நாம் அதிபர் கட்சியும் புதிய ஜனநாயகப் புரட்சியும். பகுதி 1

தொடர்ச்சி….

அதிபர் வாழ்க…

அதிபர் வாழ்க….

கோசம் அமைதியாகும் வரை கண்களை மூடிக்கொண்டு நின்றிருந்தார் அதிபர். அரங்கு அமைதியானதும் கண்களைத் திறந்தார். எதையோ சாதிக்கப்போகும் பெருமிதம் அவர் கண்களில் பூரணச் சந்திரனாய் நிறைந்திருந்தது. திரும்பிப்பார்த்து சைகை செய்தார். அதே கதவின் வழியாக ஒரு சிவந்த ஒல்லியான இளைஞன் வந்தான். யார் இந்த இளைஞன்? கூட்டம் குழம்பி நின்றது.

மூக்கை நோண்டியபடி அதிபர் பேசினார்.

”இவன் பெயர் வேங்கைப்புலி. எனக்கும் புலித்தேவனுக்கும் பிறந்த வாரிசு.”

கூட்டம் அதிர்ச்சியில் உறைந்து நின்றது.

ஆழமாகக் காறி மேடையிலேயே துப்பிவிட்டு அதிபர் தொடர்ந்தார்.

’இறுதிக்கட்டப் போருக்கு சில வருடம் முன்பு தலைவர் புலித்தேவன் என்னை சலங்கைத் தீவுக்கு அழைத்தார். போர் முடிவுகள் எப்படி இருக்குமென்று யூகிக்க முடியவில்லை. ஒருவேளை நாங்கள் கொல்லப்பட்டுவிட்டால் எம்மை நம்பியிருக்கிற மக்களுக்கு கதியின்றிப் போய்விடும். அவர்களைக் காக்க ஒரு வாரிசு வேண்டும். அதுவும் உன் மூலமாக வேண்டும் என்றார். நான் யோசிக்கவே இல்லை. ஒத்துக்கொண்டேன். தனி விமானத்தில் அமெரிக்கா சென்று அறுவை சிகிச்சை செய்துகொண்டு பெண்ணாக மாறினேன். தலைவனின் வாரிசைக் கருவில் தாங்கினேன். வேங்கைப் புலியைப் பெற்றெடுத்தேன். மீண்டும் அமெரிக்கா சென்று ஆணாக மாறிவிட்டேன். தலைவரின் ஆனைப்படி வேங்கைப்புலியை ரகசியமாக வளர்த்தேன். இப்போது உண்மையைச் சொல்லவேண்டிய தருணம் வந்துவிட்டது.
இவ்வளவுநாள் இந்த உண்மையை மக்களிடம் மறைக்கக் காரணம் தலைவர் புலித்தேவனுக்கு நன் செய்து கொடுத்த சத்தியம்தான். இதைத் தவறென்று நீங்கள் நினைத்தால் என்னைச் செருப்பாலேயே அடியுங்கள்.’ என்று சொல்லி தன்னுடைய செருப்பைக் கழற்றி தன் தலையில் தானே படார் படாரென்று அடித்துகொண்டார்.

ஒட்டு மொத்த அரங்கமும் கண்ணீரோடு முழக்கமிட்டது..

“அதிபர் வாழ்க..”

”வேங்கைப்புலி வாழ்க..”

இதெல்லாம் உண்மையா..? அறிவியலின்படி இதெல்லாம் சாத்தியமா? இப்படியெல்லாம் நடக்க வாய்ப்பிருக்கிறதா? எந்தக் கேள்வியும் யாரும் கேட்கவில்லை. அதிபர் சொல்லிவிட்டால் அவ்வளவுதான்.

அடுத்த தேர்தலில் அதிபர் தனிப் பெரும்பான்மையுடன் வென்றார். அதே அரங்கத்தில் வெற்றிவிழாக் கொண்டாட்டங்கள் நிகழ்ந்தன. அடுத்த நாளிலிருந்தே அதிபரின் புரட்சிகர நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் துவங்கியது.

