கலைகளும் இலக்கியங்களும் வெறும் கற்பனை உலகங்கள் அல்ல; அவை மனிதச் சமூகத்தின் வாழ்வியலையும், அவர்தம் உழைப்பையும், போராட்டங்களையும் பிரதிபலிக்கும் கண்ணாடிகள். கிராமங்களிலும் நகரங்களிலும் வாழும் விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் என உழைக்கும் ஒட்டுமொத்த மக்களின் அன்றாட வாழ்க்கையும் அனுபவங்களுமே கலை-இலக்கியத்தின் உண்மையான மூலப்பொருட்கள்.
ஆனால், வரலாற்று ரீதியாகவும் நிகழ்காலப் போக்கிலும் கலை-இலக்கியங்களை அணுகும்முறையில் பெரிய முரண்பாடுகள் நீடிக்கின்றன. ஒரு காலத்தில் மேட்டுக்குடியினரின் வாழ்வியலை மட்டுமே பிரதானமாகக் காட்டிய நிலை மாறி, இன்று சாமானிய மக்களின் வாழ்வியல், கலைகளாகவும் இலக்கியங்களாகவும் வெளிவரத் தொடங்கியுள்ளன.
இந்நிலையில், உழைக்கும் மக்களின் கலைகளை ‘நாட்டுப்புறக் கலைகள்’ என்றும், ‘பெண்ணியம்’, ‘தலித்தியம்’, ‘குரலற்றோரின் குரல்’, ‘சிறார் இலக்கியம்’ என்றும் சிறுசிறு அடையாளங்களாகப் பிரித்துப் பார்ப்பது, மக்களைத் தனித்தனித் துண்டுகளாக்கும் செயலாகவே அமையும்.
அடையாள அரசியலின் ஆபத்துக்கள்
இந்த வகைப்பாட்டு முறை தொடர்ந்தால், நாளை ‘தலித்’ இலக்கியம் என்பது அருந்ததியர் இலக்கியம், பறையர் இலக்கியம், பள்ளர் இலக்கியம் என மேலும் பிளவுபடும். சமூகத்தின் எல்லா தளங்களுக்கும் இதை விரிவுபடுத்தினால் பிராமண இலக்கியம், வெள்ளாள இலக்கியம், வன்னியர் இலக்கியம், முத்தரையர் இலக்கியம், முக்குலத்தோர் இலக்கியம், முதலியார் இலக்கியம், நாடார் இலக்கியம், நாயுடு இலக்கியம், ரெட்டியார் இலக்கியம் என கலை இலக்கியங்களின் வகைப்பாடுகள் தனித்தனியே காட்சியளிக்கும் அபாயம் உண்டு.
படிக்க: மக்கள் கலை இலக்கியக் கழகமும் தமிழ் மக்கள் இசை விழாவும்: ஒரு வரலாற்றுப் பார்வை!
இப்படித் தனித்தனியாகப் பிரித்துப் பார்க்கும்போது, ஒவ்வொரு பிரிவு மக்களின் துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் காரணமான பொதுவான சமூக-பொருளாதார அடிக்கட்டமைப்பைப் புரிந்துகொள்ள முடியாத நிலை ஏற்படும். இன்றைய பின்நவீனத்துவக் காலத்தில் பெரும்பாலான இலக்கியப்போக்குகள் இதைத்தான் செய்து வருகின்றன.
இதுமட்டுமின்றி, “யார் எழுதுகிறார்கள்” என்பதை வைத்தும் இன்று இலக்கியங்களுக்கு நாமகரணம் சூட்டப்படுகிறது. பட்டியல் சாதியினர் எழுதினால் அதை ‘தலித் இலக்கியம்’ என்றோ, பெண்கள் எழுதினால் அது ‘பெண்ணியம் சார்ந்த இலக்கியம்’ என்றோ முத்திரை குத்தும் போக்குகள் தீவிரமடைந்துள்ளன.
மேட்டுக்குடி அழகியலும் உழைக்கும் மக்களின் எழுச்சியும்
நீண்டகாலமாகவே, சமூகத்தின் சிறுபான்மையினராக உள்ள மேட்டுக்குடி மக்களின் வாழ்வியலும் உணர்வுகளுமே “உயர் கலைகள்” என்றும் “செவ்வியல் இலக்கியங்கள்” என்றும் முன்னிறுத்தப்பட்டு வந்தன. காரணம், அன்று மேட்டுக்குடியினர் மட்டுமே கல்வியறிவு பெற்றிருந்தார்கள்; கலை இலக்கியங்களைப் படைக்கும் வாய்ப்பையும் ஆற்றலையும் கொண்டிருந்தார்கள். பெரும்பான்மையாக உள்ள உழைக்கும் மக்களின் வேர்வையும் துயரமும் கொண்டாட்டங்களும் அன்று புறக்கணிக்கப்பட்டன.
படிக்க: பிழைப்புக் கலைஞர்களும்… சமூக மாற்றத்தின் போதாமையும்!
