தந்தை பெரியார் 17 – 09 – 1979-ல் பிறந்தார். தமது 94-வது அகவையைக் கடந்து 95-வது அகவையில் பயணித்துக் கொண்டிருந்த பொழுது 24-12-1973-ல் மறைந்தார். அவரது உடல் தமிழ்நாட்டு மக்கள் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டிருந்தது.

தமிழ்நாடு முழுவதிலிருந்தும் மக்கள் சாரை சாரையாக வந்து தமிழின உணர்வூட்டிய – சுயமரியாதை, பெண்ணுரிமை, பகுத்தறிவு, சாதி தீண்டாமை ஒழிப்பு, சனாதன பார்ப்பன எதிர்ப்பு, இட ஒதுக்கீடு…என எண்ணற்ற சூத்திர பஞ்சம மக்கள் நலன் சார்ந்த கொள்கைகளுக்காக தொண்டாற்றிய பெரியாருக்கு மரியாதை செலுத்திய வண்ணம் இருந்தனர்.

அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதி உட்பட அமைச்சரவை சகாக்கள் முன்னதாகவே வந்து அஞ்சலி செலுத்தியதோடு அடக்கம் செய்வதற்கான முன்னேற்பாடுகளையும் கலைஞரே, ஆசிரியர் திரு வீரமணியுடன் கலந்து பேசி இறுதி முடிவு எடுத்துக் கொண்டிருந்தனர்.

மறுநாள் 25-12-1973-ல் சென்னை வேப்பேரி பெரியார் திடலுக்கு தந்தை பெரியாரின் உடல், அடக்கம் செய்ய ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட பொழுது, நடிகர் எம்ஜிஆர் வந்து சேர்ந்தார். எம்ஜிஆர் வந்திருந்தமையால் நடிகை லதாவும் வந்து சேர்ந்தார். பல்லாயிரக்கணக்கானோர் திரண்டிருந்த மிக நீண்டதொரு இறுதி ஊர்வலம் அது.

ஒரு கடவுள் மறுப்பு சிந்தனையாளருக்கு உலகில் வேறு எவருக்கும் இப்படிப்பட்டதொரு பெரும் கூட்டம் அடங்கிய இறுதி ஊர்வலம் நடந்திருக்குமா என்பது சந்தேகமே! அப்படிப்பட்ட இறுதி ஊர்வலத்தில்தான் சில பகுதிகளில் அன்று ‘விசில் அடிச்சான் குஞ்சுகள்’ என அறியப்பட்ட எம்ஜிஆர் ரசிகர்களால் அமைதியற்ற கலவரத் தன்மையை  ஏற்படுத்தியது. இது பெரியார் சீடர்களுக்கும், மக்களுக்கும் கடும் முகச்சுழிப்பையும், தாங்க முடியாத கோபத்தையும் ஏற்படுத்தியது.

‘எம்ஜிஆர் வாழ்க! பொன்மனச் செம்மல் வாழ்க! புரட்சி நடிகர் வாழ்க! புரட்சித் தலைவர் வாழ்க!’ – என்ற பற்பல முழக்கங்களை எழுப்பியவாறே அன்றைய தற்குறி எம்ஜிஆர் ரசிகர் கூட்டம் ஆட்டபாட்டத்துடன் கூக்குரல் எழுப்பிய வண்ணம் எம்ஜிஆரை சூழ்ந்து வந்து கொண்டே இருந்தது. அந்தக் கும்பலை நோக்கி எம்ஜிஆர் இருவிரல் அசைத்தபடி ‘பவனி’ வந்தார். ஒரு மாபெரும் தலைவனின் இறுதி ஊர்வலத்தில், தமிழ்நாட்டில் நடந்த இந்தக் கேவலத்தை – அவலத்தை என்ன வென்று சொல்வது? எங்கே சொல்லி அழுவது?

