செப்டம்பர் 12, 2023 அருந்ததிராய்-க்கு வழங்கப்பட்ட 145-வது ஐரோப்பிய கட்டுரைக்கான பரிசை பெற்றுக்கொண்டு அவர் ஆற்றிய உரை.

2023-ஆம் ஆண்டுக்கான ஐரோப்பிய கட்டுரை விருதை எனக்கு வழங்கிய சார்லஸ் வெய்லன் அறக்கட்டளைக்கு நன்றி தெரிவிக்கிறேன். இவ்விருதைப் பெறுவதில் நான் எவ்வளவு மகிழ்ச்சி அடைகிறேன் என்பது உடனடியாகத் தெரியவில்லை. ஆனால் நான் மகிழ்ச்சியாக இருப்பதும் சாத்தியமே. இது இலக்கியத்திற்கான பரிசு என்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அமைதிக்காகவோ, கலாச்சாரம் அல்லது கலாச்சார சுதந்திரத்திற்காகவோ அல்ல, இலக்கியத்திற்காக, அதாவது எழுதுவதற்கு. கடந்த 25 வருடங்களாக நான் எழுதிய மற்றும் எழுதிவரும் கட்டுரைகளை எழுதியதற்காக ஒரு பரிசு என்பது மிகவும் மகிழ்ச்சிகுரியது.

அவர்கள் படிப்படியாக இந்தியாவின் பாரம்பரியத்தை (சிலர் அதை முன்னேற்றம் என்று பார்த்தாலும்) முதலில் பெரும்பான்மைவாதமாகவும் பின்னர் முழுக்க முழுக்க பாசிசமாகவும் வடிவமைத்துள்ளனர். ஆம், நாங்கள் தொடர்ந்து தேர்தல்களை நடத்துகிறோம், அந்த காரணத்திற்காக, நம்பகமான தொகுதியைப் பெறுவதற்காக, ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் இந்து மேலாதிக்கத்தின் செய்தி இடைவிடாமல் 140 கோடி மக்களுக்கும் பரப்பப்பட்டது. இதன் விளைவாக, தேர்தல்கள் என்பது கொலை, கும்பல் படுகொலைகள் மற்றும் சங்கேத மொழிகளின் பருவமாகும் – குறிப்பாக இந்தியாவின் சிறுபான்மையினர், முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு மிகவும் ஆபத்தான நேரமுமாகும்.

இனி நாங்கள் எங்களது தலைவர்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த மக்கள் பிரிவினருக்கும் பயப்பட வேண்டியிருக்கும். தீமையின் இயல்பான தன்மையை, தீமையை இயல்பாக்குவது இப்போது எங்கள் தெருக்களில், எங்கள் வகுப்பறைகளில், பல பொதுஇடங்களில் வெளிப்படுகிறது. பிரதான பத்திரிகைகள், நூற்றுக்கணக்கான 24-மணி நேர செய்தி சேனல்கள் பாசிச பெரும்பான்மைவாதத்தின் நலனுக்காக பயன்படுத்தப்பட்டுவருகின்றன. இந்திய அரசியலமைப்பு சட்டம் திறமையுடன் ஒதுக்கி வைக்கப்பட்டு இந்திய தண்டனைச் சட்டம் மாற்றி எழுதப்படுகிறது. தற்போதைய ஆட்சி 2024-இல் பெரும்பான்மையைப் பெற்றால் கண்டிப்பாக ஒரு புதிய அரசியலமைப்பு சட்டத்தைக் காண்போம்.

அமெரிக்காவில் ஜெர்ரிமாண்டரிங் (gerrymandering) என அறியப்படும் தொகுதி மறுசீரமைப்பு விரைவில் நடைபெற்று வடஇந்தியாவில் பாஜக செல்வாக்குள்ள இந்தி பேசும் மாநிலங்களுக்கு அதிக நாடாளுமன்ற இடங்களை வழங்கும். இது தென்மாநிலங்களில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இந்தியாவைக் கூறுபோடும் வாய்ப்பு உள்ளது. தேர்தல் தோல்வி சாத்தியமில்லாத சந்தர்ப்பத்தில் கூட இந்த மேலாதிக்க விஷம் ஆழமாக ஊடுருவி நியாயமுடன் இயங்கவேண்டிய ஒவ்வொரு பொதுநிறுவனத்தையும் சமரசம் செய்துள்ளது. தற்போது, பலவீனமான மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட உச்ச நீதிமன்றத்தைத் தவிர கிட்டத்தட்ட எதுவும் இல்லை.

