18-7-2022

பத்திரிக்கை செய்தி

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் தனியார் பள்ளி வளாகத்தில் 17-7-2022 அன்று நடந்த வன்முறைக்கு சக்தி மெட்ரிக் பள்ளி நிர்வாகமும், அரசுமே முழு பொறுப்பு!

தற்போது கைது செய்யப்பட்டுள்ள பள்ளி தாளாளர், செயலாளர், முதல்வர் ஆகியோரை முன்பே தமிழக காவல் துறை கைது செய்திருந்தால் இப்படியான சம்பவமே நடந்திருக்காது. போராட்டத்திற்குப் பிறகே பள்ளி நிர்வாகமும் போலீசும் மௌனம் கலைத்தது!

தமிழக அரசே,
வன்முறை தீ வைப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட
அப்பாவிகளை உடனே விடுதலை செய்!
கள்ளகுறிச்சி மாவட்ட மக்கள் அதிகார செயலாளர் தோழர் ராமலிங்கம் கைது செய்யப்பட்டதை வன்மையாக கண்டிக்கின்றோம்!.

வேப்பூர் அரியநாச்சி கிராமத்தை சேர்ந்த 12 ம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி கடந்த 13-7-2022 அன்று இரவு மர்மமான முறையில் மாடியிலிருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டார் என்பதை பற்றி நான்கு நாட்களாகியும் மாவட்ட நிர்வாகமோ, போலீசோ, பள்ளி நிர்வாகமோ பொறுப்பாக அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் தெரிவிக்காமல் மெத்தனமாக செயல்பட்டதால் தான், தமிழக அரசின் மீதும், பள்ளி நிர்வாகத்தின் மீதும் நம்பிக்கை இழந்ததன் விளைவே பொது மக்களின் தொடர் போராட்டத்திற்கு காரணம்! மாணவியின் பெற்றோர் உயர் நீதிமன்றத்தை நாட வேண்டிய அவசியமும் ஏற்பட்டது.

பள்ளி வளாகத்திலும் படிக்கட்டுகளிலும் ரத்தக் கறைகள் படிந்துள்ளன. மாணவியின் உடலில் காயங்கள் உள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் பதிவாகியுள்ளது. அனைத்து இடங்களிலும் உள்ள பள்ளியின் சிசிடிவி காட்சியை பெற்றோர்களுக்கு பள்ளி நிர்வாகமும் போலீசாரும் காட்ட வில்லை. மாணவியின் மரணம் குறித்து பள்ளி நிர்வாகம் பெற்றோர்களை சந்திக்கவே இல்லை. இது படுகொலை என சந்தேகித்து பொது மக்கள் மாணவியின் இறப்பிற்கு நீதி கேட்டும் மாணவியின் உடலை வாங்க மறுத்தும் சுற்றிஉள்ள பல கிராம மக்கள் ஒன்று திரண்டு போராடியுள்ளனர்.

பெற்றோர்களின் ரத்தத்தை அட்டையாக உறிஞ்சும் தனியார் பள்ளி முதலாளிகளின் கட்டணக் கொள்ளை, மாணவர்களின் மீதும் பெற்றோர்களின் மீதும் நிர்வாக ரீதியாக செலுத்தும் வரம்பற்ற அதிகாரம், கற்பித்தல் கற்றல் என்பதில் நம்பிக்கை இழந்து, கல்வி வர்த்த போட்டியில் விலங்குகளை பயற்றுவிப்பது போல் மாணவர்களின் மீது செலுத்தப்படும் கற்றல் வன்முறை, ஆகியவை நீரு பூத்த நெருப்பாக பெற்றோர்கள் மனதில் கணன்று கொண்டிருக்கிறது. அது கனியமூர் ஸ்ரீமதி மரணத்தில் வெடித்திருக்கிறது. பொது மக்கள் எப்போதும் வன்முறையை விரும்ப மாட்டார்கள். அமைதியான வாழ்வை தீர்வைதான் விரும்புவார்கள்.

வன்முறைக்கு காரணம் சின்ன பிரச்சினையை மறைக்க பெரிய பிரச்சினைதான் வழி, என்ற கோணத்தில் பள்ளி நிர்வாகத்தின் பின்னனி பற்றி விசாரிக்க வேண்டும். பள்ளி தாளாளர் நேரடியாக இந்துத்வா மதவாத சக்திகயோடு இருப்பது புகைப்படம் மூலம் நிருபணம் ஆகி உள்ளது. இது வரை தமிழக பா.ஜ.க மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்க வில்லை. சிசிடிவி காட்சியை வைத்து வன்முறைக்கு என்ன காரணம் யார் காரணம்? என்பதை காவல் துறை புலனாய்வு செய்ய வேண்டும்.

மக்கள் பிரச்சினைக்காக அரசியல் ரீதியாக தொடர்ந்து மக்களிடம் செயல்பட்டு வரும் இயக்க நிர்வாகிகளை தேடி தேடி வன்முறையாளர்கள் என முத்திரை குத்தி கைது செய்வது கோழைத்தனம் உண்மையை கண்டுபிடிக்க முடியாத கையாலாகதனம். இந்த செயல் மீண்டும் ஒரு போராட்டத்திற்கு போலீசே வழிவகுப்பதாகும்.

மாணவி ஸ்ரீமதியின் மரணத்தைவிட தனியார் பள்ளி முதலாளியின் சொத்துக்கள் சேதமடைந்தது இன்று முக்கியமானதாகி விட்டது. தனியார் பள்ளி முதலாளிகள் நாளை இது போல் நமது பள்ளியில் தற்கொலை மரணம் ஏற்பட்டால் நமது சொத்துக்களும் சூறையாடப்பட்டால் என்ன செய்வது? என்ற அச்சத்தில் இன்று 18-7-2022 அன்று தனியார் பள்ளிகள் இயங்காது என அறிவித்து தமிழக அரசை மிரட்டுகிறார்கள். சி.பி.எஸ்.இ பள்ளிகளில் தமிழக அரசின் மெட்ரிபள்ளிகள் இயக்குநகரத்திற்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. அதன்படி பல மாவட்டங்களில் இன்று விடுமுறை விட்டு விட்டார்கள்.

சக்தி மெட்ரிக் பள்ளியில் இதுவரை நடந்த அனைத்து மர்ம மரணங்களும் விசாரிக்கப்பட வேண்டும். கல்வியை கடைசரக்காக்கி மாணவர்களின் எதிர்காலத்தை அழிக்கின்ற தனியார்மய கல்வி கொள்ளைக்கு முடிவு கட்டுவோம். தனியார் பள்ளி கல்வி நிறுவனங்களின் படுகொலை மாணவி ஸ்ரீமதியோடு முடியட்டும். அதற்கு பெற்றோர்கள் ஆசிரியர்கள் பொதுமக்கள் மாணவர்கள் அனைவரும் இணைந்து போராட வேண்டும். ஸ்ரீமதியின் மரணத்திற்கு முழுமையான நீதிகிடைக்க தொடர்ந்து போராடுவோம்!

தோழமையுடன்

வழக்கறிஞர்சி.ராஜூ
மாநிலப் பொதுச் செயலாளர்
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு புதுவை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here