மாட்டுக்கறி: பார்ப்பனரல்லாதோர் உணவு உரிமையில் தலையிடாதே! ஏற்றுமதியை தடுத்து நிறுத்து!

இந்தியாவில் மாட்டுக்கறி விற்பனையை தடை செய்ய வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் பாஜக பாசிச குண்டர்கள் கூச்சல் போடுவதையும், பெரும்பான்மை உழைக்கும் மக்கள் உணவு பழக்க வழக்கத்தில் தலையிட்டு அவர்கள் வயிற்றில் அடிக்க துடிப்பதையும் ஒருபோதும் அனுமதிக்க முடியாத பாசிச பயங்கரவாதம் ஆகும்.

“ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, கடைசியில் மனிதனை கடிப்பார்கள்” என்ற ஒரு முதுமொழி நிலவுகிறது. அது போல, “பெரியார் மண், திராவிட இயக்கத்தின் மண்” என்றெல்லாம் பெருமை பீத்திக் கொண்டு திகழ்கின்ற தமிழ்நாட்டில், பெரும்பான்மை உழைக்கும் மக்களின் உணவு பழக்க வழக்கத்தின் மீது பகிரங்கமாக தாக்குதலை தொடுத்துள்ளது பாசிச இந்து மதவெறி குண்டர் படை.

திமுக ஆட்சியில் இருந்தபோது ஓரளவிற்கு வாலைச் சுருட்டி கொண்டு பதுங்கி இருந்த பார்ப்பன பயங்கரவாதிகள் கூட்டம், பாசிசக் கோமாளி விஜய் ஆட்சிக்கு வந்த பிறகு துணிச்சலுடன் வீதியிலிறங்கி கலவரத்திற்கும், மோதலுக்கும் தயாராகி வருகின்றனர் என்பதை தான் சென்னை திருவொற்றியூர் நிகழ்வு நமக்கு எடுத்துக்காட்டுகிறது.

“மாட்டிறைச்சி கடைகளுக்கு இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தால், திருவொற்றியூர் சாலையில் முஸ்லீம்கள் நேற்று மறியலில் ஈடுபட்டனர். சென்னை, திருவொற்றியூர் அருகே தாங்கல் பகுதியில், மாட்டிறைச்சி கடைகள் செயல்படுகின்றன. இங்குள்ள சில கடைகளில், அனுமதியின்றி மாடுகளை வெட்டி இறைச்சியாக விற்கப்படுவதாக, இந்து அமைப்பைச் சேர்ந்த சிலர் நேற்று முன்தினம் இரவு இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.” என்று குதூகலிக்கிறது பார்ப்பன தினமலர்.

உலகிலேயே மாட்டுக்கறி ஏற்றுமதி செய்வதில் இந்தியா பிரேசிலுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளது என்பதும், சுமார் 1.5 முதல் 1.6 மில்லியன் மெட்ரிக் டன் அளவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது என்பதும் அனைவரும் அறிந்த செய்தியாகும். அதிலும் அந்த மாட்டுக் கறி விற்பனை & ஏற்றுமதி செய்கின்ற நிறுவனங்கள் பெரும்பான்மையாக சொல்லிக் கொள்ளப்படும் இந்துக்களுக்கு சொந்தமானது என்பதும் அம்பலமாகி நாறிக்கொண்டுள்ள போதிலும், பார்ப்பன முன்னணியினர் மாட்டுக்கறி உணவை தடை செய்வதற்கு படாத பாடு படுகின்றனர்.

மாட்டிறைச்சி உணவும், திருவொற்றியூர் பிரச்சினையும்!
“ரிக்வேதகால ஆரியர்கள்’ என்னும் நூலில் ராகுல சாங்கிருத்தியாயன், “அவர்களிலே (ஆரியர்களில்) மாமிசம் உண்ணாதவர்களே எவரும் இல்லை எனலாம். பெரிய பெரிய ரி´கள், முனிவர்களுக்கு விருந்து படைக்க வேண்டுமென்றாலும் புலால் மிகவும் அவசியமான ஒன்றாகும்” என்று எழுதியுள்ளார்.

இந்தியா தொடர்ந்து உலகின் முன்னணி மாட்டிறைச்சி ஏற்றுமதியாளர்களில் ஒன்றாகத் திகழ்கிறது, மேலும் இந்தியாவின் மிகப்பெரிய இறைச்சி ஏற்றுமதி நிறுவனங்களில் பல இந்து குடும்பங்களுக்குச் சொந்தமானவையாகவோ அல்லது அவர்களால் இயக்கப்படுபவையாகவோ உள்ளன.

