கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் பற்றிய தகவல்கள் CoWin என்ற ஒன்றிய அரசின் அதிகாரபூர்வமான இணையதளம் மற்றும் செயலியில் சேமிக்கப்பட்டுள்ளன. கடந்தவாரத்தில் இவ்விவரங்கள் CoWin  செயலியிலிருந்து திருடப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. தகவல் திருட்டில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான தண்டனையையும், தகவல் தொடர்புத்துறைக்கும் பொறுப்பான ரயில்வேதுறை அமைச்சராக இழிபுகழ் பெற்ற அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவியின் ராஜினாமாவையும் கோருகின்றனர்.

கோடிக்கணக்கான மக்களின் தனிப்பட்ட விவரங்கள் மட்டுமல்லாமல் எதிர்கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், தலைவர்கள், மற்றும்  பத்திரிக்கையாளர்களின் விவரங்களும் திருடுபோயுள்ளன.

இத்தகைய தகவல் திருட்டு என்பது சாதாரணமான சம்பவம் என்று ஒதுங்கிப்போய்விடமுடியாது. ஒருவரின் தனிப்பட்ட விவரங்களைக் கொண்டு பல்வேறு நிதிமுறைகேடுகளையும், கீழ்த்தரமான செயல்களையும் செய்து அவரை சமூகத்திலிருந்து முடக்க முடியும், அவரது பெயரில் வேண்டுமென்றே பொய்யான தகவல்களை பரப்ப முடியும், அதன்மூலம் அவர்மீது தீவிரவாதி, தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு உள்ளவர் என்று சித்தரிக்கவும் முடியும், அல்லது குறைந்தபட்சம் அப்படிப்பட்ட விவரங்களுக்காக ஆளாய்த் திரியும் முதலாளிகளுக்கு நல்ல விலைக்கு விற்கவும் முடியும்.

டிஜிட்டல் இந்தியாவில் திருடுபோகும் டிஜிட்டல் தகவல்கள்!

தன்னிடமுள்ள கோடிக்கணக்கான பயனாளர்களின் விவரங்களை விளம்பர நிறுவனங்களிடம் பகிர்ந்துகொண்டதற்காக அமேசான், பேஸ்புக், வாட்சப் போன்ற பலபெருநிறுவனங்கள் அந்தந்த நாட்டு அரசுகளால் விசாரிக்கப்பட்டு பெரும் தண்டத்தொகைகளை செலுத்தியுள்ளன. ஆனால் நமது நாட்டில் மக்களின் தனிப்பட்ட விவரங்களை கையாளும் அரசின் செயலியிலிருந்தே தகவல்கள் திருடுபோயுள்ளதை எங்குபோய் முறையிடுவது?

CoWin செயலியிலிருந்து தகவல்கள் திருடப்பட்ட செய்தியை வழக்கம்போல் மறுத்துள்ள ஒன்றிய அரசு இக்குற்றச்சாட்டுகளுக்கு எந்த முகாந்திரமும் இல்லை என்று அறிவித்திருக்கிறது. ஆனால் அந்த சங்கி கும்பலிலிருந்தே ராஜிவ் சந்திரசேகர் என்ற ஒன்றிய தகவல் தொடர்புத்துறையின் இணையமைச்சர் ஏற்கனவே திருடுபோயிருந்த தகவல்கள் அடிப்படையிலேயே இந்தமுறையும் நடந்திருப்பதாகக் கூறியுள்ளார். இதன்மூலம் கடந்த காலங்களிலும் இத்தகைய தகவல் திருட்டு நடந்துள்ளது அம்பலமாகியுள்ளது.  கணினி தாக்குதல்களை கண்காணிக்கும் உடனடி நடவடிக்கை குழு (Indian Computer Emergency Response Team – CERT-In) இந்த தகவல் திருட்டு தொடர்பாக ஆராய்ந்துவருவதாகவும், தேசிய விவர மேலாண்மை குறித்தான சட்டம் இயற்றப்பட்டபிறகு இத்தகைய சம்பவங்கள் நடைபெறாது என்றும் கம்பி கட்டுகிறார்.

இதையும் படியுங்கள்: 20 கோடி ட்விட்டர் பயனர்களின் தரவுகள் திருட்டு! ஹேக்கர்களின் கைவரிசையா?

இத்தகைய திருட்டுகளை தடுக்கும் என்று தம்பட்டம் அடிக்கப்பட்ட “தேசிய விவர மேலாண்மை” மசோதாவை தனது சீட்டுக்கு அடியில் போட்டு உட்கார்ந்துக் கொண்டிருக்கும் “டிஜிட்டல் இந்தியாவை” பெற்றுப்போட்ட மோடி தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இப்பிரச்சினையில் இப்போதுவரை வாயை திறக்கவில்லை.

2024-ல் நாடாளுமன்றத் தேர்தல் வரக்கூடிய சூழ்நிலையில் இந்த தகவல் திருட்டு என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இப்படி திருடப்பட்ட செல்போன் எண்ணிற்கு “இன்றைக்கு நீங்கள் உயிரோடு இருப்பதற்கு கொரோனா தடுப்பூசியே காரணம். அதை முற்றிலும் இலவசமாக வழங்கிய மோடியே காரணம், எனவே மோடிக்கு ஓட்டுப்போடுங்கள்” என்று மெசேஜ் அல்லது அழைப்பு வரலாம். எனவே இத்தகைய திருட்டில் பாஜக-வின் சங்கிகளே ஈடுபட்டிருக்கலாம் என்பதை புறந்தள்ளவும் முடியாது.  அல்லது உண்மையிலேயே வேறு யாராவது திருடியிருந்தால் அதானி, அம்பானியின் சௌக்கிதார்களின் அதிகபட்ச கவலை என்னவாக இருக்கும்? “இப்படி அநியாயமாக திருடிட்டானுகளே, கேட்டுருந்தாங்கன்னா ஒரு நல்ல அமௌண்ட்டுக்கு குடுத்திருப்போமே என்பதுதான்”.

  • ஜூலியஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here