கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலாக சமூக வலைதளங்களில் ரத்தினவேல் என்ற மாமன்னன் திரைப்படத்தின் வில்லன் கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இதைப் பற்றி கருத்து கூறிய ஒருவர் “ நாட்டையே தனது ஆரிய பார்ப்பன சாம்ராஜ்யத்திற்கு அடிமையாக்க துடித்துக் கொண்டிருக்கும் பார்ப்பன சாதியைச் சேர்ந்த அறிவு சீவிகளும், அரைவேக்காடுகளும் திரைப்படங்களை பாப்கார்ன் கொறிப்பது போல கொறித்து விட்டு தனது நோக்கத்தில் குறியாக இருப்பார்கள் என்றும், சூத்திர, பஞ்சமா சாதிகளை சேர்ந்தவர்கள் திரைப்படங்களில் வருகின்ற கதாநாயகர்களை தனது ரோல் மாடலாக கருதிக் கொண்டு வாழ்க்கையை மாற்றிக்கொள்ள நினைப்பார்கள் என்றும், நிஜ வாழ்க்கையில் இரண்டு பிரிவாகப் பிரிந்து அடித்துக் கொண்டு சாவார்கள்” என்றும் எழுதியிருந்தார்.
கடந்த ஒன்பது ஆண்டுகளாக மோடியின் ஆட்சியின் கீழ் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது பல்வேறு தாக்குதல்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. மாட்டுக்கறி உணவு என்பதை அரசியலாக வைத்து தலித்துகள் மீதான தாக்குதல் அதிகரித்துக் கொண்டே போகிறது. சமூகத்தில் ஆதிக்க சாதியாகவும், அரசு சலுகைகளை பெறுவதற்கு தங்களை பிற்படுத்தப்பட்ட சாதி என்றும் கூறிக்கொள்கின்ற பி சி, எம் பி சி பிரிவினர் மீது இட ஒதுக்கீடு உரிமையை பறிப்பது, உயர்கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு தடை ஏற்படுத்த நுழைவுத் தேர்வு என்ற பெயரில் வடிகட்டுவது, கல்வி உதவித் தொகையை நிறுத்துவது போன்ற செயல்பாடுகளின் மூலம் தாக்குதல் கொடுத்து வருகிறது ஆர்எஸ்எஸ் பாஜக.
அது மட்டுமின்றி பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினருக்கு இட ஒதுக்கீடு என்ற பெயரில் பார்ப்பன கும்பலுக்கு 10% இட ஒதுக்கீட்டை பிற்படுத்தப்பட்டவர்களிடமிருந்து பறித்து கொடுத்து தாக்குதலை நடத்தி வருகிறது.
சொந்த வாழ்க்கையில் கல்வி உரிமை முதல் வேலை வாய்ப்பு உரிமை வரை அனைத்தும் பறிக்கப்படுகிறது. மற்றொருபுறம் விவசாய பின்னனி கொண்ட வேலைகளில் ஈடுபடுபவர்களை, கிராமப்புறங்களில் இருந்து வெளியேற்றுவதற்கு பொருத்தமான கார்ப்பரேட் விவசாயக் கொள்கையை கடைப்பிடிப்பதன் மூலம் அவர்கள் பிறந்த ஊரை விட்டு துரத்தி அடிக்கிறது. இதன் மூலம் நகர்ப்புறங்களில் குறைந்த கூலிக்கு வேலை செய்யும் அன்றாடங்காய்ச்சி தொழிலாளர்களாக வீசி எரிகிறது ஆர் எஸ் எஸ் பாஜக..
தனது வாழ்க்கையில் தான் அனுபவிக்கின்ற இத்தகைய கொடுமைகளுக்கு காரணமான ஆர்எஸ்எஸ் பாஜகவிற்கு எதிராக சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்வதோ மீம்ஸ் போடுவதோ கிடையாது. மாறாக மாமன்னன் திரைப்படத்தில் பகத் பாசில் நடித்த ஆதிக்கசாதி வெறியர் கேரக்டரான இரத்தினவேல், பிறப்பால் தாழ்த்தப்பட்டவருக்கு செய்த கொடுமைகளை வெட்டி ஒட்டி, தனது சாதிப் பெருமையை நிலைநாட்டும் ராசு படையாட்சி, தேவர் மகன் போன்ற திரைப்படங்களின் பாடல்களை இணைத்து மீம்ஸ்களாக வெளியிட்டு பீற்றி வருகிறது பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த படித்த முட்டாள் கூட்டம்.
கவுண்டர், கொங்கு கவுண்டர், முதலியார், வன்னியர், முக்குலத்தோர், முத்தரையர், பிள்ளைமார் போன்ற அனைவருக்கும் திரைப்படத்தில் வில்லனாக நடித்த ரத்தினவேல் நிஜ வாழ்க்கையில் ஹீரோவாக தெரிகிறார்கள். தனது வாழ்க்கையை பறித்தவர்களுக்கு எதிராக வராத கோபம் தன்னால் ஒடுக்கப்பட்ட மக்கள் தலை நிமிர்ந்து நிற்க முயற்சிக்கும் போது உடலில் உள்ள அனைத்து துவாரங்களின் மூலமாகவும் பொத்துக் கொண்டு வருகிறது.
