இந்தியாவின் வரலாறு முழுமையானதாக எழுதப்படவில்லை என்று வரலாற்று ஆய்வாளர்கள் பல ஆண்டுகளாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நாட்டின் பூர்வ குடிமக்கள் மீது வந்தேறிகளான ஆரியர்கள் படிப்படியாக ஆதிக்கம் செலுத்தி மண்ணின் மைந்தர்களின் வரலாற்றை ஒழித்துக் கட்டினார்கள்; இருட்டடிப்பு செய்தார்கள்.
பார்ப்பன கொடுங்கோன்மைகளையும், வர்ணாசிரமக் கொள்கைகளையும் கேள்விக்குள்ளாக்கிய இலக்கியங்களையும், வரலாற்றையும் புறக்கணிப்பதற்காகவே கிபி மூன்றாம் நூற்றாண்டு முதல் ஆறாம் நூற்றாண்டு வரை இருண்ட காலம் என்றெல்லாம் கதை அளந்து கொண்டிருந்தனர்.
ஆரியர்களின் வருகைக்கு முன்பே இந்த மண்ணின் மைந்தர்கள் உயர்ந்த நாகரிக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தார்கள் என்பதை ஆரிய பார்ப்பன கும்பலால் அங்கீகரிக்க முடியவில்லை. ஆரியர்கள் இந்த மண்ணின் பூர்வ குடிகள் என்று நிரூபிப்பதற்கு படாத பாடு படுகிறார்கள் என்பது மட்டுமின்றி வரலாற்றை திரித்து புரட்டுவதற்கு பல்வேறு ஆய்வாளர்கள்; கைக்கூலி எழுத்தாளர்கள்; கைக்கூலி வரலாற்று ஆய்வாளர்கள் மூலமாக தொடர்ந்து முயற்சித்து வருகிறார்கள்.
“இந்திய நாகரிகம் என்பது ஆரியர்களால் உருவாக்கப்பட்டது. கால்நடை மேய்க்கும், குதிரை ஓட்டும் அந்த நாடோடி இனக்குழு இந்திய நாகரிகத்தை கட்டி எழுப்பியது. அவர்கள்தான் வேதங்களை எழுதினர்.” – இது ஆரியர்கள் என்று தங்களை அழைத்துக்கொள்ளும் பார்ப்பன கும்பலின் நம்பிக்கை.
தங்கள் பிறப்பிடம் இந்தியாதான் என்பது இந்த ஆரியர்கள் வாதம். இங்கிருந்தே ஆசியா, ஐரோப்பா ஆகிய நாடுகளுக்கு பரவினோம். இப்போது இந்தியா மற்றும் ஐரோப்பாவில் பேசப்படும் இந்தோ – ஐரோப்பிய மொழிகளை உருவாக்கியது தாங்கள்தான் என்கிறார்கள்.
இத்தகைய பொய் கதைகளை நிரூபிப்பதற்காக பாசிச ஆர்எஸ்எஸ் பாஜக இந்திய ஒன்றிய அரசாங்கத்தை கைப்பற்றியது முதல் பல்வேறு பித்தலாட்டங்களையும் வரலாற்று திரிபுகளையும் செய்து வருகிறது.
ஹரியானாவை ஆளும் பா.ஜ. க அரசு ஹரப்பா நாகரிகத்தை சரஸ்வதி நாகரிகமென பெயர் மாற்ற கோரி இருக்கிறது. வேதத்தில் சரஸ்வதி ஆறு என்ற ஒன்று குறிப்பிடப்பட்டுள்ளதே அதற்கு காரணம்.
வேதத்தை அடிப்படையாகக் கொண்டது தான் இந்திய வரலாறு என்பதை நிரூபிப்பதற்காக ஆர்எஸ்எஸ் பாஜக கும்பல் உருவாக்கிய ஆய்வு குழு இஸ்ரோவின் உதவியுடன் அவர்களின் முகத்தில் ஏளனச் சிரிப்பையும், மனதில் மகிழ்ச்சியையும் உருவாக்கியது.
