எதிர்பார்த்தப்படியே மேற்குவங்க உள்ளாட்சித் தேர்தல்களில் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டுள்ளது ஆர்எஸ்எஸ்-பாஜக பாசிச கும்பல். இந்திய ஒன்றிய அரசை ஆண்டு வருகின்ற பாரதிய ஜனதாக் கட்சியை 2024 தேர்தலில் முறியடிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் உருவாக்கியுள்ள கூட்டணியில் முக்கிய பங்கை வகிக்கும் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்துவதற்கும், எதிர்க்கட்சிகளை அச்சுறுத்துவதற்கும் இந்த தேர்தல் வன்முறையை ஆர்எஸ்எஸ் பாரதிய ஜனதாக் கட்சி கையில் எடுத்துக் கொண்டுள்ளது.
கடந்த 2018-ல் உள்ளாட்சித் தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் கட்சி பெரிய சிக்கல் ஏதுமில்லாமல் 34 சதவீதம் வாக்குகளைப் பெற்று வெற்றி கண்டது. ஆனால் அப்போதும் ஆங்காங்கே வன்முறைகள் நடந்தன. ஏற்கனவே ஆட்சி அதிகாரத்தில் பல ஆண்டுகள் இருந்த மார்க்சிஸ்ட் கட்சி மம்தா பானர்ஜியை எதிர்த்து போராடுவதற்கு குண்டர் படையை உருவாக்கி வைத்திருந்தனர். ஆனால் மம்தா பானர்ஜிக்கும், பாரதிய ஜனதா கட்சிக்கும், காங்கிரசுக்கும், மார்க்சிஸ்ட் கட்சிக்கும் சித்தாந்த ரீதியாக பெரிய வேறுபாடு இல்லாத நிலையில் மார்க்சிஸ்ட் கட்சியின் தொண்டர்கள் அனைவரும் திரிணமூல் காங்கிரஸ் அல்லது பாரதிய ஜனதா கட்சிக்கு தாவினர்.
இதனால் வெற்றி பெற்ற மம்தா பானர்ஜி தற்போது உள்ளாட்சித் தேர்தலில் மீண்டும் வெற்றி பெறுவதற்கு எத்தகைய வன்முறையையும் எதிர்கொள்ள வேண்டும் என்ற முடிவு செய்து வைத்திருப்பதை போலவே நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தல்களில் நடைபெற்றுள்ள வன்முறை வெறியாட்டங்கள் மற்றும் உயிர் பலிகள் நமக்கு உணர்த்துகின்றன.
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்றைய தேர்தல் தொடங்கியிருந்தாலும் கூட ஆங்காங்கே கட்டுக்கடங்காமல் வன்முறைச் சம்பவங்கள் நடைபெறுகின்றன. 73,887 பிரதிநிதிகள் தேர்வு செய்யப்படவுள்ளனர். தேர்தல் களத்தில் 2.06 லட்சம் வேட்பாளர்கள் உள்ளனர். வாக்களிக்க 5.67 கோடி வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
மாநிலம் முழுவதும் இன்று (ஜூலை 8) ஒரே கட்டமாக உள்ளாட்சிகளுக்குத் தேர்தல் நடத்தப்பட்டு ஜூலை 11 வாக்கு எண்ணிக்கை நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி இன்று காலை 73,887 உள்ளாட்சி இடங்களுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. தேர்தல் பிரச்சாரங்களின் போதே வன்முறை, உயிர்ப்பலிகள் இருந்ததால் பாதுகாப்புக்காக கூடுதல் மத்தியப் படைகளை மாநில தேர்தல் ஆணையம் வரவழைத்திருந்தது.
