பழங்குடிகளுக்கு 24,000 கோடி ஒதுக்கீடு! தேர்தலில் ஓட்டுப் பொறுக்கும் பாஜகவின் தந்திரம்!


“ 2019 சட்டமன்ற தேர்தலில் ஜார்கண்ட் மாநிலத்தில் போட்டியிட்ட 28 ரிசர்வ் தொகுதிகளில் இரண்டு இடங்களும், சட்டிஸ்கர் மாநிலத்தில் 29 ரிசர்வ் தொகுதிகளில் மூன்று இடத்திலும், மத்திய பிரதேசத்தில் 47 ரிசர்வ் தொகுதிகளில் 16 இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது பா.ஜ.க. இதைத் தொடர்ந்து தான் 2022, நவம்பர் மாதத்தில் பழங்குடி மக்களின் போராளி பிர்சா முண்டா பிறந்த நாளை பழங்குடி மக்களின் கெளரவ நாளாக அறிவித்தது பாஜக அரசு. மத்திய பிரதேசம், ஜார்கண்ட், சட்டீஸ்கர், ஒடிசா உள்ளிட்ட பழங்குடிகள் அதிகம் வாழும் பகுதிகளில் பாஜக-வின் தேர்தல் தோல்விகள், அக்கட்சியை பழங்குடிகள் ஆதரவு நிலைப்பாடு எடுக்க வைத்துள்ளது” என்று பாரதிய ஜனதா கட்சியின் பழங்குடி மக்கள் மீதான திடீர் பாசத்தை திரை கிழித்து தோழர் செல்வா, நமது ஊடகத்தில் எழுதினார்.

தற்போது சத்தீஸ்கரில் வரப் போகின்ற சட்டமன்றத் தேர்தல், மற்றும் ஜார்கண்டில் அடுத்து வரப் போகின்ற சட்டமன்றத் தேர்தல் போன்றவற்றை மனதில் வைத்து, பழங்குடிகளுக்கு 24 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கி, பாசிச மோடி அரசு பம்மாத்து காட்டியுள்ளது.

பழங்குடிகளின் தலைவர் பிர்சா முண்டா 

இந்தியாவில் உள்ள பழங்குடி மக்கள் 12 கோடி பேர் அல்லது தேசிய மக்கள்தொகையில் 8.6% என மதிப்பிடப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட 705 இனக்குழுக்கள் இருந்தாலும், பட்டியலிடப்பட்ட பழங்குடி அந்தஸ்துக்கு தகுதி பெறும் நிலையில் இன்னும் பல இனக்குழுக்கள் உள்ளன, ஆனால் அவை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை. நாடு முழுவதும் பரந்து விரிந்து வாழும் பழங்குடி மக்கள் 150 மொழிகளை பேசுகின்றவர்களாக உள்ளனர். அரசாங்கம் பழங்குடி மக்களை முழுமையாக ஆய்வு செய்து அவர்களுக்கு உரிய அங்கீகாரம் கொடுக்கவில்லை

நவீன அறிவியல் வளர்ந்துள்ளதாக பீற்றிக்கொள்ளப்படும் தற்காலத்தில் கூட இதுதான் நிலைமை என்று சொன்னால் ,150 ஆண்டுகளுக்கு முன்னால் மிகவும் மோசமான நிலைமையிலேயே இருந்திருக்கும் என்பதை குறிப்பிடவே தேவையில்லை.

இப்படிப்பட்ட சூழலில் இருந்த பழங்குடி மக்கள் மத்தியில் விடிவெள்ளியாக உதித்தவர் தான் பிர்சா முண்டா.1875-ம் ஆண்டு அன்றைய பீகார் மாநிலதில் தந்தை சுக்ணா முண்டா, தாயார் கர்மி ஹட்டு முண்டா ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார்

பழங்குடிகளின் தலைவர் பிர்சா முண்டா

அநீதிக்கு எதிரான பழங்குடி மக்கள் உரிமைப் போராட்டத்தின் முதல் குரல் பிர்சா முண்டாவுடையதே. ‘பிர்சா’ என்றால் வியாழன், ‘முண்டா’ என்றால் ஆதிவாசி என்று பொருள். 1865 ஆம் ஆண்டுகளில் பிரிட்டன் காலனி ஆதிக்கம் கொண்டு வந்த காடுகளைப் பற்றிய சட்டம் காடுகளில் வசித்து வந்த பழங்குடி மக்களிடமிருந்து அவர்களின் நிலங்களைப் பறித்தது. காடுகளின் ஒவ்வொரு சதுர அடியும் பிரிட்டிஷ் அரசுக்கே சொந்தம்” எனும் சிறப்புச் சட்டத்தைக் கொண்டு வந்தது. காடுகளில் பல நூற்றாண்டுகளாக வசித்து வரும் அவர்களின் உரிமையை ஒழித்துக் கட்ட விரும்பியது.

இந்த காலகட்டத்தில் பிர்சா முண்டா பிரிட்டன் காலனியாதிக்கத்திற்கு எதிராக துணிச்சலுடன் கொரில்லா படையைக் கட்டி எதிர்த்து போராடினார். காடுகளில் இருந்து பழங்குடி மக்களை விரட்டியடிப்பதை எதிர்த்து, “நீர் நமது! நிலம் நமது! வனம் நமது” எனும் முழக்கத்தை முன்வைத்து பழங்குடி மக்களிடம் கிளர்ச்சியை உருவாக்கினார்..