இந்த மிகவும் மதிப்புமிக்க பரிசுக்காகவும், எனது பணிக்கான அங்கீகாரத்திற்காகவும் மீண்டும் ஒருமுறை நன்றி கூறுகிறேன் – என்றாலும் வாழ்நாள் சாதனை விருது ஒருவரை வயதானவராக உணர வைக்கிறது என்பதை நான் உங்களுக்குச் சொல்லியாக வேண்டும், அப்படி இல்லை என்று பாசாங்கு செய்வதையும் நான் நிறுத்த வேண்டும். 25 வருடங்களாக நாம் எந்த திசையில் சென்றோம் என்று எச்சரித்து எழுதியும் பரிசு பெறுவது ஒரு பெரும் நகைமுரண். அத்தகைய எச்சரிக்கை கவனிக்கப்படவில்லை என்பதுடன் தாராளவாதிகளாலும், தங்களை “முற்போக்கானவர்கள்” என்று கருதுபவர்களாலும் கேலிக்கும் விமர்சனத்துக்கும் உள்ளாக்கப்பட்டது.

இந்தியாவில் ஜனநாயகம் தகர்க்கப்படுவது உலகம் முழுவதையும் பாதிக்கும் -அருந்ததி ராய்

ஆனால் இப்போது எச்சரிக்கைக்கான நேரம் முடிந்துவிட்டது. நாம் வரலாற்றின் வேறுஒரு கட்டத்தில் இருக்கிறோம். ஒரு எழுத்தாளனாக, என் நாட்டின் வாழ்வில் படர்ந்துவரும் இந்த இருண்ட அத்தியாயத்திற்கு எனது எழுத்து சாட்சியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். என்னைப் போன்ற மற்றவர்களின் பணிகளும் இந்த மாற்றங்களை அனைவரும் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை பறைசாற்றும் என்று நம்புகிறேன்.

ஒரு கட்டுரை எழுத்தாளராக என் வாழ்க்கை திட்டமிடப்படவில்லை. அது ஒரு போக்கில் நடந்தது. எனது முதல் புத்தகம் 1997-இல் வெளியான ஒரு நாவலான “தி காட் ஆஃப் ஸ்மால் திங்ஸ்” (The God of Small Things). அது பிரிட்டிஷ் காலனித்துவத்திலிருந்து இந்தியா சுதந்திரம் அடைந்த 50-வது ஆண்டு. பனிப்போர் முடிந்து எட்டு வருடங்கள் கடந்துவிட்டன. சோவியத் கம்யூனிசம் ஆப்கான்-சோவியத் போரின் இடிபாடுகளுக்குள் புதைந்துபோனது. முதலாளித்துவம் போட்டியின்றி வெற்றி பெற்ற அமெரிக்க மேலாதிக்க ஒற்றை துருவ உலகின் ஆரம்பம் அது. அதற்கேற்றவாறு இந்தியாவும் தன்னை மாற்றிக் கொண்டு பெருநிறுவன மூலதனத்திற்கு தனது சந்தைகளைத் திறந்து விட்டது.

தனியார்மயமாக்கல் மற்றும் கட்டமைப்பு சீர்செய்தல் ஆகியவை தடையற்ற சந்தையின் அடிநாதமாக இருந்தன. இவற்றிற்கு இணங்கிய பிறகு இந்தியா முக்கியத்துவம் பெற ஆரம்பித்தது. ஆனால் 1998-ல் பாஜக தலைமையிலான இந்து தேசியவாத அரசு ஆட்சிக்கு வந்தது. அது செய்த முதல் காரியம் அணு ஆயுத சோதனைகளை நடத்துவதுதான். எழுத்தாளர்கள், கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உட்பட பெரும்பாலான மக்கள் உக்கிரமான பேரினவாத தேசியவாதத்தின் வெறிகொண்டு அவர்களை வரவேற்றனர். பொதுவாக ஏற்றுக்கொள்ளக்கூடியது என்று இதுநாள்வரை கருதப்பட்ட பொதுக்கருத்து திடீரென்று மாறியது.