தேர்தல் ஆணையம் ஏற்கனவே கணித்திருந்த அடிப்படையில் ஆர் எஸ் எஸ் பாஜக பாசிஸ்டுகள் திட்டமிட்ட அடிப்படையிலும் முா்ஷிதாபாத், நாடியா, கூச் பெஹாா், தெற்கு 24 பா்கானாஸ், கிழக்கு மேதினிபூா் ஆகிய மாவட்டங்களில் வன்முறை சம்பவங்கள் அதிகமாக நிகழ்ந்துள்ளன. தோ்தலுக்காக அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடிகள் பல சூறையாடப்பட்டதோடு அங்கிருந்த வாக்குப் பெட்டிகள், வாக்குச் சீட்டுகள் உள்ளிட்டவை சேதப்படுத்தப்பட்டுள்ளன. கூச்பெஹாரின் தீன்ஹதா பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் வாக்குச் சீட்டுகள் தீயிட்டு கொளுத்தப்பட்டன.
உள்ளாட்சித் தேர்தல்களானாலும் சரி! நகராட்சி, மாநகராட்சி தேர்தலுக்கானாலும் சரி அல்லது எம்.எல்.ஏ, எம்.பி பதவிக்கான தேர்தல்களானாலும் சரி, இவை அனைத்திலும் பாரதிய ஜனதாக் கட்சி நடத்தி வரும் பாசிச பயங்கரவாத ஆட்சியை புரிந்து கொள்ளாத பெரும்பான்மை மக்கள் தேர்தல் அரசியலில் பங்கெடுத்து வருகின்றனர்.
இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் போன்ற மதச் சிறுபான்மையினர் தலித்துகள், பழங்குடி மக்கள் போன்றவர்கள் மீது நடத்தப்படும் பாசிச வன்முறை, தேர்தல் அரசியலின் மூலமே அங்கீகாரம் பெற்று நடத்தப்படுகிறது. போலி ஜனநாயக அரசு கட்டமைப்பு இன்று முழுவதும் பாசிசமயமாகி உள்ளது.
தற்போதைய குறிப்பான சூழலில் தேர்தல் ஜனநாயகத்திற்கு வெளியில் மக்களை திரட்டி பாசிசத்தை வீழ்த்துவதற்கு செயல்படுகின்ற போதே தேர்தலையும் ஒரு போராட்ட கருவியாக பயன்படுத்தி பாசிஸ்ட்களை அரசியல் அரங்கில் இருந்து முற்றாக தூக்கி எறிய வேண்டியுள்ளது.
இத்தகையதொரு தனிச்சிறப்பான சூழலில் மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ள தேர்தல் ஜனநாயக ஆட்சி முறையை முற்றிலும் புறக்கணித்து அதற்கு வெளியில் மக்களை திரட்டுவது என்பது பொதுவில் சரிதான் என்றாலும், பாசிசம் ஏறித்தாக்கி வரும் தற்போதைய குறிப்பான சூழலில் தேர்தல் ஜனநாயகத்திற்கு வெளியில் மக்களை திரட்டி பாசிசத்தை வீழ்த்துவதற்கு செயல்படுகின்ற போதே தேர்தலையும் ஒரு போராட்ட கருவியாக பயன்படுத்தி பாசிஸ்ட்களை அரசியல் அரங்கில் இருந்து முற்றாக தூக்கி எறிய வேண்டியுள்ளது.
இத்தகைய கண்ணோட்டமும், பாஜகவை பற்றி சரியான வரையறையோ இல்லாத எதிர்க்கட்சிகள் பொதுவாக தேர்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்று முடிவெடுப்பது அவர்களின் விருப்பமாக மட்டுமே உள்ளதே ஒழிய நடைமுறையில் அவர்களை தூக்கி எறிவதற்கான போராட்டத்துடன் இணைக்கப்படுவதில்லை.
எதிர்க்கட்சிகள் மத்தியில் உள்ள இத்தகைய பலவீனத்தை மட்டுமின்றி இதனை சரியாக புரிந்து கொண்டு செயல்படுகின்ற மார்க்சிய லெனினிய இயக்கத்தின் பலவீனத்தையும் ஆர்எஸ்எஸ் பாஜக சரியாகவே கணித்து வைத்துள்ளது.
