கடந்த அக்டோபர் 11 ஆம் தேதி பூந்தமல்லி to வடபழனி மெட்ரோ ரயில் சேவையை துவங்கி வைக்க தமிழ்நாடு வந்திருந்தார் இந்திய பிரதமர் மோடி. அவரை முறையாக விமான நிலையம் சென்று வரவேற்று திருப்பி அனுப்பும் வரை மிகவும் பணிவோடு நடந்துக் கொண்டார் தமிழ்நாட்டின் ‘தூயசக்தி’ முதலமைச்சர் ஜோசப் விஜய்.
தான் பெற்று வளர்த்த பிள்ளை தன்னைப் போலவே இருப்பதை பார்த்து, பெற்றவன் பெருமைக் கொள்வதைப் போல பாசிச மோடி தவெக விஜய்யைப் பார்த்து பெருமைக் கொள்கிறார். மோடி ஆட்சிக்கு வந்த 12 ஆண்டுகளில் எத்தனையோ முறை தேர்தல் பிரச்சாரத்திற்காகவும், அரசு முறை பயணமாகவும் தமிழ்நாட்டிற்கு வந்திருக்கிறார். ஒவ்வொரு முறை வந்த போதும் மாநில அரசின் தரப்பிலும், தமிழக மக்கள் தரப்பிலும் எதிர்ப்பு பலமாக பதிவு செய்யப்படும். ஒரு முறை ஐஐடியின் சுவரை உடைத்துக் கொண்டு ஓடியதை பார்த்து இந்தியாவே சிரித்தது. அப்படி ஒரு பெருமை மிக்க மாநிலமாக தான் தமிழ்நாடு இருந்திருக்கிறது.
மோடி வந்தாலே எதிர்ப்போம் என்று கண்மூடித்தனமாக தமிழ்நாட்டு மக்களும், முற்போக்கு சக்திகளும் எதிர்க்கவில்லை. வலுவான காரணங்களைக் கொண்டே மோடியையும், சங்பரிவார் கும்பலையும் எதிர்த்தார்கள். குறிப்பாக மாநில நலனுக்கு எதிரான பாஜக அரசின் செயல்பாடுகள் மக்களிடையே எதிர்ப்பை உருவாக்கியது.
மாணவர் நலனுக்கு எதிராக புதியக் கல்வி கொள்கையை திணித்தது; நீட் தேர்வை ரத்து செய்ய மறுப்பது; நவீன குலக் கல்வி திட்டமான விஸ்வகர்மா யோஜனாவை அமல்படுத்தியது; இந்தி திணிப்பு… என பாசிச கும்பலின் திட்டங்கள் மாணவர்களின் கல்வி உரிமையை பறித்தது. அதேபோல் தொழிலாளர் நலனுக்கு எதிராக 44 தொழிலாளர் சட்டங்களை சுருக்கி நான்கு தொகுப்புகளாக மாற்றி தொழிற்சங்க உரிமையை பறித்தது. விவசாயிகளுக்கு எதிராக மூன்று வேளாண் திருத்த சட்டங்களை நடைமுறைப் படுத்த முனைந்தது. இப்படியாக உழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக் குள்ளாக்கி கார்ப்பரேட்டுகளை வாழவைக்க தீயாக வேலை செய்த மோடியை மக்கள் எதிர்த்தார்கள்.
