தீண்டாமை ஒரு பாவச் செயல் என்றும், தீண்டாமை ஒரு குற்றம் என்றும் இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம் துவங்கி பாடநூல்கள் வரை பக்கம் பக்கமாக வகுப்பு நடத்தப்படுகிறது.
டாக்டர் அம்பேத்கர் எழுதிய அரசியலமைப்புச் சட்டம் இந்த நாட்டின் பூர்வகுடி மக்களான பழங்குடிகள் மற்றும் பட்டியலின மக்கள் மீதான ஒடுக்குமுறைகளை தடுப்பதற்கு போதுமான வழிமுறைகளை முன் வைக்கவில்லை என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டு வருகிறது.
அம்பேத்கருக்கு பிந்தைய தலித் இயக்கங்கள் அனைத்தும் நிறுவனமயமாகி ஆளும் வர்க்கத்துடன் சமரசம் பேசிக்கொண்டும், அதிகாரமிக்க பதவிகளை அடைவதற்கு போட்டி போட்டுக் கொண்டும், தலித்துகளின் பெயரால் கட்சிகளை நடத்திக் கொண்டு பெரும்பான்மை தலித்துகளுக்கு துரோகம் இழைத்து வருகின்றனர்.
இந்தியாவில் நீண்ட காலமாக நிலவி வருகின்ற சாதிய, வர்ணாசிரம கட்டமைப்பு படிநிலையில் ஆகக் கேடாக அடக்கி ஒடுக்கப்பட்டுள்ள பெரும்பான்மை மக்களான பட்டியலின மக்கள் மற்றும் பழங்குடிகள் மீது சட்டபூர்வமாகவே நடத்தி வருகின்ற கொடுமைகளும், கொடூரங்களும், கொலை வெறியாட்டங்களும் எண்ணிலடங்காதவை.
அரசியலமைப்புச் சட்டத்தை கையாள்கிறவர்களைப் பொறுத்து அது நேர்மையாக செயல்படும் என்று அரசியலமைப்புச் சட்டத்தின் ஆதரவாளர்கள் தொடர்ச்சியாக நம்பிக்கையை வெளியிட்டு வருகின்றனர்.
ஆனால் பிறப்பால் பட்டியலினத்தைச் சார்ந்தவர்கள் மற்றும் பழங்குடி மக்கள் நாட்டின் உயர் பதவிகளுக்கு சென்றால் கூட அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள சாதி- தீண்டாமை வன்கொடுமைகள் ஒரு சிறிதளவு கூட மாறவில்லை என்பதை சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான, ஏறக்குறைய 40 ஆண்டு காலம் அந்த அமைப்பின் தலைவராக செயல்பட்டு வரும் மல்லிகார்ஜுன கார்கே மீது நிகழ்த்தப்பட்ட வன்கொடுமை நிரூபிக்கின்றது.
உத்தரகாண்ட் மாநிலம், ஹல்த்வானி நகரில் கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. மல்லிகார்ஜுன் கார்கே அவர்கள் பங்கேற்ற மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மக்கள் மத்தியில் கிடைத்த பேராதரவைக் கண்டு பொறாமையடைந்த ஆர் எஸ் எஸ் பாஜக பாசிச குண்டர் படையினர், திரு.மல்லிகார்ஜுன் கார்கே அவர்கள் எளிய சமூகப் பின்னணியில் இருந்து அதாவது பட்டியல் சமூகத்தில் இருந்து உயர்ந்தவர் என்பதைக் காரணமாகக் கொண்டு, அவர் பங்கேற்றதால் அந்த இடம் “தீட்டுப்பட்டுவிட்டது” என்று கூறி, கங்கை நீரைத் தெளித்து அந்த இடத்தை “சுத்திகரிப்பு” செய்துள்ளனர்.
இது பற்றி அம்பேத்கரியத்தை உள்வாங்கி செயல்படுகின்ற இந்தியாவின் மூத்த இடதுசாரி செயல்பாட்டாளரும், போராளியுமான ஆனந்த் டெல்தும்டே இந்த கொடூரமான ஒடுக்கு முறையை பற்றி கீழ் வருகின்ற வகையில் தனது கருத்துக்களை முன்வைத்துள்ளார்.