அந்த நேரத்தில், எனது நாவலுக்கு புக்கர் பரிசை வென்றதால், அப்போதைய ஆக்ரோஷமான புதிய இந்தியாவின் கலாச்சார தூதர்களில் ஒருவராக நான் இருக்கவேண்டியதாயிற்று. நான் முக்கிய பத்திரிகைகளின் அட்டைப்படத்தில் இருந்தேன். ஏதாவது சொல்லவில்லை என்றால் நான் இதையெல்லாம் ஒப்புக்கொண்டதாக கருதப்படும் என்று எனக்குத் தெரியும். அமைதியாக இருப்பதும் பேசுவதைப்போல ஒரு அரசியல் என்று அப்போது புரிந்துகொண்டேன். அப்படி வெளிப்படையாக பேசுவது இலக்கிய உலகின் தேவதையாக, இளவரசியாக எனது இலக்கிய வாழ்க்கையின் முடிவாக இருக்கும் என்பதை நான் புரிந்துகொண்டேன். எல்லாவற்றுக்கும் மேலாக, விளைவுகளைப் பொருட்படுத்தாமல் நான் நம்பியதை எழுதவில்லை என்றால் நான் என் சொந்த எதிரியாகிவிடுவேன், ஒருவேளை மீண்டும் எழுதமாட்டேன் என்றும் புரிந்துகொண்டேன்.

எனவே, என் எழுத்தை காப்பாற்றிக்கொள்ள எழுதினேன். எனது முதல் கட்டுரையான தி எண்ட் ஆஃப் இமேஜினேஷன் (The End of Imagination), அவுட்லுக் மற்றும் ஃப்ரண்ட்லைன் ஆகிய இரண்டு பெரிய வெகுஜனப் பத்திரிகைகளில் ஒரே நேரத்தில் வெளியிடப்பட்டது. நான் உடனடியாக தேசத்துரோகி, தேசவிரோதி என்று முத்திரை குத்தப்பட்டேன். நான் அந்த அவமானங்களை புக்கர் பரிசை விட குறைவில்லாத விருதுகளாகப் பெற்றேன். அணைகள், ஆறுகள், இடப்பெயர்வு, சாதி, சுரங்கம், உள்நாட்டுப் போர் – என புரிதலை ஆழப்படுத்திய ஒரு நீண்ட எழுத்துப் பயணத்துக்கு அவை என்னைத் தூண்டின. எனது கதைகளையும் புனைகதைகளையும் பிரிக்க முடியாத வழிகளில் பிணைத்தன.

கட்டுரைகள் முதன்முதலில் வெளியிடப்பட்டபோது (முதலில் வெகுஜனப் பத்திரிகைகளிலும், பின்னர் இணையத்திலும், கடைசியாக புத்தகங்களாகவும்), அவற்றில் சிலவற்றையாவது அரசியல் ரீதியில் வேறுபாடில்லாதவர்களால்கூட பலத்த சந்தேகத்துடன் பார்க்கப்பட்டன. ஆனால் எனது எழுத்தோ இலக்கியம் என்று வழக்கமாகக் கருதப்படும் கோணத்தில் அமைந்திருந்தது. பிறப்பின் அடிப்படையில் மனிதர்களை வகைபிரித்தலை ஆதரிப்பவர்களின் மூர்க்கத்தனம் என்பது புரிந்துகொள்ளக்கூடிய எதிர்வினைதான். ஆனால் இவையெல்லாம் என்ன துண்டுப்பிரசுரமா, விமர்சனமா, கல்வி அல்லது பத்திரிகை தொடர்புடையதா, பயணக்கட்டுரையா அல்லது வெறும் இலக்கிய சாகசமா என்பதை அவர்களால் சரியாக தீர்மானிக்க முடியவில்லை.

சிலர் அவற்றையெல்லாம் ஒரு எழுத்தாகவே கணக்கில் கொள்ளவில்லை, “நீங்கள் ஏன் எழுதுவதை நிறுத்திவிட்டீர்கள்? உங்களின் அடுத்த புத்தகத்திற்காக காத்திருக்கிறோம்” என்றனர். மற்றவர்களோ நான் கூலிக்காக எழுதுபவள் என்று கற்பனை செய்தார்கள். எல்லா விதமான வாய்ப்புகளும் எனக்கு வந்தன. “அன்பே, அணைகளைப் பற்றி நீங்கள் எழுதிய அந்த கட்டுரை எனக்கு மிகவும் பிடித்திருந்தது, பலாத்காரத்துக்கு ஆளாகும் குழந்தைகள் பற்றி எனக்காக எழுத முடியுமா?” இது உண்மையில் நடந்தது. நான் எப்படி எழுதவேண்டும், என்ன எழுதவேண்டும், எந்தத்தொனியில் எழுதவேண்டும் என்பதைப்பற்றி உயர்சாதி ஆண்கள் கண்டிப்பான முறையில் எனக்கு விரிவுரை ஆற்றினர்.