தமிழ்நிலம் மங்கள தேசம் என்று பெயர் மாற்றப்பட்டது. ஆரம்பகாலத்தில் அதிபர் சர்க்கசில் கோமாளியாக இருந்தபோது பாடிய பாடல் தேசிய கீதமாக அறிவிக்கப்பட்டது. தேசிய பாணம் பனங்கல், தேசிய உணவு ஆமைக்கறி, தேசிய வாகணம் இசுசு கார்.

மங்கள தேசத்து அகராதியில் இருந்து சாதி என்ற சொல் நீக்கப்பட்டது. அதற்குப்பதிலாக குடி என்ற வார்த்தை புகுத்தப்பட்டது. குடிமாறிக் காதலிப்பதோ திருமணம் செய்வதோ தண்டனைக்குறிய குற்றமாக அறிவிக்கப்பட்டு அதைக் கவனிக்க தனி வாரியம் அமைக்கப்பட்டது.

கிச்சத்தீவை மீட்டு தரதரவென்று இழுத்து வருவதற்கு பிரம்மாண்டமான கயிறுகள் தயாரிக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டன. அரசியல் கைதிகளை அதிபரே நேரில் சென்று சிறைக்கதவைத் திறந்து விடுவித்தார். தண்ணீர் தர மறுக்கும் மாநிலங்கள் மீது அணுகுண்டு வீசுவேன் என்ற அதிபரின் எச்சரிக்கையைத் தொடர்ந்து எல்லா மாநிலங்களும் வாலைச் சுருட்டிக்கொண்டன. சலங்கைத் தீவில் தனிநாடு அமைக்க ஒரு அதிரடி இராணுவப்படை இரகசியமாய்த் தயாராகிக்கொண்டு இருந்தது. அவர்களுக்கு வழங்கப்பட்ட ஏ.கே 47 இயந்திரத்துப்பாக்கிகளில் 47 என்ற எண் அழிரப்பரில் அழிக்கப்பட்டு 74 என்று பெயிண்டில் எழுதப்பட்டிருந்தது.

கொடுத்த கடனை வசூலிக்க வந்தவர்களிடம் நீ தமிழ்நிலத்துக்குதான கடன் குடுத்த அங்க போய்க் கேளு. கோர்ட்டுக்கு போவியா இந்தா மஞ்ச நோட்டீசு.. புஹாஹாஹாஹா என்று சிரித்ததைப்பார்த்து தெறித்து ஓடினார்கள்.

ஆடுமாடு வளர்த்தல் அரசு வேலையாக்கப்பட்டது. கம்ப்யூட்டர் எஞ்சினியர்கள் கணக்குப் பிள்ளைகளாக மாற்றப்பட்டனர். போலீசுக்கு லத்திகளுக்கு பதிலாக பச்சை மட்டைகள் வழங்கப்பட்டன. அதிபரை விமர்சித்து மீம்ஸ் போட்டவர்களின் பட்டியல் தயாரானது. அனைவருக்கும் மூன்றுநாள் பட்டினிச் சிறை. பச்சை மட்டை அடி.

மாடு வளர்க்காதவர்கள் நெய் தோசை கேட்டால் நாக்கு அறுக்கப்படும். என்று அதிபர் அறிவிக்க, அதிபரின் தம்பிகளோ வெல்டிங் தெரியாதவர்கள் இரும்பு வாகனத்தில் போனால் கால்கள் உடைக்கப்படும். மேஸ்திரி வேலைகள் தெரியாமல் வீடுகளில் வசித்தால் மண்டை பிளக்கப்படும். டெக்ஸ்டைல்ஸ் வேலை தெரியாமல் உடையணிந்தால் கிங்கினிகள் வெட்டப்படும் என்றெல்லாம் விதவிதமாக அறிவித்துக்கொண்டு இருந்தனர்..

அதிபர், தனி நாணயம் தனி இராணுவம் தனி வெளியுறவு அமைச்சகமெல்லாம் அமைத்ததைப்பார்த்து கடுப்பான சிந்திய தேசம் இராணுவத்தை அனுப்பியது. அதை எதிர்கொள்ள அதிபர் ஒரு இராஜதந்திர நடவடிக்கையில் இறங்கினார்.

