நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு எதிராக பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வரும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி இன்று நாடாளுமன்ற முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டது. போராடிய இளைஞர்களை துணை இராணுவ படை கொண்டு ஒடுக்கி உள்ளது பாசிச பாஜக அரசு.
நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது என்றும் அதனை முழுமையாக தடை விதிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு ஒரு தசாப்தமாக போராடி வருகிறது. நீட் தேர்வுக்கு எதிராக போராடுவதில் முதன்மையான மாநிலமாகவும் தமிழ்நாடு உள்ளது. இந்நிலையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் பொறுப்பற்ற அதிகாரத் திமிர்பிடித்த பேச்சின் காரணமாக உருவான கரப்பான் பூச்சி ஜனதா கட்சி, நீட் தேர்வு உள்ளிட்ட ஒன்றிய அரசால் நடத்தப்படும் தேர்தலில் நடக்கும் முறைகேடுகளை கண்டித்து இந்திய இந்தியாவில் சில மாநிலங்களில் தொடர் போராட்டம் நடத்தி வந்தது.
இந்நிலையில் டெல்லியின் ஜந்தர் மந்தரில் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. ஜூன் இறுதியில் தொடர்ச்சியான தர்ணா மற்றும் உண்ணாவிரத போராட்டங்களை நடத்தி வந்த CJP கட்சிக்கு இந்தியா முழுவதிலிருந்தும் பல்வேறு கட்சிகளும் ஆதரவு அளித்து வந்தனர்.
பாஜகவை சிலர் பாசிச கட்சி என்றோ பாசிச அரசு என்றோ ஏற்றுக்கொள்வதில்லை. மாறாக காங்கிரசையும் பாஜகவையும் பொதுமைப் படுத்துகிறார்கள். காங்கிரசும் பாஜகவும் முதலாளித்துவத்திற்கு சேவகம் செய்வதில் ஒரே கொள்கையை கொண்டிருந்தாலும் செயல் அளவில் அதனை மூர்க்கமாக செயல்படுத்துகிறது பாஜக. அதேபோல் அரசு இயந்திரத்தை பயன்படுத்துவதிலும் காங்கிரஸிலிருந்து வேறுபடுகிறது. அதனை ஏற்கனவே விவசாயிகளின் டெல்லி முற்றுகை போராட்டத்திலேயே கண்டிருப்போம்.
போராடுபவர்களின் கோரிக்கை என்ன?
NEET உள்ளிட்ட தேசியத் தேர்வுகளில் வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடுகள் மற்றும் நிர்வாகத் தவறுகளுக்கு அரசியல் பொறுப்பு ஏற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதே அவர்களின் முக்கிய கோரிக்கை. அடுத்து NEET மற்றும் பிற போட்டித் தேர்வுகளில் முழுமையான சீர்திருத்தம் செய்ய வேண்டும்.
படிக்க
♦ இந்தியாவின் கரப்பான்பூச்சிகள்; அதிகார வர்க்கத்தை நடுங்க வைத்தது எப்படி?
♦ நீட் எனும் ஆட்கொல்லித் தேர்வை ஒழித்துக் கட்டுவோம்!
வினாத்தாள் கசிவுகளைத் தடுக்க வலுவான பாதுகாப்பு; தேர்வு நடத்தும் அமைப்புகளில் வெளிப்படைத்தன்மை; மதிப்பீடு மற்றும் முடிவுகள் வெளியிடும் முறையை மேம்படுத்துதல்; தொழில்நுட்பக் கோளாறுகளைத் தவிர்க்க புதிய நடைமுறைகள்; “Paper Mafia” எனக் கூறப்படும் தேர்வு முறைகேடு வலையமைப்புகளை கண்டறிந்து சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கை.
தேர்வு முறைகேடுகளால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உரிய இழப்பீடு மற்றும் நியாயமான தீர்வு வழங்க வேண்டும். தேர்வு அழுத்தம் மற்றும் அதனுடன் தொடர்புடைய மாணவர் தற்கொலை சம்பவங்கள் குறித்து அரசு பொறுப்பேற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
இவர்களின் கோரிக்கை மற்றும் வழிமுறைகளில் இருந்து இது ஒரு சாத்வீகமான காந்திய வழியில் நடத்தப்படும் போராட்டம் என்பது கண்கூடாக தெரிகிறது. வன்முறையை நாங்கள் விரும்பவில்லை என இவர்கள் ஏற்கனவே அறிவித்திருந்தார்கள். அதாவது அதிகார வர்க்கத்தால் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையிலேயே இவர்கள் போராட்டம் இருந்தது.
சோனம் வாங்சுக்கின் போராட்டமும் அரசு கையாண்ட விதமும்

லடாக்கைச் சேர்ந்த சோனம் வாங்சுக் கல்வி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் இளைஞர்களின் பிரச்சினைகள் குறித்து நீண்ட காலமாக குரல் கொடுத்து வருகிறார். 2026 ஜூன் இறுதியில், நாடு முழுவதும் NEET உள்ளிட்ட போட்டித் தேர்வுகளில் நடந்ததாகக் கூறப்பட்ட வினாத்தாள் கசிவுகள், தேர்வு முறைகேடுகள் மற்றும் மாணவர்களின் எதிர்காலம் குறித்த கவலைகள் அதிகரித்தன. இதையடுத்து, இளைஞர்கள் முன்னெடுத்த கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் (CJP) போராட்டத்திற்கு ஆதரவாக சோனம் வாங்சுக் இணைந்தார்.
படிக்க:
♦ லடாக்: ஆர்எஸ்எஸ் பாஜகவால் ஏமாற்றப்பட்ட வரலாறும்! சோனம் வாங்சுக் கைதும்!
