“கீழடி நாகரிகத்தை உயர்த்திப்பிடி!
வேத நாகரிகத்தை துரத்தியடி!

இந்திய வரலாற்றை தென்னிந்தியாவிலிருந்து திருத்தி எழுதும் போர் முழக்கம்…!” என்ற வீரியமிக்க முழக்கங்களின் கீழ் “மக்கள் கலை இலக்கியக் கழகம்” சார்பாக தஞ்சைத் தரணியில் 2026 ஆகஸ்ட் 22 அன்று தமிழ் மக்கள் இசை விழா எழுச்சியுடன் நடந்து முடிந்துள்ளது.

தஞ்சை திருவள்ளுவர் திடலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முன்னேற்பாடுகளில் இசை விழா தலைப்பிற்கு பொருத்தமான  கீழடி நாகரிகத்தையும், வேத நாகரிகத்தையும் வேறுபடுத்தி காண்பிக்கும் வகையில் கண்காட்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கீழடி நாகரிகத்தின் தொன்மங்களைப் பறைசாற்றும் விதத்தில் கலை இயக்குனர்கள் மிகச் சிறப்பாக வடிவமைத்து இருந்தார்கள்! அதே நேர்வில் வேத நாகரிகத்தையும் அம்பலப்படுத்தும் வகையில் உச்சியில் பார்ப்பனரும், அதற்குக் கீழே சத்திரியரும், அதற்கு கீழே வைணவரும், அதற்கு கீழே சூத்திரரும், அதற்கும் கீழே தாழ்த்தப்பட்டோரும் (கடைசியில் காணும் இரு வகையறாவும் மற்ற மேல் நிலையில் உள்ளவர்களால் நசுக்கப்படுகின்ற கொடுமைகளை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்ட) சாதியப் படிநிலைகளை எளிதில் மக்கள் புரியும் வகையில் அவர்களுக்கேற்ற படமும், அவர்கள் யார் என்பதை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் அவர்கள் பெயர்களும் எழுதப்பட்டிருந்தன.

 ‘போலீசின் ஜனநாயகம்?’

ஆகஸ்ட் 21 – (முதல் நாள்) இரவே உளவுத் துறையினர் ‘வேத நாகரிக’ கேளிக்கை சித்தரத்தைப் பார்வையிட்டு புகைப்படம் எடுத்துச் சென்றனர்.  ம.க.இ.க. மாநில இணைச் செயலாளர் தோழர் ராவணனை காவல் நிலையத்திற்கு வரவழைத்து,  ‘இதுவரை நாங்கள் இசை விழாவிற்கு அனுமதி வழங்கவில்லை; இசை விழா திடலில் வேத நாகரிகத்தை அம்பலப் படுத்துகின்ற படங்களில் பார்ப்பனர், சத்திரியர், வைணவர், சூத்திரர், தாழ்த்தப் பட்டவர் என்ற கட்டவுட்டை அகற்ற வேண்டும்; மேலிடத்து அழுத்தம் எங்களுக்கு மிக அதிகமாக இருக்கிறது’ – என வலியுறுத்தி ‘ஜனநாயக மாண்பினை’ வெளிப்படுத்தினர்.

அடுத்த சில நிமிடங்களில் போலீஸ் பட்டாளம்- தாங்களும் சூத்திர பஞ்சம கூட்டத்தைச் சேர்ந்தவர்களே என்பதை உணராமல் திடலில் ‘வேதநாகரிகத்தை’ச் சுற்றி நின்றது! பின்னர் பல்வேறு விவாதப் பிரதிவாதங்களுக்கு இடையில் படங்களை அகற்றாமல் எழுத்துக்கள் மட்டும் தோழர்களால் அழிக்கப்பட்டன.

