நாடாளுமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்பி ஜான் பிரிட்டாஸ் இந்தியாவில் இறைச்சி ஏற்றுமதி குறித்து  எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த வர்த்தக இணை அமைச்சர் ஜிதின் பிரசாதா,  மாநிலங்கள் வாரியாக  புள்ளி விவரங்கள் இல்லை எனவும், மொத்த இறைச்சி ஏற்றுமதி குறித்த பதிவுகளை மட்டுமே அரசாங்கம் பராமரிப்பதாகவும்கூறினார்.

குறிப்பிட்ட விவரங்களின் அடிப்படையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் (2020-21 ~ 2024-25) இந்தியாவின் இறைச்சி ஏற்றுமதி 3.22 பில்லியன் டாலரிலிருந்து 4.16 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது  என விவரங்களை வழங்கியது.  இது இந்திய ரூபாய் மதிப்பில் தோராயமாக  ₹26,726 கோடியிலிருந்து ₹34,528 கோடி வரை அதிகரித்துள்ளது.

மாட்டிறைச்சி: முதலாளிக்குப் பணம்! பாஜகவுக்கு அரசியல் அதிகாரம்!
Thanks Thewire.in

வீதிகளில் மாட்டிறைச்சிக்காக மனிதர்களைக் கொல்ல அனுமதிக்கும் அதே வேளையில், உலக சந்தையில் இறைச்சியை விற்று டாலர்களை ஈட்டுவதில் இந்த பாஜக அரசு தீவிரமாக உள்ளது.மூலதனத்திற்கு ஏற்றவாறு மத ஒழக்கங்கள் வளைந்துகொடுக்கும் என்பதற்கு இது ஒரு சான்று.

இந்தியாவின் இறைச்சி ஏற்றுமதியில் 97% முதல் 98% வரை எருமை இறைச்சி (Buffalo meat) என்று அரசு தப்பித்துக் கொள்ள முயன்றாலும், ஏற்றுமதி மூலம் கிடைக்கும் லாபம் ஆளும் வர்க்கத்தின் கைகளையே சென்றடைகிறது.

மாட்டிறைச்சி: முதலாளிக்குப் பணம்! பாஜகவுக்கு அரசியல் அதிகாரம்!
Thanks: TheWire.in

குறிப்பாக, இந்தியாவின் முன்னணி இறைச்சி ஏற்றுமதி நிறுவனமான அல்லானா குழுமம் (Allana Group), பாஜகவுக்கு 30 கோடி ரூபாய் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை அளித்துள்ளது என்ற தகவல், ‘பசு பாதுகாப்பு’ என்பது வெறும் அரசியல் நாடகம் என்பதையும், அதன் பின்னால் பெருநிறுவனங்களின் கரம் இருப்பதையும் உறுதிப்படுத்துகிறது.

உழைக்கும் வர்க்கத்தின் மீதான தாக்குதல்

சங்பரிவார் அமைப்புகள் பசுவைத் ‘தாய்’ என்றும் ‘தெய்வம்’ என்றும் போற்றினாலும், எருமை மாட்டிற்கு அந்த அந்தஸ்தை வழங்க மறுப்பது அவர்களின் சாதிய மற்றும் வர்க்கப் பாகுபாட்டையே காட்டுகிறது. மனிதர்களை இனம், மதம், நிற ரீதியாகப் பிரிப்பதைப் போலவே, கால்நடைகளையும் அவர்கள் பிரிக்கிறார்கள். இந்த வன்முறையினால் அதிகம் பாதிக்கப்படுவது இஸ்லாமியர்களும் தலித்துகளுமே.

மாட்டுத் தோல் மற்றும் இறைச்சி சார்ந்த தொழில்களில் ஈடுபட்டுள்ள இந்த அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தைச் சிதைப்பதன் மூலம், அவர்களைப் பொருளாதார ரீதியாக ஒடுக்குவதே இந்த ‘பசு அரசியலின்’ நோக்கம்.

