காராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தில், விலையுயர்ந்த ஐபோனின் தவணைத் தொகையைச் செலுத்துவது தொடர்பாக குடும்பத்தில் ஏற்பட்டதாகக் கூறப்படும் தகராறு ஒரு சோகமான முடிவை சந்தித்தது. 18 வயதான குணால் சந்த்குடே, தனது பெற்றோருடன் ஏற்பட்ட பிரச்சினைக்குப் பிறகு கவ்வத்யா டோங்கர் மலைப்பகுதிக்குச் சென்றதாகவும், அங்கு தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டியதாகவும் செய்திகள் கூறுகின்றன.. அவரைத் தடுக்க பெற்றோரும், போலீஸாரும், உள்ளூர் மக்களும் 3 மணி நேரம் முயன்றனர். இறுதியில் குணால் மலையிலிருந்து விழுந்தபோது, அவரைக் காப்பாற்ற முயன்ற தந்தையும் கீழே விழுந்து உயிரிழந்தார். சற்றும் எதிர்பாராமல் தாயும் மலையில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்டார்.

இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பலரும் பலவிதமாக கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். சிலர் பெற்றோர் மகனை சரியாக வளர்க்கவில்லை என்றும் வேறு சிலர் உறவுகளில் உள்ள முரண்பாடுகள் தான் இதற்கு காரணம் என்றும் அவரவர் பார்வையிலிருந்து தங்களது கருத்துக்களை முன்வைக்கின்றனர். அவை முழுமையான பார்வை அல்ல. ஐபோன் போன்ற விலையுயர்ந்த பொருட்களை வாங்க வேண்டும் என்ற ஆசை ஒரு சாதாரண குடும்பத்தின் குழந்தையின் மனதில் எப்படி உருவாகிறது என்பது பெரிய கேள்வி. இதுதான் விவாதமாக இருந்திருக்க வேண்டும்.

நுகர்வு கலாச்சாரமும் ஐபோனும்!

ஒரு ஐபோன் வெறும் தொலைபேசி அல்ல என்று இன்றைய நுகர்வுக் கலாசாரம் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்கிறது. அது ஒரு வாழ்க்கைமுறை. அது ஒரு அந்தஸ்து. அது ஒரு அடையாளம். நண்பர்கள் வட்டத்தில் ஒருவர் பயன்படுத்தும் பொருள், மற்றொருவருக்கும் அவசியமானதாக மாறுகிறது.

ஒரே பள்ளியில் படிக்கும் இரண்டு குழந்தைகளின் பெற்றோருடைய வருமானம் ஒன்றாக இருக்காது. ஒருவரின் தந்தை மாதம் இரண்டு லட்சம் ரூபாய் சம்பாதிக்கலாம். மற்றொருவரின் தந்தை ஓட்டுநராக மாதம் ரூ.25,000 அல்லது ரூ.30,000 சம்பாதிக்கலாம். ஆனால் இருவரும் ஒரே விளம்பரத்தைப் பார்க்கிறார்கள். ஒரே சமூக ஊடகத்தைப் பயன்படுத்துகிறார்கள். ஒரே நண்பர்கள் வட்டத்தில் இருக்கிறார்கள். ஆசைக்கு வர்க்க வேறுபாடு இல்லை; ஆனால் அந்த ஆசையை நிறைவேற்றுவதற்கான பொருளாதார வசதியில் மிகப்பெரிய வேறுபாடு இருக்கிறது.

ஐபோன் விளம்பரத்தைப் பார்க்கும் ஒவ்வொருவரிடமும் நிறுவனம், “உங்களுடைய மாத வருமானம் எவ்வளவு?” என்று கேட்டு விளம்பரம் செய்வதில்லை. அது அனைவருக்கும் சொல்கிறது அல்லது விளம்பரம் வழியே திணிக்கிறது: “இதுதான் நீங்கள் விரும்ப வேண்டிய பொருள்.” இதிலிருந்து இளைஞர்களை மீட்டெடுப்பது சாதாரண செயல் அல்ல. விளம்பரத்தை தொடர்ந்து பார்க்கும் இளைஞர்-வசதிப்படைத்த நண்பர்களிடம் வாங்கி பயன்படுத்தும் இளைஞர் தன்னுடைய விருப்பத்தை பெற்றோரிடம் தெரிவிக்கும் போது பொருளாதார நிலைமையை காரணம் காட்டி மறுக்கலாம் அல்லது எதார்த்தத்தை புரிய வைக்க முயற்சிக்கலாம். பெற்றோரின் கருத்தை அவர்கள் அச்சமயத்தில் ஏற்கவும் செய்யலாம். ஆனால், விளம்பரங்கள் நிற்க போவதில்லை. தொடர்ந்து நுகர்வு போதையை ஊட்டிக் கொண்டே இருக்கும்.

படிக்க:

♦ பெங்களூர் IT ஊழியர் தற்கொலை: முதலாளித்துவ நுகர்வுவெறியின் வகைமாதிரி!

 சமூக ஊடக அடிமைத்தனம் – மீள்வது எப்படி?

இதன் விளைவாக, இளைஞர்களின்  மனதில் ஒரு பொருள் “வசதி” என்பதிலிருந்து “தேவை”யாகவும், பின்னர் “என்னிடம் இல்லாததால் நான் குறைவானவன்” என்ற மனநிலையாகவும் மாறக்கூடும். இது ஒரு நோய்போல் சமூக ஏற்றத்தாழ்வும் பொருளாதார ஏற்றத்தாழ்வும் நிறைந்திருக்கும் இந்தியாவில் வைரஸ்-ஆக பரவி வருகிறது. அதிவிலையுயர்ந்த பைக்குகள், செல்போன்கள் இளைஞர்களை குறிவைத்து பகாசுர கார்ப்பரேட் நிறுவனங்கள் மூலம் விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. போதாகுறைக்கு இன்ஸ்டா இன்புளூயன்சர்கள் மூலமும் காசு கொடுத்து விளம்பரம் செய்யப்படுகின்றன.

