பாசிச மோடிக்கு எதிராக தொடர்ந்து போராடி வரும் முன்னணி செய்தி சேனல் நியூஸ் கிளிக் உபா சட்டத்தின் கீழ் இழுத்து மூடப்பட்டுள்ளது அதன் ஆசிரியர் பிரபிர் புர்கயஸ்தா மற்றும் அதன் நிர்வாக அதிகாரி அமித் சக்ரவர்த்தி ஆகியோர் UAPA சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்..

இந்தியா உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு என்ற பித்தலாட்டத்தை இனிமேலும் நம்புபவர்கள் ஒன்று ஏமாளியாக இருக்க வேண்டும், இல்லையென்றால் பாசிச பயங்கரவாதிகளின் ஆதரவாளர்களாக இருக்க வேண்டும்..ஏனென்றால் ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று வர்ணிக்கப்படுகின்ற பத்திரிகைகள் மீது பாசிச மோடி ஆட்சிக்கு வந்ததிலிருந்து கடும் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டு வருகிறது என்பதை உலகமே காரி துப்பிக் கொண்டுள்ளது. ஆனாலும் ஜனநாயகம் பூத்துக் குலுங்குவதாக கற்பனையாக எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

குஜராத் இனப்படுகொலையை ஆவணங்களாக வெளியிட்ட BBC யின் மீது தாக்குதல் நடத்தியது. பாசிச மோடியின் அரசு. தற்போது மணிப்பூர் வன்முறை வெறியாட்டத்தை தொடர்ந்து அம்பலப்படுத்தி வரும் நியூஸ் கிளிக் சேனல் மீது கடும் தாக்குதலை நடத்தி சட்டவிரோதமான முறையில் இழுத்து மூடி உள்ளது.

நியூஸ் க்ளிக் மீது நடத்தப்பட்ட  டெல்லி சிறப்பு போலீசின் தாக்குதல்!

தனது செய்தி சேனல்களில் சீனாவுக்கு ஆதரவாக தொடர்ச்சியாக செய்திகளை வெளியிடுவதற்கு சீன நிறுவனம் ஒன்றிலிருந்து ரூபாய் 28 கோடி ரூபாய் பெற்றுள்ளதாக நியூஸ் க்ளிக் மீது குற்றம் சுமத்தியுள்ளது பாசிச பாஜகவின் ஏவல்துறையான வருமான வரித்துறை. இதனையே அடிப்படையாகக் கொண்டு நியூஸ் கிளிக் பத்திரிக்கை அலுவலகத்தின் மீது தாக்குதலை நடத்தியுள்ளது டெல்லி சிறப்பு போலீஸ் பிரிவு.

இந்நிறுவனத்தின் மூத்த பத்திரிகையாளர்கள் பாஷா சிங், உர்மிலேஷ், ஆனின்டியோ சக்ரவர்த்தி, வீடியோகிராபர் அபிஷர் சர்மா, எழுத்தாளர் கீதா ஹரிகரன் உட்பட பலரது வீடுகளிலும் காவல்துறையினர் நேற்று சோதனை நடத்தினர். பத்திரிகையாளர்கள் அனுராதா ராமன், சத்யம் திவாரி, ஆதித்தி நிகாம் மற்றும் சுமேதா பால் ஆகியோர் காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் சென்றது.  நியூஸ் க்ளிக் நிறுவனத்தில் பணியாற்றும், 9 பெண்கள் உட்பட 46 பேரிடம் புதுடில்லி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, விவசாயிகள் போராட்டம் மற்றும் டெல்லி ஷாகின்பாக் கலவரம் பற்றி ஏதும் செய்தி வெளியிட்டுள்ளீர்களா எனவும் டெல்லி போலீசார் விசாரித்துள்ளனர். மேலும், பத்திரிகையாளர்கள் மற்றும் அவர்களுடைய உறவினர்களின் வங்கிக் கணக்குகளையும் அவர்களுடைய தனிப்பட்ட உடைமைகளையும் சோதனையிட்டதாகவும் சொல்லப்படுகிறது. வெளிநாட்டுப் பயணங்கள் குறித்த கேள்விகளும் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது.

