நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 682 ஆக உயர்ந்துள்ளது. விபத்து நடந்து நான்காவது நாளாகியும் மீட்பு பணிகள் முடிந்தபாடில்லை. 4000க்கும் மேற்பட்டோரை காணவில்லை. என்ன நடந்தது?
நேபாள நாட்டில் உள்ள இமயமலை சிகரத்தில் உள்ள பனிப்பாளங்கள் ஆக. 26ல் உடைந்து பெரும் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தி உள்ளது. லாங் டாங் லிருங் சிகரத்தில் ஏற்பட்ட இந்த உடைப்பு போடோகோசி, திரிசூலி, நாராயணி நதிகளில் பெரும் வெள்ளப்பெருக்கை தூண்டி உள்ளது. இதன் மூலம் நேபாளத்தின் ரசுவா, தாதிங், நுவாகோட் உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.
நேபாளம் சந்தித்துள்ள மிகப் பெரும் வெள்ளப் பெரழிவாக இது வரலாற்றில் பதிவாகியுள்ளது தற்போது 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் இரவு பகலாக மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். குடிநீர் பாட்டில்களும் விநியோகிக்கப்படுகின்றன. ஹெலிகாப்டர்கள் மூலமும் மீட்பு பணிகள் நடந்து வருகிறது.
குறிப்பாக ரசுவா மற்றும் நுவாகோட்டில் உள்ள நீர்மின் சுரங்கங்களுக்குள் தொழிலாளர்கள் சிக்கி உள்ளனர். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக உலக நாடுகள் ஆதரவு கரம் நீட்டி வருகின்றன. இந்தியாவும் கூட எத்தகைய உதவி தேவை என்பதை மதிப்பிட ஒரு குழுவை விமானத்தின் மூலம் நேபாளத்திற்கு அனுப்பி உள்ளது.
நேபாளத்தில் பெரும்பாலான பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளை சென்றடையவே தற்காலிக பாலங்கள் அவசியமாகின்றன. அதற்கான கருவிகளையும் இந்தியா வழங்கியுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரஞ்சித் ஜெயஸ்வால் கூறியுள்ளார். இதுவரை இந்தியாவிலிருந்து 57 டன் நிவாரண பொருட்களும் அனுப்பப்பட்டுள்ளன.
திடீர் வெள்ளப்பெருக்கு எப்படி நடந்தது?
இதுகுறித்து சுற்றுச்சூழல் அமைப்புகளும், இமயமலையை பங்கு போட்டுக் கொண்டிருக்கும் இந்தியா, சீனா, நேபாளம், பூட்டான் உள்ளிட்ட நாடுகளின் அரசுகளும் பல்வேறு விளக்கங்களை தந்துள்ளது. அதில் முக்கியமானது இமயமலையின் மேல் அடுக்குகளில் உருவாகி வரும் பனிமலை ஏரிகள் குறித்ததாக உள்ளன.
புவி வெப்பமயமாவதால் பனிச்சிகரங்கள் வேகமாக உருகுகின்றன. அப்படி உருகி வரும் தண்ணீரானது ஆங்காங்கே பனிக்கட்டிகளால் தடைப்பட்டு பனிக்கட்டிகளால் ஆன சிறிய அணைகளை, ஏரிகளைப் போல மாற்றம் பெறுகின்றன. இந்த ஏரிகளின் பனிச்சுவர்கள் உறுதியடையாத படி இமயமலையில் இரவு நேர வெப்பம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு செல்கிறது. அதனால் இரவில் பனி மேலும் கடினப்படும் பனிச்சுவர்கள் உறுதியையும் செயல்பாடு தடுக்கப்பட்டு வலுக்குன்றுகிறது.

இப்படி பலவீனமான பனிப்பாளங்களால் தடுக்கப்பட்டு, தழும்பிக் கொண்டிருக்கும் ஏரியின் நீரானது மேலிருந்து விழும் பனிப்பாளங்களால் தூண்டப்பட்டு, பனிச்சுவர்களையும் மோதி தகர்ந்து விடுகிறது. இதனால் பனிக்கட்டிகளோடு சேர்ந்து தண்ணீரும் மலை மேல் இருந்து பள்ளத்தை நோக்கி பெரும் வேகத்தில் பாய்கிறது. இப்படித்தான் நேபாளத்தில் 26 ஆம் தேதி ஒரு உடைப்பும், 27ஆம் தேதி மீண்டும் ஒரு உடைப்புமாக பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு திபெத்தையும், நேபாளத்தையும் புரட்டிப் போட்டுள்ளது.
பனிமலை ஏரிகளால் ஆபத்தா?
இமயமலை சிகரங்களில் உருவாகியுள்ள பல ஆயிரக்கணக்கான பனிமலை ஏரிகள் எந்த நேரத்திலும் தகர்ந்து பெரும் வெள்ளப் பெருக்கையும் பேரழிவையும் உருவாக்கக் கூடியவை. எனவே இமயமலையின் பள்ளத்தாக்குகளில் ஆறுகளை ஒட்டி உள்ள பகுதிகளில் பயணிப்பதோ தங்குவதோ குடியிருப்பதோ ஆபத்தானதாகும்.
படிக்க:
♦ உத்தரகாசி சுரங்க விபத்து: இமயமலையில் தொடரும் துயரம்!
