மிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு (ம) ஆயத்தீர்வைத் துறை அமைச்சரான செந்தில்பாலாஜியை குறிவைத்து கடந்த மே மாதம் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். தற்போது, கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது ஊழல் செய்ததாக இவர் மீது தரப்பட்ட புகாரின் அடிப்படையில் மத்தியில் ஆட்சி செய்யும் மோடி அரசு தனது அமலாக்கத்துறையின் மூலம் கைது நடவடிக்கையை எடுத்துள்ளது.

நேற்று 13.06.2023 பகல் முழுவதும் நடைபெற்ற சோதனை மற்றும் விசாரைணயைத் தொடர்ந்து, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நள்ளிரவில் கடும் நெஞ்சு வலி ஏற்பட்டதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை தரப்பட்டு வருகிறது.

தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் நுழைந்து அமைச்சரின் அறையையும் சோதனையிட்டுள்ளனர். கரூரில் உள்ள செந்தில்பாலாஜியின் அலுவலகத்துக்கு சீல் வைத்தும் உள்ளனர்.

தனியார்மயம், தாராளமயம், உலகமயம் எனும் மறுகாலனியாக்க காலக்கட்டத்தில் ஊழல், முறைகேடுகள் கரைபுரண்டு ஒடுகின்றன, ஒட்டுமொத்த அரசு  கட்டமைப்பும் சீரழிந்து நிற்கிறது. இப்போது மையமான பிரச்சினை செந்தில் பாலாஜி உத்தமரா? ஊழல்வாதியா? என்பதல்ல.

கட்சி அல்லது கூட்டணியானது ஆட்சியைப் பிடித்த உடன் தனது எதிர்க்கட்சி அல்லது எதிர் கூட்டணியினரின் மீது வழக்கு விசாரணை கைது நடவடிக்கைகளை முன்னெடுக்கவே செய்கின்றன. இதில் பிற கட்சிகளை விட உச்சம் தொடுவதாகவே காவி கும்பலின் கைது நடவடிக்கைகள் அமைந்துள்ளன. அஜித் பவார் தொடங்கி மணிஷ் சிசோடியா வரை இதனை நாம் பார்த்துள்ளோம்.

உத்தமர் மோடி தலைமையிலான அரசாங்கம் எந்த அளவுக்கு நேர்மையானது என்பதை மதிப்பிட அக்கட்சிக்கு வந்து குவியும் தேர்தல் நன்கொடைகளை பார்த்தாலே போதும். இவர்களின் ஆசிர்வாதத்தோடு வங்கிப் பணத்தை சூறையாடிக் கொண்டு வெளிநாடுகளுக்கு தப்பி ஓடிய புரவலர்களின் பட்டியலை பார்த்தாலே உண்மை விளங்கும். உள்நாட்டில் உள்ள கார்ப்பரேட் முதலாளிகளில் தனக்கு விசுவாசமாக இருப்பவர்களுக்கு மத்திய அரசின் கீழ் உள்ள வங்கிகள் மூலம் பல்லாயிரம் கோடிகளை தரவைத்து, அதை வாரா கடன்களாக மாற்றி, மக்களின் பணத்தை மடை மாற்றி விட்டு, குறுகிய காலத்தில் தனது நண்பர்களை உலக கோடீஸ்வரர்கள் பட்டியலுக்கும் நுழைத்து அகமகிழும் திருவாளர் மோடியின் மகத்துவத்தை நாடே அறியும். அப்படிப்பட்ட மோடி தனது கீழ் உள்ள துறைகளைக் கொண்டு தனது அரசியல் எதிரிகளை ஒடுக்குவதற்காக ஏவியுள்ள தாக்குதலாகவே அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைது பார்க்க வேண்டியுள்ளது.

அமித்ஷா கும்பலானது தனக்கு அடிபணியாத கட்சிகள், எம்எல்ஏ- எம்பிக்கள் என அனைத்தையும்/அனைவரையும் தாக்குதல் இலக்காக்குகின்றது.

கார்ப்பரேட் காவி பாசமானது தனக்கே உரிய பாணியில் ஏறித் தாக்கி வருகிறது. இதற்கு பலியானவர்களின் பட்டியல் மிகவும் நீண்டது. பத்திரிக்கையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பேராசிரியர்கள் தொடங்கி ஒரு மாநிலத்தின் அரசாங்கத்தில் முக்கிய அமைச்சர்களாக இருப்பவர்கள் வரை அனைவரும் வேட்டையாடப்படுகின்றனர்.

சமீபத்தில் டெல்லியில் ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் மணிஷ் சிசோடியா இப்படித்தான் கைது செய்யப்பட்டார். அந்த வரிசையில் தற்போது தமிழகத்தின் செந்தில் பாலாஜியும் சேர்ந்துள்ளார். இது இன்றுடன் முடிந்து விடுமா நிச்சயமாக இல்லை. யாரெல்லாம் தனக்கு கீழ்ப்படிய மறுக்கிறார்களோ, யாரெல்லாம் தன்னை விமர்சிக்கிறார்களோ, யாரெல்லாம் தன்னை எதிர்த்து போராடுகிறார்களோ, அவர்களை எல்லாம் முடமாக்க அனைத்து ஆயுதங்களையும் ஏவி வருகிறது மோடி தலைமையிலான கும்பல்.

சட்டம் படித்த வழக்குரைஞர்கள் கூட இந்த சங்கீ கும்பல்களுக்கு எதிராக களம் இறங்க கூடாது என திட்டமிட்டு கைதுகள் நடக்கின்றன.தேசிய புலனாய்வு முகமை மூலம்  ஏவப்படும் இத்தகைய அடக்கு முறையால் ஜனநாயகத்தின் குரல்வலையை நசுக்கி விட முடியும் என காவி கும்பல் மனப்பால் குடிக்கிறது. சமீபத்தில் மதுரையில் ஒரு வழக்கறிஞர் இத்துறையின் மூலம் கைது செய்யப்பட்டது நினைவில் இருக்கும்.

இதையும் படியுங்கள்: மதுரை வழக்கறிஞர் முகமது அப்பாஸை சட்டவிரோதமாக கைது செய்துள்ள NIA!

மத்திய அரசின் பிடியில் உள்ள நிறுவனங்களான அமலாக்கத்துறை, மைய புலனாய்வுத்துறை உள்ளிட்டு உச்ச நீதிமன்றம் வரை அனைத்தும் காவிகளின் தாளத்திற்கு ஏற்ப ஆடத் தொடங்கியுள்ளது.

“உப்பு தின்னவன் தண்ணி குடிச்சு தான் ஆகனும்“ என்று சொல்வது போல “ஊழல் செய்தவன் சிறைக்கு சென்று களி தின்னுதான் தீரணும்“ என கடந்து போக முடியாது. தற்போது நடந்து வரும் சோதனைகள், விசாரணைகள், கைதுகள், ஏவப்படும்  UAPA மற்றும் 124-A தேசத்துரோக சட்டங்கள் அனைத்தும் காவி பாசிசம் ஏறித் தாக்கி வருவதையே எடுத்துக்காட்டுகிறது.

சங்கிகளை தவிர பிற அனைத்து பிரிவினரும் கார்ப்பரேட் – காவி பாசிசத்தின் தாக்குதல் பட்டியலுக்குள் உள்ளடக்கப்பட போகிறார்கள். எனவே பாசிச தாக்குதலை கண்டு அஞ்சி, ஒதுங்கி, தவிர்த்து வாழ்ந்துவிட முடியுமா? மக்கள் தான் துணிந்து முடிவை எடுக்க வேண்டும்.

  • இளமாறன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here