1895-ம் ஆண்டு நடைபெற்ற இந்தப் போராட்டத்தின்போது பிர்சா முண்டாவின் வயது வெறும் 19-தான். அதுவே பழங்குடி மக்கள் தனது நில உரிமைக்காக போராடிய வரலாற்றின் முதல் போராட்டமாகும். பண்ணையார்கள் மற்றும் ஜமீன்தார்கள் உதவியுடன் பிரிட்டன் காலனிய அரசாங்கம் பழங்குடிகளின் நிலங்களைப் பறித்தபோது “தனது ஒரு குரலைவிட, ஒட்டு மொத்த பழங்குடி மக்களின் குரலே அதிகாரத்தை அசைக்கும்” என முழங்கி, பழங்குடி மக்களை ஒன்று சேர்த்து படை கட்டிப் போராடினார்.

“உழைப்பவனுக்கே நிலம் சொந்தம்” எனும் விவசாயிகளின் விவசாய புரட்சிக்கு அடிப்படையான முழக்கத்திற்கு அப்போதே செயல் வடிவம் தந்தார் பிர்சா முண்டா. இதனால் பழங்குடி மக்கள் இன்றளவும் இவரை `மண்ணின் தந்தை’ என்று பெருமையுடன் அழைக்கின்றனர்..

இதையும் படிக்க: வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டமும் கேள்விக்குறியாகும் பழங்குடிகளின் வாழ்க்கையும்!

1899-ம் ஆண்டு பிரிட்டிஷ் படையை எதிர்த்து, “உல்குலான்” என்று அழைக்கப்படும் கொரில்லா போர் முறையில் மறைந்திருந்து தாக்கும் தந்திரத்தைப் பயன்படுத்தி வில், அம்புகளை மட்டுமே கொண்டு பிரிட்டன் படைகளை கதி கலக்கச் செய்தார் பிர்சா முண்டா.

பிரிட்டன் படையை எதிர்த்துப் போராடிய குற்றத்துக்காக பிர்சா முண்டா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறைக் கொடுமைகளாலும் சித்திரவதைகளாலும் 1900-ம் ஆண்டு ஜூன் 9-ம் தேதியன்று காலரா நோயால் அவர் இறந்ததாக பிரிட்டன் அரசாங்கம் அறிவித்தது. அந்தமான் தீவுகளில் அடைக்கப்பட்டபோது மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்த சாவர்க்கரை போன்ற கோழை அல்ல பிர்சா முண்டா,. மண்ணுரிமைக்காகவும், வன உரிமைக்காகவும் வீரத்துடன் போராடிய போது அவருக்கு வயது வெறும் 25 மட்டும்தான்.

காடுகளும், மலைகளும் பழங்குடிகளுக்கே என முழங்குவோம்!

பிர்சா முண்டா இறந்து சரியாக எட்டு ஆண்டுகள் கழித்து சோட்டாநாக்பூர் சட்டம் (Chotanagpur Tenancy Act 1908) கொண்டுவரப்பட்டது. ஆதிவாசிகளின் நிலத்தை வேறு யாரும் பயன்படுத்த முடியாது என்பதை இந்தச் சட்டம் உறுதி செய்தது. ஆனால் நாடு முழுவதும் பழங்குடி மக்கள் அவர்களின் வாழ்விடங்களிலிருந்து விரட்டி அடிக்கப்படுகின்றனர். ஏறக்குறைய 55 சதவீத பழங்குடி மக்கள் காடுகளிலும், மலைகளிலும் இருந்து இந்திய ஒன்றிய அரசினால் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் ஏழு வடகிழக்கு மாநிலங்களிலும், ராஜஸ்தானில் இருந்து மேற்கு வங்கம் வரை பரவியுள்ள “மத்திய பழங்குடி மண்டலம்” என்று அழைக்கப்படும் பகுதிகளிலும் பழங்குடியினரின் மிகப்பெரிய செறிவு காணப்படுகிறது. இது மட்டும் இன்றி மகாராஷ்ட்ரா, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் பீகார், சத்தீஸ்கர், ஜார்கண்ட், மத்திய பிரதேசம், ஒடிசா போன்ற மாநிலங்களிலும் பரவலாக வாழ்கின்றனர் பழங்குடி மக்கள்.

காடுகளிலும் மலைகளிலும் கொட்டிக் கிடக்கும் கனிம வளங்களை வேட்டையாடுவதற்காக பழங்குடி மக்கள் அவர்களின் வாழ்விடங்களில் இருந்து விரட்டியடிக்கப்படுகிறார்கள். மண்ணின் மைந்தர்களான பூர்வ குடிமக்கள் தங்கள் வசிப்பிடங்களையும் இழந்து, பல நூற்றாண்டுகளாக பாதுகாத்து வந்த காடுகளையும், கனிம வளங்களையும் இழந்து விரட்டியடிக்கப்படுவது பாசிச மோடியின் ஆட்சியில் பல மடங்கு அதிகரித்துள்ளது.

இந்த உண்மைகளை மறைத்து விட்டு தேர்தல் வெற்றிக்காக பாசிச ஆர் எஸ் எஸ் மோடி கும்பல், பழங்குடி மக்களின் மீது பாசம் உள்ளவர்களாக நடிப்பதும், வளர்ச்சித் திட்டங்களுக்கு என்று நிதியை ஒதுக்குவதும் ஓட்டுப் பொறுக்கும் தந்திரம் தானே ஒழிய, பூர்வக் குடி மக்களான பழங்குடிகளை நிரந்தரமாக அமைதியாக வாழ வைப்பதற்கான வழியை தேடுவதற்காக இல்லை.

  • சீராளன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here