
இந்திய ஒன்றிய அரசான பாசிச பாஜக கொண்டு வந்துள்ள புதிய தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தாத மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதி வழங்காது என்று கல்வி மற்றும் திறன் மேம்பாடு தொழில் முனைவோர் முன்னேற்றம் ஆகியவற்றின் இந்திய ஒன்றிய அமைச்சரான திருவாளர் தர்மேந்திர பிரதான் திமிருடன் அறிவித்துள்ளார்.
அது மட்டுமின்றி போகிற போக்கில் “தமிழக அரசு இந்திய ஒன்றிய அரசுக்கு கட்டுப்பட்டு, அதன் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும்” என்று மிரட்டுகின்ற வகையில் பேட்டியளித்துள்ளார்.
தர்மேந்திர பிரதான் பேசியது என்ன?
உத்தரப் பிரதேசம் வாரணாசியில், காசி தமிழ்ச் சங்கம் 3.0 நிகழ்ச்சி பிப்ரவரி 15-ஆம் தேதி துவங்கியது. இந்த நிகழ்வில் பங்கேற்க தமிழ்நாட்டில் இருந்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் குழு வாரணாசிக்கு சென்றுள்ளன.
இந்த நிகழ்வை அம்மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் துவங்கி வைத்தார். இதில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் பங்கேற்றனர்.
அப்போது, தமிழக பள்ளிக் கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை வழங்காதது ஏன் என்று செய்தியாளர்கள் தர்மேந்திர பிரதானிடம் கேள்வி எழுப்பினர்.
“புதிய கல்வி கொள்கையை தமிழக அரசு ஏற்றுக்கொள்ள மறுப்பதால் ரூ. 2,152 கோடி நிதியை விடுவிக்க சட்டத்தில் இடம் இல்லை என்றும், தமிழ்நாடு அரசு, இந்திய அரசமைப்புக்கு உட்பட்டு செயல்பட வேண்டும்,” என்றும் அவர் பதிலளித்தார்.
“பி.எம். ஶ்ரீ பள்ளிகள் (PM Shri) மட்டுமல்ல, பல்வேறு பிரச்சினைகள் இதற்கு காரணம். அரசியல் காரணங்களுக்காகவே அவர்கள் தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மறுக்கின்றனர். தமிழக மக்களின் நலன்களை அவர்கள் கவனத்தில் கொள்ளவில்லை. ஒட்டுமொத்த நாடும் தேசியக் கல்விக் கொள்கைகளை ஏற்றுக் கொண்ட போதும் தமிழ்நாடு அரசு ஏன் ஏற்க மறுக்கிறது? என்று ஜனநாயக விரோதமாக பாசிச சர்வாதிகார முறையில் பேட்டியளித்துள்ளார்.
இந்திய ஒன்றிய அரசு இந்தி பேசாத மாநிலங்களின் மீது ஆட்சி மொழியாக இந்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கட்டாயமாக திணிப்பது ஒரு தொடர் நிகழ்ச்சி போக்காக மாறி உள்ளது.
படிக்க:
♦ புதிய கல்விக் கொள்கையின் உள்ளார்ந்த அரசியல் – தொடர் கட்டுரை!
♦ மாணவர்களின் எதிர்காலத்தை நிர்மூலமாக்கும் பாசிஸ்டுகள்!
இந்தி திணிப்புக்கு எதிராக தந்தை பெரியார் தலைமையில் நடத்தப்பட்ட இந்தி எதிர்ப்பு போராட்டம் படிப்படியாக தீவிரமடைந்து நடராசன், தாளமுத்து ஆகிய இருவரும் தீக்குளித்தது வரை இந்தி மொழி திணிப்புக்கு எதிரான போராட்டம் இந்தியாவிலேயே தமிழகத்தில் வலுவாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் போராட்டத்தின் தீவிரத் தன்மை காரணமாக இந்தி திணிப்பை தற்காலிகமாக பின் வாங்கிய ஜவஹர்லால் நேரு கீழ்க்கண்டவாறு உறுதிமொழி அளித்தார்.
“இந்தி பேசாத மாநிலங்களின் மக்களுக்கு உறுதி அளிக்கும் வகையில் 1963ல் கொண்டுவரப்பட்ட ஆட்சி மொழிச் சட்டத்தில், 1965க்குப் பிறகும் இந்தியுடன் ஆங்கிலமும் ஆட்சி மொழியாக தொடரலாம் என்று ஒரு திருத்தம் கொண்டுவரப்பட்டது. “தொடரலாம்” என்று இருப்பதை “தொடரும்” என்று மாற்ற வேண்டுமெனக் கோரப்பட்டது.
