திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சிப்காட் மூன்றாம் கட்ட விரிவாக்கத்திற்கு எதிராக போராடிய விவசாயிகள் ஏழு பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். திமுக அரசின் இந்த அடக்குமுறை கடும் கண்டனத்திற்குரியது. மேற்கு வங்கத்தில் டாடா குழுமத்திற்காக சிங்கூர், நந்திகிராம் போன்ற பகுதிகளில் சிபிஎம் செய்ததை போன்ற நடவடிக்கையைதான் திமுகவும் மேற்கொள்கிறது.

சிப்காட் வளாகங்களும்,   
அழிக்கப்படும் விவசாயமும்!

“சிப்காட் என்ற தொழிற்பேட்டை மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் உருவாக்கப்பட்டது. உள்கட்டமைப்பு, மானியங்கள் மூலம் தொழில் வளர்ச்சி ஏற்பட்டது. கலைஞரின் தொலைநோக்குப் பார்வையால் புதிய தொழில்கள் பெருகின. குறிப்பாக மாவட்டம் தோறும் வேலைவாய்ப்புகள் பெருகின”. என்று திராவிட முன்னேற்ற கழகம் தனது சாதனைகளைப் பட்டியலாக தொகுத்து வெளியிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது.

திராவிட மாடல் பொருளாதாரம் என்பது 50 கிலோ மீட்டருக்கு ஒரு தொழிற்பேட்டை, ஒவ்வொரு வட்டத்திற்கும் அதனை விரிவு படுத்துவது என்ற குறிக்கோளை மையமாகக் கொண்டது என்பதால் திமுக ஆட்சிக்கு வந்தது முதல் சிப்காட் என்ற தொழில் வளாகத்தை அமைப்பதிலும் சிட்கோ மற்றும் டான்சி மற்றும் டான்சியா போன்றவை மூலம் தொழில்துறை வளர்ச்சி முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் 92 தொழிற்பேட்டைகள் இயங்கி வருகிறது. இதில் தமிழக அரசு நேரடியாக 35 தொழிற் பேட்டைகளையும், சிட்கோ மூலம் 62 தொழிற்பேட்டைகளையும் கையாண்டு வருகிறது. 2006 ஆம் ஆண்டு ஐந்தாம் முறையாக ஆட்சிக்கு வந்த கலைஞர் கருணாநிதி ஆட்சிக் காலத்தின் இறுதியில் குறிப்பாக 2010 ஆம் ஆண்டு 16 இடங்களில் புதிய தொழிற்பேட்டைகளை உருவாக்குவது என்று முடிவு செய்யப்பட்டது. தமிழகத்தில் உள்ள தொழிற்பேட்டைகள் எண்ணிக்கை எவ்வளவு? அதற்காக கையகப்படுத்தப்பட்டுள்ள நிலங்கள் எவ்வளவு? போன்ற விவரங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தொடர்ந்து போராடி வருகிறது. அந்த விவரம் இன்னுமும் வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை.

ஆனால் திண்டுக்கல்-கோம்பை, காஞ்சிபுரம்- தண்டரை, கரூர்-புஞ்சை காளக்குறிச்சி, செங்கல்பட்டு-கொடூர், மதுரை- சக்கிமங்கலம், திருச்சி-மணப்பாறை, திருப்பூர்-காவேரிராஜபுரம், திண்டுக்கல்- ஒட்டன்சத்திரம் அருகில் கள்ளிமந்தயம் போன்ற இடங்களில் சிப்காட்டுகளை அமைக்க திமுக முடிவு செய்தது. திமுக ஆட்சி காலம் முடிந்து 2016 ஆம் ஆண்டு அதிமுக கட்சி சார்பில் ஜெயலலிதா முதல்வராக வந்த பிறகு இந்த திட்டங்கள் பெருமளவில் முன்னேற்றம் இல்லாமல் தேக்கமடைந்தன.

அதன் பிறகு 2021 ஆம் ஆண்டு திமுக வெற்றி பெற்று முதல்வராக மு க ஸ்டாலின் வந்த பிறகு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஏற்கனவே செயல்படுகின்ற தொழிற்பேட்டைகளை விரிவுபடுத்துவதற்கும், புதிதாக சில மாவட்டங்களில் தொழிற்பேட்டைகளை அமைப்பதற்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த வகையில் திருவண்ணாமலையில் பாலியப்பட்டு பகுதியில் சிப்காட் அமைப்பதாக செய்திகள் வெளி வந்தது. மக்கள் தொடர்ச்சியாக போராடவே ஏற்கனவே சிப்காட் செயல்பட்டு வரும் செய்யாறு பகுதியில் விரிவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