சிந்திய தேசத்தின் உளவுத்துறையிலும் அதிபரின் ஆட்கள் இருந்ததால் மங்கள தேசம், இதுவரை எந்த நாடும் கண்டுபிடிக்காத பேரழிவு ஆயுதங்களைத் தயாரித்து வைத்திருப்பதாகவும், அது அணுகுண்டைவிட வீரியமானதாகவும், விஷ வாயுவை விட வேகமாய்க் கொல்லக்கூடியதாகவும் இருப்பதாக வேண்டுமென்றே ஒரு ரகசிய ரிப்போர்ட் கசியவிடப்பட்டிருந்தது.

இத்தகவல் உண்மையா பொய்யா என்று உளவுபார்க்க முடியாதபடி அதிபர் ஒரு காரியம் செய்தார். திருநல்லாரு சனீஸ்வரன் கோவிலைப்போலவே மங்கள தேசம் முழுதும் பல கோவில்களைக் கட்டினார். உளவு பார்க்க வந்த விந்திய தேசத்து சாட்டிலைட்டுகள் கோபுரத்தின் சக்தியால் செயலிழந்து போயின. வெறுத்துப்போன சிந்திய ராணுவம் மங்கள தேசத்து எல்லையில் முற்றுகையிட்டு நின்றது.

அதிபரும் தயாரானார்.

ஒரு உயரமான மலையில் தம்பிகள் இராணுவத்தை நிர்வாணமாக குணிந்து குண்டியைக் காட்டியபடி வரிசையாக நிற்க வைத்திருந்தார். அனைவரின் குண்டியிலும் சுன்னாம்பு தடவப்பட்டிருந்தது. தொலைவிலிருந்து தொலைநோக்கியில் அதைப்பார்த்த சிந்திய இராணுவ ஜெனரல்கள் அதிர்ச்சியடைந்தனர். இதென்ன இரட்டை ஏவுகனைகளா? இல்லை விஷ வாயுவைப் பீய்ச்சியடிக்கும் இயந்திரங்களா? இவை என்ன ஆயுதங்கள் ? இவை எப்படிச் செயல்படும்? ஒன்றுமே புரியாமல் அஞ்சி பின் வாங்கினர். இப்படியாக பிராந்திய வல்லரசை இராஜதந்திர நடவடிக்கையால் முறியடித்து மங்கள தேசம் வரலாற்றில் நிமிர்ந்து நின்றது.

இந்த வெற்றிக்குப் பிறகு மங்கள தேசத்தில் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில் திடீரென்று ஒருநாள் அதிபர் காணாமல் போய் விட்டார். மங்கள தேசத்தின் உளவுப்படை ஒருபக்கம், உலகின் எல்லா நாடுகளின் உளவுப்படையிலும் அதிபரின் ஆட்கள் இருந்தால் அவர்கள் ஒருபுறமென ஒட்டு மொத்த உலகமே காணாமல் போன அதிபரைத் தேடிக்கொண்டு இருந்தது.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு அதிபரின் இரண்டாம் கட்டத் தலைவனாக இருந்த கொடுக்காப்புளி வேங்கைப்புலியைச் சிறையிலடைத்து தன்னை அதிபராக அறிவித்துக் கொண்டான்.
கொடுக்காப்புளியிடமிருந்து தேசத்தை மீட்கவும், அதிபரை மீண்டும் ஆட்சியில் அமர்த்தவும் உறுதிபூண்ட ஹிட்லர் தலைமையிலான விசுவாசமான புரட்சிப்படை அதிபரைத் தேடிக்கொண்டிருக்கிறது.

அதிபர் இருக்கும் இடம் தெரிந்துவிட்டது. நாம் இவ்வளவு நாட்கள் சந்தேகப்பட்டதுபோல கடத்தியது சிந்திய தேசமில்லையாம். ஏதோ வெளிநாட்டு குழுவாம். அவர்கள் யார்? அவர்களின் நோக்கம் என்னவென்றெல்லாம் தெரியாது. ஒரே தாக்குதல். நேரடித் தாக்குதல். அதிபரை மீட்டுக்கொண்டு வந்துவிடவேண்டும். புரட்சிப்படை தயாரானது.