நாட்டில் நிலவும் சாதி தீண்டாமை, ஆணவப் படுகொலைகள், காதல் ஜோடி தற்கொலை, அனைத்து ஜாதியினரும் கோவில்களில் அர்ச்சகராகத் தடை, மனுஸ்மிருதி, பகவத் கீதை உட்பட வேத இதிகாச குப்பைகளில் சாதியப் படிநிலைகளை இன்றுவரை நியாயப்படுத்தி வைத்திருக்கும் அட்டூழியம்; இவற்றிற்கெல்லாம் ஆர் எஸ் எஸ் பாஜக இந்துத்துவ பாசிச காவி கும்பல் காவலனாய் இருந்து பாதுகாக்கின்ற பொழுது, அந்த உண்மைகளை வெளிச்சம் போட்டுக் காண்பிக்கக் கூடாது என்பது எந்த வகை நியாயம் என்பதை காக்கிச்சட்டை போலீசும் அரசாங்கமும் தான் விளக்க வேண்டும்! சாதியப்படி நிலைகளை இன்று வரை நியாயப்படுத்தும் அந்தப் புராண இதிகாசக் குப்பைகளை எல்லாம் இவர்கள் தீயிட்டுக் கொடுத்த முன் வருவார்களா? அல்லது தீயிட்டுக்கொழுத்த முற்படும் அமைப்புகளை அனுமதிப்பார்களா? அவர்கள் அவ்விதம் எல்லாம் செய்யமாட்டார்கள்; மக்கள் தான் நம் உரிமைக்காக களம் காண வேண்டும்.

புரட்சிகர இயக்கங்களுக்கு ஒரு நீதி! காவிக் கும்பல் – பிறருக்கு ஒரு நீதியா?

திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபத்தை வழக்கத்திற்கு மாறாக இஸ்லாமியர்களுக்குச் சொந்தமான சிக்கந்தர் பாதுஷா தர்கா அருகில்தான் ஏற்ற வேண்டும் என ஒரு சூத்திர சங்கிப் பேடி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் சட்டத்திற்குப் புறம்பான வகையில் மனுத் தாக்கல் செய்கிறான். அதனை ஏற்று பரவசப் படுத்தி உடனடியாக சங்கி கோரிய இடத்தில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதிக்கிறார் ஒரு சங்கி நீதிபதி. நீதிபதி உத்தரவை அமல்படுத்த அவன் ஒரு கூட்டத்தை கூட்டுகிறான்; அங்கே வந்த எச் ராஜா என்ற காவி(லி)க் கூட்டத் ‘தளபதி’ திருப்பரங் குன்றத்தை அயோத்தியாக மாற்றுவோம் என ஊளை இடுகிறான்; காலிக் கூட்டம் ஒன்று கோவினுள் காவி மற்றும் பாஜக கொடிகளுடன் ஜெய்ஸ்ரீராம் முழக்கமிட்ட கொடுமைகளை எல்லாம் பெரியார் பிறந்த மண் என்று சொல்லக்கூடிய தமிழ்நாட்டில் அரங்கேறியது! அப்பொழுது எல்லாம் இந்த காக்கிச்சட்டை போலீஸ் என்ன செய்து கொண்டிருந்தது? அதிகார வர்க்கமும் அரசாங்கமும் அவனை கைது செய்ததா? ‘முருகனுக்கு அரோகரா’ முழக்கம் போடவேண்டிய முருகன் கோவிலில் ஜெய்ஸ்ரீராம் முழக்கமிட்ட அந்தக் காவி(லி)க் கலவரக் கும்பலை விரட்டி அடித்ததா – சட்டம் ஒழுங்கைக் கராராக அமல்படுத்தும் போலீஸ்?