திருவண்ணாமலையும் சிப்காட் வளாகங்கள் அமைப்பதும்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சிப்காட் 3-வது திட்ட விரிவாக்க பணிக்காக மேல்மா உட்பட 11 ஊராட்சிகளில் 3,174 ஏக்கர் விவசாய நிலங்களை கைப்பற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கான அரசாணை ஏற்கனவே தமிழகத்தை ஆண்ட அதிமுக ஆட்சியில் போடப்பட்டு விட்டது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அதனை அமல்படுத்துகின்ற வகையில் நிலங்களை 54 அலகுகளாக பிரித்து 20 அலகுகள் வரை பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

இந்த சிப்காட் வளாகத்திற்கு கையகப்படுத்தப்பட்டுள்ள நிலத்தில் 2,700 ஏக்கர் தரிசு நிலம் எனவும், மீதமுள்ள 326 ஏக்கர் பட்டா நிலம் என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே, மேல்மா சிப்காட் திட்டத்தை கைவிட வலியுறுத்தி எதிர்ப்பு தெரிவித்து மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் இயக்கம் சார்பில் கடந்த ஜூலை 2-ம் தேதி முதல் 124 நாட்கள் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட்டது. கடந்த ஜூலை மாதம் தொடங்கிய இந்தக் காத்திருப்பு போராட்டம் 126 நாட்களாக நடைபெற்றது. மேல்மா சுற்றியுள்ள ஒன்பது கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் சிறு குறு தொழில் முனைவோர், பொதுமக்கள் மீது இதுவரை 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 126 நாட்களாக காத்திருப்பு போராட்டம், நடைபயணம், மறியல் போராட்டம் அரசியல் கட்சிகள் ஆதரவுடன் போராட்டம் என பல்வேறு கட்டங்களாக போராட்டம் நடைபெற்றது. கடந்த 4 ஆம் தேதி நடைபயணம் சென்ற போது பேருந்தின் கண்ணாடியை உடைத்ததாக போராட்டத்தை ஒடுக்குகின்ற வகையில், போலீஸ் வழக்கமாக செய்கின்ற சதித்தனத்தின் ஒரு பகுதியாக 20 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் முன்னணியாக நின்று மக்களை ஒருங்கிணைத்து போராடிய விவசாயிகள் உள்ளிட்ட 7 பேர் மீது திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது.

விவசாயிகள் நிலப்பறிப்பும் கார்ப்பரேட் விவசாயக் கொள்கையும்.

விவசாய நிலங்களை வளர்ச்சி திட்டம் என்ற பெயரில் கையகப்படுத்துவதிலும், கார்ப்பரேட்டுகளுக்கு நிலங்களை தாரை வார்த்து கொடுப்பதிலும், விவசாயிகளிடமிருந்து தொடர்ச்சியாக நிலங்களை பறித்தெடுப்பதிலும் திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளுக்கு எந்த வேறுபாடும் இல்லை. ஏற்கனவே அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட எட்டு வழி சாலை, பரந்தூர் விமான நிலைய விஸ்தரிப்பு போன்றவை தவறு என்று பேசிய திமுக தான் ஆட்சிக்கு வந்தவுடன் அதே கொள்கையை கடைப்பிடித்து வருகிறது அந்த வரிசையில் சிப்காட் தேவைக்காக விளை நிலங்களை கையகப்படுத்துவது என்பது தொடர்கிறது.

தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற புதிய தாராளவாத கொள்கைகளை தனது பொருளாதாரக் கொள்கையாகக் கொண்டுள்ள இந்த அரசியல் கட்சிகள், அதற்கு மாற்றாக வேறு பொருளாதாரக் கொள்கைகள் எதையும் முன் வைப்பதில்லை. அதிலும் குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழகம் “திராவிட மாடல்” என்ற பெயரில் கார்ப்பரேட்டுகளின் நலனில் இருந்தே தொழில் வளர்ச்சிகளை அமல்படுத்துகிறது.

இந்திய ஒன்றிய அரசாங்கத்தின் ஆளுகைக்கு உட்பட்ட பல்வேறு மாநிலங்கள் தொழில் வளர்ச்சி காணாதபோது, அந்த மாநிலத்தின் முதல்வர்கள் குறிப்பாக ஆளுகின்ற கட்சிகளை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சிப்பதும் மாநிலத்தின் முன்னேற்றத்தில் அக்கறை காட்டாத கட்சி, வேலையில்லா திண்டாட்டத்தை போக்காத கட்சி என்று விமர்சிப்பது ஒரு போக்காகவே உள்ளது.

