய்ய அனுப்புவதன் மூலம் ஜனநாயகமாக சிந்திக்க பழகலாம்.

  • பா.மதிவதனி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here