16.09.2022

பத்திரிகைச் செய்தி

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் உரிமையை தடுக்கும் ! உழைக்கும் மக்களை பிறப்பால் இழிவுபடுத்தும் மனுதர்ம வேத ஆகமங்களை தடை செய் !

செப் 17 பெரியார் பிறந்தநாளில் மனுதர்ம, வேத ஆகமங்கள் எரிப்பு போராட்டம் இடம்: சென்னை மற்றும் திருச்சி

மனுதர்மம் உழைக்கும் மக்களை பிறப்பின் அடிப்படையில் சாதிய படிநிலைகளாக பிரித்து தீண்டாமையை நியாயப்படுத்துகிறது, கல்வி உரிமை, இடஒதுக்கீடு, பெண் சமத்துவம், கோவில் நுழைவு ஆகியவற்றை மறுக்கிறது.

அந்த காலத்தில் யாரோ எழுதி வைத்துவிட்டு போனதை இப்பொழுது ஏன் எரிக்க வேண்டும் என பலரும் கேட்கின்றனர். மனுதர்மம் வெறும் எழுத்தாக மட்டும் அல்ல, இந்துக்கள் என்று சொல்லி பெரும்பான்மை மக்களிடம் பழக்கவழக்கமாகவும், நடைமுறையாகவும் உள்ளது. இன்றும் நாடு முழுவதும் தீண்டத்தகாத சாதியினர் என்று இழிவுபடுத்தப்படும் மக்கள் பிரிவினர் மனித மலத்தை மனிதனே எடுக்கும் அவல நிலை நீடிக்கிறது. தீண்டபடாத சாதியின் தொழிலாகவே நீடிக்கிறது.

அதுபோல் கோவில் கருவறையில் பார்ப்பனர்கள் மட்டுமே அர்ச்சகர்களாக முடியும் பிற சாதியினர் கருவறையில் நுழைந்தால் தீட்டு என்ற சமூகக் கொடுமை புனிதமாக இன்றும் அமுல்படுத்தப்படுகிறது. காஞ்சி சங்கர மடம் உள்ளிட்ட மடங்கள் பிறப்பால் பார்ப்பனர்கள் மட்டுமே சங்கராச்சாரியாகவோ, மத குருமாராகவோ ஆக முடியும் என்ற நிலை நீடிக்கிறது.

இவ்வாறு அனைத்திலும் மனுதர்மம், வேத ஆகமங்கள் நடைமுறையில் இருக்கின்றன. அன்று உழைக்கும் மக்கள் கல்வி கற்றால் காதில் ஈயம் காய்ச்சி ஊற்றியது. இன்று புதிய கல்விக் கொள்கை மூலம் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட ஏழை மக்களுக்கு கல்வி உரிமை பறிக்கப்படுகிறது.

இந்தியா முழுவதும் பாஜக ஆளும் மாநிலங்களில் அரசியல் சட்டம் குப்பையில் வீசப்பட்டு மனுதர்மமே ஆட்சி செய்கிறது. அதற்கு உதாரணம் பில்கிஸ்பானு வழக்கில் சிறையில் இருந்த 11பேரை குஜராத் அரசு விடுதலை செய்திருக்கிறது . குஜராத் அரசு பார்ப்பனர்கள் நல்லவர்கள் அவர்கள் குற்றம் செய்ய மாட்டார்கள் என்று காரணம் சொல்லியிருக்கிறது.

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க கோரும் வழக்கில் அர்ச்சகராகும் உரிமையை ரத்து செய்து ஆலய தீண்டாமையை நிரந்தரமாக்கி தீர்ப்பு வழங்கி இருக்கிறது. இதனினும் கொடுமையாக தமிழகத்தில் உள்ள ஆலயங்களை ஆகம ஆலயங்கள் எவை? ஆகமம் இல்லாத ஆலயங்கள் எவை?

என்று கண்டறிய ஒரு குழுவை அமைத்து அதன் மூலம் பார்ப்பனர்களின் கோயில்கள் தனியாகவும், சூத்திரர்களின் கோயில் தனியாகவும் பிரித்து தீண்டாமையை நிரந்தரமாக்கும் கொடுமையையும் இந்த தீர்ப்பு வழங்கி உருவாக்கி. இவ்வாறு மனு தர்மத்தையே சட்டமாக்கி மக்களை ஒடுக்க முயற்சித்துக் கொண்டே இருக்கிறது காவி பாசிச கும்பல்.

