ன்றைய உலகம் தொழில் நுட்பத்தால் ஆளப்பட்டு கொண்டுள்ளது என்று கூறினால் அது மிகையல்ல. நம் வாழ்வில் தினசரி கைபேசி பயன்பாட்டின் அளவு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை இதில் விதிவிலக்கு இல்லை என்ற போதிலும் இளைஞர்களிடம் அதீத அளவாக உள்ளது. இன்று நம் உடலின் ஒரு அங்கமாகவே மாறிவிட்ட திறன்பேசிகள் (Smartphones) இன்றி நம் வாழ்க்கையே கேள்விக்குறியாகி விடும் சூழல் உருவாகியுள்ளது.

இந்த அதிகப்படியான பயன்பாட்டின் காரணமாக சில நிமிடங்களுக்கு மேல் எதிலும் கவனம் செலுத்துவதற்கான திறனை இழந்து கொண்டிருக்கிறது இன்றைய இளைய தலைமுறை. முக்கியமான சில வேலை நேரங்களைத் தவிர பெரும்பாலான நேரங்கள் கைபேசி அல்லது கணினி திரைகளை நோக்குவதில் தான் கழிகிறது. நிஜ வாழ்க்கையை விட நிழல் வாழ்க்கையான மெய்நிகர்
(Virtual) உலகில் பயணிப்பதே இன்றையப் போக்காக உள்ளது.

நமக்குத் தேவையான நபர்களிடம் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் பேசுவதற்கும், கடைகளில் பணம் செலுத்துவதற்கும், திரையில் விளையாடுவதற்கும், இன்ஸ்டா, யூடியுப், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களை ஓயாமல் மாறி மாறி பார்ப்பதற்கும் பயன்படும் கைபேசிகள் நம்மை விட்டு அகலாத ஒரு சாதனமாக இன்று மாறிவிட்டன. திறன்பேசியில்(Smart Phone), நமது அன்றாடப் பயன்பாடு குறைந்தபட்சம் 6 மணி நேரங்களில் இருந்து அதிகபட்சம் 12 மணி நேரம் வரை நீண்டு விடுகிறது.

டிஜிட்டல் போதையின் விளைவுகள்!

இப்படியான அதீதப் பயன்பாடு நம் மூளையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நமது கவனத்தை நாமாக ஒன்றில் செலுத்துவதற்கு பதிலாக, நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் டிஜிட்டல் ஊடகங்கள் நமது கவனத்தை தானாக ஈர்த்துக் கொள்கின்றன. இப்படி எளிமையான, கிளர்ச்சியூட்டும் பொழுதுபோக்கு விசயத்திற்கு பழக்கப்பட்டு அதில் அடிமையாகிப் போகும் நமது மூளையின் செயல்பாடு, மூளையின் உழைப்பைக் கோரும் படித்தல், புரிந்து கொள்ளுதல் மற்றும் உள்வாங்குதல் போன்ற செயலாக்கம் தேவைப்படும் பணிகளில் ஈடுபட மறுக்கிறது அல்லது அந்தப் பணியானது நமக்கு கடினமானதாக மாறுகிறது.

ரீல்ஸ்களில் லயித்துப் போகும் நமது மூளையின் ஒரே பகுதி திரும்பத் திரும்ப ஈர்க்கப்படுவதால் அது ஒரு போதைப் பழக்கத்தை போல மாறுகிறது. இத்தகைய போதையானது நமது மற்ற பணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நம்மை அடிமையாக்குகிறது. இது நம்மை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் சோர்வடைய வைக்கிறது. ஆனாலும் அதிலிருந்து மீள முடியாத ஒரு திரை போதைக்கு நாம் ஆளாகி விட்டோம் என்று ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும். இன்றைய குழந்தைகளை நினைத்தால் மிகவும் வேதனையாக உள்ளது.

தொழில்நுட்பம் சார்ந்த நவீன கண்டுபிடிப்புகள் அனைத்தும் மனித குலத்திற்கு பெரும் நன்மைகளை உருவாக்கினாலும் அதில் ஆபத்துகளும் இல்லாமல் இல்லை என்பதைத்தான் இவைக் காட்டுகின்றன. சமீபத்திய ஆய்வு ஒன்றில் ஆஸ்திரேலியாவில் உள்ள இளைஞர்கள் ஒரு நாளில் 9 மணி நேரம் கைபேசி திரைகளை பார்க்கிறார்கள் என்றும், 45 முதல் 65 வயதினர் கூட 6 மணி நேரம் செலவிடுவதாக தெரிய வந்துள்ளது.