♦ இமயத்தின் சிகரத்திலே எங்கள் நேபாளம் | மகஇக பாடல் | PALA SONG | NEPAL COMMUNIST
நம்மால் புவி வெப்பமயமாதலை எப்படி தடுக்க முடியாதோ, அல்லது தடுக்க மாட்டோமோ அதே போல் தான் இந்த பனிமலை ஏரிகளில் உடைப்பு ஏற்படுவதையும், மீண்டும் புதிய ஏரிகள் உருவாவதையும், அதுவும் மீண்டும் உடைந்து நொறுங்குவதையும் நம்மால் தடுக்கவே முடியாது.
இமயமலையைப் பொறுத்தவரை மேற்கு தொடர்ச்சி மலையை போல் உறுதியான பாறைகளைக் கொண்டது அல்ல. ஓங்கி குத்தினாலே நொறுங்கி தெரிக்கும் உறுதியற்ற துகள்களால் ஆன பாறைகளை கொண்டது. அதனால் தான் அவற்றால் கட்டுமானங்களை தாங்கி நிற்க முடிவதில்லை. அடிக்கடி சரிந்து விழுகின்றன. அதில் வெள்ளப்பெருக்கும் சேரும் பொழுது அதன் அழிவு மிக பயங்கரமானதாக மாறுகிறது.
இந்த அபாயத்தை உணரும் அரசு மக்கள் நலனில் அக்கறை கொண்டிருந்தால், கைலாய மலைக்கு புனித பயணம் மேற்கொள்ளும் பக்தர்களின் நலனில் அக்கறை கொண்டிருந்தால் உடனடியாக இமயமலைக்கு செல்வதை தடுத்து நிறுத்த வேண்டும். ஏற்கனவே அங்கு குடியிருப்பவர்களையும் பாதுகாப்பான இடங்களுக்கு மறுகுடிஅமர்வை பொருத்தமாக செய்ய வேண்டும்.
ஜக்கியின் கண்ணீர்!
இமயத்தில் நடந்துள்ள வெள்ளப்பெருக்குக்காக கோவையில் உள்ள ஜக்கி வாசுதேவ் கண்ணீர் வடிக்கிறார் – ஏன்?
ஜக்கி வாசுதேவ் கார்ப்பரேட் ஆன்மீக தொழிலுக்கு இமயமலையையும் ஒரு கருவியாகவே பயன்படுத்துகிறார் இந்தியர்களை மட்டும் இன்றி வெளிநாட்டினரையும் ஆன்மீக சுற்றுலாவிற்கு அனுப்பி வைக்கும் டூரிஸ்ட் புரோக்கர் ஆகவே செயல்பட்டு வருகிறார். அப்படித் தம்மால் அனுப்பப்பட்டவர்கள் இந்த வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டிருக்க கூடும் என்று தான் கலங்குகிறார்.
லாப வெறிபிடித்த கார்ப்பரேட்டுகள் சுற்றுலாவை இலக்காக வைத்து சொகுசு தங்கம் விடுதிகளை அமைத்து காசு பார்க்க அனுமதித்தால் அதன் விளைவாக ஏற்படும் உயிர்பலிக்கு அரசே பொறுப்பு ஏற்க வேண்டும்.
படிக்க:
♦ ஆயிரம் குடும்பங்களின் வாழ்க்கையை சீரழித்த ஆலங்கட்டி மழை!
♦ ஆரவல்லி மலைத்தொடரை கார்ப்பரேட்டுகளுக்குத் தாரைவார்க்கும் பாஜக அரசு! எதிர்த்து நிற்கும் மக்கள்!
பக்தியின் பெயரால் இந்துக்களையும், பௌத்தர்களையும் இப்பகுதியில் பெரும் எண்ணிக்கையில் குவிய அனுமதித்தால், அது அவர்களின் இறுதிப் பயணமாகவே மாறக்கூடும். இதற்கு அந்த மத நிறுவனங்களும் ஆட்சியாளர்களும் தான் பொறுப்பேற்க வேண்டும்.
இப்பொழுது மீட்பு பணியில் ஈடுபட்டு இருப்பவர்களும் கூட எந்நேரமும் மற்றுமொரு வெள்ளப்பெருக்கை எதிர்கொள்ள நேரிடும் என்ற அபாயத்தின் கீழேயே வேலைகளை செய்து வருகின்றனர். நிவாரண பணிகளுக்காக வரும் தொண்டர்களையோ, தன்னார்வலர்களையோ தேசிய பேரிடர் மீட்பு படையினரையோ தெரிந்தே ஆபத்தில் தள்ளுவதை கைவிட வேண்டும். இப்பொழுது சுரங்கங்களுக்குள் சிக்கி இருப்பவர்களை மீட்க சென்றாக வேண்டும் தான். ஆனால், இது தொடரக்கூடாது. அதற்கு இப்பகுதிகளில் மக்கள் குடியிருக்க கூடாது என்று பொருத்தமான மாற்று இடங்களை உருவாக்கித் தர வேண்டும். உயிர்ப்பலிகளை தடுக்க வேண்டும்.
உலக மக்களோ, உலக நாட்டு அரசுகளோ மீட்பு மற்றும் நிவாரணங்களில் உதவி செய்தால் மட்டும் போதாது. அவை ஒருங்கிணைந்து சுற்றுச்சூழலை பாதுகாக்கும் உருப்படியான திட்டங்களை விரைந்து அமல்படுத்த முன் வரவும் வேண்டும்.
இளமாறன்