“இந்திய ஒன்றியத்தின் உயர் பொறுப்புகளில் பதவி வகித்த பிறப்பால் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் இழிவுபடுத்தப்பட்ட சம்பவங்களை நினைவுபடுத்தி, “இரண்டு ஜனாதிபதி தொடர்பான சம்பவங்கள் இந்தப் பதிவேட்டில் இடம்பெறுகின்றன. தலித்தான ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் , கோயில் வழியாகப் பயணம் மேற்கொண்டபோது, கோயில் பணியாளர்கள் அவரை அவமரியாதையாக நடத்தியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
படிக்க:
♦ சங்கி ரவி அவர்களே! மதச்சார்பின்மை வேண்டாம்! சாதி- தீண்டாமைதான் வேண்டுமா?
இதை முன்னாள் பாஜக எம்.பி. சாவித்ரிபாய் பூலே, ஒரு தலித் நாட்டுத் தலைவருக்கு இழைக்கப்பட்ட அவமரியாதை என்று குறிப்பிட்டார். இருப்பினும், குறிப்பாக ஒரு தலித் ஜனாதிபதிக்கு இது ஏன் நடந்தது என்ற கேள்வி நியாயமானதாகவே இருந்தாலும், இதை தீண்டாமை என்று கருதுவதை விட, ஒரு நெறிமுறை மீறலாகவும் கருதலாம் என்றும் தெரிவித்திருந்தார்.
அதுபோலவே 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற புதிய நாடாளுமன்றக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவிலிருந்தும் பின்னர் 2022-ஆம் ஆண்டு ஜூலை மாதம் புதிய கட்டிடத்தில் நடைபெற்ற தேசிய சின்னம் திறப்பு விழாவிலிருந்தும் கோவிந்த் வேண்டுமென்றே ஒதுக்கி வைக்கப்பட்டார் என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்தன . இதேபோன்ற குற்றச்சாட்டுகள் 2023-ஆம் ஆண்டு நடைபெறவிருந்த புதிய நாடாளுமன்றக் கட்டிடத் திறப்பு விழாவிலிருந்து ஜனாதிபதி திரௌபதி முர்மு ஒதுக்கி வைக்கப்பட்டார் என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.” என்று சம்பவங்களைத் தொகுத்து முன் வைக்கின்றார்.
உள்ளூரில் கிராம பஞ்சாயத்து தலைவராக தேர்வு செய்யப்படுகின்ற தலித்துகள் முதல் மாவட்ட பொறுப்பில் உள்ள கட்சி பிரமுகர்கள், அதிகார வர்க்கத்தினர், மாநில ஒன்றிய அளவில் பொறுப்பில் உள்ள அரசியல் கட்சி பிரமுகர்கள் அதிகார வர்க்கத்தினர் வரை பல்வேறு சந்தர்ப்பங்களில் பிறப்பால் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக கொடூரமாகவும் இழிவாகவும் நடத்தப்படுகின்றனர் என்பது தொடர்ச்சியாக அம்பலப்பட்டு வருகிறது.
இந்திய ஒன்றியத்தின் அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டு 75 ஆண்டுகள் கடந்த பின்னரும் நாட்டின் பூர்வ குடிமக்கள் மீது நடத்தப்படுகின்ற இத்தகைய கொடூரம் வன்கொடுமை குற்றங்கள் எதுவும் குறைந்தபாடில்லை . எனினும் அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் அதிகாரத்தையும் அரசியல் கட்சிகளின் பொறுப்புகளையும் பெற்றுள்ள பழங்குடிகள் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள் அல்லாத பிற மேல் சாதியினர் அனைவரும் மீண்டும் மீண்டும் அரசியல் அமைப்பு சட்டத்தின் மீது நம்பிக்கை கொண்டு அதற்கு விசுவாசமாக செயல்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.