அத்தருணத்தில் திராவிடர் கழகத்தில் செயல்பட்ட எங்களுக்கும், ரசிகர் கும்பலுக்கும், ஏன்,  எம்ஜிஆருக்கும் இடையிலான கடுமையான மோதல் சூழல் வெடித்தது. நிலைமையைப் புரிந்து கொண்ட காவல் துறை,  எம்ஜிஆரை இலகுவாக அணுகி அந்த இறுதி ஊர்வலத்திலிருந்து அவரை அப்புறப்படுத்தி வெளியேற்றியது. இதுதான் தமிழ்நாட்டின் ஒரு மாபெரும் தலைவரின் மறைவை ஒட்டிய இறுதி ஊர்வலத்தில் கூட சினிமா நடிகர்கள் மூலமாக அவர்களின் தற்குறி ரசிகர்களால் ஏற்பட்ட மிகுந்த கசப்பான அனுபவம் அது.

(இப்பொழுது நீங்கள் தற்குறி விஜய்யையும் அவரது ரசிகக் கும்பல் அணில் குஞ்சு களையும் ஒப்பிட்டு பார்த்துக் கொள்ளலாம்) அப்பொழுது எங்களுடன் (பெருவழுதி – எழில் மாறன் – செம்பியன்) பெரியார் பேருரையாளர் இறையனார், மருத்துவர் ம.சுப்ரமணியம், பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் பெ .ஜெகதீசன், திருமகள் இறையன், கமலம் செல்லத்துரை, சாமி சமதர்மம், சாமி திராவிட மணி, இளங்கீரன், சுந்தரமூர்த்தி உட்பட எண்ணற்றோர் கோபத் ‘தீ’ கொப்பழிக்க கண்ணீர் மல்க உறைந்து இறுதி ஊர்வலத்தில் நடந்து வந்தனர்.

மேலும் படிக்க: தவெகவின் தேர்தல் வெற்றிக்கு அடிப்படை காட்சி போதைக்கு அடிமையாகியுள்ள தமிழ் சமூகத்தின் தோல்வியே!

அப்பொழுது முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி, அன்றைய தலைமைச் செயலாளர் சபாநாயகம் சுட்டிக் காட்டிய அரசின் சட்ட திட்ட விதிகள் யாவற்றையும் மீறி, முதலமைச்சர் என்ற கோதாவில் பிறப்பித்த  ஆணைக்கிணங்க சென்னை வேப்பேரி பெரியார் திடலில் தந்தை பெரியாருக்கு முழு அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப் பட்டது. திடலில் பெரியார் உடல் அடக்கம் செய்வதற்காக இறக்கப்பட்டவுடன் முன்னதாக வந்துவிட்ட முதல்வர் கலைஞர் கருணாநிதியை ஆசிரியர் திரு கி.வீரமணி கட்டிப்பிடித்து கதறி அழுத நிகழ்வும் அதிர்ந்து உதிர்த்த வார்த்தைகளும் இன்றும் மனக்கண் முன் நிழலாடுகிறது.

முன்னதாக தலைமைச் செயலகத்தில் இது விடயத்தில் கலைஞருக்கும் தலைமைச் செயலாளர் சபாநாயகத்திற்கும் இடையில் நடந்த விவாதம் என்பது சோக நேரத்திலும் சுவை மிகுந்தது; விரிவாக எடுத்துப் பேச அல்லது எழுதிட உகந்தது.

தமிழ்நாட்டில் அரசியல் அற்ற தன்மையில் சினிமா மோகத்தை வைத்து கவர்ச்சி வாதத்தில் மயக்கப்பட்ட இளைஞர்களை – மக்களை தன்வசப்படுத்தி முதலமைச்சர் நாற்காலியிலும் அமரலாம் என்பதற்கு இந்தியாவிலேயே முன்னோடியாகத் திகழ்ந்தவர் எம்ஜிஆர். அதன் பிறகு அந்த இடத்தை ஜெயலலிதா அதே சினிமா மோக ரசிக மனோபாவத்தில் ஆட்சியைப் பிடித்தார். இருவரும் பாசிஸ்டுகளாக இருந்தாலும், அறியாமையில் வீழ்ந்து கிடந்த மக்கள், அவ்விருவரையும் ‘மக்கள் விரோதி’களாக உணராமல், இறுதி வரை துதிபாடி மகிழ்ந்தனர் என்பது தமிழ்நாட்டின் ஓர் அவலம். இவ்விருவரையும் அண்டிப் பிழைத்த பிழைப்புவாதக் கூட்டம் அவர்களை தெய்வத்திற்கு இணையாக உயர்த்தி வழிபட்டது என்பது இவற்றுக்கெல்லாம் அடிப்படையாக அமைந்தது. இன்று வரை அந்தக் கும்பல் அவற்றையே பின் தொடர்கிறது.