பசுவை தெய்வமாக வணங்குகின்ற பழக்கம் உள்ளதால் பசுமாட்டை கறிக்கு வெட்டக்கூடாது என்று கூச்சல் போடுகின்ற இவர்கள் சிவனிடம் வரம் பெற்ற மகிஷா என்று அழைக்கப்படும் எருமை மாட்டை வெட்டுவது எந்த வகையில் நியாயம். மகிஷாசுரனை வதம் புரிந்ததாக காளிக்கு பெயரே மகிஷாசுரமர்த்தனி என்று வைத்துள்ளனர். இதனால் தான் எலும்பில்லாத எருமை இறைச்சி (காரா பீப் என்று சொல்லக்கூடிய) மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியா முன்னணியில் நிற்கிறதோ என்னவோ.

படிக்க:

 மாட்டுக்கறி பெயரில் முதியவரை தாக்கிய கும்பல்! சமூகமயமாகியுள்ள பாசிசத்தின் அறிகுறி!
♦ ஆம்பூரில் பிரியாணித் திருவிழா மாட்டுக்கறி நீங்கலாக!

இவ்வாறு மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்கின்ற நிறுவனங்களில் முதலிடத்தை பெறுகின்ற அல்லானாசன்ஸ் இந்தியாவின் மாட்டிறைச்சி ஏற்றுமதியில் 30 சதவீதம் இடத்தை பெறுகிறது. இதன் உரிமையாளர் இர்பான் அல்லானா. இவர் இந்த தொழிலை தவிர கோழி மற்றும் பிற உயிரினங்கள், தீவனங்கள் ஏற்றுமதியில் கால் பதித்து மிகப் பெரிய தரகு முதலாளித்துவ நிறுவனமாக உயர்ந்துள்ளது.

அப்துல்லா அல்லானாவின் தலைமையில் அல்லானா குழுமம் விவசாயப் பொருட்களில் வர்த்தகம் செய்யத் தொடங்கியது. தனது தயாரிப்பு வகைகளை விரிவுபடுத்துவதன் மூலம் வெளிநாட்டு வர்த்தகத்தைத் தொடங்கியது. இந்தியாவிலிருந்து உறைந்த ஹலால் எருமை இறைச்சியை ஏற்றுமதி செய்வதில் முன்னோடியாகத் திகழ்ந்தது. அல்லானாசன்ஸ் பிரைவேட் லிமிடெட், மும்பையில் “அல்லானா ஹவுஸ்”-ஐ தலைமை அலுவலகமாகக் கொண்டு நிறுவப்பட்டது.

“1865-ஆம் ஆண்டு முதல் வேரூன்றிய ஒரு செழுமையான பாரம்பரியத்தைக் கொண்டுள்ள அல்லானா குழுமம், தரம், புதுமை மற்றும் சிறந்த வாடிக்கையாளர் சேவை ஆகியவற்றின் நீண்ட மரபைப் பிரதிபலிக்கிறது. எங்களின் மகத்தான பாரம்பரியத்தில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம், மேலும் அதைப் பாதுகாப்பதை எங்களின் முதன்மையான பொறுப்பாகக் கருதுகிறோம்.

நாங்கள் 85-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு, பிராண்டட் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் மற்றும் வேளாண் பண்டங்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யும் இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனம் ஆவோம். அல்லானா பிராண்ட், ஒரு சிறிய தொடக்கத்திலிருந்து கணிசமாக வளர்ந்து, உலகளாவிய வேளாண் பொருட்கள் துறையில் ஒரு முக்கிய அங்கமாகவும், பலரின் விருப்பமான உற்பத்தியாளர் மற்றும் விநியோகஸ்தராகவும் உருவெடுத்துள்ளது” என்று பெருமிதமாக தனது இணையப் பக்கத்தில் அறிவித்துள்ளது.

படிக்க:

 மாட்டிறைச்சி: முதலாளிக்குப் பணம்! பாஜகவுக்கு அரசியல் அதிகாரம்!

 பீகாரில் இஸ்லாமிய தொழிலாளி கும்பல் படு*லை!

இதைத் தவிர ஹெச்.எம்.ஏ அக்ரோ, அல்கபீர், மிர்சா எக்ஸ்போர்ட்ஸ், மற்றும் ஃபேர் எக்ஸ்போர்ட்ஸ் போன்ற நிறுவனங்களின் உரிமையாளர்கள் பெரும்பாலும் சொல்லிக் கொள்ளப்படும் இந்து சமூகத்தைச் சார்ந்தவர்களாகவே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சதீஷ் சபர்வாள் மற்றும் அதுல் சபர்வாள், சுனில் கபூர், மதன் அபோட், ஏ.எஸ்.பிந்த்ரா போன்றவர்கள் மாட்டிறைச்சி ஏற்றுமதியில் முன்னணியில் உள்ள நிறுவனங்களின் உரிமையாளர்கள் ஆவார்கள்.

