ந்திய நிகழ்ச்சி நிரல் வடிவமைப்பாளர்களான ஆர்.எஸ்.எஸ்-ன் கட்டுப்பாட்டில் பொது சிவில் சட்டம் குறித்த விவாதம் நடந்து வருகிறது. தனது கைப்பாவையான சட்ட ஆணையத்தின் மூலம் பொது சிவில் சட்டம் குறித்த கருத்து கேட்கப்பட்டும் எதிர்ப்பார்த்த விளைவு கிடைக்காததால், 27.06.23 அன்று மத்திய பிரதேசத்தில் ஒரு கூட்டத்தில்  ”ஒரே குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சட்டமா? என மோடியை பேச வைத்து அதை விவாதப் பொருளாக்கியிருக்கின்றனர், நாக்பூரான்கள். விவாதம் துவங்கியதையடுத்து அமர்த்தியா சென் முதல் நம் வழக்கறிஞர் அருள்மொழி வரையில் தனது கருத்துக்களை பேசி எழுதி வருகின்றனர். நாடு முழுவதும் இதுவரை ஒரு கோடிக்கும் மேலான கருத்துக்கள் சட்ட ஆணையத்துக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

பொது சிவில் சட்டம் என்றால் என்ன?

நமது இந்திய அரசியலமைப்பு சட்டம் தான் உலகில் மிகப்பெரிய அரசியலமைப்பு சட்டம். இந்த அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த (26.01.1950) நாள் தான் குடியரசு நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு பகுதி 4, பிரிவு 44 இல் உள்ளது தான் பொது சிவில் சட்டம்.  “குடிமக்கள் அனைவரும், இந்திய ஆட்சி நிலவரை எங்ஙனம், ஒரே சீரான உரிமையியல் தொகுப்புச் சட்டத்தினை எய்திடச் செய்வதற்கு அரசு முன்வந்து முயலுதல் வேண்டும்.’’

மேற்கண்ட இந்த வழிகாட்டு நெறிமுறைகளை சட்டமாக்குவதற்கு தான் இந்த விவாதம். INDIAN PENAL CODE IPC (இந்திய தண்டனை சட்டம்), CRIMINAL PROCEDURE CODE CrPC போன்ற சட்டங்கள் எப்படி அனைத்து இந்தியருக்கும் பொதுவாக இருக்கிறதோ அதைப் போலவே சிவில் சட்டங்கள் அனைவருக்கும் பொதுவாக இருக்க வேண்டும் என்பதற்காக இதைக் கொண்டு வரப் போவதாக சொல்கிறது ஆளும் பாஜக கும்பல்.

பொது சிவில் சட்டம் என்பதில் குறிப்பாக தனிநபர் சட்டங்கள் அனைத்தும் பொதுவாக்கப்பட வேண்டும் என்கிற வாதம் தான் வைக்கப்படுகிறது. இதுவரை சட்ட ஆணையமோ, சட்ட அமைச்சகமோ, அரசோ எப்படி இதை பொதுமைப்படுத்த போகிறார்கள் என கூறவில்லை. தனிநபர் சட்டங்கள் என்பதில் திருமணம், விவாகரத்து, சொத்துரிமை, வாரிசுரிமை, தத்தெடுப்பு உள்ளிட்டவைகள் தான் பிரதானமாக வருகிறது. மேற்சொன்ன விஷயங்களில் ஒவ்வொரு மதமும் தனது மத ரீதியான சட்டப்படி தான் இந்நிகழ்வுகளை அணுகுகின்றன. இந்து திருமண சட்டம், இசுலாமிய ஷரியத் சட்டம், இந்திய கிருஸ்துவர் தனிநபர் சட்டம் 1872 என பலவகையான தனிநபர் சட்டங்கள் உள்ளன.

