தில்லை கோவில் மக்கள் சொத்து
தீட்சதர்கள் சொத்தல்ல!
மக்கள் அதிகாரம் கண்டனம்!

இந்து சமய அறநிலைத்துறை அரசு செயலாளருக்கு  கோரிக்கை மனு!


நாள் 10-07-2023

பெறுதல்
உயர்திரு அரசு செயலாளர் அவர்கள்
இந்துசமய அறநிலையத்துறை
தலைமைச் செயலகம், சென்னை

உயர்திரு சார் ஆட்சியர் அவர்கள்
சிதம்பரம் கோட்டம்

பொருள்: தில்லைக்கோவில் மக்களின் உழைப்பில் மன்னர்கள் கட்டியது. அது தீட்சிதர் சொத்தல்ல என்பது வரலாற்று உண்மை. அரசு மேற்பார்வையில் நிர்வாகம் மட்டுமே தீட்சிதர்கள் செய்யலாம் என்பது தற்போதைய தவறான தீர்ப்பு. தீட்சிதர்கள் ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டால் அரசு தலையீடு செய்ய அதிகாரம் உண்டு. சுதந்திரம் பெற்று அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பெற்று, தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையதுறை சட்டம் இயற்றி தமிழகத்தின் அனைத்துக் கோவில்களையும் அதன் சொத்துக்களையும் நிர்வாகம் செய்யும் போது தில்லை கோவில் மட்டும் சட்டப்படி வராது என்பது தீட்சிதர்களின் அரசியல் மோசடி அல்லாமல் வேறெண்ண. தில்லை நடராசர் கோவிலுக்கு சொந்தமான சுமார் ஆயிரம் ஏக்கருக்கு மேல் இன்றும் தமிழக அரசின் வருவாய் துறை சார்பில் தனி தாசில் தார்தான் நிர்வகாம் செய்து வருகிறார். அதன் வருமானத்தின் மூலம்தான் நடராசர் கோவிலின் மின் கட்டணம் செலுத்தப்பட்டு வருகிறது.

தீட்சிதர்கள் “காலம் காலமாக நாங்கள்தான் நிர்வாகம் செய்கிறோம். எங்களை யாரும் கேள்வி கேட்க முடியாது“ என்பது பொருளற்றது. மக்களாட்சி ஜனநாயகத்தின் கேலிக்கூத்து. பரம்பரை வாரிசுரிமை என்பது பணி நியமனம், நிர்வாகம் என நாடு முழுவதிலும் அனைத்து துறைகளிலும் ஒழிக்கப்பட்ட பிறகு சிதம்பரம் கோவிலில் மட்டும் பரம்பரை முறைப்படி தீட்சிதர்களே எப்படி அர்ச்சகர்களாகவும், நிர்வாகிகளாகவும் தொடர முடியும்.?. தீட்சிதர்கள் அல்லாத பிற மக்களின் அடிப்படை உரிமைகளை பாதிக்கும் நடவடிக்கை.

உலகப்புகழ்பெற்ற சிதம்பரம் நடராசர் கோவிலின் தொன்மையை பாதுகாக்கவும் தினம் தோறும் கோவிலுக்கு வழிபட வரும் பல ஆயிரம் பக்தர்களின் வழிபாட்டு உரிமையை பாதுகாப்பதுடன் அவர்களின் அடிப்படை தேவைகளை நிவர்த்தி செய்யவும் உரிய நடவடிக்கை எடுக்க கோரி இந்த மனுவை அரசுக்கு சமர்பிக்கின்றோம்.

