கௌதம் அதானியின் நிறுவனத்தின் மீது அமெரிக்காவில் இரண்டு அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு விவகாரங்களும் இந்தியாவுடன் நேரடியாக சம்பந்தப்பட்டவை. ஒரு விசயத்தில் இந்திய அரசு அமெரிக்காவை எதிர்த்திருக்க வேண்டும்; மற்றொன்றில் இந்திய அரசு அதானி நிறுவனத்தை தண்டித்திருக்க வேண்டும். பாசிச மோடியின் ஆட்சியில் இரண்டுமே நடைபெறவில்லை.
அபராதம் 1:
அதானியின் குழும நிறுவனமான Adani Green Energy -யானது சூரிய மின்சாரம் மற்றும் காற்றாலை மின்சாரம் உற்பத்தி செய்து இந்திய மாநில அரசுகளுக்கு விற்பதற்காக தொடங்கப்பட்ட நிறுவனம். அதானியின் இந்த நிறுவனம் தான் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை சந்தை விலையை விட அதிக விலையில் விற்பதற்காக ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள அரசு அதிகாரிகளுக்கு (2021 ஆம் ஆண்டில்) லஞ்சம் கொடுத்ததாக அமெரிக்கா நீதிமன்றத்தில் 2024 ஆம் ஆண்டு ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
படிக்க:
♦ லஞ்சம் கொடுத்து ஒப்பந்தம் பெற்ற மோசடி மன்னன் அதானியின் சொத்துக்களைப் பறிமுதல் செய்!
♦ ’அதானியின் சொத்துக்களை பறிமுதல் செய்!’ தேசத்தின் முழக்கமாகட்டும்!
இந்த Adani Green Energy கம்பெனி 750 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டில் தொடங்கப்பட்டது. இதில் சுமார் 175 மில்லியன் அமெரிக்க டாலர் தொகையை அமெரிக்க முதலீட்டாளர்களிடையே அதானி திரட்டியுள்ளார். இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள சட்ட விதிகளுக்கு முரணாக இந்திய அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததற்கு அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் தங்கள் மீதான லஞ்ச வழக்கை கைவிடுவதற்கு கௌதம் அதானியும் அவரது மருமகன் சாகர் அதானியும் 18 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ₹155 கோடி) தொகையை அமெரிக்காவிடம் அபராதமாக செலுத்துவதற்கு ஒப்புக் கொண்டுள்ளனர்.
இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தது தொடர்பாக அமெரிக்காவில் வழக்கு தொடுக்கப்பட்டு அதானி மற்றும் அவரது மருமகன் மீது அபராதம் விதிக்கப்பட்டு விட்டது. ஆனால் இந்தியாவில் அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த இந்தக் குற்றத்திற்காக எவ்வித வழக்கும் இந்திய நீதிமன்றத்தில் மோடி அரசால் பதிவு செய்யப்படவில்லை. அதானியின் தொழில் சாம்ராஜ்ஜியத்தை விரிவுபடுத்துவதற்காக, உலக பணக்காரர்களின் வரிசையில் அதானியை வைத்திருப்பதற்காக, அயராது உழைத்துக் கொண்டிருக்கும் பாசிச பாஜக அரசு அதானிக்கு எதிராக வழக்கு பதிவு செய்யாது என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.
அபராதம் 2:
அதானி குழுமத்தின் ஒரு நிறுவனம் அதானி என்டர்பிரைசஸ் லிமிடெட் (AEL). இந்த நிறுவனம் நவம்பர் 2023 முதல் ஜூன் 2025 வரை துபாயை தளமாகக் கொண்ட ஒரு கம்பெனியிலிருந்து திரவ பெட்ரோலிய எரிவாயுவை (LPG) வாங்கியுள்ளது. இந்த எரிவாயு
ஓமன் மற்றும் ஈராக் நாடுகளில் இருந்து வந்ததாக ஆவணங்களில் கூறப்பட்டது. ஆனால் இது உண்மையில் ஈரானில் இருந்து வந்ததாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்காவின் தடையை மீறி ஈரானின் எரிவாயுவை அதானி நிறுவனம் வாங்கி இந்தியாவில் விற்றதற்காக அமெரிக்க அரசு 275 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ₹2,365 கோடி) அபராதத்தை அதானி நிறுவனத்தின் மீது விதித்து இருக்கிறது. இந்தத் தொகையை செலுத்துவதற்கு அதானி என்டர்பிரைசஸ் லிமிடெட் (AEL) ஒப்புக் கொண்டுள்ளது. இந்திய அரசு இதுகுறித்து வாய் திறக்க மறுக்கிறது.
படிக்க:
♦ இஸ்ரேலுடன் இணைந்து மரண வியாபாரியாக மாறிய அதானி!
♦ சர்வதேச கார்ப்பரேட் கிரிமினல் கௌதம் அதானியைக் காப்பாற்றும் பாசிச மோடி!
இந்தியா எந்த நாட்டிடம் இருந்து இயற்கை எரிவாயுவை வாங்க வேண்டும் அல்லது வாங்க கூடாது என்பதை முடிவு செய்ய வேண்டியது இந்திய அரசு தானே ஒழிய அமெரிக்காவோ அல்லது மற்ற நாடுகளோ அல்ல.
ஆனால் ஈரான் நாட்டின் இயற்கை எரிவாயுவை இந்தியா (இந்திய நிறுவனம்) வாங்கியதற்காக அந்த நிறுவனத்தின் மீது அமெரிக்கா அபராதம் விதிக்கிறது என்றால் இந்தியா அமெரிக்காவிடம் மண்டியிட்டு இருக்கிறது; மானங்கெட்டு போய்விட்டது என்று தான் அர்த்தம்.
இயற்கை எரிவாயு உள்ளிட்ட பெட்ரோலிய பொருட்களின் பற்றாக்குறை காரணமாக இந்தியாவில் பொருட்களின் விலைகள் அன்றாடும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. இதனால் இந்தியாவில் பொருளாதார நெருக்கடி வரும் என்று பரவலாக பேச்சுக்கள் வரத்தொடங்கிவிட்டன.
இந்த நிலையிலும் கூட இந்திய அரசு அமெரிக்காவின் கட்டளைக்கு எதிராக, இந்திய மக்களின் நன்மைக்காக, எந்த நடவடிக்கையும் எடுக்காமல் எந்த ஒரு முணுமுணுப்பையும் காட்டாமல் அமைதியாக இருக்கிறது.
“இந்திய நாடும் நாட்டு மக்களும் எப்படி போனால் எனக்கு என்ன? அம்பானி அதானி வகையறாக்களின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும்; அவர்களின் தொழில் சாம்ராஜ்யம் மேலும் மேலும் வளர வேண்டும்; அதன் கூடவே இந்துராஷ்டிரம் அமைப்பதை நோக்கியும் முன்னேற வேண்டும்” என்ற ஒரு குறிக்கோளில் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது பாசிச பாஜக அரசு.
இதனை முறியடித்து நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பாற்றும் வகையில் ஆர்எஸ்எஸ் – பாஜக பாசிச ஆட்சியை வீழ்த்துவதற்கு பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியில் மக்களை அணி திரட்ட வேண்டும்.
– குமரன்
செய்தி ஆதாரம்: Thewire