மறுபுறம், தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்தது முதல் மாநிலத்திற்கு முறையாக ஒப்படைக்க வேண்டிய நிதிகளை ஒப்படைக்காமல் காலம் தாழ்த்தியது பாஜக அரசு. பிஎம்ஸ்ரீ திட்டத்தை நடைமுறைபடுத்தினால்தான் நிதி என தனது பாசிச குணத்தை வெளிப்படுத்தியது; ஜி.எஸ்.டி நிலுவைத் தொகையை ஒப்படைக்காமல் தமிழ்நாட்டின் நிதி ஆதாரத்தை சீர் குலைத்தது; தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டத்திற்கு தேவையான நிதியை ஒதுக்காமல், எங்களுடைய இந்துராஷ்டிரத்திற்கான திட்டத்தை அமல்படுத்தினால் தான் நிதி என மறைமுகமாக மிரட்டியது; தொகுதி மறுசீரமைப்பு மூலம் தமிழ்நாட்டிற்கு துரோகம் இழைக்க முனைந்தது என ஒன்றிய பாசிச மோடி அரசு தமிழக மக்களுக்கு செய்த துரோகங்கள் ஏராளம். அதனால் தான் மோடியின் தமிழ்நாடு வருகை எப்போதுமே பரபரப்பாக இருக்கும். Go Back Modi டிரெண்டிங்கில் இருக்கும். சமூக வலைதளங்களில் காரசாரமான விவாதங்கள் நடைபெறும். மக்கள் இதன் மூலம் பாசிச பாஜகவின் மக்கள் விரோத திட்டங்களை புரிந்துக் கொண்டிருந்தார்கள். பாசிச பாஜகவையும்-ஆர்.எஸ்.எஸ் ஐயும் தமிழ்நாட்டின் பண்பாட்டிற்கும், சமூக நல்லிணக்கத்திற்கும் எதிராகவே தமிழ்நாட்டு மக்கள் கருதினார்கள்.
படிக்க:
♦ பாசிசக் கோமாளி விஜய்யின் 100 நாள் ஆட்சி: தமிழ்நாட்டை பின்னுக்கு கொண்டு செல்லும் ஆட்சி | பகுதி 1
♦ பாசிசக் கோமாளி விஜய்யின் 100 நாள் ஆட்சி: தமிழ்நாட்டை பின்னுக்கு கொண்டு செல்லும் ஆட்சி | பகுதி 2
ஆனால், மோடியின் தற்போதைய தமிழ்நாட்டின் வருகை எந்த எதிர்ப்பும் இல்லாமல் சுமூகமாக (மே 17 இயக்கம் உள்ளிட்ட சில இயக்கங்கள் கருப்புக் கொடி காட்டிய போதிலும்) இருந்தது. இதனால் மோடியும் ஹாப்பி. விஜய்யும் ஹாப்பி. இதற்கு மோடியின் பேச்சே சாட்சி.
பிரதமர் மோடி பேச்சின் சுருக்கம் இதுதான்: பூந்தமல்லி – வடபழனி இடையிலான சென்னை மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்கி வைத்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தமிழகத்தின் வளர்ச்சிக்கு உள்கட்டமைப்புத் திட்டங்கள் முக்கியப் பங்காற்றுவதாகக் குறிப்பிட்டார். மெட்ரோ ரயில் சேவையின் விரிவாக்கம் போக்குவரத்தை எளிதாக்குவதுடன், மக்களின் பயண நேரத்தைக் குறைத்து, பொருளாதார வளர்ச்சிக்கும் இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கும் வழிவகுக்கும் என்றார். மேலும், சாலை, ரயில்வே, துறைமுகம் உள்ளிட்ட துறைகளில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சித் திட்டங்கள் தமிழகத்தின் முன்னேற்றத்தை விரைவுபடுத்தும் என்றும், மாநில அரசுடன் இணைந்து தமிழக வளர்ச்சிக்காக மத்திய அரசு தொடர்ந்து செயல்படும் என்றும் தெரிவித்தார். மாநிலங்கள் வலுப்பெறும்போதுதான் இந்தியா வலிமையான நாடாக உருவாகும் என்றும் அவர் வலியுறுத்தினார். ஆனால் பேச்சுக்கு கூட தமிழகத்திற்கு தர வேண்டிய, நிலுவையிலுள்ள நிதிகளை தருவதாக கூறவில்லை.
