அமெரிக்க மேல்நிலை வல்லரசின் ஒற்றைத் துருவ மேலாதிக்கத்திற்கு எதிராக, நவீன சமூக ஏகாதிபத்தியமான சீனா மற்றும் ரஷ்யா மேல்நிலை வல்லரசு இணைந்து பிரிக்ஸ் கூட்டமைப்பு மூலம் கட்டியமைக்கும் அணிசேர்க்கை தற்போது பல முரண்பாடுகளுடன் பல்துருவ உலக ஒருங்கமைவை நோக்கி நகர்ந்து வருகிறது. 

ருகின்ற செப்டம்பர் மாதம் 12 மற்றும் 13‌ ஆம் தேதிகளில் 18-வது பிரிக்ஸ் மாநாடு இந்தியா தலைமையில் புது டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பிரிக்ஸ் கூட்டமைப்பு மற்றும் ஆதரவு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த கூட்டத்திற்கான தயாரிப்பு தொடர்பான முன்னோட்ட கூட்டம் கடந்த மே மாதம் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் முன்னிலையில் நடைபெற்றது. முன்னோட்ட கூட்டத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் உயர்மட்டப் பிரதிநிதிகள் பங்கேற்று மாநாட்டிற்கான கருப்பொருள் மற்றும் விவாதிக்க வேண்டிய தலைப்புகள் பற்றியும் முடிவெடுத்துள்ளனர்.

மேற்படி மாநாட்டில் உலகளாவியப் பொருளாதாரம் மற்றும் நிதி நிலைத்தன்மை; பருவநிலை மாற்றம்; AI உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்கள் ஏற்படும் சவால்கள்; சர்வதேச பாதுகாப்பு மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான ஒத்துழைப்பு. தெற்குலக நாடுகளின் (Global South) கூட்டாண்மையை வலுப்படுத்துதல் ஆகியவை பற்றி விவாதிக்க பட உள்ளதால் இதற்கான தயாரிப்பு வேலைகளில் மும்முரமாக இயங்கி வருகிறது மாநாட்டு தயாரிப்புக் குழு.

17- வது பிரிக்ஸ் மாநாடு நடக்கும் போது, டாலருக்கு எதிராக போட்டி நாணயத்தை உருவாக்க முயன்றாலோ அல்லது அமெரிக்க டாலரின் மதிப்பைக் குறைக்கும் கொள்கைகளைப் பின்பற்ற கூடாது என மிரட்டிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், 18-வது மாநாடு பற்றி இதுவரை எதுவும் பேசவில்லை. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீது ஏற்பட்டுள்ள அதிருப்தியால் உள்நாட்டு அரசியலில் உள்ள நெருக்கடி மற்றும் ஈரான் மீது நடத்திய போரில் பெரிய அளவில் சரிந்து போன தனது மேலாதிக்கம் என்ற நிலை இருப்பதால் பிரிக்ஸ் மாநாடு பற்றி எதுவும் பேசவில்லை என்றாலும், சரிந்து வரும் அமெரிக்க மேலாதிக்கத்தை மறைக்க வெகு விரைவில் பேசுவார் என்பதில் ஐயமில்லை.

மாஸ்கோ ஒப்பந்தமும்! டாலர் ஆதிக்கத்திற்கு எதிரான முன்னெடுப்பும்!

அமெரிக்க பொருளாதார மேலாதிக்கத்தை கட்டுப்படுத்த அமெரிக்க நாணயமான டாலரின் மேலாதிக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என ரஷ்யாவும், சீனாவும் முடிவு செய்து கடந்த சில ஆண்டுகளாக, தங்கள் நாட்டின் வர்த்தகத்தில் டாலர்களின் பயன்பாட்டை வெகுவாகக் குறைத்து வருகிறது. பிரிக்ஸ் உறுப்பு நாடுகளும் டாலர் ஆதிக்கத்தை குறைக்க வேண்டும் என தொடர்ந்து பேசி வந்தாலும் 2024 ஆம் ஆண்டில் கூட்டமைப்பின் ஐந்து உறுப்பு நாடுகளும் வர்த்தக பயன்பாட்டிற்கு டாலருக்கும் மாற்றாக, தங்களது சொந்த நாட்டு நாணயத்தை பயன்படுத்தும் வகையில் பிரிக்ஸ் பே( BRICKS PAY) திட்டம் என்ற புதிய பரிவர்த்தனை முறையை அறிமுகம் செய்து சொந்த நாணயத்தில் வர்த்தகம் செய்து வந்தன.

