கடந்த 10 ஆண்டுகளாக இந்திய மண்ணையும், மக்களையும் மிகக் கேடான முறையில் ஆட்சி புரிந்து வருகிற மோடி தலைமையிலான பாசிச பாஜக அரசு, தம்மை விமர்சிப்பவர்களை கடுமையான முறையில் ஒடுக்கி வருவதை நாம் அறிவோம். பல்வேறு மனித உரிமை ஆர்வலர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பத்திரிகை, தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகவியலாளர்கள் பலரும் அடக்குமுறைக்கு ஆளாகி உள்ளனர். அந்த வகையில் பிரபல இணையப் பத்திரிகையான நியூஸ் கிளிக் (NewsClick) சென்ற ஆண்டு மோடி அரசின் பாசிச நடவடிக்கையை எதிர்கொண்டது. அந்த இணையப் பத்திரிகை மற்றும் அதன் ஆசிரியர் பிரபீர் புர்கயஸ்தா மீது எப்படியெல்லாம் குற்றச்சாட்டுகள் புனையப்பட்டுள்ளன என்பதைப் பார்த்தால் நம்மால் அதிர்ச்சி அடையாமல் இருக்க முடியாது.
நியூஸ்கிளிக் அலுவலகத்தில் டெல்லி போலீஸ் நடத்திய ரெய்டில் அங்கு பணியாற்றிய 40 ஊழியர்கள் மற்றும் பங்களிப்பாளர்களிடம் விசாரணை மேற்கொண்டு, இறுதியில் நியூஸ்கிளிக்கின் நிறுவனர் புர்கயஸ்தாவும், மனிதவளத் தலைவர் அமித் சக்கரவர்த்தியும் சென்ற ஆண்டு அக்டோபர் 3ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் மீது இந்தியாவின் க(கொ)டுமையான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம், சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் (UAPA) மற்றும் அதன் பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருவரின் மீதான முதல் தகவல் அறிக்கையில் குற்றத் தன்மையின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வு இருந்ததைப் பார்க்க முடிந்தது. இந்த ஆண்டு ஜனவரியில் சக்கரவர்த்தி அரசுத் தரப்பு சாட்சியாக மாறியதால் (மாற்றப் பட்டதால்) அவர் மன்னிக்கப்பட்டு நீதிமன்றக் காவலில் (சிறையில்) இருந்து விடுவிக்கப்பட்டார்.
குற்றப்பத்திரிக்கை முழுவதுமே புனைவுகளின் அடிப்படையில் மட்டுமே அமைந்தது. நியூஸ்கிளிக் நிறுவனரும் அதன் தலைமை ஆசிரியருமான பிரபீர் புர்கயஸ்தா மீதான குற்றப்பத்திரிக்கையில் பல கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ளன. அதாவது இந்த செய்தி நிறுவனமானது சீன அரசாங்கத்துடன் கைகோர்த்து இந்தியாவின் ‘ஆன்மாவை’ தகர்ப்பதற்கான “தகவல் யுத்தத்தை” தொடுக்கிறது என்று குற்றஞ்சாட்டப்பட்டது.
படிக்க:
♦ நியூஸ் கிளிக் ஆசிரியர் சட்ட விரோத கைதும், விடுதலையும்!
♦ நியூஸ் க்ளிக் மீது பாசிச பாஜகவின் தாக்குதல்! கல்லறை கட்டப்படும் பத்திரிக்கை சுதந்திரம்!
மேலும் நக்சலைட்டுகள் மற்றும் காஷ்மீர் பிரிவினைவாத அமைப்புகளுக்கு நிதியளிக்கிறது என்றும், கோவிட் தொற்றுநோய் குறித்துத் தவறான தகவல்களை பரப்பியது, டெல்லி கலவரம் மற்றும் இந்தியா முழுவதும் விவசாயிகள் போராட்டத்தைத் தூண்டியது போன்றவை அதன் மீதான இதர முக்கியக் குற்றச்சாட்டுகள் ஆகும். மார்ச் 29 அன்று காவல்துறையால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை மே முதல் வாரத்தில்தான் பொதுத்தளத்தில் கிடைத்தது.
நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் எதுவும் நிரூபிக்கப் படவில்லை. ஆதாரங்கள் ஏதுமின்றி, வெறுமனே 8 நபர்களின் சாட்சியத்தின் அடிப்படையில் மட்டுமே அந்த வழக்கு அமைந்தது. புர்கயஸ்தாவும், அவரது கூட்டாளிகளும் இணைந்து அரசு இயந்திரத்தை சீர்குலைக்கவும், பலவீனப்படுத்தவும் சதி செய்தார்கள் என்று போலீசாரால் முன்பே தீர்மானிக்கப்பட்ட அனுமானத்தின் அடிப்படையில்தான் இத்தகைய குற்றச்சாட்டுகள் அமைந்தன.
நெவில் ராய் சிங்கமும், சீனப் பணமும்!
குற்றப்பத்திரிக்கையில் இடம் பெற்றுள்ள ஒரு முக்கிய நபர் அமெரிக்கத் தொழிலதிபரும், சமூக ஆர்வலருமான நெவில் ராய் சிங்கம் ஆவார். அவர் 2018 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் நியூஸ் கிளிக்கின் நடவடிக்கைகளுக்கு 92 கோடிக்கு மேல் பணம் கொடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இவர் சீனாவினால் ஸ்பான்சர் செய்யப்பட்ட ஒருவரிடம் இருந்து பணம் பெற்றதாக காவல்துறை கூறுகிறது.
நெவில் ராயுடன் தொடர்புடைய நிறுவனங்களிடமிருந்து நியூஸ்கிளிக் நிதி பெற்றதாக குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் சக்கரவர்த்தி மற்றும் பிற பொய் சாட்சியங்களைத் தவிர, சீனப் பணம் நியூஸ்கிளிக்கிற்கு வந்துள்ளதற்கான எவ்வித ஆதாரத்தையும் காவல்துறை காட்டவில்லை. பண மோசடி மற்றும் சட்ட விரோதமாக வெளிநாட்டு முதலீட்டை பெற்றதாக குற்றப்பத்திரிக்கைகளில் உள்ளது.
ஆனால் அதன் மீது பண மோசடி தடுப்பு சட்டமோ அல்லது அந்நிய செலாவணி மேலாண்மை சட்டமோ செயல்படுத்தப் படவில்லை. இந்தக் குற்றச்சாட்டுகள் உண்மையில் புர்கயஸ்தா மீது பதிவு செய்யப்பட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் விதிகளுக்கு அப்பாற்பட்டவையாக உள்ளன. பிப்ரவரி 2021 முதலே நியூஸ்கிளிக் சட்டவிரோதமாக வெளிநாட்டு நிதியுதவி பெற்றதாக அமலாக்கத் துறையின் வழக்கில் ஏற்கனவே விசாரணை நடந்து வருகிறது.
இந்த வழக்கில் எந்த ஒரு பாதகமான நடவடிக்கையும் நியூஸ்கிளிக் மற்றும் புர்கயஸ்தாவுக்கு எதிராக எடுக்கக் கூடாது என டில்லி உயர்நீதிமன்றம் ஜூன் 2021 இல் இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது. எனினும் நியூஸ்கிளிக்கின் புர்கயஸ்தா, நெவில் ராய் மற்றும் பல கூட்டாளிகள் ஒன்றிணைந்து மின்னஞ்சல் மூலமாக சதித்திட்டம் தீட்டியதாக இப்போது கூறுகிறது. சீனாவின் ஆதரவோடு இந்தியாவை சிதைக்க, அதாவது அந்நிய சக்திகளின் துணையோடு இந்தியப் பிரதேசங்களைக் கூறு போட சதி செய்ததாக கூறுகிறது. இப்படியான அபாண்டமான குற்றச்சாட்டுகளுக்கு எந்த அடிப்படையும் இல்லை.
2016 – ல் புர்கயஸ்தா, நெவில் ராய் மற்றும் சிலருக்கு இடையே, ஒரு சர்வதேச இடதுசாரி கூட்டணியை உருவாக்குவதற்கான திட்டங்களைப் பற்றி விவாதிக்கப்பட்ட மின்னஞ்சல்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள ஜனநாயக விழுமியங்களையும், மக்களையும் பாதுகாக்க அனைத்துப் பிரிவினரையும் புதிய இயக்கங்களில் அணி திரட்ட வேண்டும் என்பதை அந்த மின்னஞ்சல்கள் குறிப்பிடுகின்றன. நியூஸ்கிளிக்கின் இந்த அரசியல் சார்பு அதன் தலையங்கப் பக்கங்களிலேயே எதிரொலிக்கும் போது, குற்றப்பத்திரிகையில் கூறுவது போல இது எப்படி இந்தியாவை சிதைக்கும் சதியாகும் என்பது தெரியவில்லை.