♦ நீட் தேர்வுக்கு எதிராகப் போராடிய மாணவர்கள் மீது வழக்குத் தொடுப்பதா?
2026 ஜூன் 28 முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கினார். இது அவரது தனிப்பட்ட கோரிக்கைக்காக அல்ல; மாணவர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலான அறவழிப் போராட்டமாக இருந்தது. அவர், “மாணவர்களின் குரலை அரசு கேட்க வேண்டும்” என்று தொடர்ந்து வலியுறுத்தினார். முறைகேடுகளுக்கு ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அரசியல் பொறுப்பேற்க வேண்டும் என்ற CJP யின் கோரிக்கைகளுக்கு முழு ஆதரவையும் அளித்தார்.
20 நாட்களுக்கும் மேலாக உண்ணாவிரதம் இருந்ததால், உடல்நிலை கவலைக்கிடமாக மாறியது. டெல்லி காவல்துறை, அராஜகமாக நுழைந்து போராட்ட பந்தலை துவம்சம் செய்து, போராட்டத்தை முடக்க சோனம் வாங்சுக்கை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று சஃப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதித்தது. சோனம் வாங்சுக் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் எதிர்ப்பை அதிகரித்து வந்த நிலையில் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் அழைத்துச் சென்றதாக டெல்லி காவல்துறை தெரிவித்தது.
“சன்சத் சலோ” (Parliament March) போராட்டத்திற்கு CJP அழைப்பு
சோனம் வாங்சுக் கைது செய்யப்படாவிட்டாலும் சட்ட விரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, மீண்டும் போராட்ட களத்தில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அஜித் கிப்ட் முன்னாபிரத போராட்டத்தை தொடங்கினார். ஜூலை 20 அன்று போராட்டத்திற்கு CJP அழைப்பு விடுத்திருந்த நிலையில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் “சன்சத் சலோ” (Parliament March) பேரணியில் கலந்து கொண்டனர்.
படிக்க:
♦ நீட் போன்ற போட்டி தேர்வுகள், பயிற்சி மையங்கள், தற்கொலைகள்!
ஜனநாயக ரீதியான போராட்டத்தைக் கூட பொறுத்துக் கொள்ள முடியாத பாசிச பாஜக துணை ராணுவ வீரர்களை கொண்டு நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக சென்ற, மாணவர்கள் மற்றும் இளைஞர்களை கொடூரமாக தாக்கி கைது செய்துள்ளது.
கோடி (Godi) மீடியாக்களின் அடிமை விசுவாசம், பாசிஸ்டுகளின் அடக்குமுறையும்!
அரசியல் மற்றும் நிர்வாக ஊழலைக் கட்டுப்படுத்த வலுவான ஜன் லோக்பால் (Jan Lokpal) சட்டத்தை கொண்டு வர வேண்டும் என 2011 ஏப்ரல் 5-ஆம் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்கினார் அன்னா ஹசாரே. பின்னர் ஆகஸ்ட் மாதத்தில் ராம்லீலா மைதானத்தில் மீண்டும் பெரிய அளவிலான உண்ணாவிரதம் நடத்தினார். இப் போராட்டத்தை தேசிய ஊடகங்கள் 24 மணி நேரமும் நேரலை செய்தன. இந்தியாவில் உள்ள பல்வேறு கட்சிகளும் மாணவர் இயக்கங்களும் பெரும் ஆதரவை அளித்தனர்.
அன்னா ஹசாராவின் போராட்டம் 2014-ல் பாஜக ஆட்சிக்கு வரவும் வழி வகுத்தது. ஆனால் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அன்னா ஹசாரேவின் போராட்டத்தை கையாண்ட விதமும், இப்போதுள்ள பாசிச பாஜக கையாளும் விதமும் வேறு. ஏப்ரல் 2011-ல் அண்ணா ஹசாரே உண்ணாவிரதம் தொடங்கியபோது, அரசு அவருடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தது. அரசு மற்றும் குடிமைச் சமூக பிரதிநிதிகள் இணைந்து கூட்டு வரைவு குழு (Joint Drafting Committee) அமைக்கப்பட்டது. இதில் அமைச்சர்கள் மற்றும் அண்ணா ஹசாரே குழுவினர் இணைந்து லோக்பால் மசோதா குறித்து ஆலோசனை நடத்தினர்.
போராட்டத்தில் ஒரு கைது செய்யப்பட்டாலும் நாடாளுமன்ற விவாதம் நடத்தி, சில கோரிக்கைகளை ஏற்று சட்டம் கொண்டுவரும் செயல்முறையை முன்னெடுத்தது.
பாசிச பாஜக அரசு, ஜனநாயக முறையில், ‘அறவழி’யில் நடைபெறும் போராட்டத்தில், போராடுபவர்களை கைது செய்து போராட்டத்தை ஒடுக்க நினைக்கிறதே ஒழிய இதுவரை அவர்களை அழைத்து கோரிக்கைகளை கேட்டு பேச்சுவார்த்தை நடத்தவில்லை. துணை ராணுவப் படையின் ஒடக்குமுறைக்கு பிறகு ஒன்றிய சுகாதார அமைச்சர் ஜே.பி. நட்டா, போராட்ட பிரதிநிதிகளைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியாக செய்திகளில் பார்க்க முடிந்தது. இது இளைஞர்களின் கோபத்தை தணிப்பதற்கான நடவடிக்கை மட்டுமே.
மாறாக போராடுபவர்களை தேசவிரோதிகள் என்றும் பாகிஸ்தான் கைக்கூலிகள் என்றும் சங்பரிவார் கும்பல் மூலம் சமூக வலைதளங்களில் வெறுப்பு பிரச்சாரம் செய்பவர்கள் அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவார்களா என்பது கேள்விக்குறியே.
- நலன்