இதனால் டாலர் ஆதிக்கம் சரிவை சந்தித்தாலும் ஆதிக்கத்தை முற்றிலுமாக கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் சென்ற‌ ஆண்டு நடந்த 17-வது பிரிக்ஸ் மாநாட்டில் டாலர் ஆதிக்கத்தை முற்றிலுமாக கட்டுப்படுத்த வேண்டும் என எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் டாலர் ஆதிக்கத்திற்கு எதிராக பிரிக்ஸ் கூட்டமைப்பின் நடவடிக்கைகள் 2025 ஆம் ஆண்டு முழுவதும் வேகம் எடுத்தன.

குறிப்பாக, அமெரிக்க டாலரைச் சார்ந்து வர்த்தகம் செய்வதை குறைத்து,சொந்த நாட்டு நாணயங்களைப் (Local currencies) பயன்படுத்துவதை ஊக்குவிப்பது மற்றும் உலக வங்கி போன்ற மேற்கத்திய ஆதிக்கம் நிறைந்த நிதி அமைப்புகளுக்கு வெளியே செயல்படும் பலமுனை உலகப் பொருளாதாரத்தை நிறுவுவதற்கான ஒருங்கிணைந்த முயற்சியை பிரிக்ஸ் நாடுகள் முன்னெடுக்க வேண்டும் என அக்டோபர் 28, 2025 அன்று மாஸ்கோவில் பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் ஒப்பந்தம் செய்து கொண்டன. இதன் விளைவாக பிரிக்ஸ் கூட்டமைப்பு உறுப்பு நாடுகள் தங்களுக்கிடையான வர்த்தகத்தில் டாலர் பயன்பாட்டை வெகுவாக குறைத்து அந்தந்த நாட்டின் நாணயத்தை பயன்படுத்தியும் வருகின்றன.

படிக்க:

 பிரிக்ஸ் நாடுகளை மிரட்டும் ட்ரம்ப்! சரியும் உலக மேலாதிக்கத்தை தக்கவைக்கும் முயற்சி !

 உலக மேலாதிக்கப் போட்டி! அமெரிக்காவுக்கு ஐக்கிய நாடுகள் சபை! சீனாவுக்கு பிரிக்ஸ் கூட்டமைப்பு!

இதனைத் தொடர்ந்து தற்போது ஆசியாவில் பல நாடுகள் தங்களுடைய உள்நாட்டு நாணயத்தில் வர்த்தகம் செய்யும் முடிவுக்கு வந்துள்ளன என்றாலும் ட்ரம்ப் உருவாக்கிய வர்த்தகப் போர் மற்றும் ஈரான் மீதான இராணுவ தாக்குதல் ஆகியவை காரணமாக உலக நாடுகள் டாலரையே இருப்பு நாணயமாக பயன்படுத்தினர். இதனால் அமெரிக்க டாலர் சரிவை சந்தித்தாலும் வர்த்தகத்தில் ஆதிக்கம் செய்யும் நாணயமாக நீடிக்கிறது.

பிரிக்ஸ் கூட்டமைப்பு உறுப்பு நாடுகளின் நிலையும்! ரஷ்ய- சீன ஆதிக்கமும்!

மேல்நிலை வல்லரசான அமெரிக்க தலைமையிலான ஒற்றை துருவ மேலாதிக்கத்திற்கு எதிராக பல்துருவ உலக ஒருங்கமைவை உருவாக்க ஆசிய கண்டத்தில் உள்ள நவீன சமூக ஏகாதிபத்தியமான சீனா மற்றும் இராணுவ மேல்நிலை வல்லரசான ரஷ்யாவும் முனைப்புக் காட்டிவருகின்றன. இதற்காக பிரிக்ஸ் கூட்டமைப்பை பயன்படுத்தியும் வருகின்றன. இந்த கண்ணோட்டத்திலே பிரிக்ஸ் கூட்டமைப்பின் 17- வது உச்சி மாநாட்டில் உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் (IMF), உலக வர்த்தக கழகம், ஐ.நா போன்ற உலகளாவிய நிறுவனங்களில் குறிப்பிட்ட நாடுகளின் ஆதிக்கத்தை தடுப்பதுடன் புதிய உலக நிலைமைகளுக்கு ஏற்றவாறு வளரும் நாடுகளின் குரலை வலுப்படுத்தும் வகையில் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என பிரிக்ஸ் கூட்டமைப்பில் முன்வைத்து வேகமாக செயல்படுத்த தொடங்கியுள்ளன.

