மக்களின் நிலத்தை எடுத்துக்கொண்டு நிறுவனங்களின் உற்பத்தியை அதிகரிப்பது மட்டும் வளர்ச்சி அல்ல; மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில் உற்பத்தி அமைப்பையே மாற்றுவதுதான் உண்மையான வளர்ச்சி.

ரந்தூர் விமான நிலையத் திட்டத்தை கைவிடுவதாக சட்டப்பேரவையில் அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு முதலில் நன்றி தெரிவிக்க வேண்டும். பல ஆண்டுகளாக தங்களது நிலம், நீர்நிலை, விவசாயம், வாழ்வாதாரம் ஆகியவற்றைப் பாதுகாக்கப் போராடிய பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட கிராம மக்களின் குரலுக்கு இந்த முடிவு ஒரு அங்கீகாரமாக அமைந்துள்ளது.

ஆனால், விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டதுடன் இந்தப் பிரச்சினை முடிந்துவிடவில்லை. பரந்தூர் விமான நிலையத்திற்காக ஏற்கெனவே கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் என்ன ஆகும்? புதிதாக விமான நிலையம் அமைக்க தேர்ந்தெடுக்கப்படும் பகுதியில் பாதிப்புகளைத் தவிர்க்க என்ன செய்யப் போகிறார்கள்?

கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் விவசாயிகளிடம் திரும்ப வேண்டும்

பரந்தூர் விமான நிலையத்திற்காக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. திட்டத்திற்காக மொத்தம் சுமார் 5,746 ஏக்கர் நிலம் தேவைப்படும் எனத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அதில் கணிசமான அளவு நிலம் ஏற்கெனவே அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்திருந்தது. 2026 தொடக்கத்தில் சுமார் 1,500 ஏக்கர் கையகப்படுத்தப்பட்டிருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்போது அந்த விமான நிலையத் திட்டமே கைவிடப்பட்டுவிட்ட நிலையில், அந்த நிலங்களை வேறு தொழில் திட்டங்களுக்குப் பயன்படுத்துவது தொடர்பாக சட்டப்பேரவையில் தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா கூறியிருப்பது புதிய கேள்வியை எழுப்புகிறது. அரசு சட்டப்பேரவையில், அந்த நிலங்களைப் பயன்படுத்தி வேலைவாய்ப்பையும் பொருளாதார வளர்ச்சியையும் உருவாக்கும் மாற்றுத் தொழில் திட்டங்களை ஆராயப்போவதாகத் தெரிவித்துள்ளது.

தவெக அரசிடம் நம்முடைய கேள்வி இதுதான். எந்த நோக்கத்திற்காக மக்களிடமிருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டதோ, அந்த நோக்கமே கைவிடப்பட்ட பிறகு, அதே நிலத்தை வேறு நோக்கத்திற்குப் பயன்படுத்த அரசுக்கு தார்மீக உரிமை உள்ளதா?

2013-ம் ஆண்டின் நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மறு குடியேற்றச் சட்டத்தின் பிரிவு 101, கையகப்படுத்தப்பட்ட நிலம் ஐந்து ஆண்டுகள் பயன்படுத்தப்படாமல் இருந்தால் அசல் உரிமையாளர்கள் அல்லது அவர்களின் சட்ட வாரிசுகளிடம் அல்லது அரசின் Land Bank-க்கு திருப்பி வழங்கும் ஏற்பாட்டைக் கொண்டுள்ளது. பரந்தூர் நிலங்களை வேறு திட்டங்களுக்கு மாற்றுவது தொடர்பாக அரசு முழுமையான சட்ட விளக்கத்தை மக்களுக்கு அளிக்கவில்லை.

விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்தப்பட்ட நிலங்களை முதன்மையாக மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்க வேண்டும். குறிப்பாக பல தலைமுறைகளாக விவசாயம் செய்து வந்த குடும்பங்களின் நிலம் என்றால், ஒரு முறை வழங்கப்பட்ட இழப்பீட்டை மட்டும் வைத்து அந்த நிலத்தின் சமூக மற்றும் பொருளாதார மதிப்பை முடிவு செய்துவிட முடியாது. ஒரு விவசாய நிலம் என்பது வெறும் ஏக்கர் கணக்கிலான சொத்து அல்ல. அது ஒரு குடும்பத்தின் வருமானம்; உணவுப் பாதுகாப்பு; வேலைவாய்ப்பு; சமூகப் பாதுகாப்பு; பல தலைமுறைகளின் உழைப்பின் விளைவு. குறிப்பாக முப்போகம் விவசாயம் நடைபெறும் பகுதிகளில், அந்த நிலத்தின் மதிப்பை சந்தை விலையால் மட்டும் அளவிட முடியாது.