“தகவல் போர்” எனும் அபாண்டம்!
இந்திய அரசுக்கு எதிராக நியூஸ்கிளிக்கின் தகவல் போர் எனப் பலக் குற்றச்சாட்டுகள் குற்றப்பத்திரிகையில் உள்ளன. ஆனால் இவை வெறும் யூகங்களை அடிப்படையாகக் கொண்டவையாகவும், எந்த வித உண்மையான ஆதாரத்தையும் குறிப்பிடாமல் தனி நபர்களின் சாட்சியத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டுள்ளன. ஜம்மு- காஷ்மீர் மற்றும் அருணாச்சல பிரதேச பகுதிகளை இந்தியப் பகுதிகள் அல்ல எனக் காட்டும் வரைபடங்களை நியூஸ்கிளிக் பயன்படுத்துவதாகவும் முக்கியக் குற்றச்சாட்டு உள்ளது. ஆனால் இதற்கான ஆதாரமும் எதுவும் இல்லை.
அடுத்து கோவிட் – 19 பிரச்சினையில் சீனாவுக்கு ஆதரவாக ஒரு தெளிவான சார்பு காட்டியதாகவும், இந்தியாவில் தொற்றுநோயை கட்டுப்படுத்தவும், அதிலிருந்து மீளவும் இந்தியா மேற்கொண்ட முயற்சிகளை சர்ச்சைக்குள்ளாக்கி மதிப்பிழக்கச் செய்ததாகவும் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் புர்கயஸ்தா உறுப்பினராக உள்ள இந்திய மக்கள் அறிவியல் வலையமைப்பு (All India peoples Science Network) கோவிட்டுக்கு எதிராக தடுப்பூசியை உருவாக்க மேற்கொண்ட இந்திய அரசின் முயற்சிகளை குறை மதிப்புக்கு உள்ளாக்கியது எனவும் குற்றம் சாட்டியது. இதற்கும் ஆதாரம் எதையும் வெளியிடவில்லை.
இந்திய மக்கள் அறிவியல் வலையமைப்பு என்பது 1988 – ல் நிறுவப்பட்டது. தடுப்பூசி செலுத்தத் தொடங்கிய காலகட்டத்தில் பல சிவில் சமூக அமைப்புகள் மற்றும் அறிவியல் நிபுணர்களைப் போலவே கோவிட் தடுப்பூசிகளை போதுமான பரிசோதனை இன்றி அவசர அவசரமாக மக்கள் மீது செலுத்தப்பட்டதை விமர்சித்தது. மேலும் அவசரமாக அமல்படுத்தப்பட்ட பொது முடக்கம் மற்றும் தனியார் மருத்துவத்துறையின் கொள்ளை லாபம் ஆகியவற்றையும் கூட விமர்சித்தது.
ஜனநாயகம் மற்றும் மதச் சார்பின்மைக்கான மக்கள் கூட்டணி என்ற தனிநபர்களின் ஒருமித்த கூட்டணியுடன் தொடர்புடைய நபர் என்றும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இவ்வமைப்பு தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும் என்ற பொதுக் கருத்தை 2019 நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் உருவாக்க பிரச்சாரம் செய்தது. தேர்தல் செயல்முறையை தடம் புரளச் செய்யும் வகையில் இந்த கூட்டணி என்ன செய்தது என்பதற்கான ஆதாரம் எதையும் காவல்துறை வழங்கவில்லை. மார்ச் 2019 – ல் இக்கூட்டணி வெளியிட்ட அறிக்கையில், அன்றைய நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிரான குறைந்தபட்ச செயல்திட்டத்தின் அடிப்படையில் பொது நிகழ்ச்சி நிரலுக்கு உடன்படுமாறு எதிர்க்கட்சிகளை கேட்டுக்கொண்டது. இதுதான் முக்கிய ‘குற்றம்’ என தோன்றுகிறது.