அதாவது, பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள சீனா மற்றும் ரஷ்யாவை தவிர்த்து பெரும்பாலான உறுப்பு நாடுகள் வளரும் நாடுகளாக மட்டுமே உள்ளது. இந்த நாடுகள்,அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பொருட்களை உற்பத்தி செய்து கொடுக்கின்ற கூடங்களாக (manufacturing hub) மட்டுமே விளங்குகின்றன என்பதால் கூட்டமைப்பில் சீன- ரஷ்ய நாடுகளின் ஆதிக்கமே இருக்கிறது.

மறுபுறம், பிரிக்ஸ் கூட்டமைப்பில்‌ உள்ள இந்தியாவும், பிரேசிலும் இந்தக் கூட்டமைப்பை பொருளாதார வர்த்தக‌ கூட்டமைப்பாகவே அணுகுகின்றன .இதனால் இவ்விரு நாடுகளும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுடன் விரிவான பொருளாதார, அரசியல் மற்றும் பாதுகாப்பு உறவுகளைத் தொடர்ந்து‌ தக்க வைத்து வருகின்றன. இதுமட்டுமின்றி‌ பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள உறுப்பு நாடுகளுக்கிடையே‌ அரசியல் ஒழுங்கிணைபிலும் சிக்கல் நீடிக்கிறது.

குறிப்பாக, இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான நீண்டகால எல்லைப் பிரச்சினையும், புவிசார் அரசியல் மற்றும் ஆதிக்கப் போட்டியும் ஆழமான அரசியல் ஒருங்கிணைப்பிற்கு பெரும் தடைகளாக நீடிக்கின்றன. சமீபத்திய நகர்வுகளில் மேம்பாடுகள் இருந்தபோதிலும், ஈரான் மற்றும் சவூதி அரேபியா போன்ற நாடுகளுக்கு இடையிலான வரலாற்றுப் பதற்றங்கள், போட்டி பிராந்திய நலன்களைக் கொண்ட நாடுகளை ஒன்றிணைப்பதில் உள்ள சிக்கல்களையும் வெளிப்படுத்துகிறது.

பிரிக்ஸ் நாடுகள் முழுவதும் உள்ள அரசியல் சூழல்கள் கடுமையாக வேறுபடுகின்றன. சில உறுப்பு நாடுகள் ஒப்பீட்டளவில் துடிப்பான குடிமைச் சமூக நடவடிக்கைகளை அனுமதிக்கும் அதே வேளையில், தொழிலாளர் அமைப்புகள், பத்திரிக்கை சுதந்திரம் பறிப்பு, பாசிச நடவடிக்கைகள் மேற்கொள்கின்றன. இந்த வேறுபாடுகள், நீடித்த எல்லை கடந்த அடிமட்ட ஒத்துழைப்பு உருவாவதை தொடர்ந்து சிக்கலாக்குகின்றன.

இதுமட்டுமின்றி, பிரிக்ஸ் கூட்டமைப்பு என்பது மக்களின் நலன்களை பிரதிபலிக்கும் கூட்டமைப்பாக இல்லாமல், அரசாங்கங்களின் கூட்டமைப்பாகவே நீடிக்கிறது. உறுப்பு நாடுகளின் அரசுத் தலைவர்கள் இயல்பாகவே தாங்கள் கடைபிடிக்கும் பாசிச அரசியல் கண்ணோட்டத்தில் அணுகுவது, வர்த்தகம், முதலீடு, எரிசக்திப் பாதுகாப்பு, டிஜிட்டல் உள்கட்டமைப்பு, தொழில்நுட்பத்தை இலாப நோக்கத்திற்கு பயன்படுத்துவது மற்றும் பேரியல் பொருளாதார இறையாண்மை போன்றவற்றை மட்டுமே விவாதிக்க முன்னுரிமை அளிக்கின்றனர். அதிகரித்து வரும் ஏற்றத்தாழ்வு, செல்வப் பகிர்வு, தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் உள்ளூர் ஜனநாயக நிறுவனங்களை வலுப்படுத்துதல் போன்றவை பற்றி விவாதிப்பது இல்லை. அடுத்த மாதம் நடைபெறும் மாநாடுகளிலும் மக்கள் நலனுக்காக விவாதங்கள் இல்லை.