குறிப்பாக rss பாஜக அதிகாரத்திற்கு வந்த பிறகு நிலவுகின்ற அரசியலமைப்புச் சட்டத்தை கிழித்தெறிந்து விட்டு அதற்கு பதிலாக மனுதர்மத்தை அரசியலமைப்பு சட்டமாக கொண்டு வரப் போகின்றோம் என்று வெறி கூச்சல் போட்டு வருகின்ற சூழலில் டாக்டர் அம்பேத்கர் எழுதிய அரசியலமைப்புச் சட்டம் அதன் மீது கேள்விகள் எழுப்புவது ஆர்.எஸ்.எஸ்-க்கு சாதகமாக போய்விடும் என்ற மொன்னையான வாதங்களை முன்வைத்து பெரும்பான்மை மக்களை ஏற்கனவே நிலவுகின்ற சமூக கட்டமைப்பை ஏற்றுக்கொண்டு அடங்கி ஒடுங்கி வாழ வேண்டும் என்று உபதேசிக்கின்றனர்.
இத்தகைய உபதேசங்களை மறுக்கின்ற வகையில், “கிராமப்புற இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலித் பிரதிநிதிகள் மற்றும் சர்பஞ்ச் தலைவர்களுக்கு எதிரான தீண்டாமைச் சம்பவங்கள் உண்மையில் ஏராளம். தேசிய ஊடகங்களுக்கு எட்டும் ஒரு சில சம்பவங்களை விட இவை மிக அதிக எண்ணிக்கையில் உள்ளன. தனித்தனி கிணறுகள் மற்றும் சுடுகாடுகள், கோயில் நுழைவுக் கட்டுப்பாடுகள், கலப்புத் திருமணங்களுக்கான சமூகப் புறக்கணிப்புகள், மற்றும் ஒரு தலித் மணமகன் கிராமத்தின் வழியாகக் குதிரையில் செல்வது போன்ற ஒரு சிறிய விஷயத்திற்காகக் கூட நிகழும் வன்முறைப் பழிவாங்கல் ஆகியவைதான் கிராமப்புற இந்தியாவின் அன்றாட யதார்த்தம்.” என்று காரி உமிழ்கிறார் ஆனந்த் டெல்தும்டே.
படிக்க:
♦ ஆனந்த் டெல்டும்டேவின் சிறை வாழ்வின் இரண்டாண்டு நிறைவு: அம்பேத்கர் பேத்தியின் உருக்கமான கடிதம்!
♦ இந்து ராஜ்ஜியம் இந்தியாவிற்கு மிகப்பெரிய பேரழிவாக இருக்கும் என்றார் அம்பேத்கர்: ஆனந்த் டெல்டும்ப்டே
ஏறக்குறைய 75 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியாவில் ஆக கேடாக ஒடுக்கப்பட்டு வரும் பட்டியலில் தலித்துகள் மற்றும் பழங்குடிகள் மீதான வன்கொடுமை வெறியாட்டங்கள் குறித்து கீழ்கண்ட அம்சங்களையும் சுட்டிக்காட்டுகின்றார்.
“புள்ளிவிவரங்கள் இதை உறுதிப்படுத்துகின்றன. தற்போதைய ஆட்சியானது தனக்குச் சங்கடமான தரவுகளை மறைக்கும் போக்கைக் கொண்டிருந்தபோதிலும், 2024-ஆம் ஆண்டுக்கான சமீபத்திய தேசிய குற்றப் பதிவுப் பணியகத்தின் (NCRB) அறிக்கை, அந்த ஆண்டில் தலித்துகளுக்கு எதிரான குற்றங்கள் 55,000-ஐத் தாண்டியுள்ளதாகப் பதிவு செய்துள்ளது – அதாவது, ஒவ்வொரு நாளும் சராசரியாக ஏறக்குறைய மூன்று தலித்துகள் கொலை செய்யப்படுவதும், பன்னிரண்டு தலித் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதும் நிகழ்ந்துள்ளன” என்கிறார் ஆனந்த்.
இந்தியாவில் மார்க்சிய லெனினிய இயக்கங்கள் தோன்றிய காலகட்டத்தில் இருந்து நாட்டின் பெரும்பான்மை மக்களில் முக்கிய பங்களிப்பை செலுத்துகின்ற பட்டியல் இன மக்கள் மற்றும் பழங்குடிகளின் விடுதலைக்காகவும் வாழ்க்கை தேவைகளுக்காகவும் புரட்சிகர சமூக மாற்றம் ஒன்றுதான் தீர்வு என்பதை முன்வைத்து போராடி வருகின்றனர்.
