தஞ்சையில் 2007 ஆம் ஆண்டுக்குப் பிறகு 18 ஆண்டுகள் கழித்து, ஆகஸ்ட் 22, 2026 அன்று நடத்தப்பட்ட தமிழ் மக்கள் இசை விழா பல்வேறு தடைகளையும், உள்ளடி வேலைகளையும் தகர்த்து வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.
இந்திய ஒன்றியமானது 1947 ஆம் ஆண்டு பிரிட்டன் காலனியாதிக்கத்திலிருந்து விடுதலை பெற்றதாக கூறிக் கொண்டாலும் அவ்வாறு பெற்ற சுதந்திரம் என்பது உண்மையான சுதந்திரம் அல்ல. ஏனென்றால் கீழிருந்து விவசாயிகள், தொழிலாளர்கள் ஒன்றிணைந்து பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் அந்நிய ஏகாதிபத்தியத்தை தூக்கி எறிந்து விட்டு தங்களுக்கான ஒரு அரசியலை, தங்களுக்கான ஒரு அரசை நிறுவிக் கொள்ள வேண்டும் என்ற மார்க்சிய லெனினிய அரசியல் வழிகாட்டுகின்ற கண்ணோட்டத்தில் அடைந்த சுதந்திரம் அல்ல.
இதனால்தான் அது போலியான சுதந்திரம் என்றும், உண்மையாகவே ஒரு சுதந்திரத்திற்காக மீண்டும் ஒரு விடுதலைப் போராட்டத்தை நடத்த வேண்டும்; அதுவும் நிலவுகின்ற அரசு கட்டமைப்பை தகர்த்தெரிகின்ற வகையில் ஆயுதப் போராட்டத்தின் மூலம் அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்ற முன்வைத்தது நக்சல் பாரி இயக்கத்தின் கட்சித் திட்டம்.
1947 ஆம் ஆண்டு போலியான சுதந்திரம் அடைந்த பிறகு 1950- ல் இந்தியா குடியரசு என்ற அறிவிக்கப்பட்ட போது முன்வைக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டம் பிரிட்டன் கொள்ளையர்களிடமிருந்து நாட்டை தரகு முதலாளிகள், நிலப்பிரபுக்கள் ஆகியவர்களின் கூட்டு சர்வாதிகாரத்தின் கீழ் அதிகார மாற்றத்தை கொடுத்துள்ளதே தவிர பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கான அரசியல் அதிகாரம் கிடைக்கவில்லை என்பதை பகிரங்கமாக வெளிப்படுத்தியது மார்க்சிய லெனினிய கட்சி.
நாடாளுமன்ற சரணடைவுப் பாதையின் மூலமாகவே நாட்டின் தலைவிதியையும், நாட்டு மக்களின் வாழ்க்கையையும் தீர்மானிக்க முடியும் என்றும், மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்ற எம்எல்ஏ, எம்பிக்கள் மூலமாக கிடைக்கின்ற அதிகாரத்தை வைத்துக் கொண்டு சோசலிசத்தை நோக்கி முன்னேற முடியும் என்றும் நாடாளுமன்ற இடதுசாரிகள் தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
70களில் இந்த நாடாளுமன்ற இடதுசாரி வழிமுறையானது ஒரு சரணடைவு பாதை என்பதை அம்பலப்படுத்தி நக்சல் பாரி இயக்கம் அரசியல் சட்டத்திற்கு பதிலாக புதிதாக அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்க வேண்டும் என்றும், அந்த அரசியலமைப்புச் சட்டத்தின் உள்ளடக்கம் சுயசார்பு பொருளாதாரக் கொள்கையையும் நாட்டின் இறையாண்மையை பாதுகாக்கின்ற வகையிலான அரசியல் பொருளாதார பண்பாட்டு கொள்கைகள் மற்றும் அயலுறவு கொள்கையையும் கொண்டது என்பதைப் பற்றியும் எடுத்துரைத்தது.
நாடு முழுவதும் நாடாளுமன்ற சரணடைவுப் பாதைக்கு பதிலாக ஆயுதப் போராட்ட அரசியலை முன்வைத்த நக்சல்பாரி இயக்கத்தின் மீது கொடூரமான தாக்குதல்களும், படுகொலைகளும் நிகழ்த்தப்பட்டது என்பதால் தற்காலிகமாக இயக்கம் பின்னடைவை சந்தித்தது. பல்கலைக்கழகங்களிலும், கல்லூரிகளிலும் பணிபுரிந்த பேராசிரியர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் சில அறிவுத்துறையினர் இத்தகைய அடக்குமுறைகளையும், பின்னடைவையும் எதிர்கொள்ள முடியாமல் மார்க்சிய லெனினிய இயக்கத்தில் இருந்து வெளியேறி பாதுகாப்பான வாழ்க்கைக்கு தன்னை அணியமாக்கிக் கொண்டனர்.