எட்டடி உயரமுள்ள மதிலை லாவகமாய்த் தாண்டிக்குதித்து மின்சார வேலிகளைச் செயலிழக்கச் செய்து லாவகமாக உள்ளே நுழைந்தது புரட்சிப்படை. இவர்கள் எதிர்பார்த்ததுபோல அது இராணுவ முகாமெல்லாம் இல்லை. ஏதோ நீதி மன்றம் போலிருந்தது. படையணியினர் அந்தக் கட்டிடத்தைச் சுற்றி மறைந்தபடி நிலையெடுத்து நின்றிருந்தனர். ஹிட்லர் ஒரு மதிலுக்குப் பின்னே ஒளிந்து ஜன்னல் வழியே உள்ளே பார்த்தான்.
அங்கே ஜட்டியோடு, ஒரு வௌவாலைப்போல தலைகீழாக அதிபர் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்தார். எதிரே நீதிபதிகளைப்போல சிலர் அமர்ந்திருந்தனர்.

“எங்கட பேரச்சொல்லி இல்லாதது பொல்லாதது கதச்சு மக்கள ஏமாத்துன இந்த துரோகிக்கு அதிகபட்ச தண்டனை தரவோனும்”

வழக்கறிஞர் போலத்தெரிந்த ஒருவர் சொல்லிக்கொண்டிருந்த அதே வேளையில், திடுதிடுவென்று உள்ளே நுழைந்த ஹிட்லர் பாதுகாவலர்களைச் சுட்டுக் கொன்றுவிட்டு அதிபரை மீட்டு நீதிபதிகளைச் சிறைப்பிடித்தான்.

”சுட்டுக் கொல்லுங்கடா இவங்கள..”

ஹிட்லரின் இடுப்பிலிருந்த ரிவால்வரை உறுவி நீதிபதியை நோக்கி நீட்டியபடி தொங்கிக் கொண்டிருந்தார் அதிபர்.
திரும்பிப் பார்த்தான் ஹிட்லர். அப்போது நீதிபதி மேடையில் பளிச்சென சவரம் செய்யப்பட்ட முகத்துடன் வெளிர் நீலநிற சபாரி அணிந்து அமர்ந்திருந்த நபரைப் பார்த்ததும் ஒருவிணாடி உடல் சிலிர்த்தது. அதிர்ச்சியில் மூச்சே நின்றுவிட்டது போல உணர்ந்தான். அவனையறியாமல் அவனது உடல் நடுங்கிக்கொண்டு இருந்தது.

“புலித்தேவன்.. சுதந்திரச் சிங்கங்கள் தலைவர் புலித்தேவன்.. எங்கள் தலைவர் புலித்தேவன்..எங்கள் இனக்கடவுள் புலித்தேவன்..”
அவனது உதடுகள் தானாய் முனுமுனுத்தன.

அவனது கையிலிருந்த ஏ.கே 74 துப்பாக்கியின் முனை அதிபரை நோக்கி நீண்டிருந்தது.

அதிபரின் வரவுக்காக மங்களதேசம் இன்னும் சிலநூற்றாண்டுகள் காத்திருக்கத்தான் வேண்டும்..

நன்றி:
எழுத்தாளர்: சம்சுதீன் ஹீரா.

(சம்சுதீன் ஹீரா நிகழ்கால அரசியலை கண் முன்னே படம்பிடித்து காட்டும் நல்ல எழுத்தாளர். கோவையில் ஆர்எஸ்எஸ் குண்டர்கள் தூண்டிய இஸ்லாமியருக்கு எதிரான தாக்குதல்களை சமகாலத்தில் நின்று இலக்கியமாக வடித்தவர்.
“வெந்த சோற்றைத் தின்று விதி வந்தால் சாவோம்” என்று பயம் கொள்ளும் பலர் மத்தியில் துணிச்சலுடன் சமகால அரசியலில் ஊடாடும் எழுத்தாளரை போற்றுவோம்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here