ஆனால், இன்று காலம் மாறத் தொடங்கியுள்ளது. கல்வி வெகுமக்களிடையே பரவலாக்கப்பட்டுள்ளதால், அடித்தட்டு மக்களின் உண்மையான வாழ்வியலையும் போராட்டங்களையும் பிரதிபலிக்கும் படைப்புகள் வெளிவரத் தொடங்கியுள்ளன. உழைக்கும் மக்களின் கலைகளும் இலக்கியங்களும் முழு வீச்சில் வெளிவரத் தொடங்கும்போது, இயல்பாகவே மேட்டுக்குடியினரின் செயற்கையான கலை-இலக்கியங்கள் பின்னுக்குத் தள்ளப்படும். இதுவே வரலாற்றின் இயல்பான வளர்ச்சிப் போக்காகும்.
பிரித்துப் பார்ப்பதில் உள்ள சிக்கல்
மக்களின் வாழ்நிலை என்பது கிராமம், நகரம், படித்தவர், படிக்காதவர், அறிவாளி, பாமரன் என அனைவரையும் உள்ளடக்கிய ஒரு பரந்த பரப்பு.
உழைக்கும் மக்களின் கலைகளை ‘நாட்டுப்புறக் கலைகள்’ என்று தனியாகப் பிரிப்பது, மறைமுகமாக அவற்றை நாகரிகமடையாத அல்லது குறைந்த தகுதியுடைய கலைகள் என்பது போல் சித்தரித்து, அம்மக்களை இழிவுபடுத்துவதாக அமைகிறது.
பெண்களின் குரலை ‘பெண்ணியம்’ என்றும், ஒடுக்கப்பட்ட மக்களின் குரலை ‘தலித்தியம்’ என்றும் தனித்தனிச் சிறு பெட்டிகளுக்குள் அடைப்பது, ஒட்டுமொத்த உழைக்கும் வர்க்கத்தின் ஒருமைப்பாட்டைச் சிதைப்பதாக முடிவடைகிறது.
பெண்களின் துயரமும், ஒடுக்கப்பட்ட சமூகத்தின் வலியும், கூலித் தொழிலாளியின் சுரண்டலும் தனித்தனியானவை அல்ல; ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை; அவை அனைத்தும் நிலவும் சுரண்டல் அமைப்பின் வெவ்வேறான வெளிப்பாடுகளே. இவற்றைத் தனித்தனியாகப் பிரிப்பது, மக்களின் பரந்த போராட்டக் களத்தைச் சுருக்கிவிடும்.
படைப்பாளிகளின் கடமை
இன்றைய கலை இலக்கியவாதிகள் செய்ய வேண்டிய முதன்மைப் பணி: உழைக்கும் மக்களின் வாழ்வியலை மையமாகக் கொண்டு கலைகளைப் படைப்பதே ஆகும்.
உழைக்கும் மக்களின் வாழ்க்கையை உண்மையாகவும் ஆழமாகவும் பிரதிபலிக்கும் படைப்புகள் பெருமளவில் உருவாகும்போது, “கலை இலக்கியம்” என்றாலே அது உழைக்கும் மக்களின் கலை இலக்கியம்தான் என்னும் நிலையை வரலாறு தானாகவே உருவாக்கும். அதற்குத் தனியாக எந்தக் கூடுதல் அடையாளச் சொல்லும் தேவையில்லை.
படிக்க: கலை யாருக்காக? நிலவுடைமைக் கலைகளும் மக்களுக்கான கலையும்!
கலையை ‘நாட்டுப்புறக் கலை’ என்றோ, ‘தலித் இலக்கியம்’ என்றோ வகைப்படுத்தி அடையாளப் பதாகைகளை மாட்டுவது, உழைக்கும் மக்களின் படைப்புகளுக்குச் சம தகுதி தருவதற்குப் பதிலாக, அவற்றை முதன்மை நீரோட்டத்திலிருந்து ஒதுக்கி வைப்பதற்கே வழிவகுக்கும்.
கலை இலக்கியம் யாவும் மக்களுக்கே!
கலை என்பது மக்களின் வாழ்வியலைப் புரிந்துகொள்ளவும் வெளிப்படுத்தவும் கூடிய ஒரு சக்திவாய்ந்த ஊடகம். மனிதர்களிடையே பல பிரிவினைகள் இருந்தாலும், உழைப்பும் வாழ்வியல் தேவைகளும் அனைவருக்கும் பொதுவானவை.
எனவே, கலை இலக்கியங்களைச் சாதி, மதம், பாலினம், இனம் என்ற பெயரால் பிரித்துப் பார்க்கும் அடையாள அரசியலுக்கு எதிராக நாம் விழிப்புணர்வு கொள்ள வேண்டும். உழைக்கும் மக்களின் ஒட்டுமொத்த வாழ்வியலே கலை இலக்கியத்தின் மையமாக இருக்க வேண்டும்.
“கலை இலக்கியம் யாவும் மக்களுக்கே!” என்னும் பொதுவான, முற்போக்கான வர்க்கப் பார்வையின் கீழ் உழைக்கும் மக்களின் குரல்கள் ஒன்றாக இணைய வேண்டும். அதுவே உண்மையான மக்கள் கலைக்கான வெற்றியாக அமையும்!
— தமிழ்மணி






