லாக்கப் மரணம் – காவல்துறையின் அதிகாரத்திமிர்
2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சாத்தான்குளம் லாக்கப் படுகொலையை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்திருக்க முடியாது. அவர்கள் இருவரும் சாதாரணமாக அடித்ததால் இறக்கவில்லை. காவல்துறையின் மூர்க்கதனமான, மிருகங்களை விட கேவலமான, லத்தியை மலவாயில் திணித்ததன் காரணமாகவே இறந்து போனார்கள்.
இதுபோல் லாக்கப் மரணங்கள் தமிழகத்தில் தொடர்ந்து நடந்துக் கொண்டே தான் இருக்கின்றன. இது இனியும் தொடரும் என்பதே நிதர்சனமான உண்மை. அதே போல் ஒரு மரணம் தான் சென்னையில் உள்ள தலைமை செயலக குடியிருப்பு காவல் நிலையத்தில் நடந்துள்ளது.
கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி விக்னேஷூம் அவரது நண்பர் சுரேஷ் என்பவரும் ஆட்டோவில் புரசைவாக்கம் பகுதியில் சென்றுக் கொண்டிருந்தனர். அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தலைமை செயலக குடியிருப்பு போலீசார் அவரிடம் கஞ்சா இருந்ததாக இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளனர். இரவு முழுவதும் காவல் நிலையத்தில் இருந்த விக்னேஷுக்கு காலையில் வலிப்பு ஏற்பட்டதாக போலீசார் கூறுகின்றனர். அவரை அருகில் உள்ள கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் போது உயிரிழந்ததாக கூறுகின்றனர்.
ஒவ்வொரு முறை லாக்கப் மரணங்கள் நிகழும் போதும் காவல்துறையினர் கதையாசிரியர்களாக மாறுவிடுகின்றனர். லாக்கப் மரணங்களுக்கு பின்னால் உள்ள உண்மைக் கதை காவல்துறையினருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.

விக்னேஷ் மரணத்திலும் இதுவே நடந்துள்ளது. விக்னேஷ் இறந்த பிறகு இந்த விசயத்தை ஊத்தி மூட காவல்துறையினர் முயற்சி செய்துள்ளனர். இது வெளியில் தெரிந்து அம்பலமாகியுள்ளது. காவல்துறையின் அதிகாரத்தை பயன்படுத்தி விக்னேஷின் உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைக்காமலேயே தகனம் செய்துள்ளனர். மேலும் 1 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து குடும்பத்தின் வாயை அடைக்க முயற்சித்துள்ளனர்.
விக்னேஷ் குடும்பத்தினர் அவருக்கு வலிப்பு நோய் இல்லை என்றும் , அவர் இறந்த பின்னர் அவர் முகத்தில் காயம் இருந்ததாகவும், அவர் அடித்து கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் கருதுகின்றனர்.
இந்த சம்பவத்தை அடுத்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு விக்னேஷ் வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார். இதேபோல் 2010 ஆம் ஆண்டு வடமதுரை லாக்கப் மரணத்தில் செந்தில்குமார் என்பவர் இறந்து போனார். இந்த வழக்கை சிபிசிஐடி தான் விசாரித்தது. இதில் தொடர்புடைய போலீசாருக்கு 10 ஆண்டுகள் கழித்து தான் தண்டனை கிடைத்தது. அதுவும் 10 வருட சிறை தண்டனை. காவல்துறையின் வழக்கு விசாரணை எல்லாம் மக்களின் அப்போதைய கொந்தளிப்பை அடக்கவே ஒழிய, குற்றங்களை தடுத்து நிறுத்துவதற்கல்ல.

திருட்டு சம்பவங்களில் பிடிபடுபவர்களையும், வேறு சில்லறை குற்றங்களில் ஈடுபடுபவர்களையும் கை, கால்களை உடைத்து விட்டு பாத்ரூமில் வழுக்கி விழுந்ததாக மறுநாளில் செய்திதாள்களில் வெளிவரும். இதை பார்த்து நாமும் சிலாகிப்போம். இது பத்திரிக்கையாளர்களுக்கும், நீதிபதிகளுக்கும் தெரியாதா? தெரியும். ஆனால் யாரும் கேள்வி எழுப்பமாட்டார்கள். இந்த அதிகார திமிரை கேள்வி கேட்காததன் விளைவு, லாக்கப் மரணங்கள் இன்றும் தொடர்கின்றன. வங்கியில் பல்லாயிரம் கோடி கடனை கட்டாமல் நாட்டை ஏய்ப்பவர்களும், போராடும் விவசாயிகளை காரை ஏற்றிக் கொள்பவனும் என்றுமே பாத்ரூமில் வழுக்கி விழுந்ததாக செய்தி வந்ததில்லை. சட்டங்கள் எல்லாம் சாமனியன் மேல் தான் பாயும்.
படிக்க:
♦ போலீஸ் – அதிகாரத்தின் உளவியல்
♦ ஸ்டெர்லைட் போராட்டம் தமிழகமே துணை நிற்கும்!
இறந்துபோன விக்னேஷுக்கு நீதி கிடைக்க மனித உரிமை அமைப்புகள் தலையிடலாம், சிபிசிஐடி விசாரணை நடக்கலாம். இதுவெல்லாம் லாக்கப் மரணங்களை தடுத்துவிட முடியாது. காரணம் இந்த கட்டமைப்பில் காவல்துறை உருவாக்கப்பட்டன் நோக்கத்தை சரியாக செய்கிறது. போராடுகிற மக்களை ஒடுக்குவதும், சாமானியர்கள் மீது அதிகார திமிரை வெளிப்படுத்துவதும், ஆளும் வர்க்கத்துக்கும் சாமரம் வீதுவதுமே அதன் தலையாய பணி என்பதே நமது கடந்த கால அனுபவம்.
வீரப்பனை பிடிக்க சென்ற காவல்துறையும், வனத்துறையும் வாச்சாத்தி கிராம பெண்கள் 18 பேரை பாலியல் வன்கொடுமை செய்ததும், பலரை அடித்து துன்புறுத்தியம் நாம் அறிந்ததே. இதுபோல் மாஞ்சோலை படுகொலை, கூடங்குளம் அணு உலை போராட்டம், சமீபத்தில் சாத்தான்குளம் படுகொலை, ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு என அடுக்கிக் கொண்டே போகலாம்.

ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யவும், பொய் வழக்குகள் போட்டு சித்திரவதை செய்வதுமே காவல்துறையின் தலையாய பணி. இது உழைக்கும் மக்களின் நலனுக்காக என்றுமே நின்றதில்லை என்பதை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்.
அதிமுக ஆட்சியில் நடந்த சாத்தன்குளம் படுகொலையை கண்டித்த திமுக, இன்று அதிகாரத்தில் அமர்ந்ததும் விக்னேஷ் கொலையில் வாய்மூடி மௌனிக்கிறது. எந்த அரசு அதிகாரத்தில் வந்தாலும் காவல்துறையின் அதிகாரம் குறைய போவதில்லை. இதனை தடுக்க மக்கள் அதிகாரமே ஒரே மாற்று!
- நந்தன்