தீட்சிதர்கள் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அடிதடி கொலை முயற்சி, குழந்தை திருமணம், அதிகாரிகளை பணிசெய்யவிடாமல் தடுப்பது, வழிபட வரும் பக்தர்களை தாக்குவது, பெண் பக்தர்களை அவமானப்படுத்தி வன்கொடுமை குற்றம் செய்தது. புகழ்பெற்ற நடராசர் ஆலயத்தின் ஆயிரங்கால் மண்டபத்தை ஐந்து நட்சத்திர விடுதி போல் அலங்கரிக்க இரவில் கோவிலை திறந்து பொற்கூரைமேல் ஏறி பூக்களால் அலங்கறித்து பல லட்சங்களுக்கு வாடகைக்கு விட்டது, கோவிலின் புராதன தொன்மையை சிதைக்கும் வகையில் பல சட்டவிரோத கட்டுமானங்களை எழுப்பியது. கோவிலின் வருமானங்களுக்கு கணக்கு காட்ட மறுப்பது, சட்டப்படி வைக்கப்பட்ட உண்டியலை அகற்றியது, சக தீட்சிதர்களுக்கு சேர வேண்டிய வருமானத்தை தர மறுப்பது, ஒருசில தீட்சிதர்கள் மட்டும் வருமானத்தை சிறப்பு கட்டணங்களை பெறுவதுடன் இந்துத்வா மதவாத கட்சிகளை தலைவர்களை தங்கள் சார்பில் பேச வைப்பது, அனைத்து மக்களுக்கும் சமமான அமைதியான வழிபாட்டு உரிமை என்பதை சீர்குலைப்பது இவ்வாறு அடுக்கடுக்கான குற்றச் செயல்களில் தீட்சிதர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால் கோவிலை நிர்வாகம் செய்யும் அருகதையை இழந்து விட்டனர். இத்தகைய குற்றங்கள் மீது எண்ணற்ற முதல் தகவல் அறிக்கைகள் தீட்சிதர்கள் மீது பதிவு செய்யப்பட்டு சிதம்பரம் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது.
எனவே, நிரந்தர தீர்வுக்கான தனிச்சட்டம் இயற்றி சிதம்பரம் கோவிலை அரசு முழு கட்டுபாட்டில் எடுப்பதுடன், பிற கோவில்களில் இருப்பது போல் தீட்சிதர்களுக்கும் உரிய வருமானம் பெறும் அர்ச்சர்களாக மட்டும் இருக்க வேண்டும்.

சிதம்பரம் நடராசர் கோவில் சிற்றம்பல மேடையில் தேவாரம் திருவாசகம் பாடி வழிபடும் உரிமைக்காக குமுடிமுலையை சேர்ந்த சிவனடியார் ஆறுமுகசாமி அவர்கள் தீட்சிதர்களால் கொடூரமாக தாக்கப்பட்டு கை எலும்பு முறிக்க பட்டு சிவனடியாரை தூக்கி கோவிலுக்கு வெளியே தீட்சிதர்கள் வீசினர். இதற்காக சிவனடியாரை தாக்கிய தீட்சிதர்கள் மீது சிதம்பரம் காவல் நிலையத்தில் கிரிமினல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் தீட்சிதர்கள் விசாரிக்கப்பட்டு விடுதலை செய்யபட்டனர். அந்த கிரிமினல் வழக்கு உச்சநீதிமன்றம் வரை சிவனடியார் சார்பில் நாங்கள் நடத்தினோம்.

அதே நேரத்தில் சிற்றம்பலத்தில் தமிழ்பாடும் உரிமைக்காக கடந்த 2000 ஆண்டுமுதல் பல்வேறு சட்டப்போராட்டங்கள் மற்றும் எண்ணற்ற மக்கள் போராட்டங்கள் நடத்தியதன் விளைவாக, எந்தவித கட்டணமின்றி அனைவரும் சிற்றம்பல மேடையில் தேவாரம் பாடி வழிபடலாம் என்ற அரசாணையை சிவனடியார் ஆறுமுகசாமி மூலம் தமிழ் உரிமை நிலைநாட்டப்பட்டது. மேலும் இருபது ஆண்டுகளாக நிலுவையில் இருந்த வழக்கில் சிவனடியார் மூலம் நீதிமன்றத்தின் படி ஏறி 2009 ம் ஆண்டு சிதம்பரம் கோவிலை இந்துசமய அறநிலையத்துறை கட்டுபாட்டின் கீழ் கொண்டு வந்து உண்டியல் வைக்கப்பெற்று பக்தர்களின் காணிக்கையால் சிதம்பரம் கோவில் பல கோடி வருமாணம் ஈட்டியது.
இறுதியில் மாண்பமை உச்சநீதிமன்றம் ஜனவரி 6 2014 ஆம் ஆண்டு சிதம்பரம் கோவிலில் தீட்சிதர்கள் தவறு செய்தால் இந்து சமய அறநிலையத்துறை கோவில் நிர்வாகத்தை கையில் எடுத்து அதை சரி செய்ய வேண்டும். தீட்சிதர்களை நிரந்தரமாக அப்புறப்படுத்தி விடக்கூடாது என்ற நிபந்தனையுடன் தீர்ப்பளித்துள்ளது.