இதன் விளைவாக நிறைய பேர் தகவல் சுமையால் (Data burdon) பாதிக்கப் படுகின்றனர். அளவற்றத் தரவுகளால் உடல் மற்றும் மன ரீதியாகவும் பாதிப்பை சந்திக்கின்றனர். சமூக ஊடகங்களில் தொடர்ந்து இணைந்திருப்பதனால், நமது தூக்கமும் கெட்டு அதனால் வேறு சில நாட்பட்ட உடல்நலக் கோளாறுகளும் ஏற்படுகின்றன. இரவில் வெகு நேரம் கைபேசி திரைகளைப் பார்ப்பதால், திரையில் இருந்து வரும் ஒளியானது நமது மூளையைக் குழப்பி தூக்கத்திற்கான ஹார்மோனான மெலட்டோனின் சுரப்பதும் தடுக்கப்படுகிறது என்பதை ஆய்வுகள் நிரூபித்துள்ளன.

டிஜிட்டல் நச்சுநீக்கம்(Digital detox) என்பது என்ன?

சமூக ஊடகப் பயன்பாட்டின் தாக்கம் பெருமளவு இருப்பதால்தான் சிலர் குறிப்பிட்ட காலத்திற்கு கைபேசி உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் போன்றவற்றிலிருந்து விலகி இருக்க விரும்புகின்றனர். சில வாழ்வியல் பயிற்சியாளர்கள் (Lifestyle coach) டிஜிட்டல் நச்சு நீக்கம் என்பதை ஒரு பயிற்சியாக மேற்கொள்ள ஆலோசனை வழங்குகின்றனர்.

இந்தக் கருத்து இப்போது இணையவெளியிலும் பிரபலமடைந்து வருகிறது. இதன் ஆதரவாளர்கள் திறன்பேசிகளுக்கு முந்தைய நாட்களின் வாழ்வியல் முறைகளையும், அதன் ஆரோக்கிய நன்மைகளையும் புகழ்ந்துரைக்கின்றனர். இப்பழக்கத்திலிருந்து விடுபடவும், ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்வை மாற்றும் நோக்கத்திலும் சிலர் பயிற்சி முகாம்களுக்கு பெருந்தொகை செலுத்தி செல்கின்றனர்.

டிஜிட்டல் நச்சு நீக்கம் என்பது மது அல்லது போதை பொருட்களின் அடிமைத்தனத்திலிருந்து விடுபடுவதைப் போல, ஒருவரை டிஜிட்டல் போதையில் இருந்து பாதுகாப்பாக விடுவிக்கும் செயல்முறையாக பார்க்கப்படுகிறது. இதன் நோக்கம் மின்னணு சாதனங்களின் கட்டுப்பாட்டில் இருந்து விலகி, குறைவான கவனச் சிதறலுடன் வாழ்க்கையை அனுபவிப்பதும், சமூக ஊடகங்களின் மூலமல்லாத மற்ற வழிகளில் உறவுகளை வளர்த்துப் பேணுவதுமாக உள்ளது.

டிஜிட்டல் நச்சு நீக்கம் பலனளிக்குமா?

சமீபத்தில் நடத்தப்பட்ட சில ஆய்வுகள் டிஜிட்டல் நச்சு நீக்கமானது மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்று தெரிவிக்கின்றன. 2025 ஆம் ஆண்டில் மெட்டா நிறுவனம் சமூக ஊடகப் பயன்பாட்டில் இருந்து விலகுவதால் ஏற்படும் விளைவுகளை பகுப்பாய்வு செய்தது. இதில் பங்கேற்றவர்கள் மனச்சோர்வு, பதட்டம் மற்றும் தனிமை உணர்வு குறைந்து இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

சென்ற ஆண்டில் நடத்தப்பட்ட இன்னொரு ஆய்வில் ஆராய்ச்சியாளர்கள், பங்கேற்பாளர்களின் திறன்பேசிகளை இரண்டு வார காலத்திற்கு முடக்கி, அழைப்பு மற்றும் குறுஞ்செய்திகளை மட்டுமே பெறும்படி செய்தனர். அவர்கள் சமூக ஊடகங்களில் செலவிட்ட நேரத்தை நேரில் பழகுதல், உடற்பயிற்சி செய்தல் மற்றும் இயற்கையோடு இணைந்திருத்தல் போன்ற நன்மை பயக்கும் செயல்களில் செலவிட்டனர்.