ஆர் எஸ் எஸ் பாஜக அதிகாரத்துக்கு வந்தது முதல் கம்யூனிச சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்டு செயல்படுபவர்களை படிப்படியாக ஒழித்துக் கட்டுவோம் என்ற நிகழ்ச்சி நிரல் அடிப்படையில் முதல் கட்டமாக மாவோயிஸ்டுகளை கொடூரமாக ஒடுக்கி உள்ளனர். அடுத்து அர்பன் நக்சல்கள் என்ற பெயரிலும், திமாகி நக்சல்கள் என்ற பெயரிலும் இடதுசாரி அமைப்புகளை முழுமையாக ஒழித்துக் காட்டுகின்ற செயல் திட்டத்துடன் செயல்பட்டு வருகின்றனர்.
இத்தகைய சூழலில் நிலவுகின்ற அரசகட்டமைப்பையும் அதனை வழிநடத்துகின்ற அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும் நம்பிக்கை வைக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்வது, மருத்துவம் செய்வதன் மூலம் பார்ப்பன கொடுங்கோன்மையின் கீழ் சூத்திர, பஞ்சம அடிமைகளாக வாழ வேண்டும் என்பதை வேறு வார்த்தைகளில் நிலைநாட்ட முயற்சிக்கின்றனர் என்பதை பரவலான பிரச்சாரமாக கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான் இன்றைய காலகட்டத்தில் அவசியமாக உள்ளது.
மருது பாண்டியன்.








சட்டமும் அரசமைப்பும் தீண்டாமையை ஒழிக்குமா? பண்பாட்டுப் புரட்சியின் அவசியமும் சாதிய யதார்த்தமும்!
தோழர் மருது பாண்டியன் அவர்கள் முன்வைத்துள்ள “சாதி தீண்டாமை வன்கொடுமைகளை சட்டத்தின் மூலம் ஒழிக்க முடியாது” என்ற கட்டுரை, இந்தியச் சமூகத்தின் மிக முக்கியமான புண்ணைத் தொட்டுக் காட்டியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திரு. மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்றக் கூட்டத்திற்குப் பிறகு, ஆர்.எஸ்.எஸ்-பாஜக பாசிச கும்பல் “தீட்டு கழிக்கும்” நிகழ்வில் ஈடுபட்டது முதல், நாட்டின் உச்சபட்சப் பதவிகளான குடியரசுத் தலைவர் பதவியில் அமர்த்தப்பட்ட ராம்நாத் கோவிந்த், திரௌபதி முர்மு ஆகியோர் புறக்கணிக்கப்பட்டது வரை ஆனந்த் டெல்தும்டே சுட்டிக்காட்டும் சான்றுகள் அனைத்தும் அரசமைப்புச் சட்டத்தின் எல்லைகளையும் அதன் பலவீனங்களையும் அம்பலப்படுத்துகின்றன.
மருது பாண்டியனின் இந்தக் கருத்துகளோடு உடன்படும் அதேவேளையில், இதன் தொடர்ச்சியாக நாம் மேலும் சில ஆழமான வரலாற்று மற்றும் சமூகப் பரிமாணங்களை விவாதத்திற்கு உட்படுத்த வேண்டியுள்ளது.
1. அரசமைப்புச் சட்டமும் பார்ப்பன மேலாதிக்கமும்: அம்பேத்கரும் பெரியாரும் கண்ட உண்மை!
சட்டங்கள் இயற்றப்பட்டுவிட்டதாலேயே சமூகத்தில் ஆழமாக வேரூன்றியுள்ள தீண்டாமையும் சாதிய வன்கொடுமைகளும் ஒழிந்துவிடாது என்ற மருது பாண்டியனின் கூற்று முற்றிலும் உண்மையானது.
இந்திய அரசமைப்புச் சட்டம் என்பது பார்ப்பன மேலாதிக்கத்தையும், ஏற்கெனவே நிலவி வந்த நிலப்பிரபுத்துவ சமூகக் கட்டமைப்பையும் பாதுகாக்கும் வகையிலேயே பெருமளவுக்கு நெகிழ்வுத் தன்மையோடு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால்தான், அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டுப் பல ஆண்டுகள் கடந்த பின்னரும் கூட, ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான வன்முறைகள் தொடர்கதையாகவே இருக்கின்றன.