இருந்தாலும் எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் ஒன்றை மிகவும் எச்சரிக்கையாக இருந்து பின்பற்றினார்கள். ஆம், தமிழ்நாட்டில் திராவிடப் பாரம்பரியம், பெரியார், அண்ணா பெயர்களை உச்சரிக்காமல் ஆட்சியில் நீடிக்க இயலாது என்பதனால், அவர்களின் பிறந்த நாள் மற்றும் மறைந்த நாட்களுக்கு நினைவு இடங்களில் மலர் வளையம் வைப்பது; அறிக்கை விடுவது; விழா எடுப்பது என்ற நயவஞ்சக நடவடிக்கைகளைத் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தனர். ஆனாலும் அவர்களது ஆட்சி முறை என்பது பெரும் முதலாளிகளுக்கும், நிலச்சுவான்ந்தார்களுக்கும் சேவை செய்வதாகவும், உழைக்கும் மக்களை – அவர்களது போராட்டங்களை அடக்கி ஒடுக்குவதாகவும், மக்களுக்கான போராளி இயக்கங்களை அழித்து ஒழிக்கும் நடவடிக்கைகளில் சர்வாதிகாரமாக நடந்து கொள்வதுமாகவுமே நீடித்திருந்தனர்.

உழைக்கும் மக்களுக்கு இலவச பல்பொடி வழங்கியதை மாபெரும் சாதனையாக காண்பித்த ஒரே தலைவர் எம் ஜி ஆர். இப்படித்தான் சத்துணவு திட்டம், இலவச சைக்கிள் இப்படி ஆட்சி எனும் வண்டியை ஓட்டினர் இருவரும். மற்ற வகையில் திராவிட இயக்கம், பெரியாரியல், எம்ஜிஆரே கூறிய அண்ணாயிசம் எது பற்றியும் இந்த இரண்டு நடிகர் நடிகைக்கு (தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர்களுக்கு) எதுவுமே தெரியாது என்பதுதான் பேருண்மை!

கொல்லூர் ஸ்ரீமூகாம்பிகையை வழிபட்ட எம்ஜிஆரும், பின் தொடர்ந்தோரும்…!

மறைந்த தமிழக முதல்வர் எம்ஜிஆர் கர்நாடக மாநிலத்தில் உள்ள கொல்லூரில் அமைந்து உள்ள ஸ்ரீ மூகாம்பிகை அம்மன் கோவிலின் தீவிர பக்தராவார். அவர் முதலமைச்சராக பதவி வகித்த பொழுது இக்கோவிலுக்கு ஒரு கிலோ எடையுள்ள தங்க வாள் ஒன்றினை ‘காணிக்கை’ செலுத்தினார். அவரது மறைவிற்குப் பின் அதே கோயிலுக்கு வந்த அவரது மனைவி ஜானகி அம்மாள் தங்கம், வெள்ளிப் பொருட்களை காணிக்கையாக வழங்கி உள்ளார்.

எம்ஜிஆரின் ’உடன்கட்டை’ ஜெயலலிதா 2004-ல் முதல்வராக இருந்த பொழுது அதே அம்மனை தரிசித்து வெள்ளி வாளை ‘காணிக்கை’ செலுத்தினார். அப்போது அவர் ‘சண்டி ஹோமம்’ நடத்தியதுடன் எம்ஜிஆர் வழங்கிய தங்க வாளை தனது கைகளில் ஏந்தி வழிபாடு செய்துள்ளார்.