படிக்க:

 ஆஸ்திரேலியாவில் சமூக வலைதள பயன்பாட்டுக்கு தடை! ’கருத்துரிமைக் காவலன்’ எலான் மஸ்க் எரிச்சல்!

 தவெகவின் தேர்தல் வெற்றிக்கு அடிப்படை காட்சி போதைக்கு அடிமையாகியுள்ள தமிழ் சமூகத்தின் தோல்வியே!

இந்த ஆய்வின் முடிவுகள் வியக்கத்தக்கவையாக இருந்தன. மன அழுத்த எதிர்ப்பு மருந்துகளை விட, பங்கேற்பாளர்களுக்கு மன ஆரோக்கியத்தில் ஒரு பெரிய நேர்மறையான விளைவை ஏற்படுத்தியதை கண்டறிந்தனர். இதனால் தான் தொழில்நுட்பத்தில் முன்னேறிய நாடான தென்கொரியா போன்றவற்றில் கூட மாணவர்கள் வகுப்பறைகளில் கைப்பேசிகளை பயன்படுத்த தடை செய்யும் புதிய சட்டத்தை இயற்றியுள்ளது.

டிஜிட்டல் போதையில் இருந்து மீள்வது எப்படி?

இன்றைய முதலாளித்துவ உலகம் மக்களிடம் நுகர்வு வெறியைத் தூண்டி, அனைத்தையும் நுகரத் துடிக்கும் ஒரு கலாச்சாரத்தை திட்டமிட்டே பரப்புகிறது. மேலும் முதலாளித்துவமானது கவனத்தை ஈர்ப்பதை ஒரு வணிகமாக மாற்றி உள்ளது. இலாபத்தை மட்டுமே ஒரே நோக்கமாகக் கொண்ட நிறுவனங்கள் பயனாளிகளைத் தொடர்ந்து திரையில் தக்க வைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட வழிமுறைகளை(Algorithm) உருவாக்குகின்றன. இதுவே சமூக ஊடக அடிமைத்தனத்திற்கும், பொழுதுபோக்கு போதைக்கும் வழி வகுக்கிறது.

இத்தகைய டிஜிட்டல் போதை குறித்து ஓரளவு விழிப்புணர்வை அடைபவர்கள் நேரடி செயல் சார்ந்த விளையாட்டு போன்ற பொழுதுபோக்குகளிலும், பிற நேரடி சமூக நடவடிக்கைகளிலும் ஈடுபடுகின்றனர். சிலர் திரையைப் பார்க்காமல் ஹெட்போன் மூலம் பாடல்களை கேட்கும் பழக்கத்திற்கு மாறுகின்றனர். தினசரி பயன்பாட்டை ஓரிரு மணி நேரம் குறைப்பதை வழக்கமாக்குவதன் மூலம் வலுவான மற்றும் நீண்டகால மன நலன்களைப் பெற முடியும்.

டிஜிட்டல் நச்சு நீக்கத்தை நீடிக்க உதவும் சில வழிமுறைகள்:

01. கைபேசியை அடிக்கடி எடுத்துப் பார்ப்பது அல்லது அதை எல்லா இடங்களுக்கும் எடுத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும்.

02. குறிப்பிட்ட நேரம் மட்டுமே அதை பயன்படுத்துவது என்று கால நிர்ணயம் செய்ய வேண்டும்.

03. நமது இலக்குகளை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதன் மூலம் அவர்களும் புரிந்து கொள்வர் மற்றும் முயற்சி செய்வர்.

04. இரவில் எட்டு மணிக்கு மேல் கைபேசிகளை பார்ப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். நடுவில் விழிப்பு ஏற்பட்டாலும் கூட கைபேசியை எடுக்கக் கூடாது.

இப்படியான சுய ஒழுக்கத்தை கடைபிடிப்பதன் மூலம் இந்த டிஜிட்டல் போதையிலிருந்து வெளிவர முடியும். டிஜிட்டல் போதை நீக்கத்தின் நோக்கம் தொழில்நுட்பத்தை நிராகரிப்பது அல்ல. மாறாக அதை விழிப்புணர்வுடனும் திட்டமிட்ட முறையிலும் பயன்படுத்துவதே ஆகும்.

  • குரு

ஆதாரம்: https://scroll.in/article/1092794/digital-detox-does-it-really-work-or-is-it-just-another-wellness-trend

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here