மேலும் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக அரசுக்கு எதிராக வன்முறையான எதிர்ப்பை மேற்கொள்ளும் வகையில் ஒரு பிரிவினரைத் தூண்டியது, மனதில் அச்சத்தை விதைத்தது போன்றவை நியூஸ்கிளிக் மீதான இதரக் குற்றச்சாட்டுகள் ஆகும். 2019 & 20- ஆம் ஆண்டுகளில் CAA வுக்கு எதிரான போராட்டங்கள் குறித்து செய்தி வெளியீடு, அந்த சட்டம் குறித்தான விமர்சனப் பகுப்பாய்வு, போராட்டக்காரர்கள் மற்றும் அமைப்புகளுடன் புர்கயஸ்தாவுக்கு இருந்தத் தொடர்பு ஆகிய காரணங்களைக் காட்டி இப்படியான குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. ஆனால் தவறான தகவல்களை பரப்பியதற்கான எந்த சான்றும் இல்லை.
இதே போலத்தான் டெல்லிக் கலவரம் தொடர்பாகவும், வீரம் செறிந்த விவசாயிகளின் போராட்டம் பற்றிய செய்திகளையும், மேலும் பீமா கொரேகான் போன்ற விஷயங்களிலும் நியூஸ் கிளிக் ஒன்றிய அரசை விமர்சித்து செய்தி வெளியிட்டது. இந்த விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவமின்றி, சட்டபூர்வமான அரசின் நடவடிக்கைகளை இழிவு படுத்தும் நோக்கத்துடன் தவறான தகவல்களைப் பரப்புவதாக குற்றப் பத்திரிகையை தயாரித்தது. எதற்குமே ஆதாரம் காட்டாமல் வெறுமனே பொய்யான குற்றச்சாட்டுகளை அபாண்டமாக சுமத்தி அவரை சிறையிலும் அடைத்தது.
பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி அளித்தனராம்!
நியூஸ்கிளிக் மற்றும் புர்கயஸ்தா கலவரம் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி அளித்ததாக மிக முக்கிய குற்றச்சாட்டும் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு போலீசால் பாதுகாக்கப்பட்டு வரும் பொய் சாட்சிகளைத் தவிர வேறு எந்த சான்றும் இல்லை. சிஏஏ விவகாரத்தில், முஸ்லிம் சமூகத்தை வன்முறைக்கு தூண்ட, கலவரக் காரர்களுக்கு பணம் விநியோகிக்க புர்கயஸ்தா தன்னை அனுப்பியதாக ஒரு சாட்சி கூறினார்.
காஷ்மீரில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு லஷ்கர்- இ- தொய்பா அமைப்புடன் தொடர்புடைய காஷ்மீர் ஆண்களுக்கு நியூஸ் கிளிக் பணப்பைகளை வழங்கியதாக மற்றொரு சாட்சி கூறியது. இன்னொரு சாட்சி, மகாராஷ்டிரா, தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் நக்சல்களுக்கு வன்முறையைத் தூண்ட நிதி வழங்கியதாகக் கூறியது.
இத்தகையப் பொய்க் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் அப்ரூவர் சக்கரவர்த்தி ஆமோதித்தார். ஆனால் குற்றப்பத்திரிகையில் உள்ள அனைத்து குற்றச்சாட்டுகளையும் அபத்தமானது மற்றும் எவ்வித ஆதாரமுமற்றது என நியூஸ்கிளிக் நிராகரித்தது. இந்த நிலையில்தான் உச்சநீதி மன்றத்தில் வழக்கு விசாரணை முடிந்து, ஒரு வழியாக 7 மாதங்களுக்குப் பிறகு, புர்கயஸ்தா மே மாதம் 15 ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார். UAPA சட்டம் தவறாகப் பயன்படுத்தப் பட்டுள்ளதாகக் கூறி, அரிதான வகையில் தீர்ப்பு வந்துள்ளது.
ஆதாரமே இல்லாமல் அபாண்டமான பொய்க் குற்றச்சாட்டுகளில் இருந்து 74 வயதான ஜனநாயகப் போராளி விடுதலை ஆனது நமக்கெல்லாம் மகிழ்ச்சியான செய்திதான்! ஆனால் இப்படி ஜனநாயக விரோதமாக மாதக் கணக்கில், ஆண்டுக் கணக்கில் சிறையில் அடைத்து கொடுமைப் படுத்தும் குரூர ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளை தண்டிப்பதுதான் இதற்கான தீர்வாக அமையும்! அதற்கான போராட்டங்கள் கட்டியமைக்கப்பட வேண்டும்!
- குரு