ஆனால் மற்ற இடங்களில் – அவற்றை நெடுஞ்சாலையிலிருந்து விலக்கப்பட்ட இடங்கள் என்று அழைப்போம் – எனது கட்டுரைகள் விரைவாக பிற இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, துண்டுப்பிரசுரங்களாக அச்சிடப்பட்டு, காடுகளிலும், ஆற்றுப் பள்ளத்தாக்குகளிலும், தாக்குதலுக்கு உள்ளான கிராமங்களிலும், பல்கலைக்கழக வளாகங்களில் பொய்யான தகவல்களால் நொந்துபோயிருந்த மாணவர்களுக்கும் இலவசமாக விநியோகிக்கப்பட்டன. ஏனென்றால், முன் வரிசையிலிருந்து பரவிவரும் நெருப்பால் ஏற்கனவே சூடுபட்டிருக்கும் இந்த வாசகர்கள் இலக்கியம் என்றால் என்ன அல்லது எப்படி இருக்க வேண்டும் என்பதில் முற்றிலும் மாறுபட்ட கருத்து கொண்டவர்களாக இருந்தனர்.

இலக்கியத்திற்கான இடம் எழுத்தாளர்களாலும் வாசகர்களாலும் கட்டமைக்கப்படுகிறது என்பதை இது எனக்குக் கற்பித்ததால் இதைக் குறிப்பிடுகிறேன். இது சில வழிகளில் பலவீனமாக இருந்தாலும் அழியாத ஒன்றாகும். இந்த பந்தம் உடைந்துபோனாலும் நாங்கள் அதை மீண்டும் உருவாக்குவோம். ஏனென்றால் எங்களுக்கு ஒரு அடைக்கலம் தேவைப்படுகிறது. மக்களுக்குத் தேவைப்படக்கூடிய, அடைக்கலம் தரும் இலக்கியம், அதுவும் எல்லோருக்கும் அடைக்கலம் தரும் இலக்கியம் எனக்குப் பிடித்தமானது.

இன்று இந்தியாவில் கார்ப்பரேட் விளம்பரங்களில் திளைக்கும் எந்த ஒரு முக்கிய ஊடக நிறுவனமும் இது போன்ற கட்டுரைகளை வெளியிடுவதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. கடந்த 20 ஆண்டுகளில் சுதந்திர சந்தையும், பாசிசமும், “சுதந்திரமான பத்திரிகைகள்” என்று அழைக்கப்படுபவையும் ஜனநாயகம் என்று எந்த வகையிலும் சொல்லமுடியாத இடத்திற்கு இந்தியாவைக் கொண்டுவருவதற்கு ஒன்றிணைந்துள்ளன.

இதை விளக்குவதற்கு இந்த ஆண்டு ஜனவரியில் இரண்டு விஷயங்கள் நடந்தன. BBC மோடி கேள்வி என்ற ஆவணப்படத்தை இரண்டு தொகுப்புகளாக ஒளிபரப்பியது. சில நாட்களுக்குப் பிறகு ஹிண்டன்பர்க் ரிசர்ச் என்ற அமெரிக்க நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமான அதானி குழுமம் பற்றிய அதிர்ச்சியூட்டும் மோசடிகளை விரிவாக அம்பலப்படுத்தி ஒரு அறிக்கையை வெளியிட்டது.

இதையும் படியுங்கள்:

  பிபிசி ஆவணப்படம் இந்தியா: தி மோடி கொஸ்டின் ஒரு விவாதப் பார்வை!
  பங்குசந்தை புகார்களை விசாரிக்க குழு அமைத்த உச்சநீதிமன்றம்! மோடி-அதானிக்கு உதவுமா? உண்மையை அம்பலப்படுத்துமா?