பாதிப்பில்லாத மாற்றுக்கு என்ன செய்யப் போகிறது?

பரந்தூருக்கு மாற்றாக எங்கு விமானநிலையம் அமைக்க போகிறது என்று இதுவரை உறுதியாக அறிவிக்கவில்லை. மீனம்பாக்கம் விமானநிலையத்தையே விரிவுபடுத்தலாம் என்று பேசுகிறார்கள். ஆனால், அது நீண்ட கால நோக்கில் போதுமானதாக இருக்காது. தமிழ்நாட்டில் சென்னை, கோவை, ஓசூர், திருச்சி போன்றவை முக்கிய தொழில்நகரங்களாக இருக்கிறது. முக்கியமான ஏற்றுமதி சென்னையின் மூலம் 1,14,894 மெட்ரிக் டன்னும், திருச்சியில் 6,352 மெட்ரிக் டன்னும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தொழில்வளர்ச்சியை தமிழ்நாடு முழுவதும் பரவலாக்க விழுப்புரம் உள்ளிட்ட பின்தங்கிய பகுதிகளில் ஏற்றுமதிக்கான விமான நிலையங்களை உருவாக்கலாம். ஆனால் சென்னை, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் தொழில் மையத்திலிருந்து தூரம் அதிகரித்தால் cargo logistics செலவு எவ்வளவு உயரும் என முதலாளிகள் மறுப்பார்கள். ஏனென்றால் பரந்தூர் விமானநிலையத் திட்டம் கார்ப்பரேட்டுகளின் வளர்ச்சிக்காக கொண்டு வந்ததே தவிர தமிழ்நாட்டு மக்களின் வளர்ச்சிக்காக அல்ல.

தொழில் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் அல்ல நாம்.

தமிழ்நாட்டிற்கு தொழில் வளர்ச்சி அவசியம். தொழில்கள் உருவாக வேண்டும். வேலைவாய்ப்புகள் உருவாக வேண்டும். ஏற்றுமதி வளர வேண்டும். நவீன தொழில்நுட்பம் வர வேண்டும். அதற்குரிய அடிப்படை வசதிகள் உருவாக்கப்பட வேண்டும். தமிழ்நாடு இந்தியாவின் முன்னணி பொருளாதார மாநிலமாக தொடர்ந்து வளர வேண்டும். ஆனால் ஒரு அடிப்படையான கேள்வி இருக்கிறது. தமிழ்நாட்டில் பெரும் முதலீடுகள் வந்துள்ளன என்று அரசு பெருமையாக அறிவிப்பது வழக்கம். முதலீடு வருவது நிச்சயமாக நல்ல விஷயம். ஆனால் முதலீட்டின் அளவு மட்டுமே பொருளாதார வளர்ச்சியின் அளவுகோல் அல்ல. ஒரு நிறுவனம் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்கிறது. அந்த உற்பத்தியின் ஒரு பகுதி உலகச் சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதன் மூலம் நிறுவனத்தின் வருவாய் அதிகரிக்கிறது. ஆனால் அதே நேரத்தில் தொழிலாளி குறைந்த ஊதியத்தில் அதிக நேரம் வேலை செய்ய வேண்டியிருந்தால், அந்த வளர்ச்சி முழுமையான மக்கள் வளர்ச்சியாக மாறிவிட்டது என்று எப்படிக் கூற முடியும்?

முதலீடு – உற்பத்தி – வேலைவாய்ப்பு – உழைப்புக்கேற்ற ஊதியம் – மக்களின் வாங்கும் சக்தி – உள்நாட்டு சந்தை வளர்ச்சி என்ற சுழற்சியை உருவாக்க வேண்டும். அதில் முதலீடு மற்றும் உற்பத்தி மட்டும் இருந்து, தொழிலாளியின் வருமானம் உயரவில்லை என்றால், பொருளாதார வளர்ச்சியின் பலன் சமமாகப் பகிரப்படவில்லை என்பதே பொருள். இதுதான் மோடியின் கார்ப்பரேட் இந்தியாவின் தற்போதைய நிலைமை.