நியூஸ் க்ளிக்-ற்க்கு கட்டுரைகள் அனுப்பிய மோடியின் குஜராத் இனப்படுகொலை முதல் தொடர்ந்து அம்பலப்படுத்தி போராடிவரும் தீஸ்தா செதல்வாட் வீட்டில் மும்பை காவல்துறையினர் சோதனை நடத்தி விசாரித்தனர். மூத்த பத்திரிக்கையாளர்கள் பரன்ஜாய் குஹா தகுர்தா, சுமோத் வர்மா ஆகியோர் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நியூஸ் கிளிக் ஆசிரியர் .பிரபிர் புர்கயஸ்தா மற்றும் அதன் நிர்வாக அதிகாரி அமித் சக்ரவர்த்தி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.அவர்கள் இருவரும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் கைது செய்யப்பட்டனர். நியூஸ் கிளிக் நிறுவனத்தின் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் (யுஏபிஏ), இந்திய தண்டனைச் சட்டம், 2 குழுக்களுக்கு இடையே விரோதத்தை ஏற்படுத்தியது, குற்ற சதி என பல பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

பாசிச மோடி ஆட்சிக்கு வந்ததிலிருந்து அவர்கள் நடத்தி வருகின்ற கிரிமினல் குற்ற செயல்கள், கார்ப்பரேட்டுகளுக்கு நாட்டின் வளங்களையும் பொதுத்துறை நிறுவனங்களையும் வாரி கொடுப்பது, பழங்குடிகள், தலித்துகள் மீது தொடர்ச்சியாக நடத்தப்படும் தாக்குதல்கள், இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்கள் மீது நடத்தப்படும் இனப்படுகொலைகள் ஆகியவற்றை துணிச்சலுடன் அம்பலப்படுத்தி வருகின்ற நியூஸ் கிளிக் மீது ஆர் எஸ் எஸ் பாஜக தொடர்ச்சியாக ஆத்திரமும், கொலை வெறியும் கொண்டிருந்தது. அதன் வெளிப்பாடு தான் தற்போதைய வழக்குகளும், தாக்குதல்களும்.

நாடு முழுவதும் தனக்கு எதிராக கருத்துகளை தெரிவிப்பவர்கள் அனைவரையும் அடக்கி ஒடுக்குவதற்கு பாசிச பயங்கரவாத வழிமுறைகளை ஆர்எஸ்எஸ் மோடி கும்பல். கடைப்பிடித்து வருகிறது. பத்திரிக்கையாளர்கள் மிரட்டப்படுகிறார்கள் அல்லது அச்சுறுத்தப்பட்டு, கொலை செய்யப்படுகின்றனர்.

இந்திய பத்திரிக்கை சுதந்திரத்தின் உண்மை நிலை.

“இந்திய ஊடகங்களின் நிலையை உலகளவில் செய்திகளில் வைத்திருந்த விஷயங்களில் ஒன்று, 2022 ஆம் ஆண்டு ஆர்எஸ்எஸ் மோடிக்கு  எதிரான செய்திகளை வெளியிட்ட தொலைக்காட்சி நிலையமான என்டிடிவியை, இந்தியாவின் பிரதமர் மோடிக்கு நெருக்கமானவர் என்று அறியப்பட்ட தொழில் அதிபர் கௌதம் அதானி கையகப்படுத்தியது. இவ்வாறு எதிர் கருத்து பேசுபவர்களை கையகப்படுத்துவது முதல் முறையல்ல. 2014 இல், மோடி ஆட்சிக்கு வந்தவுடன், Network18 நிறுவனத்தை மோடியின் மற்றொரு நண்பர் முகேஷ் அம்பானி கையகப்படுத்தினார்.

பிரான்சிலிருந்து வெளியாகும் பத்திரிகைகளை கண்காணிக்கின்ற சுயேச்சை அமைப்பான RSF அறிக்கையின்படி, முகேஷ் அம்பானி 70 க்கும் மேற்பட்ட ஊடகங்களை வைத்திருக்கிறார், அதை குறைந்தது 800 மில்லியன் இந்தியர்கள் பின்பற்றுகிறார்கள். ஊடகங்களின் கார்ப்பரேட்மயமாக்கல் என்பது உலகளாவிய நிகழ்வாக இருந்தாலும், இந்தியாவில் இது நேர்மையான பத்திரிகையின் மீது தாக்குதல் நடத்தி ஒழித்துக் கட்டுவதன் மூலம் நடந்ததாகத் தெரிகிறது” என்று இந்தியாவின் முன்னணி ஊடகமான ஃப்ரண்ட் லைன் விமர்சித்துள்ளது.