படிக்க:
♦ நக்சல்பாரி இயக்கமும் மே மாதமும்
♦ ஆசான் கார்ல் மார்க்ஸ் நினைவைப் போற்றுவோம்…! மார்க்சியம் பயில்வோம்!
அதே காலகட்டத்தில் ஆயுதப் போராட்ட அரசியல் என்பதையே தனிநபர் சாகச நடவடிக்கைகளாகவும், குழு சாகச நடவடிக்கைகளாகவும் மேற்கொள்வது என்ற வழிமுறைகளை மக்கள் யுத்த குழு மற்றும் சில மார்க்சிய லெனினிய இயக்கங்கள் முன்வைத்தது.
இந்த வழிமுறைகள் புதிய ஜனநாயகப் புரட்சியை முன்னெடுத்து செல்லாது என்ற விமர்சனத்துடன் மாற்ற அரசியல் கண்ணோட்டத்தில் மக்கள் திரள் பாதை ஒன்றை முன்வைத்து மக்களை அணி திரட்ட வேண்டும் என்று திட்டம் வகுத்து செயல்பட துவங்கியது புதிய ஜனநாயகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகள்.
பொதுவாக புரட்சி, சமூக மாற்றம், ஆயுதப் போராட்டம் என்ற அரசியல் போர்த் தந்திர வழிமுறைகளை முன்வைத்து பிரச்சாரம் செய்வது மக்களை புரட்சிக்கு கொண்டு வராது என்ற கண்ணோட்டத்தில் போர் தந்திரத்தின் இலக்குகளை அடைவதற்கு பொருத்தமான செயல்தந்திரங்களை வகுத்து புரட்சியை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று அறிவியல் பூர்வமான, புரட்சிகர அரசியல் பாதையை முன்னெடுத்தது புதிய ஜனநாயகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகள்.
இந்த அரசியல் கண்ணோட்டத்தில் 90களில் இருந்து செயல்தந்திர முழக்கத்தின் அடிப்படையில் மக்களை புரட்சிக்கு அணிதிரட்டுவது என்பதில் இந்தியாவிலேயே முன்னணியாக செயல்பட்டு வருகிறது. இந்த அனுபவங்களின் அடிப்படையில் நாடு தழுவிய அளவில் ஒன்றுபட்ட கட்சியை கட்டுவதை நோக்கி படிப்படியாக முன்னேறி வருகிறது புதிய ஜனநாயகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகள்.
90- களில் இருந்து 2020 வரை, அதாவது அதிகாரத்துவ வெறியர்களும், கட்சி கலைப்புவாதிகளும், மார்க்சிய லெனினிய போர்வையில் உலவி வந்த சில குட்டி முதலாளித்துவ பிரிவினரும், மார்க்சிய லெனினிய இயக்கங்களில் தாக்குப் பிடிக்க முடியாமல் வெளியேறிய பிழைப்புவாதிகளும் அமைப்புகளை பிளவுபடுத்துவதற்கு முன்பு வரை அரசியல் செயல் தந்திரத்தின் வழிகாட்டுதல் அடிப்படையில் உருவாக்கப்பட்ட செயல் திட்டத்தின் கீழ் பல்வேறு போராட்டங்களையும், மக்களை ஒன்றிணைக்கின்ற மாநாடுகள்; முற்றுகை போராட்டங்கள் போன்றவற்றின் மூலம் பெரும்பான்மை உழைக்கும் மக்களை மார்க்சிய லெனினிய அரசியலின் கீழ் கொண்டு வந்தது.
செயல் தந்திர அரசியலின் கீழ் தீர்மானிக்கப்பட்ட மைய முழக்கங்களின் அடிப்படையில் நடத்தப்படுகின்ற போராட்டங்கள் அனைத்தும், “அல்லேலுயா பஜனை” வழிமுறை என்றும், மக்களை அணி திரட்டுவதற்கும், புரட்சியை முன்னெடுத்து செல்வதற்கும் தடையாக உள்ளது என்று தனது திருத்தல்வாத, அரசியல் சித்தாந்தமற்ற லும்பன் கண்ணோட்டத்தை வெளிப்படுத்தியது வினவு மற்றும் செங்கனல் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த தலைமை.
படிக்க:
♦ அரசியல் செயல்தந்திர வழியில் மக்களை திரட்ட முடியும் என்பதை மீண்டும் நிரூபித்த மக்கள் அதிகார மாநாடு!