புதிய ஆய்வின் முடிவுகள் இந்திய ஆர்எஸ்எஸ் பாஜக கும்பலுக்கு மகிழ்ச்சிகரமாக உள்ளது என்றாலும் இதன் முடிவுகளும், இதில் கூறப்பட்டுள்ள புள்ளிவிவரங்களும் பொய் என்று இந்தியாவில் பல்வேறு இனங்கள் எவ்வாறு வந்தடைந்தது என்பதை பற்றி ஆய்வு செய்த மரபியலாளரான பேராசிரியர் டேவிட் ரெய்ச்-முன்வைக்கின்றார். இதனை சகித்துக் கொள்ள முடியாத தமிழகத்தைச் சார்ந்த கிரிமினல் மாஃபியா கும்பலின் தலைவனான சுப்பிரமணியம் சாமி தாக்கி ட்விட்டர் பதிவிட்டுள்ளார்.
வரலாற்றை தாங்கள் விரும்பிய வகையில் உருவாக்க நினைக்கிறார்கள் என்பது ஒரு புறம் இருக்க இவர்கள் முன்வைக்கும் வேதத்தின் யோக்கியதையை டாக்டர் அம்பேத்கர் தோலுரித்துக் காட்டுகிறார்.
அம்பேத்கர் பார்ப்பனர்களைக் கடுமையாகச் சாடினார்! “வேதங்களைப் படிக்கும் அல்லது பக்கத்தில் நின்று கேட்கும் சூத்திரர்களின் காதில் காய்ச்சிய ஈயத்தை ஊற்ற வேண்டும் என்று மனுநீதி சொல்கிறது ! அந்த மனுநீதியை கொளுத்த வேண்டும் !” என்று ஆத்திரமுடன் பேசினார். அதன்படியே டிசம்பர் 25ஆம் தேதி 1927ஆம் ஆண்டு மகத்தில் மனுநீதியைக் கொளுத்தினார்!
இவை அனைத்தையும் உள்ளடக்கி இந்திய வரலாறு இதுவரை எழுதப்பட்டுள்ளது. அதனால்தான் ஆரியர்கள் வருகை புரிந்தனர் என்றும் இஸ்லாமியர்கள் ஆக்கிரமித்தனர் என்றும் வரலாறு சிறுவயதிலேயே நச்சுக் கருத்தாக புகட்டப்படுகிறது.
இந்திய வரலாற்றை உண்மையான ஆய்வு முடிவுகளுடன் திருத்தி எழுத வேண்டிய காலகட்டத்தில் நாம் நிற்கின்றோம். பல தலைமுறைகளாக எழுத்தறிவற்றவர்களாக, படிப்பறிவற்றவர்களாக, அடிமைகளாக அடக்கி ஒடுக்கப்பட்டவர்கள் தற்போது ஒன்று இரண்டு தலைமுறைகளாக எழுத படிக்க துவங்கியுள்ளோம்.
இந்த எழுத்தறிவைக் கொண்டு உலக வரலாற்றை மார்க்சிய லெனினிய கண்ணோட்டத்தில் படிக்கின்ற பெரும் பேற்றையும் பெற்றிருக்கின்றோம்.
இதன் அடிப்படையில் நாம் இந்திய வரலாற்றை கூர்ந்து அவதானிக்கும் போது இந்திய வரலாறு தென்னிந்தியாவிலிருந்து திருத்தி எழுதப்பட வேண்டும் என்பதுதான் சரியானதாகும். ஏற்கனவே டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்த ரொமிலா தாப்பர் இதனை முன் வைத்திருக்கின்றார் என்ற போதிலும் இவையெல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்காகவே நீடிக்கின்றது.
படிக்க:
♦ கீழடி ஆய்வு முடிவுகளை வெளியிட மறுக்கும் ஆர் எஸ் எஸ்-பாஜக பார்ப்பனக் கும்பல்.
♦ கீழடி: தமிழர்களின் முன்னேறிய நாகரிகத்தின் அடையாளம்!
கிறிஸ்து பிறப்பதற்கு முன்னரே நான்காம் நூற்றாண்டு முதல் ஆறாம் நூற்றாண்டு வரை மிகச் சிறந்த நகர நாகரீகம் தென்னிந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் கீழடியில் கிடைத்துள்ளது என்பதை ஆய்வு செய்து வெளிக்கொண்டு வந்தார் தொல்லியல் ஆய்வாளரான அமர்நாத் ராமகிருஷ்ணன்.