முன்பு ஒரு பொருளின் விலை ரூ.80,000 என்றால், குடும்பம் ரூ.80,000 சேமித்திருக்க வேண்டியிருந்தது.  இப்போது அதே பொருள்: “மாதம் இவ்வளவு ரூபாய் மட்டும்.” என்று விற்கப்படுகிறது. இதனால் மொத்த விலை மனதில் பின்தள்ளப்படுகிறது. மாதத் தவணை முன்னுக்கு வருகிறது. இதுவே EMI-யின் நுகர்வு உளவியல். ஒரு குறைந்த வருமானம் கொண்ட குடும்பத்திடம் “உங்களால் ரூ.80,000 செலவிட முடியுமா?” என்று கேட்டால் அவர்கள் தயங்கலாம் அல்லது முடியாது என்று கூறிவிடலாம். ஆனால் “மாதம் ரூ.3,000 அல்லது ரூ.4,000 கட்ட முடியுமா?” என்று கேட்டால் முடியும் என்று நினைக்கலாம். இதனால் பொருளாதாரத் திறனுக்கும் நுகர்வு ஆசைக்கும் இடையிலான இடைவெளி கடனால் நிரப்பப்படுகிறது. இது திட்டமிட்டு உருவாக்கப்பட்ட சதிவலை. இதில் இரண்டு வகைப்பட்ட முதலாளிகள் லாபமடைகிறார்கள். ஒருவர் குறிப்பிட்ட பொருளை (செல்போன் உள்ளிட்ட எலெக்ட்ரிக் மற்றும் எலெக்ட்ரானிக் உற்பத்தி சாதனங்கள்) உற்பத்தி செய்யும் முதலாளி. மற்றொருவர் அந்த பொருளை மாதத் தவணையில் வட்டிக்கு பெற்று தரும் வங்கி முதலாளி.

அப்படிதான் தற்கொலை செய்து கொண்ட இளைஞரும் ஐ போனை வாங்கியுள்ளார். சாதாரண லாரி ஓட்டுநராக வேலை செய்யும் தனது தந்தையால் அந்தக் கடனை எவ்வாறு அடைக்க முடியும் என்று 18 வயதேயான அந்த இளைஞரால் யோசிக்க விடாமல் நுகர்வு வெறியும் EMI கடன் வசதியும் தடுத்துள்ளது. மாதத் தவணையைக் கூட கட்ட முடியாத அளவுக்கு தான் அவர்களுடைய பொருளாதார வசதி இருந்துள்ளது என்பதே எதார்த்தம். இத்தனை நாள் பயன்படுத்திய ஐபோன் நாளை கடன் கட்டமுடியவில்லை என்று பறித்து சென்று விடுவார்களே, நண்பர்கள் முன் ஐபோன் இல்லாமல் எப்படி நிற்பது என்ற மோசமான மனநிலை தான் தற்கொலை முடிவுக்கு அல்லது மிரட்டலுக்கு அவரை தள்ளியுள்ளது.

3 பேரின் மரணத்திற்கு யார் காரணம்

ஒரு பதின்ம வயது இளைஞனிடம் முழுமையான பொருளாதார அறிவை எதிர்பார்ப்பது எவ்வளவு நியாயமானது? அவன் வளர்ந்து கொண்டிருக்கிறான். அவனுடைய அடையாளம் உருவாகிக் கொண்டிருக்கிறது. நண்பர்கள் அவனுடைய உலகில் முக்கியமானவர்கள். சமூக ஊடகம் அவனுடைய அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்கிறது. அந்த நிலையில், கோடிக்கணக்கான ரூபாய்களை செலவழித்து உருவாக்கப்படும் விளம்பர உலகத்துடன் போட்டியிடும் அளவுக்கு பெற்றோர் மட்டும் குழந்தைக்கு “வேண்டாம்” என்று சொல்லிவிட முடியுமா?

பெற்றோருக்கும் பொறுப்பு உண்டு. குழந்தைகளுக்கு பணத்தின் மதிப்பு, குடும்பத்தின் பொருளாதார நிலை, கடன், EMI, தேவையும் ஆசையும் ஆகியவற்றைப் புரியவைக்க வேண்டும். ஆனால் பெற்றோரின் பொறுப்பை மட்டும் பேசிவிட்டு முதலாளித்துவ நுகர்வு சந்தையின் கிரிமினல்தனத்தை மறைப்பது சரியல்ல.

முதலாளித்துவம் தனது லாபத்தை பெருக்க, உருவாக்கி பரப்பும் நுகர்வுவெறி விளம்பரங்களால் காஸ்டிலியான பைக், செல்போன் உள்ளிட்ட அநாவசிய பொருட்களை வாங்க தூண்டுவதன் மூலம் இந்தியாவின் நடுத்தர வர்க்கத்தை கடன் வலையில் சிக்கவைத்து அக்குடும்பத்தின் வாழ்வை நாசமாக்குகிறது. அதற்கு ஒரு சிறு உதாரணம் தான் இந்த 3 பேரின் தற்கொலையும். முதலாளித்துவம் எனும் கொடிய நோயிடமிருந்து தப்பிக்க ஒரே மருந்துதான் இவ்வுலகில் உண்டு.

  • நலன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here