இந்த லட்சணத்தில், இந்தியாவில் மாட்டுக்கறி விற்பனையை தடை செய்ய வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் பாஜக பாசிச குண்டர்கள் கூச்சல் போடுவதையும், பெரும்பான்மை உழைக்கும் மக்கள் உணவு பழக்க வழக்கத்தில் தலையிட்டு அவர்கள் வயிற்றில் அடிக்க துடிப்பதையும் ஒருபோதும் அனுமதிக்க முடியாத பாசிச பயங்கரவாதம் ஆகும்.

பெரும்பான்மை உழைக்கும் மக்களின் உணவான மாட்டுக்கறி இயல்பிலேயே அதிகமான புரதச்சத்து கொண்டது. அது பற்றி தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தைச் சேர்ந்த வீணா சத்ருக்னா “மாட்டிறைச்சியில் 21 சதவிகித புரதச்சத்துக்கள் உள்ளன, அதேசமயம் அரிசியில் 6-8 சதவிகித புரதச்சத்துக்கள் மட்டுமே உள்ளன. எந்தவொரு காய்கறியின் புரதச்சத்தும் 10 சதவிகிதத்தைத் தாண்டுவதில்லை. சடங்குகளை அடிப்படையாகக் கொண்ட இந்து சமூகம் மாட்டிறைச்சியைக் கண்டித்த போதிலும், ஏழையிலும் ஏழையான மக்கள் தொடர்ந்து அதை உண்டதற்கு இதுவும் ஒரு காரணமாகும்” என்கிறார்.

படிக்க:

 உணவு உடை எனது உரிமை! அதை தடுக்கும் அதிகாரத்தை யார் கொடுத்தது?

♦ உணவு பாசிசம்: அசாமில் மாட்டிறைச்சிக்குத் தடை!

இவ்வளவு ஆதாரங்கள் இருந்தும் மாட்டுக்கறி உணவு குறித்து தொடர்ச்சியாக இந்து முன்னணி குண்டர் படையினரும், ஆர்எஸ்எஸ் பாஜகவினரும் பிரச்சாரம் செய்வதை நிறுத்த மாட்டார்கள்.

“ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக பசுப் பாதுகாப்பில் அக்கறை கொண்டுள்ளதால், நரேந்திர மோடி அரசியலமைப்பில் ஒரு திருத்தத்தைக் கொண்டு வந்து நாடு முழுவதும் பசுவதையைத் தடை செய்யலாம். 2014-ல் பதவியேற்றதிலிருந்து மோடி ஏற்கனவே எட்டு முறை அரசியலமைப்பைத் திருத்தியுள்ளார். அவர் அரசியலமைப்பு விதிகளை அடிக்கடி மாற்றியுள்ளார். இந்து சமூகத்தின் பெரும் நன்மைக்காக என்று அவரது ஆதரவாளர்கள் விவரிக்கும் ஒரு செயலுக்காக, பசுவதையைத் தடை செய்ய தனது அரசாங்கத்திற்கு அதிகாரம் அளிக்கும் வகையில் அவர் மேலும் ஒரு திருத்தத்தைக் கொண்டு வரலாம். இத்தகைய ஒரு நடவடிக்கை, பசுப் பாதுகாப்பு எனும் காவிப் பணியை நிறைவேற்றும். பசுப் பாதுகாப்பு என்பது நீண்ட காலமாக ஆர்.எஸ்.எஸ்-இன் ஒரு பிரகடனப்படுத்தப்பட்ட பணியாக இருந்து வருகிறது”. என்று எச்சரிக்கிறார் ஊடகவியலாளரான அருண் ஸ்ரீவத்சவா.

இந்த பார்ப்பன பாசிச கும்பலுக்கு புரியும் வகையில் “மாட்டுக்கறி ஏற்றுமதியை உடனடியாக தடை செய்!, மாட்டு எலும்பை கொண்டு சுத்தம் செய்யும் வெள்ளை சர்க்கரையை விநியோகிக்காதே! தனது கன்றுக்காக மாடுகள் தனது இரத்தத்திலிருந்து உருவாக்குகின்ற பாலை ஒருபோதும் பறிக்காதே! மாட்டுத் தோல் கொண்டு தயாரிக்கப்படும் மிருதங்கம் உள்ளிட்ட கருவிகளை பயன்படுத்தாதே! என்ற முழக்கங்களுடன் இந்து மதவெறிக் குண்டர்களின் முகத்தில் அறைகின்ற வகையில் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வதும், மாட்டுக்கறி உணவு, உடல் நலத்திற்கும், ஆரோக்கியத்திற்கும் உகந்தது என்பதை தைரியமாகவும், வெளிப்படையாகவும் ஆதரித்து பேசுவதும், பிரச்சாரம் செய்வதும் காலத்தின் கட்டாயமாக மாறி உள்ளது.

  • பார்த்தசாரதி

புதிய ஜனநாயகம் தினசரி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here