மேலும் படிக்க: “தந்தை பெரியாரின் 147- வது பிறந்தநாளும் – சுயமரியாதை இயக்க நூற்றாண்டும்.” (ஓர் நேர்மறை – எதிர்மறை அலசல்!) பாகம் -3

அந்த இரண்டு சினிமா நடிகர்களான முதல்வர்கள் வரிசையில் தற்போது சினிமா கவர்ச்சி மோக புதிய விசில் அடிச்சான் குஞ்சுகளான அணில் குஞ்சுகளின் பிரதிநிதியாகிய தமிழ்நாட்டின் தற்குறி முதல்வர் ஜோசப் விஜய் என்ற ‘கிறித்தவரும்’ அதே பிழைப்புவாதக் கண்ணோட்டத்தில், அந்த இரண்டு முதல்வர்கள் வழிபட்ட கொல்லூர் ஸ்ரீமூகாம்பிகை அம்மன் கோவிலுக்கு கடந்த ஜூன் 12 அன்று சென்று வழிபட்டு 1.6 கிலோஎடையுள்ள வெள்ளி வாளை காணிக்கையாக செலுத்தியுள்ளார். இவர் மங்களூர் சென்று அங்கிருந்து கொல்லூர் சென்றுள்ளார். கோவிலிலும் சாலைகளிலும் பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தி விட்டுத்தான்  திரும்பி உள்ளார். மேகதாது அணைக் கட்டு ஆதரவாளர்கள் சிலர் கருப்பு கொடி காட்டவும், ரசிகர்கள் விசில் அடிக்கவும் ஒரு நாள் பொழுதை கடத்தி விட்டு வந்து விட்டார் விஜய். இவர்கள் இப்படி எல்லாம் வழிபடுவதனால் தமிழ்நாட்டின் மக்கள் உறுதியாக உயர்வடையப் போவதில்லை.

ஆனாலும் தமது பிழைப்புகளை ஓட்டவும், அரசியலில் தனது ஸ்திரத்தன்மையை ஆழப் பதிக்கவும், பெரும் முதலாளிகளுக்கு சேவை செய்வதன் மூலம் இந்த ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி ஏற்கனவே குவித்து வைத்துள்ளபல்லாயிரம் கோடி சொத்துக்களுடன் இன்னும் கூடுதலாக சேர்த்துக கொள்ளை யடிக்கவும், ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி சேர்த்த சொத்தைப் பாதுகாக்கவும், வழக்கு களிலிருந்து தப்பிக்கவும் வழிவகை தேடுகிறார்; இந்து பக்த வேடம் போட்டு ஆர்எஸ்எஸ் பாஜக கும்பலுக்கு நம்பிக்கை ஊட்டுகிறார். தேவாலயத்திற்கும் போகிறார்; தர்கா, மசூதி, பள்ளிவாசலுக்கும் போகிறார். ‘சர்வ மத பக்தனாக’ வேடம் அணிந்து உலா வருகிறார்.

இப்பொழுது பாருங்கள். இவர்கள் தந்தை பெரியார், அண்ணா, அம்பேத்கர் பெயர்களை உச்சரிப்பதற்கே தகுதி பெற்றவர்களா? மாறாக அரசியல் பிழைப்புக்காக சில தலைவர்கள் தேவைப்படுகிறார்கள்; அவ்வளவே! மற்ற வகையில் அத்தலைவர்களின் கொள்கை கோட்பாடுகளை குழி தோண்டி புதைப்பதில் இவர்களே முன்னணிப் பாத்திரம் வகிப்பர்.

