
பாஜக பாசிச கும்பல் ஆளக்கூடிய அசாம் மாநிலத்தில் மாட்டிறைச்சி மற்றும் உணவிற்கு தடைவிதித்து உத்தரவிட்டார் அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா ஷர்மா.
கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அசாம் மாநில சட்டப்பேரவையில் அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா கால்நடைகளை பாதுகாக்கும் புதிய சட்ட மசோதா ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மசோதாவில் கால்நடைகளை (குறிப்பாக பசுவை) ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இந்த கால்நடை பாதுகாப்பு மசோதா இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள் மற்றும் மாட்டுக்கறி சாப்பிடாத சமூக மக்கள் வாழும் பகுதிகளில் மாட்டிறைச்சி விற்பதை தடை செய்கிறது. அதேபோல் கோவில்கள், வைணவ மடங்கள், போன்ற இந்துமத தலங்களை சுற்றி ஐந்து கிலோமீட்டர் சுற்றளவில் மாட்டிறைச்சி விற்பதை தடை செய்கிறது.
இந்த தடையை மீறுபவர்களுக்கு மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் 3 லட்சம் முதல் 8 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும் எனவும் அந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவிற்கு அசாம் மாநில காங்கிரசும் இஸ்லாமிய அமைப்புகளும் அப்போது கண்டனம் தெரிவித்தன.
இப்போது இந்த தடையை விரிவாக்கி மாநிலம் முழுவதும் மாட்டிறைச்சி விற்பதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. இதனை சட்டமாக்கி அமைச்சரவையை கூட்டி முடிவு எடுத்துள்ளார் ஹிமந்த பிஸ்வா ஷர்மா.
இந்திய அரசியலமைப்பு சட்டம் 21-ல் வழங்கியுள்ள உரிமையில் இந்தியாவில் உள்ள யார் வேண்டுமானாலும் எந்த மாதிரியான உணவையும் சாப்பிடலாம் என்கிறது. ஆனால் இந்த சட்டத்தை கொஞ்சமும் மதிக்காத பாசிச கும்பல் மாட்டிறைச்சி விவகாரத்தில் சர்வாதிகாரமாக நடந்து கொள்கிறது.
படிக்க: மாட்டுக்கறி பெயரில் முதியவரை தாக்கிய கும்பல்! சமூகமயமாகியுள்ள பாசிசத்தின் அறிகுறி!
இந்தியாவை 2014 முதல் ஆண்டு கொண்டிருக்கும் பாசிச பயங்கரவாத சக்திகள் இந்துராஷ்டிர கனவை நிறைவேற்ற இந்தியாவை இந்து பயங்கரவாதத்தின் கீழ் கொண்டுவர அவர்களின் முதல் இலக்காக இஸ்லாமியர்களை டார்கெட் செய்து வேலை செய்து வருகிறார்கள். இந்து – முஸ்லிம்களிடையே கலவரத்தை உருவாக்குவது என்ற நேரடி மோதல் ஒருபுறம் அடுத்து அவர்களது வழிபாட்டு தலங்களை குறி வைத்து தாக்கி அழிப்பது, அவர்களது உணவு உரிமையை பறிப்பது, மாட்டுக்கறி வைத்திருப்பவர்களை அல்லது மாட்டை வியாபாரத்திற்கு கொண்டு செல்பவர்களை பசு குண்டர்களைக் கொண்டு மனிதாபிமானமற்ற வகையில் தாக்கி கொலை செய்வது என சிறுபான்மை மக்களின் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது.
அசாம் மாநிலம் மட்டுமல்ல இந்தியாவிலுள்ள மற்ற மாநிலங்களிலும் இந்து முஸ்லிம் மக்கள் சகோதரத்துவம் பேணி வாழ்கிறார்கள். இந்துக்களோ அல்லது இஸ்லாமியர்களோ யாருடைய உணவு விஷயத்திலும் தலையிடுவதில்லை. மக்கள் மாட்டுகறி வேண்டாம் என்று இதுவரை அரசுக்கு கோரிக்கை எழுப்பியது கூட கிடையாது. ஆனால் அதிகாரத்தில் இருக்கும் இந்துமதவெறி பாசிச கும்பல் நாம் என்ன உணவு சாப்பிட வேண்டும் என்பதை தீர்மானிக்கிறது.
மாட்டிறைச்சி இஸ்லாமியர்களின் உணவா?
மனித இனம் நாகரிக வளர்ச்சி அடைந்ததற்கு இறைச்சி உணவுகளில் கிடைத்த புரதச்சத்துக்களே காரணம் என்கிறது அறிவியல் ஆராய்ச்சி. மனித இனம் விவசாயத்தை கண்டுபிடிக்கும் வரையிலும் மாமிச உணவே பிரதான உணவாக இருந்தது அனைவரும் அறிந்ததே. அப்படி பார்க்கையில் மனித இனத்தில் யாருமே வெஜிடேரியனாக இருக்க வாய்ப்பில்லை.
அதே நேரத்தில் யார் என்ன உணவை தேர்ந்தெடுப்பது என்பது அவரவரின் தனிப்பட்ட விருப்பம். ஆனால் பார்ப்பன கும்பல் மாமிசம் சாப்பிடுபவர்களை ஏதோ தீண்டத் தகாதவர்களைப் போல் பார்ப்பதும், மாமிசம் சாப்பிடக்கூடிய இந்துக்களுக்கு வீடு கொடுக்க மறுப்பதும் இங்குதான் நடக்கிறது.