படிக்க:

 தமிழ் மக்கள் இசைவிழா | முதல் அமர்வு

 தமிழ் மக்கள் இசைவிழா | படங்கள் | பகுதி 2

புதுக்கோட்டை மாவட்டம் காட்டுப்பாவா பள்ளிவாசல் அருகில் கலகம் புரிவதற்கு என்றே மேடை அமைத்து ஊர்வலம் விட முயன்ற இதே எச்ச ராஜாவை போலீஸ் உயர் அதிகாரிகள் உயர்நீதிமன்ற தீர்ப்பை காண்பித்து கெஞ்சி கூத்தாடி அனுமதி மறுத்தபோது ‘ஹை கோர்ட்டாவது மசுராவது’ எனக் கொக்கரித்தானே எச்.ராஜா? அப்போது இந்த காக்கிச் சட்டை போலீசின் வீரம் எங்கே போனது? அவனை,  பிற மக்கள் மீது ஏவிவிடும் அடக்கு முறையைப் போல சட்டையைப் பிடித்து இழுத்து புரடியைப் பிடித்துத் தள்ளி போலீஸ் வேனில் ஏற்றி கைது செய்ததா?

கடந்த ஆண்டு நடிகரும் தற்குறி அரசியல்வாதியுமான விஜய்யின் கரூர் கூட்டத்தில் 41 பேர் துள்ளத் துடிக்க மாண்டு போனதற்கு காரணமான விஜய் உட்பட அவருடன் இணைந்த கொலைகாரக் கும்பலை குண்டுக் கட்டாகக் கைது செய்யாமல் தப்புவிக்க விடப்பட்டதற்கு இந்த காவல்துறையும் அரசாங்கமும் தானே காரணம்? எவ்வளவு பெரிய கொடும் செயல் அது? அதற்கெல்லாம் கைகட்டி வாய் பொத்தி நின்றதல்லவா காக்கிச்சட்டைப் போலீஸ்?

ஹிட்லர் முசோலினி இறுதி கதிகளை பாடமாகக் கற்பிப்போம்!

அப்படியானால் ம.க.இ.க. போன்ற அமைப்புக்களுக்கு ஒரு நீதி? ஆர் எஸ் எஸ் பாஜக இந்துத்துவ பாசிச காவி கும்பலுக்கு – இன்ன பிற முதலாளித்துவ கட்சிகளுக்கு ஒரு நீதியோ? இதற்குப் பெயர்தான் சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்பதோ?

ஆனால் முற்றிலும் நியாயபூர்வமான – கீழடி அகழாய்வறிஞர் அமர்நாத் ராமகிருஷ்ணா கண்டறிந்த பேருண்மைகளின் படி 982 பக்கங்கள் கொண்ட அறிக்கையை முடக்கி போட்டு கீழடியையே மண்ணோடு மண்ணாக புதைக்க எத்தனிக்கும் ஒன்றிய ஆர்எஸ்எஸ் பாஜக இந்துத்துவ கும்பலுக்கு எதிராக – ‘அமர்நாத் அறிக்கையை உடனே வெளியிடு’ என்ற கோரிக்கையை முன் வைத்து ம.க.இ.க. போன்ற இயக்கங்கள் முன்னெடுப்புகளை மேற்கொண்டால் 1008 கேள்விகள்; பல்வேறு விதமான கேள்விக்கணைகள் – என்றால் காவல்துறை மற்றும் அரசாங்கத்தின் பார்வையில் இதுதான் ஜனநாயகமோ?

ஆளானப்பட்ட ஹிட்லர், முசோலினி போன்ற கொடும் சர்வாதிகாரிகளுக்கு இறுதியில் எத்தகைய முடிவு கிட்டியது என்ற உண்மையை  இந்த அடக்குமுறை யாளர்களுக்கு நினைவூட்ட மக்கள் படை திரளட்டும்! ஜனநாயகம் என்றால் என்ன என்பதனை அவர்களுக்குப் புரிய வைக்கட்டும்! அதற்கு ம.க.இ.க. உள்ளிட்ட புரட்சிகர இயக்கங்கள் முன் வரிசையில் நின்று துணை நிற்கட்டும்! துணை நிற்கும்!