படிக்க:

 அமெரிக்காவின் மேலாதிக்க போர்வெறி: பற்றியெரியும் நாடுகள்! அணையும் அடுப்புகள்!

 சீனா நவீன சமூக ஏகாதிபத்தியம் | புதிய ஜனநாயகம் வெளியீடு

மொத்தத்தில் அமெரிக்க மேல்நிலை வல்லரசின் ஒற்றைத் துருவ மேலாதிக்கத்திற்கு எதிராக, நவீன சமூக ஏகாதிபத்தியமான சீனா மற்றும் ரஷ்யா மேல்நிலை வல்லரசு இணைந்து பிரிக்ஸ் கூட்டமைப்பு மூலம் கட்டியமைக்கும் அணிசேர்க்கை தற்போது பல முரண்பாடுகளுடன் பல்துருவ உலக ஒருங்கமைவை நோக்கி நகர்ந்து வருகிறது.

அமெரிக்க ஒற்றை‌ துருவ மேலாதிக்கம்‌ அல்லது பல்துருவ மேலாதிக்கம் என எது ஆதிக்கம் செலுத்தினாலும் மக்கள் வாழ்வில் மாற்றங்கள் ஏற்பட போவதில்லை. ஏனெனில் நிலவுகின்ற ஏகாதிபத்திய பொருளாதாரத்தில் நாடுகளின் வளர்ச்சி என்பது முதலாளிகளின் வளர்ச்சியாக தான் இருக்குமே தவிர உழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் உண்மையான வளர்ச்சியாக இருக்காது.

இதற்கு மாற்றாக உழைக்கும் மக்களின் நலன் கொண்ட சோசலிசப் பொருளாதாரத்தில் மட்டுமே மக்களின் உண்மையான வளர்ச்சி இருக்கும். சோசலிச பொருளாதாரத்தை நோக்கிய மாற்றமே தற்போதைய தேவை. இதற்கு பாட்டாளி வர்க்க‌ முகாம் கட்டியமைக்கப்பட வேண்டும். அதே நேரத்தில், ஏகாதிபத்திய நாடுகள் தனது மேலாதிக்கத்தை தக்க வைத்துக் கொள்ளும் பொருட்டு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் சர்வதேச அளவில் ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான முரண்பாடுகளை தீவிரமாக்கி வருகிறது. இதனை சரியாக பயன்படுத்தி அனைத்துலகப் பாட்டாளி வர்க்கப் புரட்சியை முன்னெடுக்க பாட்டாளி வர்க்க முகாம் வேண்டும்.

பாட்டாளி வர்க்க‌ முகாமின் மூலம் அனைத்துலக பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கான பொதுத் திட்டத்தின் அடிப்படையில், ஏகாதிபத்திய நாடுகளிலுள்ள பாட்டாளி வர்க்கத்தின் போராட்டத்துக்கும் காலனி, அரைக்காலனி மற்றும் ஒடுக்கப்பட்ட நாடுகளின் தனிச்சிறப்பான நிலைமைகளையும், அந்நாட்டின் அரசியல்-சமூக வளர்ச்சியின் நிலைமையையும் வர்க்க முரண்பாடுகளையும் கணக்கில் கொண்டு புரட்சிக்கான வழிகாட்டுதலை தரவேண்டும்.

இன்றைய நிலைமையில் உலகெங்கிலும் அப்படி ஒரு பாட்டாளி வர்க்க முகாம் இல்லை. இதனை அமைப்பதற்கு உலகு தழுவிய அளவிலான புரட்சிகர கட்சியும் இல்லை. இருக்கின்ற மார்க்சிய லெனினிய கட்சிகளும் பலவீனமாக உள்ளன. எந்த நாட்டிலும் அவை தீர்மானகரமான சக்தியாக இல்லை. மாறாக இருக்கின்ற குழுக்களும் தங்களுக்குள் விவாதித்து சித்தாந்த ஒற்றுமையை ஏற்படுத்த முடியாமல் சிதறி கிடக்கின்றனர். ஒவ்வொரு நாட்டிலும் உள்ள புரட்சிகர சக்திகள் உலக தழுவிய ஒரு பாட்டாளி வர்க்க முகாமை ஏற்படுத்துவது தங்களது கடமையாக கொண்டு வேலை செய்ய வேண்டும். அதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம்!

  • விஜயன்

புதிய ஜனநாயகம் தினசரி 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here