இந்த அரசமைப்புச் சட்டம் ஒடுக்கப்பட்ட மக்களை முழுமையாகப் பாதுகாக்காது என்பதையும், அது ஆளும் வர்க்கத்தின் நலனுக்கான ஒரு கருவியாக மட்டுமே செயல்படும் என்பதையும் அன்றே தீர்க்கதரிசனத்துடன் உணர்ந்ததால்தான்:
அண்ணல் அம்பேத்கர்: “இந்த அரசமைப்புச் சட்டத்தை முதன்முதலில் எரிப்பவன் நானாகத்தான் இருப்பேன்” என்று நாடாளுமன்றத்திலேயே பகிரங்கமாக அறிவித்தார்.
தந்தை பெரியார்: இந்த அரசமைப்புச் சட்டம் சாதியையும், பிராமணிய மேலாதிக்கத்தையும் பாதுகாக்கிறது என்று கூறி, அதை பகிரங்கமாகக் கொளுத்தும் போராட்டத்தை நடத்தினார்.
எனவே, இந்த அரசமைப்புச் சட்டத்தின் மீது அளப்பரிய நம்பிக்கை வைப்பதும், இதைக் கொண்டு சாதியை ஒழித்துவிடலாம் என்று பிரச்சாரம் செய்வதும் மக்களைத் தங்களின் உண்மையான விடுதலைப் பாதையிலிருந்து திசைதிருப்பும் செயலாகும்.
2. பழங்குடியினரும் பட்டியல் சாதியினரும்: ஒப்பீட்டு யதார்த்தம்
அரசமைப்புச் சட்டத்தில் “பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர்” (SC/ST) என்று ஒன்றாகக் இணைக்கப்பட்டிருந்தாலும், வரலாற்றுப் பூர்வமாகவும் சமூகவியல் பூர்வமாகவும் இவ்விரு பிரிவினரும் சந்திக்கின்ற சிக்கல்கள் வேறு வேறானவை.
பழங்குடியினரின் நிலை: பழங்குடியின மக்கள் பிரதானமாக நிலம் பறிப்பு, கனிமக் கொள்ளை, காடுகளை விட்டு வெளியேற்றப்படுதல் மற்றும் அரசு வன்முறை போன்ற கட்டமைப்புச் சுரண்டல்களைச் சந்திக்கின்றனர். அவர்கள் தீண்டத்தக்கவர்களாகவும், சமூகத்திலிருந்து தனித்துத் தங்களது சொந்த பண்பாட்டு வாழ்வைக் கொண்டவர்களாகவும் இருப்பதால், ஒப்பீட்டு அளவில் அவர்கள் சந்திக்கும் அன்றாடச் சமூகத் பாகுபாடுகள் வேறு வகையானவை.
பட்டியல் சாதியினரின் நிலை: ஆனால், பட்டியல் சாதியினர் சந்திக்கும் தீண்டாமைக் கொடுமை என்பது கோடூரமானது. ஊருக்கு வெளியே குடியமர்த்தப்படுவது முதல் இரட்டைத் டம்ளர் முறை, சுடுகாட்டுப் பாதை மறுப்பு, கோயில் நுழைவுத் தடை, பொதுக் கிணற்றில் நீர் எடுக்கத் தடை என மனிதத் தன்மையற்ற அன்றாடத் தீண்டாமைக் கொடுமைகளையும் வன்கொடுமைகளையும் பட்டியல் சாதியினரே மிகக் கொடூரமாகச் சந்திக்கின்றனர்.
எனவே, இந்த இரு பிரிவினரின் சமூக யதார்த்தத்தைப் பகுத்துப்பார்ப்பது சாதியமைப்பைப் புரிந்துகொள்ள மிகவும் அவசியமானதாகும்.
3. பண்பாட்டு மாற்றம் இல்லாமல் சட்டங்களால் தீர்வில்லை!
தீண்டாமையும் சாதியச் சிந்தனையும் வெறும் சட்டப் புத்தகங்களில் இல்லை; அவை மக்களின் அன்றாட வாழ்வில், குடும்ப அமைப்பில், சடங்குகளில், நம்பிக்கைகளில் என ஒரு பண்பாடாகவே உறைந்து போயுள்ளன.