இந்தியாவில் இஸ்லாமியர்கள் மட்டுமே மாட்டிறைச்சி சாப்பிடுபவர்கள் என்ற தவறான பிம்பத்தை உருவாக்கியது இந்து மதவெறி கும்பல். ஆனால் உண்மை அதுவல்ல. பெரும்பான்மை உழைக்கும் மக்களின் உணவாக மாட்டிறைச்சி உள்ளது. வட மாநிலங்களில் கூட மாட்டிறைச்சி சாப்பிட்டு வந்த இந்துக்கள் இந்த கொலைகார கும்பலுக்கு பயந்து தவிர்த்து வருகிறார்கள்.
படிக்க: ராமராஜ்யம்: மனிதர்கள் மீது கொலைவெறியும் மாடுகளின் மீது கரிசனையும்!
ஒரு காலத்தில் பார்ப்பனர்கள் மாட்டிறைச்சி சாப்பிட்டு வந்தவர்கள் தான் என வரலாறு சொல்கிறது. அவர்களது இட்டுக்கட்டப்பட்ட புராண இதிகாசங்களிலும் ஆதாரங்கள் உண்டு.
வேத காலத்தில் விலங்குகளை பலி கொடுப்பது பொதுவான பழக்கமாக இருந்தது. எந்த பொது யாகத்துக்கும் முன்பு நடத்தப்படும் அக்னதேயா என்ற சடங்கில் பசு கொல்லப்பட வேண்டும் என்பது விதிமுறையாக இருந்தது. மிக முக்கியமான பொதுயாகமான அஸ்வமேதாவில் 600க்கும் மேற்பட்ட விலங்குகளும் பறவைகளும் கொல்லப்பட்டன. அதன் நிறைவு 21 பசுக்களின் பலியால் குறிக்கப்பட்டது. ராஜசூயா, வாஜ்பேயா போன்ற யாகங்களின் முக்கிய பகுதியான கொசாவாவில் மாருதுகளுக்கு ஒரு பசு பலி கொடுக்கப்பட்டது.
“வேத நூல்கள் மற்றும் தர்ம சாஸ்திரங்களில் உணவுக்காக பசுக்கள் கொல்லப்படுவது பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. மாட்டிறைச்சி சாப்பிடுவது வழக்கமான ஒன்றாக இருந்திருக்கிறது. ஒரு பிற்கால வேத நூல் “பசு நிச்சயமாக ஒரு உணவுதான்” என்று எந்த ஐயத்துக்கும் இடமில்லாமல் சொல்கிறது. இன்னொரு வேத நூலில் யாக்ஞவல்க்யர் பிடிவாதமாக பசுவின் மென்மையான இறைச்சியை சாப்பிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. வேதகால மற்றும் வேத காலத்துக்கு பிந்தைய நெறிமுறை நூல்களின் படி, விருந்தாளிக்கு மரியாதை செய்யும் விதமாக ஒரு பசுவை கொல்வது அவசியமானதாக சொல்லப்பட்டிருக்கிறது. இறுதி ஊர்வல சடங்குகளின் ஒரு பகுதியாக பார்ப்பனர்கள் உண்பதற்கு பசுவின் இறைச்சி வழங்கப்பட்டது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. கிடைக்கும் ஆதாரங்களில் சிலவற்றை மட்டுமே நான் குறிப்பிட்டுள்ளேன். பண்டைய இந்திய நூல்கள், பசுவை பலிக்காகவும், உணவுக்காகவும் கொல்வது பற்றி ஏராளமான குறிப்புகளை தருகின்றன” என்கிறார் பண்டைய இந்திய வரலாற்று நிபுணரும் “புனிதப்பசு எனும் கட்டுக்கதை” புத்தகத்தின் ஆசிரியருமான டி. என். ஜா
மாட்டிறைச்சி சாமானிய உழைக்கும் மக்களுக்கு மலிவு விலையில் கிடைக்கக்கூடிய முக்கியமான புரத உணவு. இதனை தடை செய்வதால் இந்துக்கள், இஸ்லாமியர் உட்பட வறுமை நிலையில் உள்ள மக்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். இது பற்றி எந்த கவலையும் பாசிச கும்பலுக்கு கிடையாது. அவர்கள் மீது அவ்வளவு அக்கறை கொண்டவர்கள் இல்லை இந்துமதவெறி பாசிச கும்பல்.
இஸ்லாமியர்களை டார்கெட் செய்வதற்கு மாட்டுக்கறி அரசியலை கடந்த 100 ஆண்டுகளாக செய்து வரும் இந்து மதவெறி கும்பல், பசுமாட்டை இந்துக்கள் புனிதமாக பார்க்கிறார்கள் அதை கொல்வதற்கு அனுமதிக்க மாட்டோம் என்று மதவெறியை விதைக்கிறார்கள். இவர்கள் தான் ஒரு காலத்தில் மாட்டிறைச்சியை வகை வகையாக சமைத்து உண்டவர்கள் என்பதே மேலே பார்த்தோம்.
இந்திய மக்களின் உணவு விஷயத்தில் தலையிட எவருக்கும் உரிமை இல்லை என அரசியல் அமைப்பு சட்டமே கூறும் போது உணவிலும் பாசிச நடைமுறையை கையாளுகிறது பாசிச பாஜக. இதனை பாசிசத்திற்கும் பாயாசத்திற்கும் வித்தியாசம் தெரியாத தற்குறிகளுக்கும் உணர்த்த வேண்டியுள்ளது. மாட்டிறைச்சி அரசியலை முடிவுக்கு கொண்டு வர எதிர்ப்பும் கண்டனமும் மட்டும் போதாது என்பதனை உணர்ந்து முற்போக்கு அமைப்புகளும், ஜனநாயக சக்திகளும் கார்ப்பரேட் காவி கும்பலை எதிர்த்து களமாட வேண்டும். மக்களை பலியிடும் நர வேட்டையர்கள் தான் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கிறார்கள் என்பதை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்த வேண்டும்.
- நந்தன்