♦ வரம்புள்ள செயல்தந்திரம் : ஐக்கிய முன்னணிகள் கட்டியமைப்பது குறித்து
பின்னர் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விட்டதாகவும் தனித்தனியான தலைமையின் கீழ் செயல்பட போவதாகவும் அறிவித்து கடந்த நான்காண்டுகளாக அமைப்பை நடத்தி வருகின்றனர் என்பதெல்லாம் தமிழக மக்கள் அறிந்த செய்தி தான். ஏற்கனவே கடந்த 40 ஆண்டு காலமாக மக்கள் மத்தியில் புரட்சிகர அரசியலை முன்னெடுத்து பிரபலமான பெயர்களை வைத்துக் கொண்டு மக்களை குழப்பி திரிவதில் இத்தகைய அமைப்புகள் தொடர்ச்சியாக செயல்பட்டு வருவதும், தாங்கள்தான், ‘அக்மார்க் முத்திரை’ குத்தப்பட்ட ஒரிஜினல் என்றெல்லாம் அணிகள் மத்தியில் பேசி ஒப்பேத்திக் கொண்டுள்ளனர்.
இத்தகைய சூழ்நிலையில் 2020 – ல் அமைப்பு பிளவுபட்ட பின்னரும் மார்க்சிய லெனினிய அறிவியல் விஞ்ஞானத்தின் மீது நம்பிக்கையுடன் அரசியல் செயல் தந்திர வழியில் மக்களை திரட்டுகின்ற அரசியலை முன்வைத்து தொடர்ச்சியாக மக்களை அணி திரட்டி வருகிறது புதிய ஜனநாயகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகள்.
“கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்துவோம்! ஜனநாயக கூட்டரசை நிறுவுவோம்!” என்ற அரசியல் செயல் தந்திரத்தின் கீழ் தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்கள்; மாநாடுகள்; கருத்தரங்குகள்; பிரச்சாரங்கள்; வெளியீடுகள் என்ற வகையில் பாசிச எதிர்ப்பு என்பதை முதல் நிபந்தனையாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது புதிய ஜனநாயகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகள்.
இந்த அரசியல் செயல் தந்திர வழியில் நின்று பார்ப்பன பாசிசத்தை முறியடிப்பதற்கு பொருத்தமாக, கீழடி நாகரிகத்தை உயர்த்திப்பிடி! வேத நாகரிகத்தை துரத்தியடி!” என்ற முழக்கத்தை முன்வைத்து கடந்த இரண்டு மாத காலமாக தமிழகத்தில் மட்டுமின்றி புதுச்சேரியிலும் உழைக்கும் மக்களிடமும், தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் பேராசிரியர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட அனைத்து பிரிவு மக்களிடமும் தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்ததன் விளைவாக தஞ்சையில் நடந்த தமிழ் மக்கள் இசை விழா 2007 ஆம் ஆண்டு நடந்ததைப் போலவே பிரம்மாண்டமாக வெற்றிகரமாக நடந்து முடிந்தது என்று அதில் கலந்து கொண்ட பலரும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
சிபிஐ, சிபிஎம், மற்றும் சிபிஐ (எம்எல்) போன்ற நாடாளுமன்ற சரணடைவுப் பாதையில் விழுந்த இடதுசாரிகளை போல பொருளாதாரக் கோரிக்கைகளை முன் வைப்பது; பகுதிப் பிரச்சனைகளை முன்வைத்து மக்களை ஒன்றிணைப்பது; படிப்படியாக தேர்தலில் அவர்களை ஈடுபடுத்தி மாற்று அணியாக வளர்வது; இடதுசாரி முன்னணி ஒன்றின் மூலம் அதிகாரத்தை கைப்பற்றுவது; அதன் மூலம் பாசிச பாஜகவை அதிகாரத்தில் இருந்து அகற்றுவது என்ற “கொக்கு தலையில் வெண்ணையை வைத்து” உருகுகின்ற வரையில் காத்திருக்கக்கூடிய வழிமுறைகளை நிராகரித்து அரசியல் செயல் தந்திரத்தின் கீழ் மக்களை ஒன்று திரட்ட முடியும் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது தமிழ் மக்கள் இசை விழா.