சட்டங்கள் என்பது குற்றங்கள் நடந்த பிறகு நடவடிக்கை எடுப்பதற்கான ஒரு தற்காலிகக் கருவியே தவிர, குற்றச் சிந்தனையை உருவாக்கும் பண்பாட்ட மூல வேரை அறுக்கும் கருவி அல்ல.
பண்பாட்டு மாற்றம், மூடநம்பிக்கை எதிர்ப்பு, சாதியச் சடங்குகளைப் புறக்கணித்தல் மற்றும் சாதி மறுப்புப் புரட்சிகர உணர்வு ஆகியவை சமூகத்தில் உருவாகாத வரை, எத்தனை கடுமையான சட்டங்களைக் கொண்டு வந்தாலும் தீண்டாமையை ஒழிக்க முடியாது.
உண்மையில், வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் போன்ற சட்டங்கள் சில தலித் பிழைப்புவாதிகளுக்கும், ஆளும் வர்க்கத்துடன் சமரசம் பேசும் அரசியல் தரகர்களுக்கும் தங்களின் சொந்த நலன்களுக்காகப் பயன்படுகிறதே ஒழிய, கிராமப்புறங்களில் அன்றாடம் வன்கொடுமைகளைச் சந்திக்கும் அடித்தட்டு மக்களுக்குப் பெரிய அளவில் பயனளிப்பதில்லை.
4. ‘தலித்’ என்ற அடையாளப் பொதுமைப்படுத்தலின் முரண்பாடு
ஒடுக்கப்பட்ட மக்களைக் குறிக்க ‘தலித்’ என்ற சொல்லைப் பொதுப் பெயராகப் பயன்படுத்துவதில் எனக்கு உடன்பாடு இல்லை.
காரணம், ‘தலித்’ என்ற ஒற்றைக் குடையின் கீழ் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களையும் கொண்டு வரும்போது, இந்தியச் சமூகத்தில் நிலவும் படிநிலைச் சாதி அமைப்பின் (Graduated Inequality) நுட்பமான முரண்பாடுகள் மறைக்கப்பட்டுவிடுகின்றன.
அண்ணல் அம்பேத்கர் சுட்டிக்காட்டியது போல, சாதியமைப்பு என்பது வெறும் மேலோர்-கீழோர் என்ற பிளவு மட்டுமல்ல; அது “ஏற்றத்தாழ்வுகளின் படிநிலை அமைப்பு” (Graduated Inequality). இதில் ஒடுக்கப்பட்ட சாதியினருக்குள்ளேயே ஒருவருக்குப் கீழ் ஒருவர் என்ற சமனற்ற நிலை நிலவுகிறது. ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்குள்ளேயே நிலவும் அக-முரண்பாடுகளையும், சாதியப் படிநிலைகளையும் மறைத்துவிட்டு, ‘தலித்’ என்ற பொதுவான அடையாளத்தைப் பூசுவது உண்மையான சாதி ஒழிப்புப் போராட்டத்திற்கு வலுசேர்க்காது.
முடிவுரை
தோழர் மருது பாண்டியன் சுட்டிக்காட்டியது போல, ஆளும் வர்க்கமும் அதன் அரசமைப்பும் சாதியமைப்பைக் காப்பாற்றவே முற்படுகின்றன. அரசமைப்புச் சட்டத்தின் மீதான போலி நம்பிக்கையை உடைப்பதும், சாதியைப் பண்பாட்டுப் பூர்வமாகத் தகர்ப்பதற்கான புரட்சிகரப் பணிகளை மேற்கொள்வதுமே இன்றைய முதன்மையான தேவையாகும்.
வெறும் சட்டப் பிழைப்புவாதங்களையும், நிறுவனமயமாக்கப்பட்ட அரசியல் சமரசங்களையும் நிராகரித்து, தீவிரமான பண்பாட்டு மறுமலர்ச்சி மற்றும் புரட்சிகரச் சமூக மாற்றத்தின் மூலமாக மட்டுமே சாதி-தீண்டாமைக் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்!
ஊரான்