அதேபோல் மோடியின் முன் பேசிய தமிழக முதல்வர் விஜய், தமிழகத்தின் வளர்ச்சிக்காக மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும், அதன் பயன்கள் மக்களை நேரடியாகச் சென்றடைய வேண்டும் என்றும் 2036-ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்துவதே தனது அரசின் இலக்கு எனக் குறிப்பிட்ட அவர், ஊழலற்ற, வெளிப்படையான நிர்வாகத்துடன் சமூகநீதி அடிப்படையிலான அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிப்பதாகத் தெரிவித்தார். மேலும், சென்னை மெட்ரோ ரயில் மூன்றாம் கட்டத் திட்டத்திற்கு விரைந்து ஒப்புதல் அளிக்கவும், கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ திட்டங்களைச் செயல்படுத்தவும், நிலுவையில் உள்ள ₹5,110 கோடி கல்வி நிதியை நிபந்தனையின்றி விடுவிக்கவும் பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்தார். கோதாவரி–காவிரி நதிகள் இணைப்புத் திட்டம், அதிவேக ரயில் வழித்தடங்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளையும் முன்வைத்த அவர், தமிழகத்தின் வளர்ச்சியும் மக்களின் நலனும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
படிக்க:
♦ கல்வி நிதியில் கை வைக்கும் சங்கி தர்மேந்திர பிரதான்!
முதல்வர் விஜய் மோடியிடம் நிதி குறித்து முறையாக கோரிக்கை வைத்துள்ளாரே என்று நீங்கள் கேட்கலாம். அது மக்களின் நீண்டநாள் கோரிக்கை. கடந்த திமுக ஆட்சி காலத்திலும் அதே கோரிக்கை வைக்கப்பட்டது. இதுநாள் வரை அது கோரிக்கையாகவே தொடர்கிறது. தற்போது தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற பொழுது நாங்கள் தேவையில்லாமல் ஒன்றிய பாஜக அரசை எதிர்க்க மாட்டோம். சுமூகமாக கையாண்டு தமிழகத்திற்கு தேவையான நிதி உள்ளிட்ட கோரிக்கைகளைப் பெறுவோம் என்று அறிவித்தார் தமிழக முதல்வர் விஜய். விஜய் கோரிக்கை வைத்தபோது மோடி மேடையில் தானே இருந்தார். உடனே முதல்வர் விஜய்யின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று மோடி அறிவிக்க வேண்டியது தானே. ஏன் செய்யவில்லை.
கொள்கை எதிரி பாஜக என்று அறிவித்துவிட்டு, பாஜகவின் பெயரை சட்டமன்றத்தில் உச்சரித்தாலே அவைக் குறிப்பில் இருந்து நீக்கும் ‘தூயசக்தி’ ஆட்சி தவெக அரசா பாஜகவை துணிவோடு எதிர்த்து நிற்கப் போகிறது. விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு கடந்த காலங்களை போல் அல்லாமல் கலவர பாதிப்பு உள்ள பகுதிகளில் அனுமதி அளித்தது; ஊர்வலத்தின் போது கடைகளை அடித்து நொறுக்கிய சங்கிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்தது; திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பாஜகவுடன் இணைந்து தீயை அணையவிடாமல் பாதுகாப்பது; குஜிலியம்பாறையில் பாஜகவிற்கு எதிராக போராடும் கம்யூனிஸ்டுகளை கணெக்கெடுக்க உத்தரவிட்டது; நீட்டுக்கு எதிராக போராடிய மாணவர்களை கல்லூரிக்குள் புகுந்து கைது செய்தது; தற்போது ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு நிபந்தனை இல்லாமல் அனுமதி அளித்தது என ஆட்சிக்கு வந்து 100 நாட்களில் பாஜகவின் கிளை அமைப்பாய், மோடி பார்த்து பெருமைக் கொள்ளும் அரசாய் தமிழ்நாட்டில் தவெக அரசு செயல்பட்டு வருகிறது.
இப்படி எத்தனை விமர்சனங்கள் வைத்தாலும், ரூட் மாஃபியா கும்பல் மூலம் ரீல்ஸ்களை பரப்பி இந்த செய்திகளே சென்றுவிடாமல் தடுக்கும் வேலைகளையும் தவெக கும்பல் செய்து வருகிறது. தமிழ்நாட்டை கார்ப்பரேட் காவி பாசிச கும்பலுக்கு அடகு வைக்க அடிமையாக செயல்படும் தவெக அரசிற்கு தக்க பாடம் புகட்ட மக்களை தயார்படுத்த வேண்டும்.
- நலன்