மனுதர்ம அடிப்படையிலான புதிய சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று வெளிப்படையாக பேசுகின்றனர் பாஜக. ஆரிய – பார்ப்பன சாம்ராஜ்ஜியத்தை, ராம ராஜ்ஜியம் எனப்படும் சனாதனப் பேரரசை அமைப்பதற்கான 750 பக்கங்களைக் கொண்ட “இந்துராஷ்ட்ர சட்டம்” தற்போது நடைமுறையில் உள்ள அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு பதிலாக பார்ப்பன சாமியார்களால் தயாரிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. அவற்றை வருகின்ற 2023 ஆண்டு காசியில்

நடக்கவிருக்கும் மகாமேளாவில் வெளியிடுவதாக அவர்கள் அறிவித்துள்ளனர். இந்த நிலையில் தான் எமது மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில் செப் 17 பெரியார் பிறந்தநாளில் திருச்சி திருவரங்கத்தில் பெரியார் சிலை முன்பு மனுதர்ம, வேத-ஆகமங்கள் எரிப்பு போராட்டம் என தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும் பிரச்சாரம் செய்து வருகிறோம். எமது பிரச்சாரம் பார்ப்பனர்களுக்கும், இந்து மத வெறியர்களுக்கும் பதட்டத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

மனுதர்ம, வேத- ஆகமங்கள் எரிப்போம் என அறிவித்தால் பெரியார் புத்தகங்களை எரிப்போம் என சவால் விடுகிறது காவி பாசிச கும்பல். மூடப்பழக்க வழக்கங்களை கேள்விக்கு உள்ளாக்கும் சமூக நீதியை போதிக்கும் பெரியாரின் புத்தகங்களை எரிப்போம் என்று சுவரொட்டி அச்சிட்டு ஒட்டுகின்றனர். இந்து மக்களின் மனம் புண்பட்டு விட்டது என்கின்றனர். தமிழக காவல்துறை மனுதர்ம, வேத ஆகமங்களை எரிக்காதீர்கள் எமது அமைப்பின் போராட்டத்தை என நிறுத்தகோருகிறது.

செப்டம்பர் 17 பெரியார் பிறந்த நாளில் மக்கள் அதிகாரம் அறிவித்துள்ள போராட்டத்திற்கு எதிராக இந்து முன்னணி, சிவசேனா, பாஜக உள்ளிட்ட காவி பாசிச பயங்கரவாதிகளின் கூடாரம் மனுதர்மத்தை எரித்த பிறகு தமிழகம் கலவர பூமியாகும் என்று திமிர்த்தனத்துடன் அறிவிக்கின்றனர். இத்தகைய பயங்கரவாத கும்பலின் மிரட்டலுக்கும், அடாவடித்தனத்திற்கும் எதிராக தமிழக முழுவதும் மனுதர்மத்தை எரிக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமையை உருவாக்கிய சட்டவிரோத கும்பல் காவி பாசிச பயங்கரவாதிகளே.

எனவே தான் திருச்சி ஸ்ரீரங்கத்தில் பெரியார் சிலை எதிரில் மட்டுமின்றி சென்னையிலும் மனுதர்ம எரிப்பு போராட்டத்தை நடத்துவது என தீர்மானித்துள்ளோம்.

மனுதர்ம, வேத ஆகமங்கள் பார்ப்பனர் அல்லாத பெரும்பான்மை இந்து மக்களுக்கே எதிரானது. இந்து பெண்களை இழிவுபடுத்துகிறது, சாதிமறுப்பு காதல் திருமணங்களுக்கு எதிராக ஆணவ கொலைகளை நடத்துகிறது. இந்துவாக இருக்கும் ஏழை மக்களுக்கு கல்வி உரிமை பறிக்கிறது இந்துவாக இருக்கும் உழைப்பு மக்களை சாதி ரீதியாக பிரித்து வைக்கிறது என்பதால் அவைகளை தீயிட்டு எரிப்பதே நியாயம்.

அது மட்டுமல்ல மனுதர்ம எரிப்பு போராட்டம் ஏதோ இன்று புதிதாக எமது அமைப்பு மட்டும் தான் செய்கிறது என்பது போல் காவி கும்பல் கதறுகிறது. பார்ப்பன இந்து மதவெறிக்கு எதிராகவும் தீண்டாமை கொடுமைக்கு எதிராகவும் பெரியார் அவர்கள் 25.03.1928 அன்று எரித்தார்.அதன் பிறகு பெரியார் பல்வேறு தருணங்களில் எரித்துள்ளார். அம்பேத்கர் அவர்களும் 1927 டிசம்பரில் மனு தர்மத்தை எரித்தார். கடந்த 2012. பெரியார் திராவிட கழகத்தினர் மனு தர்மத்தை எரித்தனர்.2017 திராவிடர் கழகம் மனு தர்மத்தை எரித்தது. இவ்வாறு பலமுறை மக்களுக்கு எதிரான மனுதர்மம் எரிக்கப்பட்டிருக்கிறது.