இதல்லாமல் இந்திய பழங்குடிகளை எடுத்துக் கொண்டால் பெருங்கதையே எழுதலாம். அந்தளவுக்கு அவர்களின் பழக்க வழக்கங்கள், காடு, மலை இயற்கையுடனான அவர்களின் நெருக்கம் சொல்லி மாளாது. சொத்து என்று எதையும் வைத்து கொள்ளாது அனைத்தையும் பொதுவில் நடத்தியவர்கள் அவர்கள். ஆங்கிலேயர்கள் கொள்ளையடிக்க வந்த பின்னர் தான் பழங்குடிகள் சமூகத்தில் பல்வேறு மாற்றங்கள் நடக்கிறது. குறிப்பாக பழங்குடிகள் சொத்து சம்மந்தமான விஷயத்தில் மூன்று வெவ்வேறு சட்டங்கள் உள்ளன. வில்கின்சன் சட்டம், சந்தால் பரகானா குத்தகைச் சட்டம், சோட்டாநாக்பூர் குத்தகை சட்டம் என உள்ளது. இவற்றின் எழும் பிணக்குகளை தீர்க்க தனிவகைப்பட்ட நீதிமன்றங்கள் உள்ளது. இதையெல்லாம் எப்படி பொதுவாகக் கொண்டு வருவது என்ற எந்த முன்வைப்பும் இன்றி பொது சிவில் சட்டம் மீதான விவாதம் நடத்தப்படுகின்றது.

பொது சிவில் சட்டம் பழங்குடிகளுக்கு பொருந்தாது என புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. பழங்குடிகள் இந்தியர்கள் இல்லையா? நீட்டி முழங்கி முட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கும் சங்கிகளுக்கு முதலிலேயே கோணலாக துவங்கியிருக்கிறது. ”இந்திய ஆட்சி நிலவரை எங்ஙனும்” என்கிற பொது சிவில் சட்டத்தின் அடிப்படையை எடுத்துக் கொண்டால் அதற்கே வாய்ப்பில்லை எனும் போது  அனைவருக்குமான பொது சிவில் சட்டம் என்பது அரசியல் உள்நோக்கம் கொண்டதில்லையா?

சட்ட ஆணையம்

ஆங்கிலேய ஆட்சி காலத்தில் சுரண்டலுக்கு சட்ட வடிவம் கொடுக்க உருவாக்கப்பட்ட சட்ட ஆலோசனைக்குழுவை இன்னமும் சட்ட ஆணையம் என்கிற பெயரில் வைத்து கொண்டு ஆளும் வர்க்கம் தன் தேவைகளை நிறைவேற்றிக்கொள்கிறது. மூன்று வருடத்துக்கு ஒருமுறை நியமனம் செய்யப்படும் இந்த அதிகாரமற்ற அமைப்பு இந்திய சட்ட அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. 2016-ம் ஆண்டில் இந்த சிவில் சட்டம் குறித்து கருத்துக் கணிப்பு நடத்திய 21-வது சட்ட ஆணையம், 2018-ல் ”சிவில் சட்டம் தேவையுமில்லை, விரும்பதக்கதுமல்ல” என அறிக்கை வெளியிட்டுள்ளது.

தொடர்ந்து நியமிக்கப்பட்ட 22- வது சட்ட ஆணையம் மீண்டும் 14.06.2023 பொதுமக்களிடம் பொது சிவில் சட்டம் குறித்து கருத்து கேட்டுள்ளது 28.07.23 க்குள் தங்களது கருத்துக்களை தெரிவிக்குமாறு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இதில் வேடிக்கை என்னவெனில் இதுவரை பொது சிவில் சட்டம் நடைமுறைப்படுத்தல் குறித்த எந்தவொரு வரைவறிக்கையோ, திட்டமோ இல்லாமல் பொதுவாக கருத்து கேட்கப்பட்டுள்ளது. வந்துள்ள ஒரு கோடிக்கும் அதிகமான கருத்துக்கள் பொது சிவில் சட்டத்தை ஆதரித்து வந்துள்ளதா, எதிர்த்து வந்துள்ளதா என தெரியவில்லை. இது ஆர்.எஸ்.எஸ்-ன் சட்டப்பூர்வ பாசிச ஆட்சி என்பதால் பி.எம் கேர்ஸ் நிதி கணக்கை போல இந்த கருத்துக்களும் அவர்களுக்கு ஆதரவாக மாற்றிக்கொள்ளக்கூடிய அதிகாரம் உள்ளது. பெரும்பாலான தமிழ்நாட்டு ஊடகங்கள் அண்ணாமலைக்கு அரோகரா போடுவது போல ஏற்கனவே நியூஸ் 18 போன்ற ஊடகங்கள் மோடிக்கு ஆதரவான கருத்தை வெளியிட துவங்கி விட்டன. கர்நாடகா ஹிஜாப் பிரச்சனையில் ஹிஜாப் அணிய தடை விதித்து தீர்ப்பு அளித்த ரிது ராஜ் அவஸ்தி என்பவரை சட்ட ஆணையத்தின் தலைவராக நியமித்துள்ள  போதே பாஜகவின் நகர்வை நாம் எளிமையாக புரிந்துகொள்ள முடியும்.