இரண்டின் பொருளும் ஒன்றுதான் என்றார் பிரதமர் நேரு. அப்படியானால், தொடருமென மாற்றுவதில் என்ன தயக்கமெனக் கேள்வியெழுப்பினார் திமுக தலைவர் சி.என். அண்ணாதுரை. எதிர்ப்புகளை மீறி 1963 ஏப்ரல் 23ஆம் தேதி அந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
அதிலிருந்து தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை கடைபிடிக்கப்படுவதில்லை மாறாக இரு மொழி கொள்கை மட்டும்தான் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
விருப்பத்தின் அடிப்படையில் ஒருவர் மூன்று மொழிகளை கற்றுக் கொள்வதற்கு எந்த தடையும் இல்லை. மூன்று அல்ல முப்பது மொழிகளை கூட அவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் கற்றுக் கொள்ளலாம் ஆனால் கட்டாயப்படுத்தி மூன்று மொழிகளை கற்றுக்கொள்ள வேண்டும் என்று நிர்பந்திப்பது மிரட்டுவது ஆகியவை அனைத்தும் ஜனநாயகத்திற்கு விரோதமான சர்வாதிகார பாசிச ஒடுக்கு முறையின் ஒரு அங்கமாகும்.
புதிய தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தாத மாநிலங்களில் ஒன்றான தமிழகத்திற்கு நிதி அளிக்க முடியாது அதற்கு சட்டத்தில் இடமில்லை என்று பேசுகின்ற அதே ஆர்எஸ்எஸ் பாஜக சங்பரிவார் கும்பல் அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக முதலாளிகளுக்கு, தேசங்கடந்த தரகு முதலாளிகளுக்கு பல ஆயிரம் கோடிகளை தள்ளுபடி செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகம் இந்திய ஒன்றிய அரசுக்கு செலுத்துகின்ற தொகையை திருப்பி கேட்பது மட்டுமல்ல மாநிலங்களின் தேவைகளுக்கு பயன்படுத்தியது போக மீதமுள்ள தொகையை மட்டும் தான் இந்திய ஒன்றியத்துக்கு கட்ட முடியும் என்று கறாராக பேச வேண்டி உள்ளது.
ஒரு எடுத்துக்காட்டாக 2014 – 15ம் ஆண்டு முதல் 2022 – 23ம் ஆண்டு வரை பார்த்தால் பாஜக ஆளும் மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் இருந்து ரூ.2.23 லட்சம் கோடி ஒன்றிய அரசுக்கு கொடுத்தால், அந்த மாநிலத்துக்கு மத்திய அரசு மூலமாக ரூ.15.35 லட்சம் கோடி திரும்ப கிடைத்துள்ளது. ஏனென்றால் அந்த மாநிலம் பாசிச ஆர் எஸ் எஸ் – பாஜக கும்பலின் கூடாரமாக திகழ்கிறது என்பது மட்டுமின்றி இந்துத்துவத்தின் சோதனைச் சாலையாகவும் பயன்படுகிறது.
அதே சமயத்தில் தமிழகம் தனது வருவாயிலிருந்து நேரடி வரிவருவாயாக தமிழகத்தில் இருந்து ரூ.6.23 லட்சம் கோடி ஒன்றிய அரசு பெற்றுள்ளது. இதைத்தவிர மறைமுக வரி பற்றிய விவரங்கள் எதையும் நேர்மையாக தெரிவிப்பதில்லை.
“ஒன்றிய அரசு 2014 – 15ம் ஆண்டு முதல் 2022 – 23 ஆம் ஆண்டு வரை ஏறத்தாழ ரூ.4.75 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே தமிழகத்துக்கு வழங்கியுள்ளது. இந்த ரூ.4.75 லட்சம் கோடியில் ரூ.2.46 லட்சம் கோடி என்பது மத்திய வரிகளில் இருந்து வரி பகிர்வாகவும், அதேபோல ரூ.2.28 லட்சம் கோடி என்பது தமிழகத்துக்கு கிடைக்கக்கூடிய மானியங்கள் மற்றும் உதவித்தொகை அடிப்படையில் வழங்கப்பட்டவை.
இதனை சட்டபூர்வமான வழிப்பறி கொள்ளை என்று நாம் கூற முடியும் தமிழகத்தில் இருந்து வரிவசூலித்து செல்கின்ற இந்திய ஒன்றிய அரசு தமிழகத்திற்கு கல்வி நிதியை ஒதுக்க மாட்டேன் என்று திமிர்த்தனமாக பேசுவதும் தான் வழி கொள்ளையடித்துச் சென்ற பணத்திலிருந்து தமிழகத்தின் கட்டுமான வசதிகள் முதல் விவசாயம் வரை அனைத்திற்கும் நிதி ஒதுக்கீடு செய்ய முடியாது என்று அடாவடி செய்வதும் அதனை இந்திய அரசியலமைப்புச் சட்டம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.
எனவே தமிழகம் உள்ளிட்டு அனைத்து மாநிலங்களின் நிதி தேவைகளை தாங்களே வரி வசூல் செய்து பயன்படுத்திக் கொள்ளும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து போராடுவோம்.
- தமிழ்ச்செல்வன்.