உலகப் போலீஸ் ரவுடி அமெரிக்க ட்ரம்ப்-பின் அடாவடித்தனம்…!

மெரிக்க மற்றும் ஈரான் இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தம் முதற்கட்டமாக கையெழுத்து ஆகியுள்ளது. ஆனாலும் அணு ஆயுதங்கள் மற்றும் பிற நிபந்தனைகளை மீறினால் ஈரான் மீது கடுமையான தாக்குதல்கள் நடத்தப்படும் என உலகப் போலீஸ் ரவுடி அமெரிக்க ட்ரம்ப் எச்சரித்து இருக்கிறார். அமெரிக்காவின் நிபந்தனைகளுக்கு ஈரான் அடிபணிய வேண்டும் என்பதை உறுதி செய்யவே இந்த மிரட்டலின் முக்கிய நோக்கமாகும்.

இந்த ஒப்பந்தத்தின் படி ஈரான் தனது அணுசக்தித் திட்டங்களை கைவிட வேண்டும் என்ற அமெரிக்காவின் முக்கிய இலக்கு இன்னும் இறுதி செய்யப்படவில்லை. ஈரான் தொடர்ந்து தனது அணுசக்தி கொள்கைகளில் உறுதியாக இருப்பதால் அமெரிக்கா தனது ராணுவப் பலத்தை ஒரு அழுத்தக் கருவியாகப் பயன்படுத்துகிறது.

ஒப்பந்தம் கையெழுத்தானாலும் ஈரான் தனது வாக்குறுதிகளை மீறினால் அல்லது பேச்சுவார்த்தையைத் தாமதப்படுத்தினால் அமெரிக்கா தொடர்ந்து போர் நடவடிக்கை தொடங்கும் என்பதை உலக மக்களுக்கு டிரம்ப் ஆணவத்துடன் வெளிப்படுத்துகிறார்.

ஹார்மூஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியிலான வர்த்தகம் மற்றும் கச்சா எண்ணெய் விநியோகம் முழுமையாக தடையில்லாமல் தொடர வேண்டும் என்பதில் தமது வழக்கமான – அடாவடித்தனமான மிரட்டல்கள் மூலம் ஈரானை அடிபணியச் செய்ய எத்தனிக்கிறார் ட்ரம்ப். ட்ரம்ப்பின் கடும் போக்குகளுக்கு அமெரிக்கா மக்களே எதிர்ப்புத் தெரிவிக்கும் நிலையும் நீடிக்கிறது.

இரு நாடுகளுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி அடுத்த 60 நாட்களுக்குள் இறுதி முடிவு எட்டப்பட வேண்டும் என்ற சூழலில் ஈரான் மீதான இந்த அழுத்தத்தை அமெரிக்கா தொடர்ந்து பிரயோகிக்கிறது. மிரட்டல் விடுக்கிறது.

ஒற்றைத் துருவ மேலாதிக்க ஏகாதிபத்திய நாடாக உருவெடுத்துவிட்ட அமெரிக்காவின் அத்துமீறல்களை – அடாவடித்தனங்களைத் துணிந்து எதிர்த்து நிற்க இயலா நிலையில் உலக நாடுகள்…!

இவர்கள் (அமெரிக்கா) மட்டும் யுரேனியத்தை எவ்வளவு அளவில் வேண்டுமானாலும் சேமித்து வைத்துக் கொள்ளலாமாம்; அணுசக்தி உபயோகங்களை கட்டுப்பாடு இன்றி மேற்கொள்வார்களாம்; ஏவுகணைகளை உலக நாடுகள் முழுவதும் ஏவி விடுவார்களாம்; உலகத்தில் எந்தத் துறையிலும் தமது சட்டாம்பிள்ளைத்தனமே மேலோங்கி இருக்க வேண்டுமாம்; தமது கொள்கைக்கு – கருத்துக்கு உடன்படாத எந்த நாட்டின்மீதும் குண்டு மழை பொழிவார்களாம்; அந்நாட்டுத் தலைவர்களை – மக்களை – இளம் பிஞ்சுகளை – கொன்றொழிப்பார்களாம்; வான் உயர்ந்த கட்டிடங்களை இடித்துத் தரைமட்டமாக்குவார்களாம்; தன் அடாவடித்தனங்களுக்கு இஸ்ரேலின் நெதன்யாகு போல பல்வேறு நாடுகளின் அடியாட்களை சேமித்து வைத்துக் கொள்வார்களாம்; உலக நாடுகளின் எண்ணெய் வளங்களைக் கைப்பற்றுவார்களாம்; முரண்டு பிடித்தால் ஈவிறக்கமற்ற  ஈரான் போரைத் தொடர்வார்களாம்; ஈரானுக்குரிய ஹார்மூஸ் ஜலசந்தி உரிமைகளை இவர்கள் கைப்பற்றிக் கொள்வார்களாம்…இப்படிப்பட்ட அடாவடித்தனமான அழுகுணி ஆட்டங்களை உலக போலீஸ் ரவுடி அமெரிக்கா தொடர்ந்து செய்து வருகிறது. உலக நாடுகள் இதனை கண்டும் காணாமல் கையாலாகாத தனமாக இருந்து வருகின்றன என்பதுதான் மிகவும் வேதனை தரக்கூடிய விடயமாகும்.

ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்ட அமைதி ஒப்பந்தம், ஜூன் 19-ல் சுவிட்சர்லாந்தில் கையெழுத்தாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரான்சில் நடைபெறும் ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்கச் சென்ற ட்ரம்ப் பிரான்சில் கால் பதித்த நிமிடம் முதல் தற்புகழ்ச்சியாகவே தம்பட்டம் அடித்து வருகிறார். ஈரானுடனான அமைதி ஒப்பந்தம் குறித்து பெருமையாகப் பேசி வரும் ட்ரம்ப், சில ‘முட்டாள் மனிதர்கள்’ பரிந்துரைத்த ‘உலகளாவிய அழுத்தத்தை’ தான் தடுத்து நிறுத்தியதாகத் தற்புகழ்ச்சி கொள்கிறார். ஆனால் அந்த ‘முட்டாள் மனிதர்கள்’ யார் என்பதைத் தெரிவிக்கவில்லை என்பதுதான் விநோதம்.

படிக்க:

 அதானி நிறுவனத்தின் மீது அமெரிக்கா விதித்த அபராதம்! பம்மிப் பதுங்கும் பாஜக அரசு!!

 அமெரிக்காவின் மேலாதிக்க போர்வெறி: பற்றியெரியும் நாடுகள்! அணையும் அடுப்புகள்!

இந்நிலையில் வழக்கமான ட்ரம்பின் குசும்புத் தனத்தை ஜூன் 17-ல் இவ்வாறு வெளியிட்டு உள்ளார்: “ஈரானுடனான ஒப்பந்தம் இறுதியானது அல்ல; இது ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மட்டுமே;  இது எனக்கு பிடிக்கவில்லை என்றாலோ அல்லது அவர்கள் (ஈரான்) நடந்து கொள்ளவில்லை என்றாலோ, நாங்கள் மீண்டும் அவர்களின் தலைக்கு நேராக குண்டுகளை வீசத் தொடங்கி விடுவோம். ஏனென்றால் அவர்கள் கடந்த 47 ஆண்டுகளாகத் தவறாகவே நடந்து கொண்டு வருகின்றனர்;  பார்க்கலாம்…ஹார்மூஸ் ஜலசந்தி ஏற்கனவே ஓரளவு திறக்கப்பட்டு விட்டது’ என்றும், ‘அடுத்த சில நாட்களில் முழுமையாக திறக்கப்பட்டு விடும்’ என்றும் எக்களிக்கிறார்.

ஈரான் தரப்போ தம்மை அமெரிக்கா மிரட்டிப் பணிய வைக்க முடியாது; ஒப்பந்தம் என்று வந்து விட்டால் சம உரிமைத் தன்மையில் இருக்க வேண்டும்; அணுசக்தி, யுரேனியம் இருப்பு வைத்துக் கொள்வது போன்றவற்றில் பாரதூரமான கட்டுப்பாடுகளை ஈரான் மீது அமெரிக்கா திணிக்க உரிமை இல்லை என்ற பாணியில் பதில் கொடுத்து வருகிறது. ஹார்மூஸ் ஜலசந்தியின் மீதான தமது உரிமைக்காகவும் குரல் எழுப்புகிறது ஈரான்.

அமெரிக்காவின் அடாவடித்தனங்கள் எந்த அளவிற்கு இவ்விடயத்தில் இருக்கப் போகின்றன என்பதனையும், ஈரானின் உறுதிமிக்க நடவடிக்கைகள் எந்த அளவுக்கு இருக்கும் என்பதனையும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். உலக நாடுகள் அமெரிக்காவின் போலீஸ் ரவுடித்தனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திட ஒன்றிணைதல் காலத்தின் கட்டாயமாக உள்ளது.

இந்நிலையில் ஜி7 உச்சி மாநாட்டிற்கு சென்றுள்ள இந்திய பிரதமர் ‘மோடி ஜி’ தமது எஜமானன் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பைச் சந்தித்து பல்லிளித்துக் கை குலுக்கினார்.

‘இந்திய பிரதமர் மோடி மிகவும் அமைதியானவர்; நிதானமானவர்; எதையும் சாதிக்கும் திறமை படைத்தவர்; நான் அப்படி இல்லை; அவர் எப்படி இருக்கிறார் பாருங்கள்’ – என்று டிரம்ப், மோடியை வானளாவப் புகழ்ந்து தள்ளி இருக்கிறார். மோடியின் ‘வண்டவாளங்கள்’ அனைத்தும்  இந்திய நாட்டின் மக்களான நமக்குத் தானே தெரியும். அவரைப் போய் ட்ரம்ப் புகழ்கிறார் என்றால் ட்ரம்புக்கு, நெதன்யாகு போன்ற அடிவருடிதான் மோடி என்பது ஊர்ஜிதம் ஆகிறது அல்லவா? அப்படியானால் உலக நாடுகளின் பிரச்சனைகளில் இவர்கள் எந்தெந்த கட்டத்தில் நிற்பார்கள் என்பதனை எளிதாகப் புரிந்து கொள்ள முடிகிறது அல்லவா?

அமெரிக்காவையும் அதன் அடிவருடிகளையும் வீழ்த்துவதற்கு உலக நாடுகள், உலக மக்கள் அணி திரள வேண்டும்; ஈரானிடம் பல குறைபாடுகள் இருந்தாலும், தற்போதைய அமெரிக்க – ஈரான் பிரச்சனையில் நாம் ஈரான் பக்கம் சார்ந்து நிற்போமாக! உதவுவோமாக!

  • எழில்மாறன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here