கோபுரங்களான பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சமீபகாலம் வரை உலகின் மூன்றாவது பணக்காரரான இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர் கவுதம் அதானி மீதான தாக்குதலுக்கு சற்றும் குறையாததாக இந்திய ஊடகங்களால் சித்தரிக்கப்பட்டது. இவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நுட்பமானவை அல்ல. BBC ஆவணப்படம் மோடியை வெகுஜனக் கொலைக்குத் தூண்டியதாகக் கூறுகிறது. ஹிண்டன்பர்க் அறிக்கை அதானியை “கார்ப்பரேட் வரலாற்றில் மிகப்பெரிய மோசடி” என்று குற்றம் சாட்டுகிறது. ஆகஸ்ட் 30 அன்று, கார்டியன் மற்றும் பைனான்சியல் டைம்ஸ் ஆகியவை ஹிண்டன்பர்க் அறிக்கையை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் OCCRP வெளியிட்ட குற்றவியல் ஆவணங்களின் அடிப்படையில் கட்டுரைகளை வெளியிட்டன.

இந்திய புலனாய்வு அமைப்புகளும், பெரும்பாலான இந்திய ஊடகங்களும் இவற்றைப்  பற்றி விசாரிக்கவோ அல்லது இது தொடர்பான செய்திகளை வெளியிடவோ முடியாத நிலையில் உள்ளன. போலி அதிதீவிர தேசியவாதத்தின் தற்போதைய சூழலில் வெளிநாட்டு ஊடகங்கள் மட்டுமே இவற்றைச் செய்யும்போது அதை இந்திய இறையாண்மை மீதான தாக்குதலாக சித்தரிப்பது எளிது.

BBC ஆவணப்படத்தின் முதல் பகுதியில் 2002-ஆம் ஆண்டு 59 இந்து யாத்ரீகர்கள் உயிருடன் எரியுண்ட சம்பவத்தில் ரயில் பெட்டியை எரித்தது முஸ்லிம்கள்தான் என்று வதந்தியைப் பரவவிட்டு குஜராத் மாநிலத்தில் நடத்தப்பட்ட முஸ்லீம் படுகொலைகளைப் பற்றியது. இப்படுகொலை நடத்தப்படுவதற்கு சில மாதங்களுக்கு முன்புதான் மோடி மாநிலத்தின் முதலமைச்சராக நியமிக்கப்பட்டார் – தேர்ந்தெடுக்கப்படவில்லை. இந்த ஆவணப்படம் வெறும் படுகொலைகளைப் பற்றியது அல்ல. ஆனால், பாதிக்கப்பட்ட சிலர் நம்பிக்கை வைத்து, நீதி மற்றும் அரசியல் ரீதியான பொறுப்பேற்றலுக்காக இந்திய நீதித்துறையின் குறுகிய சந்துபொந்துகளுக்குள் மேற்கொண்ட 20 ஆண்டுகால  பயணத்தைப் பற்றியதும் கூட.

இதில் தனது குடும்பத்தில் பத்து உறுப்பினர்களை இழந்த இம்தியாஸ் பதான் போன்ற நேரில் கண்ட சாட்சிகளின் வாக்குமூலங்களும் அடக்கம். “குல்பர்க் சொசைட்டி படுகொலையில்” 60 பேர் ஒரு கும்பலால் படுகொலை செய்யப்பட்டதில், உடல் உறுப்புகள் துண்டிக்கப்பட்டு உயிருடன் எரிக்கப்பட்டார் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இஷான் ஜாஃப்ரி. மோடியின் அரசியல் எதிரியான இவர் சமீபத்தில் நடந்த தேர்தலில் அவருக்கு எதிராகப் பிரச்சாரம் செய்தவர். குஜராத்தில் அந்தச் சில நாட்களில் நடந்த கொடூரமான படுகொலைகளில் இதுவும் ஒன்று.

ஆவணப்படத்தில் இல்லாத மற்ற படுகொலைகளில் 19 வயது பில்கிஸ் பானோவின் கூட்டு பலாத்காரம் மற்றும் அவரது 3 வயது மகள் உட்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் கொல்லப்பட்டதும் ஒன்று. கடந்த ஆகஸ்ட் மாதம், சுதந்திர தினத்தன்று, பெண்கள் உரிமைகளின் முக்கியத்துவம் குறித்து மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றிக் கொண்டிருந்தபோது, அவரது அரசாங்கம் அதே நாளில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த, பில்கிஸ் பானோவை பலாத்காரம் செய்து அவரது குடும்பத்தினரை கொலை செய்தவர்களுக்கு மன்னிப்பு வழங்கியது. அவர்கள் சிறைக் காலத்தின் பெரும்பகுதியை பரோலில் கழித்தனர். இப்போது அவர்கள் சுதந்திர மனிதர்கள். சிறைக்கு வெளியே மாலை அணிவித்து வரவேற்கப்பட்ட அவர்கள் இப்போது சமூகத்தில் மரியாதைக்குரிய உறுப்பினர்களாக உள்ளனர். பொது நிகழ்ச்சிகளில் பாஜக அரசியல்வாதிகளுடன் மேடையைப் பகிர்ந்து கொள்கின்றனர்.