தில்லை கோவிலை நிர்வாகம் செய்யும் தீட்சிதர்கள் எதேச்சதிகாரமாக சிற்றம்பல மேடையில் பக்தர்கள் ஏறிவழிபடுவதை அவ்வப்போது தடுப்பதும் தாக்குவதும், அவமானப்படுத்துவதும் தொடர்கிறது. தேவாரம் பாடி வழிபடுவதை தடுத்து வருகின்றனர். சிற்றம்பல மேடையை மூடி விடுகின்றனர். இதனால் பக்தர்களுக்கும் தீட்சிதர்களுக்கும் தொடர்ந்து தகறாரு ஏற்பட்டு வருகிறது. அமைதியாக நடராசனை வழிபட வரும் பக்தர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். அதிகாரிகளை வரவிடாமல் கும்பலாக சூழ்ந்து கொண்டு மிரட்டுகின்றனர். ஆகையால் ஒவ்வொரு முறையும் காவல் துறை பெருமளவில் குவிக்கப்பட்டுதான் பிரச்சினை தற்காலிகமாக தீர்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலை நீடிக்க கூடாது.

சிதம்பரம் நடராசர் கோவிலை நிர்வாகம் செய்யும் தகுதியை தீட்சிதர்கள் இழந்து விட்டனர் எண்ணற்ற கிரிமினல் வழக்கில் உள்ள தீட்சிதர்கள் புனிதமான சிதம்பரம் நடராசர் கோவில் கருவறையில் நின்று எப்படி பூசை செய்ய முடியும்? லட்ச கணக்கான பக்தர்களின் நலன்களை மற்றும் அவர்களின் நம்பிக்கையை எப்படி நிறைவேற்ற முடியும்.?

1939 நீதிமன்ற தீர்ப்பின் மூலம் உறுதி செய்யபட்ட நிர்வாக திட்டத்தின்படிதான் தீட்சிதர்கள் கோவிலை நிர்வாகம் செய்து வருகின்றனர். இந்த திட்டத்தில் உண்டியல் வைக்க வேண்டும் என உள்ளது. அர்ச்சனை சீட்டு, பலகார கடை, சிறப்பு அபிஷேக கட்டணம் அனைத்தும் வெளிப்படையாக ரசீது தரப்பட வேண்டும் என உள்ளது. இது நாள் வரை தீட்சிதர்கள் அதை அமல் படுத்த வில்லை, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளும் அதை வலியுறுத்த வில்லை. தீட்சிதர்களின் நிர்வாகம் கோவிலின் பாதுகாப்பு, பக்தர்களின் வழிபாட்டு உரிமை, அவர்களின் பாதுகாப்பு அனைத்துடன் சம்பந்தபட்டது. தீட்சிதர்களின் சொந்த விவகாரம் அல்ல கோவில் நிர்வாகம். எனவே தமிழகத்தின் பிறகோவில்களில் உள்ளது போன்று உண்டியல் வைத்து பக்தர்களிடம் காணிக்கை பெற்று கோவிலின் வருமானம் பெருக்கப்பட வேண்டும்.

பக்தர்களிடம் நேரில் சந்தித்து பெறப்பட்ட ஆலோசனைகளை அரசின் கவனத்திற்கு சமர்பிக்க விரும்புகிறோம்.

1. அனைத்து விதமான பூசை, அர்ச்சனைகளுக்கும் உரிய ரசீது தரப்பட வேண்டும்.

2. சிற்றம்பல மேடையில் நின்று நடராசனை தரிசிக்க கட்டணம் வசூலிக்க கூடாது.

3. பக்தர்களின் நலன் கருதி ஒவ்வொரு சன்னதியிலும் பூசை செய்யும் தீட்சித அர்ச்சகர்கள் பெயர் கோவில் அலுவலக வளாகத்தில் ஒட்டப்பட வேண்டும்.

4. பிற கோவில்களில் உள்ளது போல் அங்கீகரிக்கபட்ட தரமான பிரசாத கடைகள் அமைக்கவேண்டும்.