தொழில்நுட்ப வளர்ச்சி யாருக்காக?

இன்றைய தொழில்துறையில் இயந்திரமயமாக்கலும் செயற்கை நுண்ணறிவும் ரோபோட்டிக்ஸும் உற்பத்தித்திறனைப் பெருக்குகின்றன. ஒரு நிறுவனத்தில் 30 தொழிலாளர்கள் செய்து வந்த வேலையை ஒரு நவீன இயந்திரம் செய்துவிடும் நிலை ஏற்பட்டால், அந்தத் தொழில்நுட்ப வளர்ச்சியின் பலன் என்னவாக இருக்க வேண்டும்?

30 தொழிலாளர்களில் 20 பேரை வேலையிலிருந்து நீக்கி, மீதமுள்ள தொழிலாளர்களிடம் அதே அளவு அல்லது இயந்திரத்திற்கு ஈடாக அதிக வேலை வாங்குவதை முதலாளிகள் செய்கிறார்கள். நாம் என்ன சொல்கிறோம், 30 தொழிலாளர்களின் வேலைவாய்ப்பையும் பாதுகாத்து, உற்பத்தி அளவைத் தக்கவைத்துக்கொண்டு வேலை நேரத்தைக் குறைத்து, தொழில்நுட்பத்தின் பலனை தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரமாக மாற்றுவது. நமக்குத் தேவையான வளர்ச்சி இரண்டாவது வகையைச் சேர்ந்ததாக இருக்க வேண்டும்.

ஏனெனில் தொழில்நுட்பத்தின் நோக்கம் மனிதனை வேலையிலிருந்து வெளியேற்றுவது மட்டுமல்ல; மனிதனின் உழைப்புச் சுமையைக் குறைத்து, அவரது வாழ்க்கையை மேம்படுத்துவதுமாக இருக்க வேண்டும். இதனை உறுதி செய்ய மக்கள் திரளின் பெரும் போராட்டமே விடியலைத் தரும்.

ஒரு மாநிலத்தின் பொருளாதாரம் வளர்ந்தது என்பதன் அர்த்தம் அதன் பெரிய நிறுவனங்களின் வருவாய் மட்டும் உயர்வது அல்ல. விவசாயியின் வருமானம் உயர வேண்டும். தொழிலாளியின் ஊதியம் உயர வேண்டும். இளைஞருக்கு தரமான வேலை கிடைக்க வேண்டும். சிறு தொழில்கள் வளர வேண்டும். மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக்க வேண்டும். இயற்கை வளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அப்போதுதான் பொருளாதார வளர்ச்சி சமூக வளர்ச்சியாக மாறும்.

மக்களின் நிலத்தை எடுத்துக்கொண்டு நிறுவனங்களின் உற்பத்தியை அதிகரிப்பது மட்டும் வளர்ச்சி அல்ல; மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில் உற்பத்தி அமைப்பையே மாற்றுவதுதான் உண்மையான வளர்ச்சி.

பரந்தூரில் கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் வேறு ஒரு தொழில் திட்டத்திற்காக மீண்டும் பயன்படுத்தப்படாமல், சட்டத்தின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி, நியாயமான முறையில் விவசாயிகளிடம் திருப்பி ஒப்படைப்பதே மக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தும்.

கார்ப்பரேட்டுகளின் பொருளாதாரம் மட்டும் வளர்வது வளர்ச்சி அல்ல; அந்த வளர்ச்சியில் விவசாயிக்கும், தொழிலாளிக்கும், இளைஞருக்கும், உள்ளூர் சமூகத்திற்கும் உரிய பங்கு கிடைப்பதே மக்கள் சார்ந்த பொருளாதார வளர்ச்சி. அது தற்பொதுள்ள கட்டமைப்பில் தானாக நடக்க வாய்ப்பில்லை. மாற்றுப் பொருளாதார கட்டமைப்பே அதனை உருவாக்கும்.

  • நலன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here