க்கள் அதிகாரம் அமைப்பு சார்பில் மே1 அதானி அலுவலக முற்றுகைப் போராட்டம் காலையில் 10 மணிக்கு தொடங்கியது. உழைப்பாளர் தினத்தில், தற்போது போலீசால் கைது செய்யப்பட்ட நிலையில், அடிப்படை வசதிகூட இல்லாத கொட்டடியில் அடைத்து, பட்டினி கிட என வதைக்கும் கார்ப்பரேட் நல அரசை கண்டித்து போராட்டம் தொடர்கிறது.

கார்ப்பரேட் – காவிகளை அச்சுறுத்திய முழக்கம்!

ஆர்.எஸ்.எஸ்-சும் அதானியும் ஒண்ணு! அறியாதவன் வாயில மண்ணு! கொலைகார ஆர்.எஸ்.எஸ்-ஐ தடை செய்! கொள்ளைக்கார அதானியின் சொத்துக்களை பறிமுதல்செய்! என்று எழுதப்பட்ட சுவரெழுத்துக்களை கண்டு ஆத்திரமடைந்த காவி காக்கிகளும், போலீசு காக்கிகளும் சேர்ந்து பல ஊர்களில் அழித்தனர். இதுவே மக்கள் அதிகாரத்தின் முழக்கம் சரியானதாக இருப்பதையும், இலக்கை தாக்கியுள்ளதையும் உணர்த்தியது.

பல இடங்களில் தெருமுனை பிரச்சாரத்தை தனது அடியாட்களான சங்கிகளை அனுப்பி தடுக்க பார்த்த பா.ஜ.க அது முடியாமல் போன இடத்தில் போலீசு மூலம் ஏற்கனவே தந்த அனுமதியை ரத்து செய்ய வைத்து முடக்க முயற்சித்தது. இப்படி ஆரம்பம் முதலே எதிர்ப்புகளை எதிர்கொண்டபடிதான் பிரச்சாரம் வேகம் பிடித்தது. சமூக நீதி ஆட்சியில் அதானி, ஆர்.எஸ்.எஸ்-ன் செல்வாக்கு இப்படி இருக்க முற்றுகை மட்டும் சாதாரணமாக நடத்திவிட அனுமதிப்பார்களா? அமைதியாக நடந்திருக்குமா என்ற சந்தேகம் வருகிறதா?

மக்களை பார்க்க விடாமல் மறைத்த போலீசு!

அதானி அலுவலகம் உள்ள நுங்கம்பாக்கத்தில் வள்ளுவர் கோட்டத்திலிருந்து ஜெமினி மேம்பாலம் வரும் வழியில் காலை முதலே போலீசை குவித்து மிரட்டினர். தமிழகம் முழுவதுமிருந்து வந்த தோழர்களை கதீட்ரல் சாலையில் சந்துக்குள் கூடும்படி நிர்பந்தித்து மக்கள் பார்க்காதபடி மறைத்தது.

வேன், பேருந்துகளை நிறுத்தி மக்கள் பார்க்க விடாமல் தடுத்து முற்றுகைக்கு புறப்பட்டவர்களை கைது செய்தது. அதானியின் மனம் புண்படாதபடி தோழர்களை கண்ணால் கட்டிடத்தை பார்க்கும் அளவு கூட சாலையில் வந்துவிடாதபடி கண்ணும் கருத்துமாக காத்தது கார்ப்பரேட் காவல்துறை.  ஜனநாயகம் இதுதான் என வகுப்பெடுத்து சாலைக்கே வரவிடாமல் தடுப்பரண்கள் வைத்து குறைந்தபட்ச போராடும் உரிமையைகூட தர மறுத்து சந்திலேயே முடக்கியது. போலீசின் அடக்குமுறையால் ஆத்திரமடைந்து தோழர்கள் முன்னேற முயற்சித்தபோது பேரிகார்டுகளை போலிசார் தலைக்குமேல் தூக்கி தோழர்கள்மீது தள்ளியதில் சிலருக்கு அடிபட்டது.

நம் பணத்தை கொள்ளையடித்து கொழுக்கும் அதானிகளிடமிருந்து நாட்டை மீட்கவும், அடித்த கொள்ளைக்கு நியாயமும் கிடைக்க நாம் என்ன செய்ய வேண்டும்? இதற்கு செய்முறை விளக்கமாக அதானி படத்தை செருப்பால் அடித்து பேரணி தொடங்கியது. போலீசின் தடையால் தள்ளுமுள்ளுடன் ஆர்ப்பாட்டமாக மாறியது. அதன் பின்னர் படிப்படியாக தோழர்களை கைது செய்தது காவல்துறை.

சட்டத்தை மிதிக்கும் காவல்துறை!

ஆயிரக்கணக்கானோர் ஒரு சிறிய கார் பார்க்கிங்கிற்குள் – கொட்டடிக்குள் ஆடு, மாடு போல அடைக்கப்பட்டனர். நீதிமன்றத்தால் தண்டிக்கப்படும் சிறைக் கைதிகளுக்கு கூட இதைவிட பல மடங்கு வசதி கிடைக்கிறது என்பதிலிருந்து காற்றோட்டமில்லாத சூழலை புரிந்துகொள்ளவும். இத்துடன் விட்டார்களா? எஜமான விசுவாசத்தில் அடுத்து என்ன செய்யலாம் என யோசித்து பாதிப்பேருக்கு சோறு தந்துவிட்டு மற்றவர்களை பட்டினி போடலாம் என முடிவெடுத்தனர்.

 

மதியம் 1 மணிக்கே முதல் ”பட்டியில்” அடைத்த போதும் சுமார் 500 பேருக்கு மட்டுமே உணவை தந்தனர். தோழர்களும் உணவு தாமதமாவதை பொறுமையாக சுட்டிக்காட்டி காத்திருந்தனர். வருகிறது என நேரத்தை கடத்திவிட்டு 200 பேருக்கு மட்டுமான உணவை மாலையில் கொண்டு வந்துள்ளனர். இது போராடியவர்களை அவமதிப்பதாக இருப்பதாலும், கைதானவர்களின் அடிப்படை உரிமையை மறுப்பதாக இருப்பதாலும் உணவை தொட மறுத்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். காவல்துறை உயர் அதிகாரிகள் வந்து பேசவேண்டும் என முன்வைத்து போராட்டத்தில் அமர்ந்துள்ளனர். இதன்மூலம் கழக ஆட்சியின் கார்ப்பரேட் ஆதரவு முகம் அம்பலப்பட்டுள்ளது.

கைதான நிலையில் என்ன செய்ய முடியும்? பகத்சிங் செய்தது போல் சுயமரியாதையை கேள்விக்குள்ளாக்கி தரப்படும் உணவை உண்ணாமல் தவிர்த்து போராட முடியும். நம் தோழர்கள்  புரட்சிகர பாடல்கள் பாடியும், அதானியின் விசுவாசியாக இருக்கும் ஆட்சியாளர்களை அம்பலப்படுத்தி முழக்கங்கள் போட்டும் உற்சாகம் குன்றாமல் போராட்டத்தை தொடர்கின்றனர். கார்ப்பரேட் காவிகளுக்கு எதிரான இப்போராட்டத்தை நாமும் ஆதரிப்போம்!

  • இளமாறன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here