நாட்டில் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் நடைபெறுகின்ற தேர்தல்கள் அனைத்தும் ஏதோ ஒரு வகையில் முக்கியத்துவம் பெறுகின்றன. அந்த வகையில் மேற்குவங்கத்தில் நடத்த உள்ளாட்சி தேர்தலும் முக்கியத்துவம் பெறுகிறது.
ஆர் எஸ் எஸ் பாஜக நடத்திய வன்முறையை கண்டு அரண்டு போயுள்ள மேற்குவங்க காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி வெடிகுண்டு வீச்சில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு எப்படிப்பட்ட ஜனநாயகம் தேவை என கேள்வி எழுப்பினார். மம்தா பானர்ஜியின் கைகளில் ரத்தம் வழிவதாக கூறிய ஆதிர் ரஞ்சன், ரத்தக்கறை படிந்த உள்ளாட்சிகள் தேவையில்லை” என கூறினார்.
இதையும் படியுங்கள்: கர்நாடகா: தேர்தல் அரசியலில் வீழ்த்தியது மட்டுமின்றி நிரந்தரமாக ஆர்எஸ்எஸ்-பாஜகவுக்கு முடிவு கட்டுவோம்!
மார்க்சிஸ்ட் கட்சியினரோ மேற்கு வங்கத்தில் ஆளுநரை சந்தித்து வன்முறைகளை பற்றி புகார் தெரிவித்துள்ளனர். மேற்கு வங்கத்தின் பாரதிய ஜனதா கட்சி தலைவரான சுவேந்து அதிகாரி உள்ளாட்சித் தேர்தல்களில் நடைபெற்ற வன்முறை அதற்கு மூலம் முதல் காரணம் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் தான் என்று விமர்சித்துள்ளதோடு மேற்கு வங்கத்தில் ஆட்சி செய்து வரும் மம்தாவின் ஆட்சியை கலைக்க வேண்டும் குடியரசு தலைவர் ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்று திருவாய் மலர்ந்து உள்ளார்.
மேற்கு வங்கத்திற்கு அருகாமை மாநிலமான மணிப்பூர் கடந்த இரண்டு மாத காலமாக பற்றி எரிந்து கொண்டு வருகிறது. அங்கு மக்கள் அனைவரையும் பழங்குடிகள் என்று அறிவிப்பதன் மூலமே அவர்களின் இருப்பிடத்தில் இருந்து வெளியேற்றி மணிப்பூர் மாநிலத்தில் உள்ள கிடைத்ததற்கு அரிய பெட்ரோல் உள்ளிட்ட கனிம வளங்களை கொள்ளையடிப்பதற்கு முடியும் என்ற திசை வழியில் ஆர்எஸ்எஸ் பாஜக வன்முறை வெறியாட்டத்தை நடத்தி நூற்றுக்கும் மேற்பட்டவர்களை படுகொலை செய்துள்ளது.
இந்த வன்முறையை பற்றி வாய் திறக்காத பிரதமர் மோடி மற்றும் ஆர்எஸ்எஸ் பாஜக கும்பல் மேற்கு வங்கத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தல் வன்முறையை பயன்படுத்தி குடியரசுத் தலைவர் ஆட்சியை கொண்டுவர வேண்டும் என்று துடிப்பது போலி ஜனநாயக அரசு கட்டமைப்பின் மீது பாஜகவிற்கு துளியும் நம்பிக்கை இல்லை என்பதை பச்சையாக அறிவிக்கின்றது.
எதிரிகளே தேர்தலைப் பற்றி தெளிவாக அறிவித்துவிட்ட பிறகு அதன் மீது மாயையும் பிரமையையும் உருவாக்குவது தவறாகும். போலி ஜனநாயக அரசு கட்டமைப்பையும் தேர்தல் முறையையும் தூக்கி எறிவதையும், அதற்கு வெளியில் புதிய ஜனநாயக புரட்சிக்கு இடைக்கட்டமாக ஜனநாயக கூட்டரசு ஒன்றை நிறுவுவதை நோக்கி மக்களை அணி திரட்டுவதே காலத்தின் கட்டாயமாகும்.
- சண்.வீரபாண்டியன்