10 ஆண்டுகளில் 3,06,000 சிரிய மக்கள் போரினால் உயிரிழப்பு: ஐநா மனித உரிமைகள் அமைப்பு அறிக்கை


ஜூன் 28, 2022 அன்று வெளியிடப்பட்ட ஐநா மனித உரிமைகள் அமைப்பு அறிக்கை சிரியாவில் மார்ச், 2011 தொடங்கி மார்ச், 2021 முடிய பத்தாண்டுகளில் 3,06,000 சிரிய மக்கள் போரினால் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளது. அதாவது அந்த பத்தாண்டுகளில், நாளொன்றுக்கு 83 பேர் போரினால் இறந்துள்ளனர். “இந்த உயிரிழப்புகள் நேரடியாக போரினால் இறந்தவர்கள் எண்ணிக்கை மட்டுமே. உணவு, மருத்துவம், சுத்தமான குடிநீர் போன்ற அத்தியாவசிய தேவைகள் இன்றி உயிரிழந்தவர்கள் கணக்கிடப்பட வேண்டும்” என்கிறார் ஐநா மனித உரிமைகள் ஆணையர் மிச்சேல் பேக்கலேட். இது மட்டுமல்லாமல், கடந்த பத்தாண்டுகளில் 1.2 கோடி சிரிய மக்கள் உள்நாட்டிலும் வெளிநாடுகளுக்கும் புலம்பெயர்ந்துள்ளனர் என்கிறது அல்ஜசீரா.

கடந்த 4 மாதங்களாக, இரஷ்யா உக்ரைன் மீது தொடுத்துள்ள போரை காட்டி நீலிக்கண்ணீர் வடிக்கும் அமெரிக்கா தான் சிரிய மக்கள் இந்த அவல நிலைக்கு முழுமுதற் காரணம்.

சிரியாவில் 2007 முதல் நிலவிய கடும் வறட்சி காரணமாக பல லட்சம் மக்கள் கிராமப்புறங்களில் இருந்து நகர்ப்புறத்திற்கு புலம்பெயர்ந்தனர். சிரிய மக்கள் அதன் அதிபர் பஷார் அல் அஸ்ஸாத் மீது கடும் அதிருப்தியில் இருந்தனர். இந்நிலையில், 2011 ஆம் ஆண்டு நடந்த அரபு வசந்தம் துனிசியா மற்றும் எகிப்து ஆட்சியாளர்களை தூக்கியெறிந்தது, அரபு வசந்தம் கண்டு உத்வேகம் பெற்ற சிரிய மக்கள் அல் அஸ்ஸாத் அரசுக்கு எதிராக போராடினர். சிரிய அரசு போராட்டங்களை கடுமையாக ஒடுக்கியது; நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். இது சிரிய இராணுவத்தில் பிளவை கொண்டு வந்தது.”சுதந்திர சிரிய படை” உருவாக்கப்பட்டது.

படிக்க

இந்நிலையில், சிரிய அரசு இரஷ்யாவுடன் நெருக்கமாக இருந்து வந்தது. அதனால் அல் அஸ்ஸாத் தலைமையிலான சிரிய அரசை தூக்கியெறிய “சுதந்திர சிரியப் படை”க்கு பயிற்சிளித்தது CIA. அல் அஸ்ஸாத் அரசுக்கு எதிரான அந்த படைக்கு 2014ஆம் ஆண்டு முதல் ஆயுதங்கள் வழங்கி வந்துள்ளது‌ அமெரிக்க அரசு. இன்னொரு நாட்டில் போரைத் தூண்டும் நாசகார வேலைகளை செய்தவர் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா.

அதைத் தொடர்ந்து டொனால்ட் டிரம்ப் அதிபராக பதவியேற்ற பிறகு, சிரிய மக்கள் மீது ‘பேரன்பு’ கொண்ட அமெரிக்க அரசு நேரடியாக சிரியாவில் ஏவுகணை தாக்குதல்களில் ஈடுபட்டது. அந்த தாக்குதல்களின் மூலம் சிரிய அரசின் ‘chemical weapons’ இல் இருந்து பாதுகாக்கப்பட்ட சிரிய மக்கள் அமெரிக்க ஏவுகணைகளின் ‘கருணை’க்கு இரையாகினர்.

‘பேரழிவு ஆயுதங்கள்’ வைத்திருக்கும் சதாம் உசேனை தூக்கியெறிய ஈராக் நாட்டின் மீது தாக்குதலைத் தொடுத்து ஈராக் மக்கள் வாழ்வை நிர்மூலமாக்கியது. இது போல் தென் அமெரிக்க நாடுகள், ஆப்ரிக்க நாடுகள், முன்னாள் சோவியத் நாடுகள், ஆப்கானிஸ்தான் என 40க்கும் மேற்பட்ட நாடுகள் அமெரிக்காவின் உலக மேலாதிக்க வெறியினால் சிதைக்கப்பட்டுள்ளன.

எண்ணெய் வளத்துக்காகவும் உலக மேலாதிக்கத்துக்காகவும் நிகழ்த்திய பயங்கரவாதத்திற்கு உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் இறந்துள்ளனர்; கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கை நிலைகுலைந்து போனது.
அமெரிக்க உலக மேலாதிக்கத்தை முறியடிப்பதும் ஏகாதிபத்திய முதலாளித்துவ கட்டமைப்பைத் தகர்த்தெறிவதுமே அமெரிக்காவால் வாழ்விழந்த கோடிக்கணக்கான மக்களுக்கான நீதியாக அமையும். அந்த நீதிக்கான போராட்டத்தில் ஜனநாயகத்தை, மக்களை நேசிக்கும் அனைவரும் பங்கேற்போம்.

  • திருமுருகன்

ஆதாரம்: https://www.ohchr.org/en/press-releases/2022/06/un-human-rights-office-estimates-more-306000-civilians-were-killed-over-10#:~:text=GENEVA%20(28%20June%202022)%20%E2%80%93,Syria%20due%20to%20the%20conflict.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here