சங்கிகளின் சட்ட சமத்துவம்!

நாங்கள் எந்த வகையிலும், மத உணர்வுகளில் தலையிடவில்லை. அதேசமயம் இந்துவோ, கிருஸ்துவரோ, இசுலாமியரோ யாராக இருந்தாலும் ஒரே சட்டம் இருக்க வேண்டும். மத பாகுபாட்டின் அடிப்படையில் தண்டனை சட்டங்கள் இல்லாத நாட்டில் சிவில் சட்டங்கள் மட்டும் எப்படி இருக்க முடியும்? என்று கேள்விகளை அடுக்கும் பாண்டே வகையிராக்கள் ஒரு படி மேலே போய் இசுலாமிய சகோதரிகள் பாதிக்கப்படுகிறார்கள், அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டாமா என நம்மை நோக்கி கேள்வி எழுப்புகிறார்கள். பில்கிஸ் பானுவை கற்பழித்தவர்கள் ஷா பானுவுக்காக (ஷா பானு வழக்கு: ஜீவனாம்சம் கோரி உச்ச நீதிமன்றம் வரை நடத்தப்பட்ட பிரபலமான வழக்கு ) கண்ணீர் வடிக்கிறார்கள்.

அம்பேத்கர், நேரு, ராஜீவ் காந்தி என அவர்களின் கருத்துக்களுக்கு வலு சேர்ப்பதற்கு வாய்ப்புள்ளவர்களின் ஆவிகளை அழைத்து விவாதம் நடத்துகிறார்கள். அம்பேத்கர் சொல்லவில்லையா, பொது சிவில் சட்டம் வேண்டுமென்று?  பொது சிவில் சட்டம் வேண்டாம் என்றால் இசுலாமியர்கள் பலதார மணமுறை வைத்துள்ளதை ஆதரிக்கிறீர்களா என வழமையான பாணியில் நம்மை ஆண்டி இண்டியனாக்க முயற்சிக்கிறார்கள்.

அம்பேத்கரே சொல்லிவிட்டார், அதையும் மறுக்கிறீர்களா என்கின்றனர். ”இந்துமதம் ஆக பிற்போக்கான மதம். சாதி தான் இந்து மதத்தின் ஆன்மா. இந்துவாக பிறந்த நான் இந்துவாக சாகமாட்டேன்” என கூறி கொள்கை முடிவெடுத்து புத்த மதத்துக்கு மாறினார் அம்பேத்கர். அம்பேத்கரே சொல்லிவிட்டார் எப்போது மதம் மாறப் போகிறார்கள் சங்கிகள்? ’’தன்னை உயர்ந்த சாதியாகவும், இன்னொரு மனிதனை தாழ்ந்த சாதியாகவும் பார்க்கும் மனிதன் மனநோயாளி” என்றார் அம்பேத்கர். சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு எப்போது செல்வதாக திட்டம் வைத்திருக்கிறார்கள் சங்கிகள்?

இதையும் படியுங்கள்: டாக்டர் அம்பேத்கர் மனு ஸ்மிருதியை பகிரங்கமாக எரித்தது ஏன் ?

பொது சிவில் சட்டம் குறித்து அம்பேத்கர் பேசினார். ”உடனடியாக ஒரு சட்டம் போட்டு திணிக்க முடியாது. பல்வேறு சமூக பழக்க வழக்கங்கள் கொண்ட நாட்டில் மேலிருந்து திணிக்க முடியாது. வன்முறையாகக் திணிக்க கூடாது”. என்று கூறினார். ஒருவர் எந்த சூழலில், எந்த வர்க்க பின்னணியில் இருந்து ஒரு கருத்தை கூறுகிறார் என்பதை ஆய்ந்து அந்த கருத்தை பரிசீலிக்க வேண்டும். தனக்கு தேவையான வகையில் வெட்டி சுருக்கி கருத்தை எடுத்துக் கொள்ளும் கயமை சங்கிகளுக்கு கைவந்த கலை. மார்க்ஸ் சொன்னாலும், பெரியார் சொன்னாலும், அம்பேத்கர் சொன்னாலும், ‘ஆண்டவனே’ சொன்னாலும், அது எந்த வர்க்க சார்புடைய கருத்து என ஆய்ந்து அதற்கு பதில் சொல்வது தான் நேர்மையான அனுகுமுறை.