ஆர்எஸ்எஸ் பாஜக இந்துத்துவ பார்ப்பன சனாதன கோட்பாடுகளை எல்லாம் இவர்கள் ஒருபோதும் எதிர்க்க மாட்டார்கள். ஏனெனில் அந்த காவிக் கும்பலின் அரவணைப்பில் தான் விஜய் வண்டி ஓடுகிறது. இந்தப் பேருண்மையை மக்கள் வெகுவிரைவில் உணர்வர். கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் காவிக் கூட்டத்தின் அரவணைப்பில் நின்று, மக்கள் போராட்டங்களை நசுக்குவதற்கு பாசிஸ்டாக உருவெடுத்து களமாடுவார் தற்குறி அரசியல் பிரமுகர் விஜய்.

பொதுவாக, திரைத்துறை சார்ந்த ரஜினிகாந்த், இளையராஜா, ஏசுதாஸ் உட்பட திரை துறையின் பிரமுகர்களுக்கு இந்த கொல்லூர் ஸ்ரீ மூகாம்பிகை அம்மன் கோவில் ‘பிரசித்தி பெற்ற’, ‘இஷ்ட தெய்வம்’ ஆகும். அதனால் தான் உழைக்கும் வர்க்கப் பிரிவிலிருந்து பிறந்து சென்ற ‘இசைஞானி’ என்று வர்ணிக்கப்படும் இளையராஜா கடந்த 2025 இல் ரூ.4.5 கோடி மதிப்பில் வைர கிரீடம்,நெக்லஸ் தங்கவாள், வெள்ளி கிரீடம், உள்ளிட்டவற்றைக் காணிக்கையாக வழங்கினார்.

‘கும்பி கூழுக்கழ – கொண்டை பூவுக்கழுத’  கதையாக கோடிக்கணக்கான மக்கள் வறுமையிலும்? பஞ்சத்திலும், வேலை இன்மையிலும், வாடி வதங்கும் பொழுது இவர்கள் கருப்புப் பணமாக கொள்ளையடித்து சேர்த்த சொத்துக்கள் பெரும்பகுதியை இப்படி ஒரு ‘கல்’லுக்குக் கொட்டி அழுவதை என்னவென்று உரைப்பது?

பின்னவர்கள் எப்படியோ போய் தொலையட்டும். ஆனால் பெரியார், அண்ணா, அம்பேத்கர் பெயர்களை சுமந்து கொண்டு, அவர்களது கொள்கைகளுக்கு நேர் எதிரான செயல்பாடுகளைக் கொண்டு இயங்குவதன் மூலம் அத்தலைவர்களின் பெயர்களை களங்கத்திற்கு உள்ளாக்க வேண்டாம் என்பதை மட்டும் தற்போது உணரச் செய்வோம்! எச்சரிக்கை செய்வோம்!

மற்ற மூடர்கள் எப்படியோ தொலைந்து விட்டுப் போகட்டும்! உழைக்கும் மக்கள் தம் ‘தளை அறுபட’ அன்றே புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் இயற்றிச் சென்ற கவிதை வரிகளை நெஞ்சில் ஏந்துங்கள்! இதோ ஊன்றி படியுங்கள்! பின் தொடருங்கள்!

“கடவுள் கடவுள் என்றெதற்கும்

கதறுகின்ற மனிதர்காள்!

கடவுள் என்ற நாமதேயம்

கழறிடாத நாளிலும்

உடமையாவும் பொதுமையாக

உலகு நன்று வாழ்ந்ததாம்;

‘கடையர்’ ‘செல்வர்’ என்ற தொல்லை

கடவுள் பேர் இழைத்த தே!

….

நடவு செய்த தோழர் கூலி

நாலணாவை ஏற்பதும்

உடலுழைப்பிலாத செல்வர்

உலகை ஆண்டு லாவலும்

கடவுளாணை என்றுரைத்த

கயவர் கூட்ட மீதிலே

கடவுள் என்ற கட்டறுத்துத்துத்

தொழிலுளாரை ஏவுவோம்”

                                                             ……

“ஓடப்பராயிருக்கும் ஏழையப்பர்

உதையப்பராகிவிட்டால் ஓர் நொடிக்குள்

ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி

ஒப்பப்பர் ஆயிடுவார் உணரப்பா நீ”

                                        –  புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

 

எழில்மாறன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here