இந்த ஆய்வு முடிவுகளை 2023 ஆம் ஆண்டு இந்திய ஒன்றிய அரசாங்கத்திற்கு அனுப்பிய பிறகும் அதன் மூலப்பிரதியை இன்று வரை வெளியிடாமல் அதில் திருத்தம் செய்து கொடுக்குமாறு அவரை நிர்பந்தித்து அடக்கு முறையை ஏவி விடுகிறது பாசிச ஆர்எஸ்எஸ் பாஜக கும்பல்.
கீழடி ஆய்வுவறிக்கையை 2023ல் ஒன்றிய அரசிடம் அமர்நாத் ராமகிருஷ்ணன் அளித்தார். அறிக்கையை பெற்று 3 ஆண்டுகளாகியும் ஒன்றிய அரசு அதனை வெளியிட மறுத்து வருகிறது. ஆய்வறிக்கையில் மற்றம் செய்யவது என்ற பேச்சுக்கே இடமில்லை என அமர்நாத் ராமகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.
ஆய்வறிக்கையில் திருத்தங்கள் மேற்கொள்ளுமாறு கடந்த 2025ஆம் ஆண்டு மே மாதம் தெரிவித்திருந்த நிலையில் அறிவியல் பூர்வமாக முறையாக தயாரிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, திருத்தம் மேற்கொள்ள அமர்நாத் மறுப்பு தெரிவித்தார். தற்போது மீண்டும் அறிக்கையில் திருத்தங்கள் மேற்கொள்ள திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.
கீழடி மட்டுமல்ல தென்னிந்தியாவின் இன்னும் பல பகுதிகளை ஆய்வு செய்தால் இந்திய வரலாறு ஆரிய பார்ப்பன கும்பல் முன்வைக்கின்ற வேத நாகரிகத்தையும், சமஸ்கிருத ஆதிக்கத்தையும், பார்ப்பன கும்பலின் மேலாதிக்கத்தையும் கேள்விக்குள்ளாக்கி விடும் என்பது மட்டுமின்றி ஆரியர்கள் இந்த மண்ணின் பூர்வகுடிகள் அல்ல. வந்தேறிகள் தான் என்பதை நிரூபித்து விடும் என்பதால் வரலாற்றை மூடி மறைக்க பல்வேறு வகைகளில் கீழ்த்தரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
இதனால் தமிழகத்தில் உள்ள வரலாற்று அறிஞர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், பேராசிரியர்கள் மற்றும் சமூகத்தின் மீது அக்கறை கொண்ட சமூக செயல்பாட்டாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கீழடி ஆய்வறிக்கையை உடனே வெளியிடு என்று கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.
பாசிச பாஜக கும்பலை வெறும் அறிக்கைகளின் மூலம் உண்மையை பேச வைத்து விட முடியாது. தமிழகத்தில் பாசிச கோமாளி விஜய் ஆட்சிக்கு வந்தது முதல் ஆர்எஸ்எஸ் பாஜக கும்பலின் கொட்டம் அதிகரித்துள்ளது. தெருச் சண்டைகளுக்கு அறைகூவல் விட்டு தயாராகி நிற்கிறார்கள் எனும் போது அறிக்கைகளை பார்த்து, அற உணர்ச்சியுடன் கீழடி ஆய்வறிக்கையை வெளியிடுவார்கள் என்று நாம் நம்ப முடியாது.
எனவே வரலாற்றை இருட்டடிப்புகள் மூலம் மூடி மறைப்பதற்கு முயற்சிக்கின்ற ஆரிய பார்ப்பன கும்பலை அனைத்து வகையிலும் முறியடிக்க, “கீழடி ஆய்வை வெளியிடு! இந்திய வரலாற்றை தென்னிந்தியாவிலிருந்து திருத்தி எழுது!” என்ற முழக்கத்தை முன்வைத்து நாடு தழுவிய இயக்கமாக கொண்டு செல்ல வேண்டும்.
பார்ப்பன பாசிச சக்திகளுக்கு எதிரான போராட்டத்தில் இதனையும் ஒரு ஆயுதமாக பயன்படுத்தி வீழ்த்த வேண்டும்.
- தமிழ்ச்செல்வன்
புதிய ஜனநாயகம் தினசரி






