பாசிச பாஜகவின் மக்கள் விரோத ஆட்சியை விமர்சித்து வரும் ஊடகங்கள், பத்திரிக்கையாளர்கள், ஜனநாயகவாதிகளை முடக்குவதற்காக தனது அடியாள் படையான அமலாக்கத்துறை (ED), மத்திய புலனாய்வுத்துறை(CBI), வருமான வரித்துறை(IT), தேசிய பாதுகாப்பு முகமை (NIA ) போன்றவற்றை பயன்படுத்தி ஒன்றிய பாஜக அரசு வழக்குகள் தொடுத்து வருகிறது என்பது அனைவரும் அறிந்த செய்தி.
நியூஸ் கிளிக் (News Click) என்ற இணையதள பத்திரிகையானது முற்போக்காளர்கள், ஜனநாயக வாதிகளிடையே பிரபலமான ஒன்று. இந்த இணையதள பத்திரிகை பாஜகவின் மக்கள் விரோத பொருளாதாரக் கொள்கைகளையும் பாஜக கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) போன்றவற்றையும் கடுமையாக விமர்சித்தது. அதேசமயம் டெல்லியை முற்றுகையிட்டு போராடிய விவசாயிகளின் போராட்டத்தை ஆதரித்து பாஜகவின் ஜனநாயக விரோத செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்து செய்திகளை வெளியிட்டுவந்தது.
இதனால் ஆத்திரமுற்ற மோடி – அமித்ஷா கும்பல் நியூஸ் கிளிக் நிறுவனத்தின் மீதும் அதன் நிறுவனரும் ஆசிரியருமான பிரவீன் புர்காயஸ்தா (Prabir Purkayastha) மீதும் 2020 டெல்லி காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (Economic Offences Wing) மற்றும் பின்னர் Enforcement Directorate (ED) மூலம் வழக்குகள் பதிவு செய்தது.
அதன் தொடர்ச்சியாக 2021 இல் வருமானவரித் துறையை அனுப்பி நியூஸ் கிளிக் இணையதள பத்திரிகையின் அலுவலகம் மற்றும் அதன் நிறுவனரும் ஆசிரியருமான பிரவீன் புர்காயஸ்தா அவர்களின் வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
பிறகு 2021 முதல் 2023 ஆம் ஆண்டு வரையில் அமலாக்கத் துறையை அனுப்பியும் சோதனையை நடத்திய பாஜக UAPA சட்டத்தின் கீழ் டெல்லி காவல்துறையை அனுப்பி சோதனையை நடத்தியது. குறிப்பாக டெல்லி காவல்துறையின் சோதனையின் போது இந்த நிறுவனத்தின் அலுவலகத்தில் மட்டும் இன்றி அந்த நிறுவனத்தைச் சேர்ந்த பத்திரிக்கையாளர்களின் வீடுகளும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டதுடன் அவர்களின் மடிக்கணினிகள், கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
அதுமட்டுமின்றி அக்டோபர் 2023ல் பிரவீன் புர்காயஸ்தா டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஆனால் 7 மாதத்திற்கு பிறகு இவரின் கைது சட்ட விரோதமானது என்று கூறி டெல்லி உயர் நீதிமன்றம் இவரை விடுதலை செய்து விட்டது.
இந்த நிலையில் நியூஸ் கிளிக் இணையதளம் மற்றும் அது தொடர்புடையவர்களின் மீது டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கில் கடந்த மே 29ஆம் தேதி அன்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதன் விவரம் ஜூன் 10ஆம் தேதி அன்று டெல்லி உயர் நீதிமன்றத்தால் வெளியிடப்பட்டது.
அந்த தீர்ப்பில், நியூஸ் கிளிக் இணையதளம் மற்றும் அது தொடர்புடையவர்களின் மீது சட்டவிரோதமாக வெளிநாட்டு முதலீடை பெற்றது மற்றும் பண மோசடி தொடர்பாக எவ்வித ஆதாரமும் இன்றி பொருளாதார குற்றப்பிரிவு(EOW) மற்றும் அமலாக்கத்துறை(ED) வழக்குகளை தொடுத்துள்ளதாக கூறி டெல்லி உயர் நீதிமன்றம் வழக்குகளை தள்ளுபடி செய்து விட்டது.
இந்த தீர்ப்பின் மூலம், பாசிச பாஜக அரசின் அயோக்கியத்தனமான மக்கள் விரோத நடைமுறைகளை விமர்சித்து வரும் ஊடகங்களை ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகளை வைத்து முடக்க நினைப்பது மீண்டும் ஒரு முறை அம்பலம் ஆகியுள்ளது.
