கவின் ஆணவப் படுகொலை: ஏ3 குற்றவாளி கிருஷ்ணகுமாரியைக் கைது செய்ய ‘ஸ்காட்லாந்த்யாடுக்கு’ அடுத்த தமிழ்நாடு போலீசுக்கு (!?) – 10 மாதம் தாமதம் ஏன்?
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுக மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த மென் பொறியாளர் கவின் செல்வ கணேஷ் (27),நெல்லை ஆதிக்க சாதி சித்த மருத்துவர் சுபாஷினியுடனான மனமொத்த காதல் விவகாரத்தில், அவளது தம்பி சுர்ஜித் என்பவனால் கூட்டுச் சேர்ந்து, கடந்த 2025 ஜூலை 27-ம் தேதியன்று வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இக்கொடுஞ் செயலுக்கு எதிராக “மக்கள் அதிகாரம்” & அதன் தோழமை அமைப்புகள் மூலம் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. குறிப்பாக மதுரை, கோவையில் மாபெரும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. “மக்கள் அதிகாரம்” இணையதளத்தில் பல்வேறு கட்டுரைகள் வடிக்கப்பட்டு கூட்டுக் குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்து விசாரணையை விரைந்து முடித்து கடும் தண்டனை உடனே வழங்கக் கோரினோம். வீடியோ, யூடியூப் மூலம் எமது உணர்வுகளை வெளிப்படுத்தினோம்!
“மக்கள் அதிகாரம்” சார்பாக ஆறுமுக மங்கலம் கிராமத்திற்கு நேரில் சென்று கவின் பெற்றோர் மற்றும் உறவினர்களைச் சந்தித்து ஆறுதல் கூறியதோடு, எமது பக்கபலமான துணையையும் அவர்களிடம் வெளிப்படுத்தி வந்தோம். நம்மைப் போன்றே தோழமை அமைப்புகள் பலவும் கவின் குடும்பத்தினருக்கு ஆதரவாக போராட்டக் களம் கண்டனர்.
குற்றவாளிகளைக் கைது செய்வதில் அலட்சியம்!
கவின் ஆணவப் படுகொலை வழக்கு ஆமை வேகத்தில் நடைபெறுவதைத் தொடர்ந்து அவதானிக்க முடிகிறது. ஆதிக்க சாதி வெறியின் காரணமாகக் கூட்டுச் சதித் திட்டம் தீட்டியே இப்படுகொலை அரங்கேறியது.
அவ்வாறு இருந்தும் ஏ1 குற்றவாளி சுர்ஜித் மட்டும் சவகாசமாக காவல் நிலையத்தில் சரண்டராக அனுமதிக்கப்பட்டான். பின் கைது செய்யப்பட்டான். ஆனால் அவன் மீது மட்டுமே கொலைக் குற்றம் புரிந்தமைக்கான பிரிவுகளில் (IPC302) வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஏ2 குற்றவாளி சுர்ஜித்தின் தந்தை சரவணன் எஸ்.ஐ., ஏ3 குற்றவாளி சுர்ஜித்தின் தாய் கிருஷ்ணா குமாரி, எஸ்.ஐ., ஏ4 குற்றவாளி சுர்ஜித்தின் பெரியம்மா மகன் ஜெயபால்(29) இவர்கள் மீது எளிதாகப் பிணையில் வரத்தக்க வகையிலான பிரிவுகளின் கீழே மட்டுமே வழக்குப் பதிவாகியுள்ளது. இதனை கவின் குடும்பத்தார் தரப்பு மூத்த வழக்கறிஞர் தோழர் பா.பா. மோகன் அவர்களும் வெளிப்படுத்தி உள்ளார்.
ஆக கிருஷ்ணகுமாரி S.I. தவிர மற்ற மூவர் மட்டுமே உடனடியாகக் கைது செய்யப்பட்டனர். சுர்ஜித்தின் தாய் கிருஷ்ணகுமாரி ஏ3 குற்றவாளி என FIR-ல் பதிவு செய்யப்பட்டப் பின்னரும் அவர் கைது செய்யப்படாமல் இவ்வளவு காலம் CPCID போலீசார் வேண்டும் என்றே அவளுக்கு உதவி செய்யும் பொருட்டு, இழுத்தடித்து வந்தனர். காரணம் கேட்டால் அவர் தலைமறைவாகி விட்டாராம்.