எதிர்மறை பண்புகளைக் கொண்டவர்களை ஹீரோவாக கொண்டாடுவது ஒன்றும் புதியது அல்ல. ராமாயண காலத்தில் இருந்து குடிகாரனாகவும் ஆணாதிக்க வெறி பிடித்து தெரிந்து கொண்டிருந்த ராமன் கதாநாயகனாகவும் நேர்மையாக வாழ்ந்த ராவணன் வில்லனாகவும் சித்தரிக்கப்படுவது இன்று வரை தொடர்கிறது. புராணங்களிலும் இதிகாசங்களிலும் சித்தரிக்கப்படும் அந்த கேடுகெட்ட பழக்க, வழக்கம் என்ற பண்பாடு சிறிதும் கூச்சநாச்சமின்றி நெஞ்சை நிமிர்த்தி நிற்கிறது.
சொந்த வாழ்க்கையில் ஒழுக்கக்கேடாக இருப்பது, பணம் காசு சம்பாதிப்பதற்கு எத்தகைய கேடுகெட்ட செயலை வேண்டுமானாலும் செய்வது, உள்ளூரில் சில பொறுக்கிகளை அடியாளாக வைத்துக் கொண்டு வெள்ளை உடையில் கார்களில் பவனி வருவது, கெத்து கட்டுவது போன்றவற்றை புதிய தலைமுறை இளைஞர்களுக்கு ரோல் மாடலாக காட்டி வருகிறார்கள் ஆதிக்கசாதி சங்கங்களில் உள்ள பிரமுகர்கள். தேர்தல் அரசியலில் ஈடுபடுகின்ற சாதிக் கட்சிகளும் இதற்கு விதிவிலக்கு இல்லை.
இதையும் படியுங்கள் : டாணாக்காரன் – திரைப்பார்வை
பணம் சம்பாதிக்க வேண்டும், அதற்கு எப்பேர்பட்ட சமூகவிரோத செயல்களை செய்தாலும் பரவாயில்லை. இந்த சமூகம் அங்கீகரிக்கின்ற உயர்ந்த வாழ்க்கை என்று கூறப்படும் பங்களாக்களை கட்டிக் கொள்வது, கார்களை வைத்து பவனி வருவது, நட்சத்திர விடுதிகளில் மேய்வது, மாலைக்கு மேல் எலைட் பார்களில் குடிக்க செல்வது, அரசியல் கட்சிக் கூட்டங்களில் கும்பலாக சென்ற கலந்து கொள்வது, ஊர் திருவிழாக்களில் பேனர் வைப்பது, பரோபகாரியாக காட்டிக் கொள்வது,, வருடத்திற்கு ஒருமுறை மாணவர்கள், மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்களை வாங்கி கொடுப்பது, அதிகார வர்க்கத்துடனும் போலீஸ் உடனும் கூழைக் கும்பிடு போட்டு நெருக்கமாக இருப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதையே தனது வாடிக்கையாக கொண்டுள்ள சாதி சங்க பிரமுகர்கள் புதிய தலைமுறை இளைஞர்களுக்கு வழிகாட்டி நிற்பது தான் சமூகத்தில் இன்றுள்ள மிகப்பெரும் அவலமாகும்.
இத்தகைய அரசியல் கழிசடைகளின் பின்னால் நிற்கின்ற படித்த முட்டாள் கூட்டம் பின் விளைவுகளை பற்றி கவலைப்படாமல், தற்போதைக்கு தனது சாதிப் பெருமையை நிலைநாட்டி விட்டால் போதும் என்று மீம்ஸ்களாக குவிக்கின்றனர். இதற்கு பல்வேறு குரூப் பெயர்களில் முகநூல் பக்கத்தில் வெளியிட்டு சுய இன்பம் அடைகின்றனர்.
இவர்கள்தான் இவர்களே தான் பாசிஸ்டுகளின் இலக்கு. நகர்ப்புறத்தில் படித்துவிட்டு வேலை வெட்டி இல்லாமல் திரிந்து கொண்டுள்ள இது போன்ற லும்பன் படிப்பாளிகளை தான் ஆர்எஸ்எஸ் பாஜக தனது பிரச்சார பீரங்கிகளாக பயன்படுத்தி வருகிறது. ஒரு கணக்குப்படி பாரதிய ஜனதா கட்சி தனது கருத்துக்களை பரப்புவதற்காக 30 லட்சம் பேரை சமூக ஊடகங்களில் வேலையில் அமர்த்தி உள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில் போர் குடி மீம்ஸ் போன்ற குழுக்கள் மாமன்னன் படத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்த ரத்தினவேல் கேரக்டரை ஹீரோவாக்கி மகிழ்ச்சியில் திளைக்கின்றனர். இதன் மூலம் ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கு நிகழ்கின்ற கொடுமைகளை தனது இயக்கத்தில் வெளிவந்த மாமன்னன் திரைப்படத்தின் மூலம் வெளிக்காட்டிய இயக்குனர் மாரி செல்வராஜுக்கு பாடம் புகட்டி விட்டதாக கருதிக் கொள்கின்றனர். இயல்பாக சாதி உணர்வு ஊறிப் போய் உள்ள அனைவரும் இந்த மீம்ஸ்க்களையும், ட்ரோல்களையும் பரப்பி இணையத்தையும், முகநூல் பக்கத்தையும் நிரம்பி வழியச் செய்துள்ளனர்.
இதெல்லாம் ஒரு பிரச்சனையா என்று கருதுபவர்களுக்கு இதெல்லாம் தான் சமூகத்தின் எதார்த்தம். இவற்றின் மீது நமது கருத்துக்களை முன்வைத்து ஊடாடி திரை கிழிக்காமல் அடுத்த கட்டத்திற்கு நகர முடியாது என்ற உண்மையை உணர்த்துவோம்.
- கணேசன்