  • எழில்மாறன்

3 COMMENTS

  1. அதிகார வர்க்கங்கள் அனைத்தும் காவி பாசிசத்தை நடைமுறைப்படுத்தும் காவி கும்பல்கலள் சூழ்ந்துஉள்ளது என்பதனை மக்களிடம் வெளிச்சம் போட்டு காட்ட வேண்டிய சூழல் தற்போது…..
    இதைத்தான் இந்த சம்பவம் புரிய வைக்கிறது.

    கார்ப்பரேட்டுகளுக்கும் காவிகளுக்கும் வேலை செய்யக்கூடிய அதிகாரவர்க்கம் மக்களுக்காக என்றுமே துணை நிற்காது

  2. மேலும் மேற்கண்ட நிகழ்வு தொகுப்புக் கட்டுரையில் ஒன்றை சுட்டிக்காட்ட மறந்து விட்டேன்.

    மகஇக இசை விழா குறித்தான வீச்சான பிரச்சாரமும் விளம்பரங்களும் & நமது முகநூல் மற்றும் ஊடக பக்க வெளிச்சங்களும் எதிரிகளை குறிப்பாக காவிக் கூட்டத்தைக் கதிகலங்க வைத்து விட்டது. ஒருபுறம் ஒன்றிய அளவில் ஆர் எஸ் எஸ் பாஜக இந்துத்துவ மற்றும் காவி கூட்டத்தில் மூழ்கியுள்ள ஒன்றிய தொல்லியல் துறை எதிர்வினை ஆற்றிக் கொண்டிருக்க கூடிய சூழல் பல்வேறு வடிவங்களில் அரங்கேறிக் கொண்டிருந்தன.

    மறுபுறம் தஞ்சையில் சில பார்ப்பனர்கள் காவல்துறை மற்றும் ஒன்றிய பாஜக அரசுக்கு மக்கள் கலை இலக்கியக் கழகத்தினர் தஞ்சாவூர் திலகர் திடலில் பகவத் கீதையை தீயிட்டுக் கொளுத்தப் போவதாக புகார் செய்ததோடு ‘ம.க.இ.க.-வின் இந்து விரோத செயல்களை முறியடிக்க இந்துக்களே தஞ்சை திலகர் திடல் நோக்கி கூடிடுவீர்’ என்ற வதந்திகளையும் வெட்க மின்றி பரப்பினர். பின்னர் காவல் துறையினரிடம் இந்தக் கேடுகெட்ட காவி கூட்டத்தின் பொய் செய்திகள் பரப்புதல் திட்டமிட்டு கலவரத்தை தூண்டுதல் என்ற அடிப்படையில் ம.க.இ.க. சார்பாக புகார் அளிக்கப்பட்டு நடவடிக்கை கோரப்பட்டது. நமது புகாரின் மீது எதிரிகள் அய்வர் மீது முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டது.

    ஆக எப்பாடு பட்டேயாகினும் இசை விழாவை தடுத்து நிறுத்த வேண்டும் என்பது பாசிச காவி கும்பலின் சதித் திட்டமாக இருந்தது. மறுபுறம் ஒன்றிய பாஜக மோடி அரசு தொல்லியல் துறை மூலமாக தொல்லியல் அகழாய்வு இயக்குனர் அமர்நாத் ராமகிருஷ்ணா அவர்களுக்கு எண்ணற்ற நோட்டீசுகளை வழங்கி அச்சுறுத்தல் செய்து பார்த்தது. அனைத்தையும் தகர்த்தெறிந்து இசை விழா மாபெரும் வெற்றியை ஈட்டித் தந்துள்ளது
    என்பதே பேருண்மை!

    தமிழ்நாடு எங்கும் “கீழடி நாகரிகத்தை உயர்த்திப்பிடி!
    வேத நாகரிகத்தைத் துரத்தியடி! இந்திய வரலாற்றை தென்னிந்தியாவிலிருந்து திருத்தி எழுது…” என்ற போர் முழக்கம் பேசு பொருளாக மாறிவிட்டது என்று சொன்னால் அது மிகையல்ல!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here