ஆம்பூரில் பிரியாணித் திருவிழா மாட்டுக்கறி நீங்கலாக!


ஜாதி தடையில்லை எஸ்.சி எஸ். டி நீங்கலாக என்று திருமண விளம்பரங்கள் பத்திரிகைகளில் வரும். அவை தனியார் விளம்பரங்கள். ஷாதி.காம்கள் ஜாதி காம்புகளாக மாறி மனிதர்களின் மானத்தை வாங்கிக் கொண்டு இருக்கின்றன.அவற்றையும் நாம் வெட்கங்கெட்டுதான் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

இப்போது திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் மாவட்டத்தின் பெருமையை உலகிற்குப் பறைசாற்ற(பறைசாற்ற என்றால்கூட தவறாகிவிடுமோ) திருப்பத்தூர் மாவட்டத்திற்குட்பட்ட ஆம்பூரில் பிரியாணித் திருவிழா நடத்துவதாக அறிவித்து இருக்கிறார். பீப்பைத் தவிர பிற பிரியாணிகள் இடம்பெறும் என அறிவிப்பு செய்திருகிறார். இது எவ்வகையில் நியாயம்? வீட்டில் மாட்டுக்கறி வைத்திருந்தற்காக கொல்லப்படுவதற்கும் இதற்கும் எந்த வேறுபாடும் இல்லை. இதை மாற்றி பீப் இடம்பெற வேண்டும் என எவ்வளவோ வலியுறுத்தியும் தலித்துகளின் குரல்கள் வழக்கமாக கேட்கப்படாத குரல்களாகவே போய்விட்டன.

ஆம்பூரில் மட்டும் ஒரு நாளைக்கு சுமார் 10, 000 கிலோ மாட்டுக்கறி. அந்நகர மக்களால் உணவாக உட்கொள்ளப்படுகிறது.

ஆம்பூரில் மட்டும் ஒரு நாளைக்கு சுமார் 10, 000 கிலோ மாட்டுக்கறி. அந்நகர மக்களால் உணவாக உட்கொள்ளப்படுகிறது. எத்தனையோ கோடி மாத வருமானம் இதனால் வருகிறது. மாட்டுத்தோல்தான் ஆம்பூர் நகர மக்களின் பெரும்பான்மையோருக்கு வேலை வாய்ப்பும் வாழ்வும்.

ஆம்பூரில் இருக்கும் தலித்துகள்,முஸ்லிம்கள், கிறித்தவர்கள், ஜாதி இந்துக்களில் குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையுடையோர் மாட்டுக்கறி சாப்பிடுபவர்கள். அதாவது ஏறக்குறைய 75% மக்கள் மாடு சாப்பிடுவோர். அப்படியிருக்க அவர்களின் உணவு உரிமையைப் பறிப்பது எவ்வகை நியாயம்?

படிக்க:

 கலவரத்தை தூண்ட பன்றி இறைச்சியை ஆயுதமாகும் காவிக் கும்பல்!!

மாட்டுக்கறி தீட்டானது அதையும் இந்தத் திருவிழாவில் சேர்த்தால் பொது மக்கள் வரமாட்டார்கள் என்று என்னும் அதிகாரிகளின் ஜாதிய மனநிலைதான் இந்தப் புறக்கணிப்பிற்குக் காரணம். சொல்லப்போனால் இது உணவுத் தீண்டாமை.
அதுவும் அரசே நடத்தும் தீண்டாமை.

உலகத்தின் பெரும்பான்மை மக்கள் உண்ணும் உணவை ஜாதிய மனநிலையோடு இங்கே புறக்கணிப்பது மிகவும் கேடானது. கோழியையும் ஆட்டையும் தின்பவர்கள் மட்டும் உள்ளே வரலாம் மீதிபேர் வரக்கூடாது என்பது அந்தக் காலத்தில் ‘பிராமனாள் கபே’வில் பிராமனாள் மட்டும் உள்ளே வா எனக் கூறியதைப்போல செயற்கை நுண்ணறிவுக் காலத்தில் மாவட்ட நிர்வாகம் நடந்து கொள்கிறது. மிகுந்த வாசிப்பும் படைப்பு மனமும் கொண்ட ஆட்சியர் எங்ஙனம் இதை நிகழ்த்துகிறார்?

ஆம்பூர் திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் இருக்கும் தலித் அமைப்புகள் வேண்டுகோள் விடுத்தும் பீப் ஸ்டால்களை அமைக்க நிர்வாகம் ஒத்துக்கொள்ளவில்லை.
மாறாக தலித் அமைப்புகள் போராடுவோம் எனச்சொல்லியும் நிர்வாகம் அமைதியாக இருக்கிறது. போராட்டக்காரர்களை வன்முறைகாரர்களாய்ச் சித்தரிக்கும் தந்திரமாக இருக்குமோ என மக்கள் அஞ்சுகின்றனர்.

பீப்பைத் தவிர்த்து நடத்தப்படும் இந்த விழா திராவிட மாடல் ஆட்சிக்கு எதிராக அதிகாரிகள் கட்டமைக்கும் வியூகம் என்பதை திராவிட இயக்கத்தினர் உணர வேண்டும். எனவே அவர்கள் இப்பிரச்சினையில் தலையிட்டு மாட்டுக்கறி பிரியாணி ஸ்டால்களை அரங்கத்தில் வைக்க மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்த வேண்டும்.மாட்டுக்கறி என்பது மக்கள் உரிமை என்பதை மிகவும் வலிமையாக வலியுறுத்துகிறோம்.

பொதுத்தன்மையுள்ளவர்கள் இக்கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும். இக்கோரிக்கை வைக்கப்படும் போது ‘ பன்றிக் கறி பிரியாணி’ வேண்டும் என ஒரு சாரார் கேட்கிறார்கள் என சிண்டு முடிகிறார்கள். இந்த உலகத்தில் பன்றிக்கறி பிரியாணி எங்கிருக்கிறது எனத்தெரியவில்லை. ஒருவேளை அப்படி ஒரு கோரிக்கை வருமாயின் அதனையும் வையுங்கள் என்றே நாம் சொல்லுவோம்.ஆம்பூர்
பிரியாணித்திருவிழாவில் மாட்டுகறி பிரியாணியும் சேர்க்கப்பட வேண்டும். இல்லையென்றால் போராடுவதைத் தவிர வழியில்லை. நியாமுள்ளோரே செவி கொடுங்கள்.

நன்றி

யாழன் ஆதி.
முகநூல் பகிர்வு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here