ஏப்ரல் 2002-இல் பிரிட்டிஷ் வெளியுறவு அலுவலகத்தால் தயாரிக்கப்பட்ட மக்களின் பார்வைக்கு வராத ஒரு உள்அறிக்கையை BBC ஆவணப்படம் வெளிப்படுத்தியது. அந்த உண்மை கண்டறியும் அறிக்கை “குறைந்தது 2,000 பேர்” கொல்லப்பட்டதாக மதிப்பிட்டுள்ளது. “இனச் சுத்திகரிப்புக்கான அனைத்து அடையாளங்களையும்” தாங்கிய ஒரு திட்டமிடப்பட்ட படுகொலை என்று அழைத்தது. காவல்துறையினரை கண்டுகொள்ளாமல் இருக்குமாறு உத்தரவிடப்பட்டதாக நம்பகமான தொடர்புகள் தங்களுக்குத் தெரிவித்ததாக கூறியது. அவ்வறிக்கை மோடிதான் இப்படுகொலைக்கு முழுமுதற்காரணம் என்று திட்டவட்டமாக கூறியது. குஜராத் படுகொலைக்குப் பிறகு அமெரிக்கா மோடிக்கு விசா தரமறுத்தது. ஆனால் மோடி தொடர்ந்து மூன்றுமுறை வெற்றி பெற்று 2014 வரை குஜராத்தின் முதல்வராக இருந்தார். பின்னர் அவர் பிரதமரான பிறகு அவர்மீதான தடை நீக்கப்பட்டது.

BBC-யின் இந்த ஆவணப்படத்தை மோடி அரசு தடைசெய்தது. ஒவ்வொரு சமூக ஊடக தளமும் அரசுக்கு இணங்கி, அதற்கான அனைத்து இணைப்புகளையும், குறிப்புகளையும் அகற்றியுள்ளன. ஆவணப்படம் வெளியான சில வாரங்களுக்குள் BBC-யின் அலுவலகங்கள் காவல்துறையினரால் சுற்றி வளைக்கப்பட்டன, வரித்துறை அதிகாரிகளால் சோதனையிடப்பட்டன.

ஹிண்டன்பர்க் அறிக்கை, அதானி குழுமம் பங்கு மற்றும் கணக்கியல் மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டுகிறது. வெளிநாடுகளில் உள்ள போலி நிறுவனங்களின் மூலம் முக்கியமான பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் மதிப்பை செயற்கையாக மிகைப்படுத்தி அதன் தலைவரின் நிகர மதிப்பை உயர்த்தியது. இவ்வறிக்கையின்படி, அதானியின் பட்டியலிடப்பட்ட ஏழு நிறுவனங்களின் மதிப்பு 85%-க்கும் அதிகமாக செயற்கையாக உயர்த்தப்பட்டுள்ளது. மோடியும் அதானியும் ஒருவரையொருவர் பல தசாப்தங்களாக அறிந்தவர்கள். 2002 குஜராத் படுகொலைக்குப் பிறகு அவர்களது நட்பு இன்னும் வலுப்பட்டது.

அந்த நேரத்தில், கார்ப்பரேட் இந்தியா உட்பட இந்தியாவின் பெரும்பகுதி, இந்துக் கும்பல்களால் குஜராத்தின் நகரங்கள் மற்றும் கிராமங்களின் தெருக்களில் “பழிவாங்கும்” நோக்கத்தில் நடத்தப்பட்ட முஸ்லீம்கள் மீதான வெளிப்படையான படுகொலை மற்றும் கும்பல் வன்புணர்வு ஆகியவற்றை திகிலுடன் கடந்துசென்றது. கௌதம் அதானி மோடிக்கு துணை நின்றார். குஜராத்தி தொழிலதிபர்களின் ஒரு சிறிய குழுவுடன் அவர் வணிகர்களுக்கான ஒரு புதிய தளத்தை அமைத்தார். அவர்கள் மோடியின் விமர்சகர்களைக் கண்டனம் செய்தனர். இந்து இதயங்களின் பேரரசர் என்று பொருள்படும் “இந்து ஹிருதய் சாம்ராட்” என்ற புதிய அரசியல் வாழ்க்கையை மோடி தொடங்கும்போது அவருக்கு ஆதரவளித்தனர். “வளர்ச்சியின்” குஜராத் மாடல் என்று அழைக்கப்படும் வன்முறை இந்து தேசியவாதம் கார்ப்பரேட் பணத்தால் இப்படித்தான் கட்டியெழுப்பப்பட்டது.