கடந்த 17  டிசம்பர், 2025 அன்று, போபாலின் ஜின்சி (Jinsi) இறைச்சிக் கூட வளாகத்திற்கு அருகே 26.5 டன் இறைச்சி ஏற்றிச் சென்ற ஒரு வாகனத்தை (TRUCK) இந்துத்துவா அமைப்பினர் தடுத்து நிறுத்தினர். அந்த இறைச்சிக் கூடத்தில் 85 எருமைகளை (சுமார் 12.75 டன் இறைச்சி) மட்டுமே அறுக்க அனுமதி இருந்த நிலையில், அதிக அளவு இறைச்சி இருந்ததால் சந்தேகம் எழுப்பப்பட்டது. இது தொடர்பாக வாகன ஓட்டுநர் முகமது சோயிப் மற்றும் இறைச்சிக் கூட உரிமையாளர் அஸ்லம் குரேஷி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் கைப்பற்றப்பட்ட இறைச்சி மாதிரிகள் மூன்று முறை சோதனை செய்யப்பட்டன, ஆனால் ஒவ்வொரு முறையும் வெவ்வேறு முடிவுகள் வந்தன. போபால் கால்நடை மருத்துவமனையில் செய்யப்பட்ட முதல் சோதனையில் அது எருமை இறைச்சி என்று தெரிவிக்கப்பட்டது. இந்த முடிவு சங்பரிவார் கும்பலுக்கு எதிராக அமைந்ததால் அடுத்ததாக மதுராவிலுள்ள தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்ட 4 மாதிரிகளில் முடிவு அவர்களுக்கு சாதகமாக மாற்றப்பட்டது.

அதாவது அந்த இறைச்சி பசு அல்லது அதன் வழித்தோன்றலின் இறைச்சி என்று உறுதி செய்தன.  இதற்கு பிறகு முதல் சோதனையில் எருமை இறைச்சி என உறுதி செய்த அரசு கால்நடை மருத்துவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

படிக்க:

 மாட்டுக்கறி பெயரில் முதியவரை தாக்கிய கும்பல்! சமூகமயமாகியுள்ள பாசிசத்தின் அறிகுறி!

 உணவு பாசிசம்: அசாமில் மாட்டிறைச்சிக்குத் தடை!

மூன்றாவது சோதனையில் ஹைதராபாத்தில் உள்ள தேசிய இறைச்சி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்ட மாதிரி அழுகிவிட்டதால், அதில் டிஎன்ஏ (DNA) சோதனை செய்ய முடியாது என்று அந்த ஆய்வகம் தெரிவித்துவிட்டது. இந்த வழக்கில் எப்படியாவது சம்மந்தப்பட்டவர்களை சிறையில் அடைக்க முயற்சிக்கிறது இந்துமதவெறி கும்பல்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது மத்தியப் பிரதேச பசு வதை தடுப்புச் சட்டம் 2004 மற்றும் பாரதிய நியாய சன்ஹிதாவின் குற்றச் சதிப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒருவேளை குற்றம் நிரூபணமானால் இந்தச் சட்டத்தின் கீழ் பசு வதைக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

இந்தியாவில் 2014-ஆம் ஆண்டு பாஜக ஆட்சிப்பொறுப்பிற்கு வந்த பிறகு, ‘பசு பாதுகாப்பு’ என்ற பெயரில் சிறுபான்மையினருக்கும் தலித்துகளுக்கும் எதிரான வன்முறைகள் திட்டமிட்டு ஏவி விடப்பட்டுள்ளன. இஸ்லாமிய முதியவர் முகமது அக்லக் தனது வீட்டில் மாட்டிறைச்சி வைத்திருந்தார் என்ற வதந்தியைப் பரப்பி பாஜக மற்றும் சங்பரிவார் கும்பலால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், இந்தியாவையே உலுக்கியது. அதன் பின்பு இதுபோன்ற சம்பவங்கள்  பாஜக ஆளும் மாநிலங்களில் இஸ்லாமியர்களை குறிவைத்து சகஜமாக நடந்தேறின.  இந்த காட்டுமிராண்டி செயலுக்கு நியாயம் கற்பிக்கவும் செய்தார்கள்.