படிக்க:
♦ நியூஸ் க்ளிக் மீது பாசிச பாஜகவின் தாக்குதல்! கல்லறை கட்டப்படும் பத்திரிக்கை சுதந்திரம்!
பத்திரிக்கைச் சுதந்திரம் எந்த அளவிற்கு நடைமுறையில் உள்ளது? என்பது குறித்து உலகில் உள்ள 180 நாடுகளில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் இந்தியா 157 வது இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் இந்த அளவிற்கு பத்திரிக்கை சுதந்திரம் மிகவும் கேடுகெட்ட நிலையில் உள்ளது என்று பரவலாக கண்டனங்கள் எழுந்த பொழுதும் இந்தியாவில் ஜனநாயகம் தழைத்தோங்குவதாக பாசிச பாஜகவும் அதன் அடிவருடிகளும் தொடர்ந்து பொய்யை பரப்பிக் கொண்டிருக்கின்றனர். நியூஸ் கிளிக் நிறுவனத்தின் மீதான வழக்குகள் எவ்வித அடிப்படை ஆதாரமும் அற்றவை என்று நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதானது இந்தியாவில் பத்திரிக்கை சுதந்திரம் மிகவும் கேடுகெட்ட நிலைகள் தான் உள்ளது என்பதை மீண்டும் ஒரு முறை மெய்ப்பிப்பதாக அமைந்துள்ளது.
தற்பொழுது நியூஸ் கிளிக் நிறுவனத்தின் மீது, பாசிச பாஜக அரசு, ஊபா(UAPA) சட்டத்தின் கீழ் தொடுக்கப்பட்ட வழக்குகள் இன்னும் நீதிமன்றத்தின் விசாரணையில் உள்ளன. ஊடகத்தின் குரல்வளையை நெரிப்பதற்காக ஜனநாயகத்தை குழி தோண்டி புதைப்பதற்காக பாஜக அரசால் போடப்பட்டுள்ள இந்த வழக்குகளும் நீதிமன்றத்தில் முறியடிக்கப்படவேண்டும் என்பதே பாசிச எதிர்ப்பாளர்கள் அனைவரின் விருப்பம்.
பாசிசத்தை எதிர்ப்பவர்களில் பெரும்பாலானவர்கள், பாசிச பாஜக ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிப்பதைத் தடுக்க வேண்டும் என்ற அளவில் மட்டும் வரம்பிட்டுக் கொண்டு செயல்படும் போக்கு உள்ளது. மேலும் பாஜகவை ஆட்சி அதிகாரத்தில் இருந்து தூக்கி வீசுவதே பாசிசத்தை வீழ்த்துவதற்கு போதுமானது என்ற புரிதலும் பரவலாக உள்ளது. இது பாசிசத்தை வீழ்த்துவதற்கு போதுமானது அல்ல.
படிக்க:
♦ நியூஸ் கிளிக் ஆசிரியர் சட்ட விரோத கைதும், விடுதலையும்!
பாஜகவின் கார்ப்பரேட் – காவி பாசிசத்தை மனதார ஏற்றுக்கொண்டு செயல்படுத்தக்கூடிய அரசு அதிகாரிகள், அரசு பணியாளர்கள் மேலிருந்து கீழ் வரை அனைத்து மட்டங்களிலும் இந்தியா முழுவதும் நிறைந்துள்ளனர். இவர்கள் அரசின் பதவிகளில் இருக்கும் வரை பாசிசத்தை வீழ்த்த முடியாது.
ஆர்எஸ்எஸ் – பாஜகவின் பாசிசத்தை வீழ்த்த பாசிச பாஜகவை ஆட்சி அதிகாரத்திலிருந்து அகற்றுவதுடன் பாசிசத்திற்கு ஆதரவான மனநிலையில் செயல்படும் அனைத்து அரசு அதிகாரிகளையும் அரசு பணியாளர்களையும் அரசின் பதவிகளிலிருந்து அகற்ற வேண்டும். அதை ஜனநாயகக் கூட்டரசை நிறுவுவதன் மூலம்தான் சாதிக்க முடியும்.
இதை செய்ய முயற்சிக்கும் பொழுது ஆர்எஸ்எஸ் -ல் பயிற்சி பெற்ற காவிப்படையை தெருவில் மோதி வீழ்த்த வேண்டியிருக்கும். பாசிச எதிர்ப்பு ஜனநாயக மக்கள் முன்னணியும் அதற்கொரு படையும் கட்டி செயல்படுவதன் மூலமாகத்தான் இதை சாதிக்க முடியும். கார்ப்பரேட் காவி பாசிசத்தை, அதாவது ஆர் எஸ் எஸ் பாஜகவின் பாசிசத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் வீழ்த்த முடியும்.
– குமரன்