இதையும் படியுங்கள்:

கழுத்தை நெரிக்கும் காவி பாசிசம்! வீழ்த்த ஒன்றுபடுவோம்! மாநாட்டுத் தீர்மானங்கள்
மோடியை விமர்சித்தால் கைது சிறை! தலைவிரித்தாடும் பாசிசம்!

2014-ல் மூன்று முறை குஜராத்தின் முதல்வராக இருந்த மோடி, இந்தியாவின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். விமானத்தின் உடல் முழுவதும் அதானியின் பெயர் பொறிக்கப்பட்ட தனியார் ஜெட் விமானத்தில் தனது பதவியேற்பு விழாவிற்கு டெல்லி சென்றார். மோடியின் ஒன்பது ஆண்டுகளில், அதானி உலகின் மிகப்பெரிய பணக்காரர் ஆனார். அவரது சொத்து மதிப்பு $8 பில்லியனில் (56,000 கோடி) இருந்து $137 பில்லியனாக (9,59,000 கோடியாக) உயர்ந்தது. 2022-இல் மட்டும், அவர் $72 பில்லியன் (5,04,000 கோடி)சம்பாதித்தார். இது உலகின் அடுத்த ஒன்பது பில்லியனர்களின் மொத்த வருவாயை விட அதிகம். அதானி குழுமம் இப்போது இந்தியாவின் 30% சரக்கு போக்குவரத்திற்குக் காரணமான ஒரு டஜன் கப்பல் துறைமுகங்களையும், இந்தியாவின் 23% விமானப் பயணிகளைக் கையாளும் ஏழு விமான நிலையங்களையும், இந்தியாவின் தானியத்தில் 30% மொத்தமாக வைத்திருக்கும் கிடங்குகளையும் கட்டுப்படுத்துகிறது. மிகப்பெரிய ஜெனரேட்டர்களுடன் மின் உற்பத்தி நிலையங்களையும் சொந்தமாக வைத்திருக்கும் நாட்டின் மிகமுக்கிய தனியார் மின்சார நிறுவனமும் அதானியுடையதுதான்.

ஆம், கௌதம் அதானி உலகின் மிகப்பெரும் பணக்காரர்களில் ஒருவர், ஆனால் தேர்தலின் போது அவர்கள் சுற்றிவருவதைப் பார்த்தால் பாஜக இந்தியாவின் மட்டுமல்ல, ஒருவேளை உலகின் பணக்கார அரசியல் கட்சியாகவும் இருக்கலாம். 2016-ஆம் ஆண்டில் அடையாளங்கள் பகிரங்கப்படுத்தப்படாமல் அரசியல் கட்சிகளுக்கு நிதியளிக்க நிறுவனங்களை அனுமதிக்கும் தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை பாஜக அறிமுகப்படுத்தியது. பெருநிறுவன நிதியில் மிகப்பெரிய பங்கைக் கொண்ட கட்சியாக பாஜக மாறியுள்ளது. இரட்டை கோபுரங்களுக்கு ஒரு பொதுவான அடித்தளம் இருப்பது போல் தெரிகிறது.

நெருக்கடியான நேரத்தில் மோடிக்கு ஆதரவாக அதானி நின்றது போல, மோடி அரசு அதானிக்கு ஆதரவாக நின்று பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பிய எந்தஒரு கேள்விக்கும் பதிலளிக்க மறுத்து, அவர்களின் உரைகளை பாராளுமன்ற பதிவிலிருந்து நீக்கும் அளவிற்கு செல்கிறது.

(தொடரும்…)

தமிழாக்கம்: ஜூலியஸ்

https://scroll.in/article/1055943/arundhati-roy-the-dismantling-of-democracy-in-india-will-affect-the-whole-world

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here