மக்கள் அதிகாரம் வாட்சப் சேனலை கிளிக் செய்து இணைந்துக் கொள்ளுங்கள்

இது வெறும் மத உணர்வு சார்ந்த பிரச்சினை அல்ல; மாறாக, இது உழைக்கும் வர்க்கத்தைப் பிளவுபடுத்தவும், ஆளும் வர்க்கத்தின் அதிகாரத்தைத் தக்கவைக்கவும் பயன்படுத்தப்படும் ஒரு கருத்தியல் போர்.

கிராம பொருளாதாரச் சரிவும், விவசாயிகளின் துயரமும்

ஒரு பொருளின் பயன்பாடு முடிந்த பிறகு அதைச் சந்தைப்படுத்த முடியாவிட்டால், அது சுமையாக மாறும். பசு பாதுகாப்புச் சட்டங்களால் வயது முதிர்ந்த மாடுகளை விற்க முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர். இதனால் தெருக்களில் திரியும் கைவிடப்பட்ட கால்நடைகள் விவசாயப் பயிர்களை அழிப்பதோடு, கிராமப்புறப் பொருளாதாரத்தையே சீர்குலைத்துள்ளன.

ஒன்றிய பாஜக அரசுக்கு ஒரு கேள்வி: பசு உங்கள் தெய்வமென்றால்,  ஒருபுறம் மாட்டிறைச்சி ஏற்றுமதி மூலம் கோடிக்கணக்கான லாபத்தையும், தேர்தல் நிதியையும் பெற்றுக்கொண்டு, மறுபுறம் சாதாரண மக்களை மாட்டிறைச்சிக்காகக் கொலை செய்வது எவ்வகையான தர்மம்?.

ஆர்.எஸ்.எஸ்- பாஜக தனது அதிகாரத்திற்காகப் பசுவைப் பகடைக்காயாகப் பயன்படுத்துகிறது. உழைக்கும் மக்கள் மதவெறியைக் கடந்து, இந்த மூலதன வேட்டையையும், அரசியல் நாடகத்தையும் புரிந்துகொண்டு ஓரணியில் திரள வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயம்.

  • நலன்

1 COMMENT

  1. மாட்டிறைச்சி முதலாளிக்கு பணம்! பாஜகவுக்கு அரசியல் அதிகாரம்!

    தோழர் நலன் கட்டுரை மிக சிறப்பு!

    நாடாளுமன்றத்தில் ஜான் பிரிட்டோஸ் எம்பி மாட்டு இறைச்சி ஏற்றுமதிக்கான புள்ளி விவரங்களை கூறினார் பாஜக துறை ரீதியான இணை அமைச்சர் தவறான விவரங்களை கொடுத்து கேள்வியை திசை திருப்ப முயற்சித்தார்.
    மாட்டு இறைச்சி ஏற்றுமதியில் பல ஆயிரம் கோடி ரூபாய் டாலர்கள் முதலீடாக பெறப்படுவது அம்பலமாகி உள்ளது அதே சமயம் மாற்று இறைச்சி ஏற்றுமதி செய்யும் அந்த நிறுவனத்திடம் பாஜக கட்சி தேர்தல் நன்கொடையாக ஆதாயம் பெற்று உள்ளது என்பதையும் அம்பலப்படுத்துகிறது
    உ.பி.சேர்ந்த அக்ளக் மாட்டு இறைச்சி வைத்திருந்தார் என்று அடித்துக் கொல்லப்பட்டார் பசுவதை சட்டம் கொண்டு வந்து பாமர மக்களை அடித்துக் கொள்ளுவது பிரிவினை வாதத்தை தூண்டுவது ஒரு கேடுகெட்ட அயோக்கியத்தனத்தில் பாஜக அரசு செயல்பட்டதை இந்த மாட்டு இறைச்சியின் மூலம் அம்பலப்பட்டு இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here