நிலவுகின்ற அரசு கட்டமைப்பை அப்படியே பாதுகாப்பது; அதனை வழிநடத்துகின்ற அரசியலமைப்புச் சட்டத்தை உயர்த்திப் பிடிப்பது; அதன் மூலம் பாசிசத்தை அதிகாரத்திலிருந்து வீழ்த்துவது என்ற அரசியலமைப்பு சட்டத்தின் மூலம் பயனடைகின்ற குட்டி முதலாளி பிரிவினர் முன்வைக்கின்ற, “அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாப்போம்” என்ற சமரச அரசியலையும், பொருளாதாரக் கோரிக்கைகளின் மூலம் மக்களை ஒன்று திரட்ட முடியும் என்று முன்வைக்கப்படுகின்ற சந்தர்ப்பவாத அரசியல் போக்கையும் நிராகரித்து அரசியல் செயல் தந்திர வழியில் மக்களை ஓர் அணியின் கீழ் கொண்டுவர முடியும் என்பதில் நம்பிக்கையுடன் தொடர்ச்சியாக புரட்சிகர பயணத்தை தொடர்கிறது புதிய ஜனநாயகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகள்.
70களில் கட்சித் திட்டத்தை முன்வைத்து பிரச்சாரம் செய்ய துவங்கிய போது அரசியல் அமைப்புச் சட்டத்தின் கேடான மக்கள் விரோத தன்மையை அம்பலப்படுத்த துவங்கிய மார்க்சிய லெனினிய இயக்கங்களில் செயல்பட்ட சிலர் அதிலிருந்து பின்வாங்கி அரசியலமைப்புச் சட்டத்தை உயர்த்தி பிடிப்பது என்று சொல்வதாலேயே அனைத்தும் மாறிவிட்டது என்று கருத முடியாது.
உதாரணமாக, பாசிச பாஜகவை எதிர்த்து நாடு முழுவதும் இந்தியா கூட்டணி என்று ஒரு கூட்டணியை உருவாக்கிய திமுக மற்றும் காங்கிரஸ் ஆகிய இருவரும் தற்போது தனித்தனியாக செயல்படுகின்றனர் என்பது மட்டுமின்றி ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சிப்பதும் ஒருவரை ஒருவர் ஒழித்து கட்டுவதற்கு என்னவெல்லாம் வழிமுறை உள்ளதோ அதை கடைபிடிப்பது என்ற மோசமான வழிமுறைகளில் இறங்கியுள்ளனர் என்பதெல்லாம் அம்பலமாகி நாறிக் கொண்டுள்ளது.
கார்ப்பரேட் காவி பாசிசத்துக்கு எதிராக பாசிச எதிர்ப்பு ஜனநாயக ஐக்கிய முன்னணி என்ற முறையில் ஊசலாடுகின்ற சமரச சக்திகளின் தலைமையை கூட்டு நடவடிக்கைகளின் மூலம் ஒன்றிணைந்து அவர்களை அம்பலப்படுத்துவதும், அவர்களின் தலைமையில் ஒருபோதும் பாசிசத்தை வீழ்த்த முடியாது என்பதை மக்களுக்கு புரிய வைப்பதும், அதன் தொடர்ச்சியாக இடதுசாரிகள் குறிப்பாக பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் புதிய ஜனநாயக புரட்சியை நடத்துவதற்கு முன்பாகவே பாசிசத்தை வீழ்த்துவதற்கு பொருத்தமான வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதைத்தான் புதிய ஜனநாயகம் முன்வைக்கின்றது.
இத்தகைய வழிமுறைகளுக்கு மாற்றாக ஒரே சித்தாந்தத்தின் கீழ், கூட்டுத்துவ தலைமையின் கீழ் ஒன்றிணைக்கப்படாத கோடிக்கணக்கான மக்கள் ஒரு அணியின் கீழ் வந்தால் கூட ஒருபோதும் பாசிசத்திற்கு எந்தவிதமான அச்சுறுத்தலோ, பின்னடைவோ ஏற்படாது. அதுமட்டுமல்ல. பாசிசத்திற்கு சட்டபூர்வ அங்கீகாரத்தை வழங்குகின்ற தற்போது நிலவுகின்ற அரசியலமைப்புச் சட்டத்தை அப்படியே பாதுகாக்க வேண்டும் என்பது பாசிசத்திற்கு துணை போகின்ற கேடான செயலாகும்.
- தமிழ்ச்செல்வன்
புதிய ஜனநாயகம் தினசரி






https://www.facebook.com/share/p/1JoEWpYKqU/
தமிழ் மக்கள் இசை விழா சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் நடந்துள்ள இந்தச் சூழலில் அதன் நேர்மறையான அம்சங்களை மட்டும் எழுதுவது சால/காலப் பொருத்தமாக இருக்கும். எதிர்மறை விமர்சனங்கள் இந்தப் பதிவில் தேவையற்றது என்றே கருதுகிறேன்.