உலகளாவிய ஊடக கண்காணிப்பு அமைப்பான RSF அல்லது Reporters Without Borders இன் 2023 ஆம் ஆண்டு அறிக்கையின்படி,, பத்திரிகை சுதந்திரத்தில் இந்தியாவின் தரவரிசை குறிப்பிடத்தக்க சரிவைக் கண்டுள்ளது. உலக பத்திரிகை சுதந்திர தினத்தன்று (மே 3) வெளியிடப்பட்ட இந்த அறிக்கை, 180 நாடுகளில் இந்தியா 161 வது இடத்தைப் பிடித்துள்ளது. என்று பத்திரிக்கை சுதந்திரத்தின் அவல நிலையை அம்பலப்படுத்தியது. இந்தியாவில் உள்ள பிபிசி தலைமையகத்தில் நடத்தப்பட்ட சோதனைகள், உலகளாவிய விமர்சனங்களை ஈர்த்தது, பொதுவாக நிருபர்கள் செயல்படும் கட்டுப்பாடுகள் ஆகியவை இந்த வீழ்ச்சிக்கு பங்களித்தன என்று சில நிபுணர்கள் நம்புகின்றனர். 2022ல் இந்தியாவின் தரவரிசை 150 ஆக இருந்தது. அது மேலும் பின்னடைந்து 161 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

அண்டை நாடுகளான இலங்கை மற்றும் பாகிஸ்தான் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் தங்கள் தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளன, பாகிஸ்தான் 2022 இல் 157 வது இடத்திலிருந்து 150 வது இடத்திற்கு உயர்ந்துள்ளது, மேலும் இலங்கை 11 இடங்கள் முன்னேறி 135 வது இடத்தைப் பிடித்தது. நார்வே, அயர்லாந்து, டென்மார்க் ஆகிய நாடுகள் முறையே முதல் மூன்று இடங்களைப் பிடித்தன. அதேசமயம், வியட்நாம் (178வது), சீனா (179வது), வடகொரியா (180வது) ஆகியவை கடைசி மூன்று இடங்களில் உள்ளன.

இதையும் படியுங்கள்:

இந்தியாவில் பாஜக மோடி ஆட்சிக்கு வந்ததிலிருந்து நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வந்துள்ளது. இரு விதங்களில் ஊடகங்கள் ஒடுக்கப்படுகின்றன. ஒன்று, பத்திரிகையாளர்களை நேரடியாக கைதுசெய்து சிறையில் வைப்பது. பெரும் எண்ணிக்கையில் வழக்குகளைத் தொடர்ந்து செயல்பட விடாமல் செய்வது. மற்றொன்று, மிக நவீனமான முறையில் முழு ஊடகத் துறையையும் கட்டுப்படுத்துவது. இப்போது அதைத்தான் செய்கிறார்கள். அதனால்தான் அதிக பயத்தைத் தருகிறது” என்கிறார் தி இந்து நாளிதழின் வாசகர் தரப்பு ஆசிரியரும் மூத்த பத்திரிகையாளருமான ஏ.எஸ். பன்னீர்செல்வன்.

இத்தகைய பின்னணியில் இருந்து நியூஸ் கிளிக் சேனல் மீது  நடத்தப்பட்டுள்ள பாசிச பயங்கரவாத தாக்குதலை புரிந்துகொண்டு அதற்கு எதிராக போராட வேண்டியுள்ளது.

நியூஸ் கிளிக் பத்திரிக்கையில் செயல்படுகின்ற ஊழியர்கள், எழுத்தாளர்கள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள் 43 பேர்கள் மீது போலீஸ் நடத்திய விசாரணை, 30க்கும் மேற்பட்ட இடங்களில் நடத்தப்பட்ட திடீர் சோதனைகள் போன்றவற்றின் காரணமாக இந்தியாவில் உள்ள பத்திரிக்கையாளர்கள் அனைவரும் அச்சமடைந்துள்ளனர் என்று செய்தி வெளியாகியுள்ளது. இதுதான் பாசிசம் உருவாக்க நினைக்கின்ற உளவியல் ரீதியிலான அச்சம் ஆகும்.

இதன் மூலம் தனது அரசியல், பொருளாதார தோல்விகளை மறைத்து மக்களை மயக்கத்தில் ஆழ்த்தி, மீண்டும் பாசிச பயங்கரவாத ஆட்சியை தொடர்வதற்கு துடித்துக் கொண்டுள்ளது ஆர்எஸ்எஸ் பாஜக. இத்தகைய கொடூரமான பாசிச பயங்கரவாத ஆட்சி இனிமேலும் தொடர்வதற்கு எந்த அருகதையும் இல்லை என்பதை இந்தியாவில் உள்ள 140 கோடி மக்களுக்கும் கொண்டு செல்வோம்.

  • சண். வீரபாண்டியன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here