இந்துத்துவ நிகழ்ச்சி நிரலே பொது சிவில் சட்டம்

ஜம்மு காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்தை நீக்குவது, ராமனுக்கு கோயில் கட்டுவது, பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது என்கிற மூன்று பிரதான கொள்கைகளில் முதல் இரண்டை நிறைவேற்றிவிட்டார்கள். கடைசியாக பொது சிவில் சட்டம்.

இதையும் படியுங்கள்: காஷ்மீரை சிதைத்து சின்னா பின்னமாக்கிய மோடி அரசு, மக்களின் வாழ்வாதாரத்தோடும் விளையாடுகிறது!

”முசுலீம்களுக்கு கருத்தடை செய்ய வேண்டும். முசுலீம் பெண்களை பாலியல் வன்புணர்வு செய்ய வேண்டும். ஒவ்வொரு இந்து பெண்ணும் 5 குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும்” இவையெல்லாம் பாஜக தலைவர்கள் பொது மேடைகளில் உதிர்த்த முத்துக்கள். மோடிக்கு ஓட்டுப் போடாத இசுலாமியனை ஒரு ரயில்வே போலீஸ் சுட்டுக்கொல்ல முடியும் என்பது தான் இன்றைய நிலை. பாரத் மாதா கி ஜெய் சொல்லிக் கொண்டே, பெண்களை நிர்வாணபடுத்தி ஊர்வலம் நடத்தலாம். இன, மதக்கலவரம் செய்ய முடியும். ஒருவர் பேசுகின்ற, செய்கின்ற ஒவ்வொரு சொல்லுக்கும் செயலுக்கு பின்னால் ஒரு வர்க்கத்தின் நலன் ஒளிந்திருக்கும். எனில் பாஜ வின் பொதுசிவில் சட்ட நடைமுறைக்கு பின் என்ன ஒளிந்திருக்கிறது?

முத்தலாக் தடைச்சட்டம், பொது சிவில் சட்டம் அனைத்தும் இசுலாமிய வெறுப்பின் அடையாளம் தான். குஜராத்தில் ஒரு இனக்கலவரத்தை முன்னின்று நடத்தியவர்கள், இசுலாமிய பெண்கள் நலன்களை பாதுகாக்கிறோம் என்று பேசுவதில் எதாவது பொருளிருக்கிறதா? இசுலாமியர்களின் மத விவகாரங்களில் தலையிட வேண்டும். அவர்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்த வேண்டும். இசுலாமிய வெறுப்புணர்வை தூண்டி, இந்துமத வாக்குகளை பெற்று அரசியல் அதிகாரத்துக்கு வரவேண்டும் என்பதைத் தாண்டி, பொது சிவில் சட்டம் என்கிற ஒன்று அவர்களுக்கு எள்ளளவும் பயன்படாது.

முத்தலாக் தடை, ஹிஜாப் தடை, இந்தி திணிப்பு, பசுவதை தடை சட்டம், அனைத்துமே அவர்களின் நிகழ்ச்சி நிரல் தான். இதை ஒவ்வொன்றாக எதிர்த்து போராடிக் கொண்டிருக்கிறோம். ஒன்றில் கவனம் குவித்து செயலாற்றிக்கொண்டிருக்கும் போதே, அவர்கள் அடுத்த தாக்குதலை தொடுத்து விடுகிறார்கள். மனித குலத்துக்கே விரோதியாக நிற்கும் ஆர்.எஸ்.எஸ் – பாஜக சங் பரிவார் கும்பலை அடியோடு ஒழித்துக் கட்டாத வரை இந்திய உழைக்கும் வர்க்கத்துக்கு விடிவில்லை.

  • செல்வா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here