5.நடராசர் கோவிலுக்கு சொந்தமாக உள்ள நகைகள் பட்டியல், நிலங்கள் மற்றும் சொத்துவிபரங்களை அதிகார பூர்வமாக இணைதளத்தில் வெளியிட வேண்டும்.

6.கோவிலுக்கு வரும் பக்தர்களின் குறைகளை கேட்கவும், அதை நிவர்த்தி செய்யவும் உரிய அலுவலரின் பெயர் மற்றும் போன் நம்பரை பக்தர்களுக்கு தெரிவிக்க வேண்டும். புகார் பெட்டி வைக்க வேண்டும்.

7. கோவிலில் பணிபுரியும் தீட்சிதர்களுக்கு அவரவர் வேலைகளுக்கு ஏற்ப உரிய மாதம் ஊதியம் மற்றும் சட்டப்படியான பணப்பலன்கள் வெளிப்படையாக வழங்கப்பட வேண்டும்.

8. தினமும் சிற்றம்பல மேடையில் ஒவ்வொரு கால பூசையின் போதும் தேவார திருமுறைகளை இனிமையான குரலில் பாடும் வகையில் ஓதுவார்களை போதுமான ஊதியம் கொடுத்துபணியமர்த்த வேண்டும்.

9. பரம்பரை வாரிசுரிமைபடியான பணிநியமனம், நிர்வாக முறை சட்டப்படி ஒழிக்கப்பட்டுவிட்டது. சிதம்பரம் கோவிலில் மட்டும் பரம்பரையாக தீட்சிதர்கள் நிர்வாகம் மற்றும் அர்ச்சகர் முறை ஒழிக்கப்பட வேண்டும்.

10. அனைத்து சாதி அர்ச்சகர் பணி நியமனம் சிதம்பரம் நடராசர் கோவிலுக்கும் நியமிக்கப்படவேண்டும்.

11. சிதம்பரம் நடராசர் கோவிலில் நந்தனார் நுழைந்த தெற்கு வாயிலை அடைத்து தீட்சிதர்கள் எழுப்பிய தீண்டாமை சுவரை அகற்ற வேண்டும்.

12. காவல் நிலையத்தில் கிரிமினல் வழக்குகள் உள்ள தீட்சிதர்கள் கோவில் பூசை நிர்வாகத்திலிருந்து உடனடியாக தடுக்கப்பட வேண்டும். உலகப்புகழ் பெற்ற சிதம்பரம் நடராசர் கோவிலை இதுவரை நிர்வாகம் செய்துவந்த தீட்சிதர்களால் ஏற்பட்ட விளைவுகள் குறிப்பாக வருமான இழப்பு,சொத்துக்கள் இழப்பு, பக்தர்களுக்கு ஏற்பட்ட துன்ப துயரங்கள் கோவிலுக்கு நன்கொடை வழங்கிய பெரும் செல்வந்தர்கள் குறித்தும் அதன் வரவு செலவு குறித்து நீதிவிசாரணை நடத்தப்படவேண்டும்.

13. தீட்சிதர்கள் மீது நிலுவையில் உள்ள கொலை கொள்ளை, நகை திருட்டு, அடிதடி, வன்கொடுமை, கோவில் சொத்துக்களை மோசடியாக விற்றது. அரசு அதிகாரிகளை பணி செய்யிவடாமல் தடுத்த வழக்கு, உள்ளிட்ட அனைத்து வழக்குகளையும் உடனடியாக விசாரித்து தீர்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

14. தீட்சிதர்கள் சட்டபுறம்பாக தொடர்ந்து பால்யவிவாகம் செய்து வருகின்றனர். அது குறித்து உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

15. அரசியல் கட்சிகளில் இருக்கும் தீட்சிதர்கள், சொந்த தொழல் நடத்தும் தீட்சிதர்கள், அரசு மற்றும் தனியார் பணிகளில் இருக்கும் தீட்சிதர்கள், கிரிமினல் வழக்கில் இருக்கும் தீட்சிதர்கள், தில்லை கோவில் நிர்வாகத்திலிருந்து முழுமையாக நீக்கப்பட வேண்டும்

இப்படிக்கு
உண்மையுடன்
வழக்கறிஞர் சி.ராஜு
பொதுச்செயலாளர், மக்கள் அதிகாரம்
702 ஜங்சன் ரோடு, விருத்தாசலம்
செல் 94432 60164 Mail : rajupp1917@gmail.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here