படிக்க:
♦ கவின் ஆணவப் படுகொலை: ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்ற வழக்கு விசாரணை!
ஆனால் ஒவ்வொரு நீதிமன்றத்திலும் தம்மைக் கைது செய்யக் கூடாது என ஜாமீன் கோரி வழக்குத் தொடுக்கவும், ஒவ்வொரு நீதிமன்றமும் ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்த பின்னரும், பிடிவாரண்ட் நீதி மன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட பின்னரும், பிடிவாரண்டை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் செல்ல கிருஷ்ண குமாரிக்கு தாராள வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்ட பின்னரும், உச்சநீதிமன்றமும் பிடிவாரண்டு உத்தரவை ரத்து செய்ய முடியாது என மறுத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னரும் மே 29-ல் தான் ‘தலைமறைவாக’ இருந்த கிருஷ்ணகுமாரி S.I.,ஐ CPCID போலீசார் கைது செய்ய முடிந்ததாம். என்னே ஆச்சரியம்?
ஆம், உலகிலேயே ‘ஸ்காட்லாந்த்யாடு போலீசு’ – க்கு அடுத்த நிலையில் உள்ள ‘தமிழ்நாடு போலீஸ்’ எனப் பீற்றிக் கொள்ளும் போலீசாருக்குத் தான் ஒரு சாதாரண அதுவும் அரசின் காவல் துறை பெண் போலீசை கைது செய்வதற்கு பத்து மாதங்களை கடத்தி இருக்கிறார்கள்! எங்கே தலைமறைவாக இருந்தார் என்பதை போலீஸ் கூறுமா? எதற்காக இந்த பித்தலாட்டம்?
தாமதத்திற்கான பின்புலம் என்ன?
கொலையாளி சுர்ஜித்தின் தாய் கிருஷ்ணகுமாரியும் தந்தை சரவணனும் காவல்துறை சார் ஆய்வாளர்கள். ஆதிக்க சாதி தேவர் சமூகத்தினர். மேல்மட்டத்தில் செல்வாக்கு உள்ளவர்கள். இப்படிப்பட்ட பின்புலம் இருந்தமையாலேயே அதிகார வர்க்கத்தாலும், ஆளும் அரசியல் வட்டாரத்தாலும், ஆதிக்க சாதி வெறி பின்னணியாலும் அழுத்தத்திற்கு உள்ளான போலீஸ், அரசாங்கம், உச்ச நீதிமன்ற உத்தர விற்குப் பிறகும் கூட சட்டை செய்யாமல் துச்சமென உதறித் தள்ளிவிட்டு அசட்டை யுடன் கிருஷ்ணகுமாரியை கைது செய்வதிலிருந்து தப்புவிக்க வழிவகை செய்து கொண்டு வந்துள்ளனர் என்பது புலனாகிறது.
இப்படிப்பட்ட தருணத்தில் தமது குடும்பத்தினருக்கு நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த மூத்த மகனைப் பறிகொடுத்த கவின் பெற்றோருக்கும் – உறவினருக்கும் மனநிலை எந்த உச்சத்தை அடைந்து துயரத்தை தந்திருக்கும் என்பதனை அனைவரும் இணைத்தே பார்க்க வேண்டும்.
எனவே, கிருஷ்ணகுமாரி கைது தாமதத்திற்கு காரணமான அனைத்து போலீசார், அரசியல் வட்டாரத்தினர், ஆதிக்க சாதி வெறி தலைவர்கள், அழுத்தம் கொடுத்த அதிகார வர்க்கத்தினர், அனைவரின் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- வழக்கு விசாரணையை மேலும் தாமதப்படுத்தாமல் விரைந்து முடித்து குற்றவாளிகள் அனைவருக்கும் மரண தண்டனை வழங்க வேண்டும்!
- ஆணவப் படுகொலைகளை நிரந்தரமாக தடுத்து நிறுத்தும் வகையிலான கடுமையான தனிச்சட்டம் நிறைவேற்றப்படல் வேண்டும்!
- தமிழ்நாட்டில் “இனி ஆணவப் படுகொலை என்ற பேச்சுக்கே இடமில்லை”- என்ற நிலை உருவாக வேண்டும்!
க.காளிதாஸ்,
ஊடகப்பிரிவு – செய்தி தொடர்பாளர்,
மக்கள் அதிகாரம்,
மதுரை மாவட்டம்.