விவசாய நாடான இந்தியா நவீன முதலாளித்துவ உற்பத்தி முறையுடன் இணைக்கப்படும் போது பல்வேறு பாதிப்புகளை உருவாக்கும் என்பது உண்மைதான். நாட்டின் பிரதான தொழிலான விவசாயத்தை நாசமாக்காத வகையில், விவசாய நிலங்களை நாசமாக்காத வகையில் தொழில் வளர்ச்சியை பெருக்குவது என்பது சவாலான காரியம் தான்.

முதலாளித்துவ பொருளாதார கண்ணோட்டமும், முதலாளித்துவ பொருள் உற்பத்தி முறையும் பெரும்பான்மை மக்களுக்கு எதிராக சிறு கும்பலின் நலனுக்காக நடத்தப்படுவது தான் எனும் போது மக்களின் பாதிப்புகளையும், விவசாய பாதிப்புகளையோ தொழில்துறைக்கான வளர்ச்சி எப்போதும் கண்டு கொள்வதில்லை.

இன்னும் சுருக்கமாக சொல்லப் போனால் முதலாளித்துவ உற்பத்தி முறை விரிவடையும்போது விவசாய உற்பத்தி முறை அழிக்கப்படுவதும் விவசாயிகள் நிலமற்ற கூலி விவசாயிகளாக ஏதுமற்ற கூலி தொழிலாளர்களாக விசிறியடிக்கப்படும் நிகழ்ச்சி போக்கு நடந்தேறும். இந்த வகையில் முதலாளித்துவ பொருளாதாரம் கொள்கையை மையமாகக் கொண்டு இயங்குகின்ற அரசியல் கட்சிகள் அனைத்தும் விவசாயிகளின் பாதிப்பை கண்டு கொள்ள மாட்டார்கள் என்பது தான் நிலைமையாக உள்ளது.

திராவிட மாடல் பொருளாதாரம் என்ற பெயரில் கார்ப்பரேட்டுகளுக்கு தேவையான பொருட்களை உற்பத்தி செய்து தரும் சிறு குறு தொழில்கள் மற்றும் நேரடி உற்பத்தி நிலையங்கள், தொழிற்கூடங்களை அமைப்பதற்கு திமுக தயங்கியதில்லை. ஏனென்றால் அவர்களும் மறுகாலனியாக்கக் கொள்கையை நடைமுறைபடுத்தும் கட்சி தான்.

வலிமையான மக்கள் போராட்டங்களின் மூலம் மட்டும்தான் திமுக அரசு கொண்டு வரும் மக்கள் விரோத திட்டங்களை கட்டுப்படுத்த முடியும் என்பதையே திருவண்ணாமலை செய்யாறு சிப்காட் விரிவாக்கத்திற்கு எதிராக போராடும் விவசாயிகளின் போராட்டம் உணர்த்தியுள்ளது.

இதையும் படியுங்கள்: செய்யாறு: மேல்மா சிப்காட் எதிர்ப்பு தெரிவித்து போராடிய விவசாயிகள் மீது குண்டாஸ்!

இதனை வாய்ப்பாக பயன்படுத்தி கார்ப்பரேட்டுகளின் கைக்கூலியான காவி பாசிச பாரதிய ஜனதா கட்சியையும், திமுகவையும் சமமாக மதிப்பீடு செய்வது, திமுகவும் பாஜகவும் ஒண்ணு என்று பிரச்சாரம் செய்வது போன்ற அணுகுமுறைகள் ஒட்டுமொத்த இந்திய நாடும் தற்போதைய கட்டத்தில் எதிர்கொண்டுள்ள கார்ப்பரேட்-காவி பாசிசத்தை குறைத்து மதிப்பிடுவதாகவும், காவி பாசிஸ்டுகளுக்கு சாதகமானதாகவுமே அமையும்.

அதனால் திமுக ஆளும்கட்சியாக இருந்து கொண்டு வரும் மக்கள் விரோத திட்டங்களை எதிர்ப்பது என்பதோடு பாசிச எதிர்ப்பில் திமுக உள்ளிட்ட தேர்தல் கட்சிகளோடு ஒற்றுமையை கட்டியமைப்பது என்பதையும் செய்ய வேண்டியுள்ளது‌.

விவசாயிகளுக்கும், விளைநிலங்களுக்கும், பொது மக்களுக்கும் பாதிப்பு இல்லாத வகையில் சிப்காட் அமைப்பதற்கு மக்கள் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.

  • சண்.வீரபாண்டியன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here