பெரியார் பிறந்த நாளை சமூக நீதி நாள் என அறிவித்திருக்கிறது தமிழக அரசு.பெரியார் கொள்கைகளை கடைபிடிக்கும் திமுக கட்சியின் தலைவர் சனாதனத்திற்கு எதிராக சமரசம் செய்து கொள்ள மாட்டோம் என அறிவித்துள்ளார். ஆனால் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பில் இயங்கும் தமிழக காவல்துறையோ மக்களுக்கு எதிரான மனுதர்ம, வேத- ஆகமங்களை தீயிலிட்டு எரிக்கும் போராட்டத்தை தடுக்கவே நினைக்கிறது. இது போன்ற போராட்டங்களை தமிழக அரசு கண்டிப்பாக ஆதரிக்க வேண்டுமே தவிர எதிர்க்க கூடாது என்று கேட்டுக் கொள்கிறோம்.

காவி பாசிச கும்பல் தமிழகத்திலும் கால் பதித்து தமிழகத்தையும் ஒரு பிற்போக்கு காட்டுமிராண்டி, மாநிலமாக மாற்றுவதற்கு முயற்சிக்கிறார்கள். சமூகநீதிக்காக போராடிய தமிழக மக்களால் கொண்டாடப்படுகின்ற பெரியாரை தொடர்ந்து இழிவு படுத்தும் செயல்களை ஆர்எஸ்எஸ் பாஜக கும்பல் செய்து வருகிறது.

பெரியார் சிலையை தகர்ப்போம் என்று பகிரங்கமாக மிரட்டல் விடுகின்றனர்.சில நாட்களுக்கு முன் கோவை, காரமடையில் தந்தை பெரியார் உணவகம் என்ற பெயரில் திறக்கப்பட்ட உணவகத்தை அடித்து நொறுக்கி இருக்கின்றனர். இப்படி தமிழகம் முழுவதும் ஆர்எஸ்எஸ் பாஜக கும்பல் பகிரங்கமாகவே தங்களுடைய மத வெறித நடவடிக்கைகளை தொடங்கி இருக்கிறார்கள். சமீபத்தில் திமுகவின் முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஆ ராசா தமிழகத்தில் சனாதன கொடுங்கோன்மைக்கு அடிப்படையாக இருக்கக் கூடிய மனுதர்மம், வேதங்கள், ஆகமங்களை அம்பலப்படுத்தி பேசினார். உடனே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவதூறுகளை அள்ளிவீசுகிறார். மிரட்டல்களையும் விடுக்கிறார்.

இந்த சூழலில் மக்கள் அதிகாரம், புரட்சிகர அமைப்பினர் ஜனநாயக சக்திகள் பகுத்தறிவாளர்கள் அனைவரும் காவி பாசிசத்திற்கு எதிராக ஒன்று திரள வேண்டும். பெரியாரின் 144வது பிறந்தநாளில் காவி பாசிசத்திற்கு எதிராக இந்திய மக்களுக்கு தமிழகத்தின் செய்தியாக மனுதர்ம வேத ஆகம எரிப்பு போராட்டம் அமைய வேண்டும்.

காவி பாசிசத்தை தடுத்து நிறுத்த வேண்டும், என்ற வகையிலும் தமிழகம் பல ஆண்டுகளாக பின்பற்றி வரும் மதச்சார்பற்ற பண்பாடு, மத நல்லிணக்கம், அறிவியல் பார்வை கொண்ட பண்புகளுக்கு ஏற்பட்டிருக்கும் ஆபத்தை தடுக்கும் வகையிலும் வரும் செப்டம்பர் 17 தந்தை பெரியார் பிறந்த நாளில் உழைக்கும் மக்களுக்கு எதிரான மனுதர்ம வேத ஆகமங்களை எரிப்பது என அறிவித்திருக்கின்றோம். இந்த மனுதர்ம வேத ஆகம எரிப்பு போராட்டங்கள் திருச்சியிலும் சென்னையிலும் நடைபெறுகிறது. இப்போராட்டத்தில் முற்போக்கு ஜனநாயக சக்திகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இப்படிக்கு,

வழக்கறிஞர் சி ராஜு பொதுச் செயலாளர்,
செல்: 9443260164

பங்கேற்போர்

தோழர். காளியப்பன்
மாநில பொருளாளர் மக்கள் அதிகாரம்

தோழர். பாலு
தலைமை குழு உறுப்பினர் மக்கள் அதிகாரம்

தோழர். ஆனந்தன்
மாவட்டச் செயலாளர், சென்னை.

தோழர். வெண்ணிலா
சென்னை.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here